எம்.பி.யாகி முதன்முறையாக.. மேடையில் ஏறி சரசரவென தேசியக் கொடி ஏற்றிய இளையராஜா.. ஒரே நெகிழ்ச்சி
திருவண்ணாமலை: இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை எம்.பி.யாக முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
Recommended Video
நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு குடியரசுத் தலைவரால் 12 பேர் நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்படுவது மரபு. கலை, இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்கள் இவ்வாறு நியமன எம்.பி.க்களாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த வகையில், நடப்பாண்டில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மாநிலங்களவை எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார். இசைத்துறையில் அளப்பரிய பணிகளை செய்ததற்காக அவருக்கு எம்.பி. பதவி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இளையராஜா மட்டுமல்லாமல் தடகள வீராங்கனை பி.டி. உஷா, தர்மசாலா கோயில் நிர்வாக அறங்காவலர் வீரேந்திர ஹெக்டே, திரைக்கதை எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் ஆகியோரும் மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டனர்.
சுதந்திர தினம்.. சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுரத்தில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!
இதனிடையே, இளையராஜாவை எம்.பி.யாக நியமித்ததற்கு ஒருபுறம் பாராட்டுகள் வந்தாலும் மறுபுறம் பெரிய அளவில் விமர்சனங்களும் எழுந்தன. எம்.பி.யாக இளையராஜாவை நியமிப்பதற்கு முன்பு அம்பேத்கர் அண்ட் மோடி என்ற நூலுக்கு இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார். அதில் பிரதமர் நரேந்திர மோடியையும், சட்டமேதை அம்பேத்கரையும் அவர் ஒப்பிட்டிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரில் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
இதன் தொடர்ச்சியாக, பாஜகவில் இளையராஜா இணையக்கூடும் என்பன போன்ற செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன. இதுபோன்ற சூழலில் இளையராஜவுக்கு மாநிலங்களை எம்.பி. பதவி வழங்கப்பட்டதால் கூடுதலாக விமர்சனங்கள் வந்தன. ஆனால் இந்த விமர்சனங்களை இளையராஜா பெரிய அளவில் பொருட்படுத்தவில்லை. இதனைத் தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி.யாக கடந்த மாதம் 25-ம் தேதி பதவியேற்றார்.

தேசியக் கொடி ஏற்றினார்
இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்தையொட்டி திருவண்ணாமலையில் உள்ள ரமணர் ஆசிரமத்திற்கு எம்.பி. இளையராஜா இன்று காலை வருகை தந்தார். ரமணர் ஆசிரமத்திற்கு அவர் அவ்வப்போது வந்து தியானம் செய்துவிட்டு செல்வது வழக்கம். அந்த வகையில், இன்று அங்கு வந்த இளையராஜா ரமணர் ஆசிரமத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். எம்.பி.யான பின்னர் இளையராஜா தேசியக்கொடியை ஏற்றுவது இதுவே முதன்முறை ஆகும் , .