குஷ்பூ, ஜெயலலிதா வரிசையில் எம்.ஜி.ஆருக்கு கோயில்... வேலூரில் பூமிபூஜை போட்ட விசுவாசிகள்...!
வேலூர்: காட்பாடி அருகே மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆருக்கு ரூ.1 கோடியில் கோயில் கட்டும் பணியை அவரது விசுவாசிகள் பூமி பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளனர்.
வடமாநிலங்களில் எப்படி புதிது புதிதாக கோயில் உருவாக்கப்படுகிறதோ, அதுபோல் தமிழ்நாட்டில் புதிது புதிதாக அரசியல் தலைவர்களுக்கு சிலைகள் வைக்கப்படும். அண்மைக் காலமாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, பெரியார், அண்ணா உள்ளிட்ட திமுக தலைவர்களுக்கு அதிகளவில் சிலைகள் திறக்கப்பட்டு வருகின்றன. இதற்கு படிமேல் சென்று எம்ஜிஆரின் விசுவாசிகள், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ரூ.1 கோடி செலவில் கோயிலை கட்ட பூமி பூஜை போட்டுள்ளனர்.

குஷ்பூவுக்கு கோயில் கட்டிய தமிழ்நாடு
அரசியல் தலைவர்களுக்கும், சமூக நீதி போராளிகளுக்கு சிலைகள் வைத்து பின்வரும் தலைமுறையினருக்கு அவரது சாதனைகள் விளக்கி பேசுவது தமிழகத்தில் வாடிக்கையான நடவடிக்கைதான். ஆனால் திடீரென உச்சத்தில் இருந்த சினிமா நடிகையான குஷ்பூவுக்கு திருச்சி அருகே கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தியது நாடு முழுவதும் பேசுபொருளாகியது. இதனைத்தொடர்ந்து மனிதர்களுக்கு கோயில் கட்டும் நடவடிக்கை தமிழகத்தில் அதிகரித்தது என்றே கூறலாம்.

ஜெ.-வுக்கு கோயில்
இதேபோல் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கிராமத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோயில் ஒன்றை கட்டியுள்ளார். ஏறத்தாழ 12 ஏக்கர் பரப்பில் கட்டியுள்ள அந்த கோயில் வளாகத்தின் உள்ளே உயரமான மேல்தளம் அமைத்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் முழு உருவ வெண்கல சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

ஜெ.வை தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கு கோயில்
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தொண்டான்துளசி கிராமத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசிகளால் ரூ.1 கோடி செலவில் கோயில் கட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை நடைபெற்ற பூமி பூஜை நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். விசுவாசிகள், கோயில் கட்டும் நிர்வாகிகளின் குடும்பத்தினர், பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

எப்போது கோயில் திறப்பு?
இந்தக் கோயிலில் திருமணம் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 80 சென்ட் நிலத்தில் கட்டப்படும் இந்த கோயில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் அன்று திறக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications