ராமஜெயம் கொலை வழக்கு: பொதுமக்கள் தகவல் கொடுத்தால் பரிசு - சிறப்பு புலனாய்வுக்குழு அறிவிப்பு
கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பான விபரங்கள் தெரிந்தால், பொதுமக்கள் இமெயில் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தகவல் தெரியப்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு பொதுமக்களிடம் தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இமெயில், செல்போன்கள் மூலம் தகவல் செல்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
ராமஜெயம் கொலை செய்யப்பட்டு வரும் மார்ச் 29ஆம் தேதியுடன் 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. குற்றவாளி யார் என்றும் எதற்காக ராமஜெயம் கொலை செய்யப்பட்டார் என்றும் ஒரு துரும்பைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.
தமிழக காவல்துறை, சிபிசிஐடி, சிபிஐ என பலர் விசாரித்தாலும் ராமஜெயம் யாரால் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று இதுவரைக்கும் கண்டுபிடிக்க முடியவில்லை
திமுக முதன்மைச் செயலாளரும், நகர்ப்புற நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த, 2012ம் ஆண்டு மார்ச், 29ம் தேதி அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். பின்னர், கல்லணை சாலையில் உள்ள காவிரிக் கரையோரம், கை, கால்கள் இரும்புக் கம்பியால் கட்டப்பட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக, ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அப்போதைய திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சைலேஷ் குமார் யாதவ் தலைமையில், 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார் ராமஜெயம். இவரது கொலை வழக்கு தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகத்தில் உள்ள பிரபல ரவுடிகள், சந்தேகத்திற்குரிய நபர்கள் என, ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை விசாரித்தும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.

கொலையாளி யார்
கொலையாளிகள் யார் என்று நெருங்கவே முடியவில்லை. ராமஜெயம் காலையில், வாக்கிங் செல்லும் போது கடத்தப்பட்டாரா என்பது தான் மிகப்பெரிய சந்தேகம். ராமஜெயம் தூங்கி கொண்டிருந்த போது, வெளியில் இருந்து சிலர் அழைத்துள்ளனர்.வெறும் கைலி மட்டும் கட்டியதோடு ராமஜெயம் வெளியே வந்திருக்கிறார், எனவே தெரிந்த நபர்களே இந்த கடத்தல் கொலையை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு இன்று வரை உள்ளது.

சிபிசிஐடி விசாரணை
இதனையடுத்து இந்தக் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்தது. தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தும் கொலையாளியின் நிழலைக்கூட நெருங்க முடியவில்லை. ராமஜெயத்திற்கு நெருக்கமானவர்களை அழைத்து உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது. எந்த துப்பும் கிடைக்காமல் கிறுகிறுத்து போனார்கள். அதைத்தொடர்ந்து, கடந்த, 2017ம் ஆண்டு, ராமஜெயத்தின் மனைவி லதா தொடர்ந்த வழக்கின் காரணமாக, உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது.

சிபிஐ விசாரணை
தொடர்ந்து, 4 ஆண்டுகள் சிபிஐ விசாரித்தும் வழக்கில் எந்த துப்பும் துலங்கவில்லை. ராமஜெயம் கொலையை பொறுத்தவரை போலீசாருக்கு கிடைத்த முக்கிய தடயம் அவர் பயன்படுத்திய செல்போன்களின் எண்கள் மட்டுமே. அந்த எண்களுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டவர்கள், இரவு நேரத்தில் தொடர்பு கொண்டு பேசியவர்கள் பட்டியல் தனித் தனியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் துப்பு துலக்க பயனுள்ள தகவல்களை அளிப்பவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை
இதனால், ராமஜெயத்தின் மற்றொரு சகோதரர் ராமச்சந்திரன், 'இந்த வழக்கை, தமிழக காவல்துறை விசாரிக்க வேண்டும்' என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன், ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கவும், வழக்கு தொடர்பாக, 15 நாட்களுக்கு ஒருமுறை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

திருச்சியில் முகாம்
அதன்படி, தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார், அரியலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மதன், சிபிஐ துணை காவல் கண்காணிப்பாளர் ரவி ஆகியோர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது, ஏற்கனவே பல்வேறு குழுவினர் விசாரித்து வைத்துள்ள ஆவணங்களின் மீதான மேல் விசாரணையை துவக்கியது. அடுத்த அதிரடியாக, திருச்சியில் முகாமிட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு எஸ்.பி. ஜெயக்குமார், டிஎஸ்பி மதன் உள்ளிட்டோர், வழக்கு தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பத்து ஆண்டுகள் நிறைவு
ராமஜெயம் கொலை செய்யப்பட்டு வரும் 29ஆம் தேதியுடன் 10 ஆண்டுகள் நிறைவடையப் போகிறது. சென்னையில்உள்ள சிபிஐ அலுவலகத்திலிருந்து, இவ்வழக்கு குறித்த ஆவணங்களைப் பெற்று ஆய்வு செய்த எஸ்.பி ஜெயக்குமார் உள்ளிட்டோர் திருச்சிக்கு வந்து, மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயனிடம் ஆலோசனை நடத்தினர். அதைத்தொடர்ந்து ராமஜெயத்தின் வீடு அமைந்துள்ள பகுதி, அவர் கடத்தப்பட்டதாக கூறப்படும் கோட்டை ஸ்டேஷன் சாலை, கொலை செய்யப்பட்டு கிடந்த திருவளர்ச்சோலை பகுதி உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தகவல் சேகரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு
சிறப்பு புலனாய்வுக்குழுவிற்கு திருச்சி ஆயுதப்படை வளாகத்தில் தனி அலுவலகம் அமைக்கப்பட்டு வருகிறது. விசாரணையை பல்வேறு கோணங்களில் மேற்கொள்வதற்காக பிரதான குழுவின் கட்டுப்பாட்டின்கீழ், பல தனிப்படைகள் அமைக்கப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனிடையே, சிறப்பு புலனாய்வுக் குழுவானது பொதுமக்களிடம் தகவல் திரட்டும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது.

தகவல் அளித்தால் சன்மானம்
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பான விபரங்கள் தெரிந்தால், பொதுமக்கள் கீழ்கண்ட ஈ.மெயில் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தகவல் தெரியப்படுத்தவும். என அறிவிக்கப்பட்டுள்ளது. [email protected] Sit காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் 9080616241 Dsp மதன் 9498120467, 7094012599 தகவல் தெரிவிப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மர்மம் விலகுமா
ராமஜெயம் கொலைக்கான மர்மம் பத்தாண்டு காலமாக விலகவில்லை. மறுபடியும் முதலில் இருந்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கொடூர கொலைக்கான காரணத்தையும், கொலையாளி யார் என்பதையும் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை செய்து கண்டறிய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பத்தாண்டு கால கொலை வழக்கில் மர்மம் விலகும். விடை கிடைக்குமா? மர்மம் விலகுமா என்பது அந்த ஸ்ரீரங்கநாதருக்கே வெளிச்சம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications