ஈரோடு கிழக்கு தேர்தல்: 'ஜீரோ பிளஸ் ஜீரோ' ஜீரோ தான்.. காங்கிரசுடன் கமல் கூட்டணி குறித்து எச் ராஜா
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு கமல்ஹாசன் ஆதரவு குழப்பத்தை தான் தரும் என்று எச்.ராஜா விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி: ஈவிகேஸ் இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளர் என்று அறிவித்த உடனேயே எதிர்க்கட்சி வெற்றி பெற்று விடும் என்று நம்பிக்கை ஏற்பட்டு விட்டதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறினார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவில் இரு அணிகளும் போட்டி
திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட்டுகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. மக்கள் நீதி மய்யம் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. அதிமுகவின் இரு அணிகளும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன. பாஜக இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.

திருச்செந்தூரில் எச். ராஜா
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை பல முனை போட்டி நிலவும் என்பதால் தேர்தல் களம் அனல் பறக்கிறது. இதனிடையே, ஈவிகேஸ் இளங்கோவன் காங்கிரஸ் வேட்பாளர் என்று அறிவித்த உடனேயே எதிர்க்கட்சி வெற்றி பெற்று விடும் என்று நம்பிக்கை ஏற்பட்டு விட்டதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா பேசியுள்ளார். பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் எச்.ராஜா இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்குள்ள தனியார் விடுதியில் வைத்து செய்தியாளர்களுக்கு எச்.ராஜா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக்கு முதல் எதிரியே
ராமதாஸ் தமிழைத்தேடி யாத்திரை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். தமிழைத்தேடி யாத்திரை என்றால் தமிழ் தொலைந்து விட்டது என்று தான் அர்த்தம். திராவிடத்தை அழிக்காவிட்டால் தமிழை காப்பாற்ற இயலாது. தமிழக்கு முதல் எதிரியே திராவிடம் தான். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டதுமே எதிர்க்கட்சி வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி
திமுக தேர்தல் அறிக்கையில் மின் கட்டணம் மாதம் ஒருமுறை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தது. ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி அதற்கு வாய்ப்பில்லை எனக்கூறுகிறார். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது. ஆனால், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதற்கு சாத்தியம் இல்லை என்கிறார்.

ஜீரோ பிளஸ் ஜீரோ..
தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற முடியாது என்று திமுக அமைச்சர்களே ஒப்புக்கொள்கிறார்கள். இதனால், திமுக பக்கம் மக்கள் திரும்பி பார்க்க மாட்டார்கள். எனவே எதிர்த்து போட்டியிட இருக்கும் அதிர்ஷ்டசாலி யார் என்றுதான் தெரிய வேண்டும். காங்கிரஸ் கட்சிக்கு கமல் ஹாசன் அளித்து இருக்கும் ஆதரவு குழப்பத்தைத் தான் ஏற்படுத்தும். ஜீரோ பிளஸ் ஜீரோ ஜீரோதான் என்ற கணிதப்படிதான் கமல்ஹாசன் அளித்த அதரவு அமையப்போகிறது. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications