ஸ்டெர்லைட்டால் மாசு இல்லை... அண்ணா பல்கலை. அறிக்கையை சுட்டிக்காட்டும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்படவில்லை என்றும் வழக்கமான வாகனங்களில் இருந்து வெளியேறும் புகைதான் காரணம் என்றும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு பேட்டி அளித்துள்ளது.
அண்ணா பல்கலை. நடத்திய ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு மற்றும் தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார இயக்கம் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளது. தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறி மக்களை போராட்டக் களத்திற்கு திசை திருப்பியதால் கடந்த 3 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதாக இந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் புகையால் மக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் 2018-ம் ஆண்டு மே 22 அன்று நடத்திய மிகப்பெரிய போராட்டம், வன்முறையாக வெடித்தது. இந்த போராட்டல் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து ஆண்டு மே மாதம் 28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை தமிழ்நாடு அரசு மூடியது. இதை எதிர்த்தும் ஆலையை திறக்க அனுமதி கோரியும் ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டிலும் பின்னர் உச்சநீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்திருந்தது.

ஆக்ஸிஜன் தயாரிக்க திறப்பு
இந்நிலையில் 2020ம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உயிரிழந்தனர். எனவே தமிழ்நாட்டிலும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவியதால், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது. பின்னர் ஸ்டெர்லைட்டில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துவ பயன்பாட்டுக்கான திரவ ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வாயு நிலையிலான மருத்துவ பயன்பாட்டு ஆக்சிஜனை விநியோகம் செய்யும் பணியை ஸ்டெர்லைட் நிறுவனம் தொடங்கியது. இங்கு உற்பத்தியான திரவ மற்றும் வாயு ஆக்சிஜன் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகரில் ஆய்வு மேற்கொண்ட அண்ணா பல்கலைக்கழகம் இங்கு ஏற்பட்டுள்ள மாசுவிற்கு சாலை துாசும், வாகன புகையுமே இதற்கு முக்கிய காரணங்கள் என ஆய்வு அறிக்கை வெளியிட்டுள்ளது.

சமூக ஆர்வலர் பேட்டி
ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பை சார்ந்த சமூக ஆர்வலர் நான்சி, வழக்கறிஞர் ஜெயம் பெருமாள், சாமிநத்தம் பஞ்சாயத்து முன்னாள் துணைத் தலைவர் முருகன் துளசி, சோசியல் டிரஸ்ட் இயக்குனர் தனலட்சுமி, தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார இயக்கத் தலைவர் தியாகராஜன் உள்ளிட்டோர் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.

ஸ்டெர்லைட்டால் மாசு இல்லை
இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய சமூக ஆர்வலர் நான்சி, "ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மாசுபடவில்லை என்றும், தூத்துக்குடி மாசுபடுவதற்கு இங்கே இயக்கப்படும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையும், சாலையோரங்களில் உள்ள தூசுகளே காரணம் என தெரிவித்தார். இதற்கு எடுத்துக்காட்டு, தூத்துக்குடி நகரின் மாசு குறித்து சிப்காட் உட்பட மூன்று இடங்களில் வைத்துள்ள அளவீட்டு கருவிகளின் மூலம் ஆய்வுகள் செய்ததில் இது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும் தூத்துக்குடி நகரம் எப்போதும் ஒரே மாதிரியான மாசுபட்ட சூழ்நிலையிலேயே உள்ளது என குறிப்பிட்ட நான்சி அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையும் இதையே சொல்வதாகவும் குறிப்பிட்டார்.

போலி போராளிகள் போராடினர்
மேலும் எதிர்ப்புப் போராளிகள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீது தேவையற்ற குற்றச்சாட்டுகளை கூறி மக்களை திசை திருப்பி போராட வைத்துள்ளதாகவும், இதனால் கடந்த 3 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆலையில் பணிபுரிந்து வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என தெரிவித்த நான்சி, இதற்கு போலி எதிர்ப்பு போராளிகள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என வினவினார். மேலும் அண்ணா பல்கலைக் கழகத்தின் இந்த அறிக்கை போலி போராட்டக்காரர்களின் பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக கிடைத்த முதல் வெற்றி என குறிப்பிட்ட நான்சி, தமிழ்நாடு அரசு மக்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த கூட்டமைப்பு சார்பாக கேட்டுக்கொள்வதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications