தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தூத்துக்குடி மணல் திட்டுகளில் பனைமரங்கள் நடும் முயற்சி.. வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டு

Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தின் தூத்துக்குடி கடற்பரப்பில் உள்ள மணல் திட்டுகளை பாதுகாக்கும் வகையில் பனைமரங்கள் நடும் முயற்சிக்கு பிரதமர் மோடி மன்கிபாத் வானொலி நிகழ்ச்சி மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றியதாவது:

PM Modi hails Thoothukudi youths from Palm tree planting

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். இன்று நாம் மீண்டும் ஒரு முறை மனதின் குரலுக்காக இணைந்திருக்கிறோம்.

இரண்டு நாட்கள் கழித்து டிசம்பர் மாதம் தொடங்கவிருக்கின்றது, டிசம்பர் வந்து விட்டாலே மனோவியல்ரீதியாக, ஆண்டு நிறைவடைந்து விட்டது போன்ற ஒரு உணர்வு பிறந்து விடும்.

இது ஆண்டின் இறுதி மாதம், புதிய ஆண்டிற்குத் தயாராகும் நடவடிக்கைகளைத் தொடங்கி விடுவோம். இந்த மாதத்தில் தான் கடற்படை தினம் மற்றும் இராணுவப் படைகளின் கொடிநாளை தேசம் கொண்டாடுகிறது.

1971ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற போரின் பொன்விழாவினை இந்த ஆண்டு தேசம் கொண்டாடுகிறது என்பது உங்களனைவருக்கும் தெரியும். இந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் நான் தேசத்தின் பாதுகாப்புப் படைகளை நினைவுகூருகிறேன், நம்முடைய வீரர்களை நினைவில் ஏந்துகிறேன். குறிப்பாக, இப்படிப்பட்ட வீரர்களைப் பெற்றெடுத்த அன்னையரை நினைவுகூருகிறேன். எப்போதும் போலவே இந்த முறையும் நமோ செயலியில், மைகவ் தளத்தில் நீங்கள் எனக்கு ஏராளமான ஆலோசனைகளை வழங்கியிருக்கின்றீர்கள். நீங்கள் அனைவரும் என்னை உங்கள் குடும்பத்தின் ஒரு உறுப்பினராக எண்ணி, உங்கள் வாழ்க்கையின் சுகதுக்கங்களையும் என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். இதில் இளைஞர்கள் பலருண்டு, மாணவமாணவியர் பலர் உண்டு. மனதின் குரல் என்ற நம்முடைய குடும்பம் தொடர்ந்து பெருகி வருகிறது, மனங்களாலும் இணைந்து வருகின்றார்கள், நோக்கத்தாலும் இணைந்து வருகின்றார்கள், நம்முடைய ஆழமான உறவுகள், நமக்குள்ளே, ஆக்கப்பூர்வமான பிரவாகத்தைத் தொடர்ந்து பெருக்கெடுக்கச் செய்து வருகிறது என்பது எனக்கு உள்ளபடியே மிகுந்த நிறைவினைக் கொடுக்கின்றது.

நண்பர்களே, சுதந்திரத்தில் நம்முடைய பழங்குடியினத்தவரின் பங்களிப்பைப் பார்த்து, தேசம் பழங்குடியின கௌரவ வாரத்தையும் கொண்டாடியது. தேசத்தின் பல்வேறு பாகங்களில் இதோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அந்தமான் - நிகோபார் தீவுக்கூட்டங்களில் ஜார்வா மற்றும் ஓங்கி போன்ற பழங்குடியின மக்கள், தங்களுடைய கலாச்சாரம் பற்றிய உயிர்ப்புடைய வெளிப்பாட்டை அளித்தார்கள். ஒரு அருமையான பணியை ஹிமாச்சல பிரதேசத்தின் ஊனாவின் மினியேச்சர் ரைட்டரான ராம் குமார் ஜோஷி அவர்கள் செய்திருக்கிறார். இவர் தபால் தலைகளிலே, அதாவது சிறிய தபால் தலைகளில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் முன்னாள் பிரதமர் லால் பஹாதுர் சாஸ்திரி அவர்களின் வித்தியாசமான வரிவடிவத்தை உருவாக்கி இருக்கிறார். ஹிந்தி மொழியில் எழுதப்பட்ட ராம் என்ற சொல்லின் மீது இவர் வரிவடிவத்தை உருவாக்கினார், இதிலே இரண்டு மாமனிதர்களின் வாழ்க்கையையும் சுருக்கமாகப் பொறித்திருக்கிறார். மத்திய பிரதேசத்தின் கட்னியிலும் சில நண்பர்கள் நினைவில் கொள்ளத்தக்க கதை சொல்லும் நிகழ்ச்சி பற்றிய தகவல்களை அளித்திருக்கிறார்கள்.

இதில் ராணி துர்க்காவதியின் அற்புதமான சாகசம் மற்றும் உயிர்த்தியாகம் பற்றிய நினைவுகளை புதுப்பித்திருக்கிறார்கள். இதே மாதிரியான ஒரு நிகழ்ச்சி காசியிலும் நடைபெற்றது. கோஸ்வாமி துளசிதாஸ், சந்த் கபீர், சந்த் ரவிதாஸர், பாரதேந்து ஹரிஷ்சந்திரர், முன்ஷீ பிரேம்சந்த், ஜய்ஷங்கர் பிரசாத் போன்ற பேராளுமைகளுக்கு கௌரவம் சேர்க்கும் வகையிலே மூன்று நாட்கள் வரையிலான கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு காலகட்டங்களில், இவர்கள் அனைவரும், தேசத்தில் விழிப்புணர்வு ஏற்பட மிகப்பெரும் பங்களிப்பை நல்கியிருக்கின்றார்கள். உங்களுக்கெல்லாம் நினைவிருக்கலாம், மனதின் குரலின் கடந்த பகுதிகளில், நான் மூன்று போட்டிகள் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அதாவது ஒரு தேசபக்திப் பாடலை எழுத வேண்டும், தேசபக்தியோடு தொடர்புடைய, சுதந்திரப் போராட்டத்தோடு தொடர்புடைய சம்பவங்களைக் கொண்டு கோலம் போடுவது, மேலும் நமது குழந்தைகளின் மனதிலே மகோன்னதமான பாரதம் பற்றிய கனவுகளை விழிப்படையச் செய்யும் தாலாட்டுப் பாடல்களை எழுதுவது. இந்தப் போட்டிகளில் நீங்கள் கண்டிப்பாக உங்கள் நுழைவை அனுப்பி வைத்திருப்பீர்கள், அல்லது இதற்கான திட்டம் தீட்டியிருப்பீர்கள்,

உங்கள் நண்பர்களோடு கலந்துரையாடி இருப்பீர்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உண்டு. இந்தியாவின் ஒவ்வொரு இடத்திலும் இந்த நிகழ்ச்சியை நீங்கள் கண்டிப்பாக உற்சாகத்தோடு முன்னெடுத்துச் செல்வீர்கள் என்ற முழு நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.

மேற்கு ஆஸ்ட்ரேலியாவில் இருக்கும் ஒரு நகரம் பெர்த். இந்த இடம் பற்றித் தெரியாத கிரிக்கெட் ரசிகர்கள் இருக்க முடியாது, ஏனென்றால் பெர்த் நகரில் எப்போதும் கிரிக்கெட் ஆட்டங்கள் நடந்த வண்ணம் இருக்கும். பெர்த் நகரிலே ஒரு Sacred India Gallery புனித இந்தியா கண்காட்சியகம் உண்டு, இது ஒரு கலைக்கூடம். இந்தக் கூடம் ஸ்வான் பள்ளத்தாக்கின் ஒரு அழகான இடத்திலே உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஆஸ்ட்ரேலியாவில் வசிக்கும் ஜகத் தாரிணீ தாசி அவர்களின் முயற்சிகளின் பயனாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜகத் தாரிணீ அவர்கள் ஆஸ்ட்ரேலியா நாட்டைச் சேர்ந்தவர் தான், அங்கே தான் பிறந்தவர், அங்கேயே வளர்ந்தவர் என்றாலும், அவர் தன்னுடைய 13 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தை விருந்தாவனத்திலே கழித்திருக்கிறார். அவர் ஆஸ்ட்ரேலியாவிற்குத் திரும்பிச் சென்றாலும், தன்னால் விருந்தாவனத்தை மறக்க முடியவில்லை என்று கூறுகிறார். ஆகையால் இவர் விருந்தாவனத்தோடும், அதன் ஆன்மீக உணர்வோடும் இணைந்திருக்க, ஆஸ்ட்ரேலியாவிலேயே விருந்தாவனத்தை உருவாக்கியிருக்கிறார். இதற்குத் தனது கலையையே ஊடகமாக்கி, ஒரு அற்புதமான விருந்தாவனத்தை உருவாக்கினார்.

இங்கே வருவோருக்குப் பலவகையான கலைப்படைப்புகள் விருந்தை அளிக்கின்றன. காண்போருக்கு பாரதத்தின் மிகவும் பிரபலமான புனிதத்தலங்களான விருந்தாவனம், நவாத்வீபம், ஜகன்னாதபுரியின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் காட்சி கிடைக்கும். இங்கே பகவான் கிருஷ்ணரின் வாழ்க்கையோடு தொடர்புடைய பல கலைப்படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இதிலே ஒரு கலைப்படைப்பு எப்படி என்றால், இதிலே பகவான் கிருஷ்ணர் கோவர்த்தன மலையைத் தனது சிறுவிரலில் உயர்த்தியபடி இருப்பது; இதனடியே விருந்தாவனத்தின் மக்கள் அனைவரும் அடைக்கலம் புகுந்திருக்கின்றார்கள். ஜகத் தாரிணீ அவர்களின் இந்த அற்புதமான முயல்வு, உண்மையிலேயே நமக்கு கிருஷ்ண பக்தியின் சக்தியின் காட்சியை அமைத்துக் கொடுக்கிறது. இந்த முயற்சிக்காக நான் அவருக்குப் பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.

என் மனதிற்கினிய நாட்டுமக்களே, ஆஸ்ட்ரேலியாவின் பெர்த்தில் உருவாக்கப்பட்டிருக்கும் விருந்தாவனம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். மேலும் ஒரு சுவாரசியமான வரலாறு என்று பார்த்தால், ஆஸ்ட்ரேலியாவின் ஒரு உறவு நம்முடைய புந்தேல்கண்டின் ஜான்சியோடும் இருக்கின்றது. உள்ளபடியே ஜான்சியின் ராணி லக்ஷ்மிபாய், கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக, சட்டபூர்வமாகப் போரிட்டுக் கொண்டிருந்த போது, அவருடைய வழக்குரைஞராக இருந்தவர் ஜான் லேங்க். இவர் ஆஸ்ட்ரேலிய நாட்டைச் சேர்ந்தவர். இந்தியாவில் வசித்து, ராணி லக்ஷ்மிபாய் தரப்பில் வழக்காடிக் கொண்டிருந்தார். நம்முடைய சுதந்திரப் போராட்டத்திலே, ஜான்சியும், புந்தேல்கண்டும் அளித்திருக்கும் மகத்தான பங்களிப்பு என்ன என்பதை நாமனைவரும் நன்கறிவோம். இங்கே ராணி லக்ஷ்மிபாய், ஜல்காரீ பாய் போன்ற வீர மங்கையரும் தோன்றியிருக்கின்றார்கள், மேஜர் தியான்சந்த் போன்ற விளையாட்டுத் துறை ரத்தினங்களும் தேசத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

நண்பர்களே, வீரம் என்பது யுத்தகளத்திலே மட்டும் வெளிப்படுத்தப்படுவது அல்ல, அப்படி எந்த ஒரு கட்டாயமும் கிடையாது. மேற்கொள்ளப்பட்ட ஒரு உறுதிப்பாடு நிறைவடையும் போதும், அது விரிவடையும் போதும், அனைத்துத் துறைகளிலும் செயல்கள் வெற்றியடையத் தொடங்கும். இப்படிப்பட்ட ஒரு வீரம் பற்றி ஜோத்ஸனா அவர்கள் கடிதம் வாயிலாகத் தெரிவித்திருக்கிறார். ஜாலௌனில் பாரம்பரியமாகவே பெருகியோடிய ஒரு நதி நூன் நதி. இங்கே இருக்கும் விவசாயிகளுக்கான ஒரு நீராதாரமாக இது இருந்து வந்துள்ளது, ஆனால் மெல்லமெல்ல நூன் நதி வறண்டு போகும் நிலை ஏற்பட்டு, கொஞ்சநஞ்சம் நதியே எஞ்சி இருந்த நிலையில், அது ஒரு ஓடையாக மாறி விட்ட வேளையில், இதிலிருந்து நீர்ப்பாசனம் செய்வது என்பது விவசாயிகளுக்கு ஒரு பெரும் பிரச்சனையாக உருவெடுத்தது. ஜாலௌன்வாசிகள் இந்த நிலையை மாற்றும் சவாலை எதிர்கொண்டார்கள். இந்த ஆண்டு மார்ச் மாதம், இதன் பொருட்டு ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான கிராமவாசிகளும், அந்தப் பகுதி மக்களும் தாங்களாகவே ஊக்கம் பெற்று இந்த இயக்கத்தோடு தங்களை இணைத்துக் கொண்டார்கள். இங்கே இருக்கும் பஞ்சாயத்துக்களும், கிராமவாசிகளோடு இணைந்து பணியாற்றத் தொடங்கினார்கள்.

இன்று மிகவும் குறைவான காலத்திலே, மிகவும் குறைவான செலவிலே, இந்த நதி, மீண்டும் உயிர்த்திருக்கிறது. இதனால் எத்தனையோ விவசாயிகளுக்கு பயன் கிடைத்து வருகிறது. போர்க்களத்தை விட வேறுபட்ட வகை வீரத்தின் இந்த எடுத்துக்காட்டு, நமது நாட்டுமக்களின் உறுதிப்பாட்டுணர்வை வெளிப்படுத்துகிறது, மேலும் நாம் மனதிலே உறுதி மேற்கொண்டு விட்டால், சாத்தியமற்றது என்பது ஏதும் இல்லை என்பதையே காட்டுகிறது. ஆகையால் தான் நான் கூறுகிறேன் - அனைவருடைய முயற்சி.

என் அன்புநிறை நாட்டுமக்களே, நாம் இயற்கையைப் பாதுகாக்கும் போது, இதற்கு பதிலாக இயற்கையும் நம்மைப் பாதுகாத்தளிக்கிறது. இந்த விஷயத்தை நாம் நம்முடைய வாழ்க்கையிலும் அனுபவித்து உணர்ந்திருக்கலாம், இப்படிப்பட்ட ஒரு எடுத்துக்காட்டினை தமிழ்நாட்டின் மக்கள் பரந்துபட்ட அளவிலே வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். இந்த எடுத்துக்காட்டு, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தினுடையது. கரையோரப் பகுதிகள் பல நேரங்களில் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதை நாம் அறிவோம். தூத்துக்குடியிலும் பல சிறிய தீவுகளும் திட்டுக்களும் இருக்கின்றன, இவை கடலில் மூழ்கும் அபாயம் வலுத்து வருகிறது. இங்கே இருக்கும் மக்கள் மற்றும் வல்லுநர்கள், இந்த இயற்கை அபாயத்திலிருந்து பாதுகாக்க இயற்கையை ஊடகமாகக் கொண்டார்கள். இவர்கள் இப்போது இந்த மணல் திட்டுக்களில் பனை மரங்களை நட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த மரங்கள் புயல்கள் மற்றும் சூறாவளிகளிலும் நிமிர்ந்து நிற்பவை, நிலத்திற்குப் பாதுகாப்பளிப்பவை. இவற்றால் இந்தப் பகுதியைப் பாதுகாக்க ஒரு புதிய நம்பிக்கைக் கீற்று உதயமாகி இருக்கிறது.

நண்பர்களே, இயற்கை நமக்கெல்லாம் எப்போது அபாயத்தை ஏற்படுத்தும் என்று சொன்னால், நாம் அதன் சீர்தன்மையை சீர்குலைக்கும் போது அல்லது அதன் தூய்மைத் தன்மையை அழிக்கும் போது தான். இயற்கை, நம்மையெல்லாம் ஒரு அன்னையைப் போலப் பராமரிக்கிறாள், நமது உலகிலே புதியபுதிய வண்ணங்களை இட்டு நிரப்புகிறாள்.

இப்போது நான் சமூக ஊடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, மேகாலயாவில் ஒரு பறக்கும் படகு பற்றிய படம் நன்கு பரவலாகி இருந்தது. முதல் பார்வையிலேயே நான் இதன்பால் கவரப்பட்டேன். உங்களில் பலர் இதை இணையத்தில் கண்டிருக்கலாம். காற்றில் மிதக்கும் இந்தப் படகினை நுணுகிப் பார்க்கும் போது, இது நதியில் பயணிப்பது நமக்குப் புரிய வரும். நதியின் நீர் எந்த அளவுக்குத் தூய்மையானதாக இருக்கிறது என்றால், அதன் அடிப்பகுதி வரை பளிங்கு போலத் தெரிகிறது, படகு ஏதோ காற்றிலே துடுப்பு போட்டுச் செல்வது போலத் தோன்றுகிறது. நம்முடைய நாட்டிலே பல மாநிலங்களில் இருக்கும் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய இயற்கையின் பாரம்பரியங்களை, சிறப்பாகப் பாதுகாத்து வைத்திருக்கின்றார்கள். இவர்களிடத்தில் இயற்கையோடு இசைவான வாழ்க்கை முறை இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. இவை நமக்கெல்லாம் உத்வேகம் அளிக்கக் கூடியவை. நமக்கருகேயும் கூட இருக்கும் இயற்கை அழகுகளை நாம் பாதுகாக்க வேண்டும், அவற்றை முன்பிருந்த நிலைக்கே நாம் மீட்டுச் செல்ல வேண்டும். இதிலே தான் நம்மனைவரின் நலனும் அடங்கியிருக்கிறது, உலகின் நலனும் அடங்கியிருக்கிறது.

எனதருமை நாட்டுமக்களே, அரசு திட்டங்களைத் தீட்டும் போது, பணத்தைச் செலவு செய்யும் போது, காலத்திற்குள்ளாகத் திட்டங்களை நிறைவேற்றும் போது, அரசு வேலை செய்கிறது என்ற உணர்வு மக்கள் மனதிலே ஏற்படும். ஆனால் அரசு பல பணிகளின் வளர்ச்சிக்காக, பல திட்டங்களுக்கு இடையே செயலாற்றும் வேளையில், மனித உணர்வுகளின் புரிதலோடு தொடர்புடைய விஷயங்கள் எப்போதுமே ஒரு அலாதியான சுகத்தை அளிக்கின்றன. அரசின் முயற்சிகள் காரணமாக, அரசாங்கத்தின் திட்டங்களால் எப்படி ஒருவருடைய வாழ்க்கை மாறுகிறது, அந்த மாறிய வாழ்க்கையை அவர் எப்படி அனுபவிக்கிறார் என்பதைப் பற்றியெல்லாம் நாம் கேள்விப்படும் போது, நம்முள்ளத்திலேயும் கருணை நிரம்பி விடுகிறது. இது மனதிற்கு நிறைவை அளிக்கிறது, அந்தத் திட்டத்தை மேலும் மக்களிடம் கொண்டு சேர்க்க உத்வேகம் அளிக்கிறது. ஒரு வகையில், இது ஸ்வாந்த: சுகாய, அதாவது ஆன்மாவிற்குக் கிடைக்கும் ஆனந்தம் என்பது தான். அந்த வகையில் இன்று மனதின் குரலில் நம்மோடு இரண்டு நண்பர்கள் இணைய இருக்கின்றார்கள், இவர்கள் தங்களுடைய துணிவின் துணையால், ஒரு புதிய வாழ்க்கையை வென்றிருக்கிறார்கள்.

இளைஞர்கள் நிறைந்த ஒவ்வொரு நாடும் மூன்று விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. அப்போது தான் இளைஞர்களை சரியான வகையில் அடையாளப்படுத்த முடியும். முதல் விஷயம் - Ideas and Innovation, அதாவது கருத்துக்கள் மற்றும் புதுமைகள் கண்டுபிடிப்பு. இரண்டாவதாக, இடர்களை எதிர்கொள்ளும் துணிச்சல், மூன்றாவதாக, Can Do Spirit, அதாவது என்னால் முடியும் என்ற உறுதியான உணர்வு, சூழ்நிலைகள் ஏதாக இருந்தாலும் சரி. இந்த மூன்று விஷயங்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு விட்டால், வியக்கத்தக்க விளைவுகள் பிறக்கும். அற்புதம், அதிசயம் நிகழும். இன்றைய காலத்தில், நாலாபுறத்திலும் நாம் கேள்விப்படும் சொல் ஸ்டார்ட் அப் என்பது தான். சரியான விஷயம் தான், இது ஸ்டார்ட் அப் யுகம், இந்த ஸ்டார்ட் அப் யுகத்தில் பாரதம் இன்று ஒருவகையில் உலகிற்கே தலைமையேற்றுக் கொண்டிருக்கும் நிலை இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஸ்டார்ட் அப்களின் சாதனை படைக்கும் முதலீடுகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. இந்தத் துறை மிகுந்த விரைவோடு முன்னேற்றம் கண்டு வருகிறது. எந்த அளவுக்கு என்றால், தேசத்தின் சின்னச்சின்ன நகரங்களிலும் கூட இப்போது ஸ்டார்ட் அப்களின் எல்லை விரிந்திருக்கிறது.

இப்போது யூனிகார்ன் என்ற சொல்லும் புழக்கத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதைப் பற்றி நீங்களும் கேள்விப்பட்டிருப்பீர்கள். யூனிகார்ன் என்பதன் மதிப்பு குறைந்தபட்சம் ஒரு பில்லியன் டாலர் பெறுமானம் உள்ளது, அதாவது கிட்டத்தட்ட 7000 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஸ்டார்ட் அப்.

நண்பர்களே, 2015ஆம் ஆண்டு வரை தேசத்தில் தேடிப் பார்த்தாலும், 9 அல்லது 10 யூனிகார்ன்களே இருந்தன. இப்போதோ யூனிகார்களின் உலகத்திலேயும் பாரதம் விரைவாகச் சிறகு விரித்துப் பறக்க ஆரம்பித்து விட்டது என்ற செய்தி உங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கலாம். ஒரு அறிக்கையின்படி, இந்த ஆண்டு ஒரு மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. வெறும் 10 மாதங்களில் மட்டும் பாரதத்திலே, பத்து நாட்களில் ஒரு யூனிகார்ன் என்ற வீதம் உருவாகியிருக்கிறது. இது ஏன் பெரிய விஷயம் என்பதற்கு மேலும் ஒரு காரணம் என்னவென்றால், நமது இளைஞர்கள், இந்த வெற்றியை கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே ஈட்டியிருக்கிறார்கள் என்பது தான். இன்று பாரதத்திலே 70க்கும் மேற்பட்ட யூனிகார்ன்கள் உருவாகி விட்டன. அதாவது 70க்கும் அதிக ஸ்டார்ட் அப்களில் ஒரு பில்லியனுக்கும் அதிக மதிப்பீடு என்ற அளவைத் தாண்டியிருக்கின்றன. நண்பர்களே, ஸ்டார்ட் அப்பின் வெற்றியின் காரணமாக அனைவருடைய கவனமும் இவற்றின்பால் சென்றிருக்கிறது, நம் நாட்டிலிருந்தும், அயல்நாடுகளில் இருந்தும், முதலீடுகள் வாயிலாக, முதலீட்டாளர்களின் ஆதரவு இவற்றுக்குக் கிடைத்து வருகிறது.

சில ஆண்டுகள் முன்பாக இதைப் பற்றி யாரும் கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள்.

நண்பர்களே, சில ஆண்டுகள் முன்பாக, தாம் வியாபாரம் செய்ய விரும்புவதாகவோ, ஒரு கம்பெனியைத் தொடக்க விரும்புவதாகவோ கூறினால், குடும்பத்தில் இருக்கும் பெரியோரின் பதில் என்னவாக இருந்தது - நீ ஏன் வேலை பார்க்க விரும்ப மாட்டேன் என்கிறாய், எங்காவது சேர்ந்து வேலை பார், வேலை பார்ப்பதிலே தான் பாதுகாப்பு இருக்கிறது, ஊதியம் கிடைக்கும், சிக்கலைக் குறைத்துக் கொள், என்பார்கள். ஆனால், இன்றோ யாராவது ஒருவர் கம்பெனி தொடங்க விரும்பினால், அவருக்கு அருகே இருப்போர் எல்லாம் அவரை உற்சாகப்படுத்துகிறார்கள், அவருக்கு முழு ஆதரவையும் அளிக்கிறார்கள். நண்பர்களே, பாரதத்தின் வளர்ச்சிக் கதையின் திருப்புமுனை இது, இப்போது இங்கே வேலை தேடுபவர்கள் என்ற கனவை காண்பதைத் துறந்து, வேலையை உருவாக்குபவர்களாகவும் மாறி வருகிறார்கள். இதனால் உலக அரங்கிலே பாரத நாட்டின் நிலை மேலும் பலமடைந்து வருகிறது.

நண்பர்களே, இப்போது நாம் டிசம்பர் மாதத்தில் காலெடுத்து வைக்க இருக்கிறோம். இயல்பாகவே, அடுத்த மனதின் குரல் 2021ஆம் ஆண்டின் கடைசி மனதின் குரலாக ஒலிக்கும். 2022ஆம் ஆண்டில் நாம் மீண்டும் நம் பயணத்தைத் தொடருவோம், உங்களிடமிருந்து நிறைய ஆலோசனைகளை எதிர்பார்த்திருக்கிறேன், தொடர்ந்து காத்திருப்பேன். நீங்கள் இந்த ஆண்டிற்கு எப்படி விடையளிக்க இருக்கிறீர்கள், புதிய ஆண்டிலே என்ன திட்டமிட்டிருக்கிறீர்கள், இதைக் கண்டிப்பாக என்னோடு பகிருங்கள். அப்புறம்..... மறந்து விடாதீர்கள், கொரோனா இன்னும் முற்றிலுமாகச் அகன்று விடவில்லை. எச்சரிக்கையைக் கடைப்பிடிப்பது நம்மனைவரின் கடமையாகும். பலப்பல நன்றிகள். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

English summary
Prime Minsiter Narendra Modi hails Thoothukudi youths from Palm tree planting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X