உதயநிதி ஸ்டாலின் ஒரு எம்எல்ஏ தான்.. ஆனால் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.. கொந்தளிக்கும் இபிஎஸ்!
திருவள்ளூர்: திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல், திமுகவில் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ-வாக வெற்றிபெற்ற பின், திமுக அமைச்சர்களே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்று பேசி வருகின்றனர்.
இதுமட்டுமல்லாமல் பல்வேறு முக்கியத் திட்டங்களை தொடங்கி வைப்பது, அமைச்சர்கள் சார்பாக வழங்கப்படும் நலத்திட்ட உதவுகள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என உதயநிதி ஸ்டாலின் அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இது எதிர்க்கட்சிகள் மத்தியில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இபிஎஸ் பேட்டி
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், இந்தியா ஒரு ஜனநாயக நாடு. அந்தந்த மதம், அந்தந்த தெய்வம் அவரவர்களுக்கு புனிதமானது. நான் எல்லா தெய்வங்களையும் வழிபடுவேன். ஆன்மிக பூமி என்பது இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைவருக்கும் பொருந்தும்.

திமுக ஆட்சி
திமுகவினரால் திறக்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தான். ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றன. இதனைப் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவலைப்படுவதில்லை.

உதயநிதி ஸ்டாலின்
திமுக ஒரு குடும்ப கட்சி, கார்ப்பரேட் கம்பெனி. உதயநிதிக்கு ஆட்சியில் எந்த பதவியும் இல்லை. அவர் ஒரு எம்எல்ஏ மட்டுமே. ஆனால் அவர் தமிழக அரசின் திட்டங்களை தொடங்கி வைக்கிறார். எனவே மேயருக்கான மரியாதையை திமுக ஆட்சியில் எதிர்பார்க்க முடியாது. மேயருக்கு உண்டான மரியாதையை கொடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதிமுகவில் இடமில்லை
தொடர்ந்து அம்மா உணவகம் ஏழை, எளிய மக்கள் வயிறார பசியாற வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்டது. அம்மா உணவகம் மூடப்படுவதற்கு தேர்தலில் திமுகவிற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். அதிமுக தொண்டர்களால் நடத்தப்படும் கட்சி. தொண்டர்களுக்கு தான் இடம் தலைவர்களுக்கு இல்லை என்று தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருக்கு அதிமுகவில் இடமில்லை என்று ஏற்கனவே அறிவித்துவிட்டோம். நானும் தொண்டன் என்ற முறையில்தான் இங்கு வந்திருக்கிறேன். தலைவர் என்ற முறையில் வரவில்லை என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications