"ராஜ தந்திரம் அனைத்தும் வீணா போனதே" இறந்தவர் போல் நாடகமிட்டு மாட்டிக்கொண்ட நபர்!
வாஷிங்டன்: கடன் தொல்லையில் இருந்து தப்பிப்பதற்காக இறந்தவர் போல நாடகம் போட்டு உறவினர் ஒருவரால் அந்த நபர் கையும் களவுமாக மாட்டிக்கொண்ட சம்பவம் தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
நகைச்சுவை நடிகர் செந்தில் ஒரு படத்தில் தான் இறந்த பிறகு மனைவிக்கு கிடைப்பதற்காக இன்சூரன்சில் பணம் போட்டு இருப்பார்.
இதை அறிந்த கவுண்டமனி.. இறந்த பிறகு அந்த பணத்தை உன்னால் அனுபவிக்க முடியாது..

இறந்து விட்டாரா என்பதை உறுதி செய்த பிறகே
அதனால், நான் ஒரு யோசனை தருகிறேன்..அதன்படி செய்தால் இன்சூரன்சில் கிடைக்கும் பயணத்தை பங்கு போட்டுக்கொள்ளலாம் என்று ஐடியா கொடுப்பார். இதன்படி, செந்திலும் இறந்தது போலவே நடித்து பாசாங்கு செய்வார். இன்சூரன்ஸ் அதிகாரிகளும் பணம் வழங்குவதற்கு தயராக வருவார்கள். இருந்தாலும் செந்தில் இறந்து விட்டாரா என்பதை உறுதி செய்த பிறகே பணத்தை கொடுப்போம் என்று கூறிக்கொண்டு ஆயுதம் ஒன்றையும் கையில் எடுப்பார்கள்.

இறந்தவர் போல் நாடகமிட்டு
இதைபார்த்த செந்தில் தலை தெறிக்க ஓடிவிடுவார். மிகவும் ரசிக்கும் வகையில் இந்த காமெடி சீன் அமைந்து இருக்கும். 80 கிட்ஸ் முதல் 2 கே கிட்ஸ் வரை யார் பார்த்தாலும் இந்த காமெடியை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. இந்த காமெடிக்கு நிகராகத்தான் ஒரு சம்பவம் இந்தோனேசியாவில் நடைபெற்று இருக்கிறது. கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க இறப்பு சான்றிதழ் பெற இறந்தவர் போல் நாடகமிட்டு உறவினரால் சவப்பெட்டிக்குள் இருந்து விழித்து எழும் வீடியோ காட்சிகள் வெளியேறி மாட்டிக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

கடனை செலுத்த முடியாததால்
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:- இந்தோனேசியாவின் தெற்கு ஜகார்தாவில் வசித்து வந்த ஒரு தம்பதிக்கு ஏராளமான கடன்கள் இருந்துள்ளது. இந்தக் கடனை செலுத்த முடியாததால் அதில் இருந்து எப்படி தப்பிப்பது என யோசித்து இருக்கின்றனர். அப்போது இறந்தது போன்ற ஒரு டிராமாவை அரங்கேற்றிவிடலாம் என்ற யோசனை அந்த தம்பதிக்கு தோன்றியிருக்கிறது. அதன்படியே, ஆம்புலன்ஸிற்கு போன் செய்து இந்த தம்பதி வரவழைத்து இருக்கிறது.

சவப்பெட்டிக்குள் சென்ற நபர்
இறந்த ஒரு நபரின் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கோரி சவப்பெட்டியுடன் ஆம்புலன்சை வரவழைத்து இருக்கின்றனர். பாதி வழியில் ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கும் போது அந்த தம்பதி சிறிது நேரம் ஆம்புலன்ஸை நிறுத்துமாறு கூறியுள்ளனர். கண் இமைக்கும் நேரத்தில் அந்தப் பெண்ணின் கணவர் சவப்பெட்டிக்குள் சென்றுள்ளார். தொடர்ந்து ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறது. மருத்துவமனையில் மருத்துவர்கள் முன்பு இறந்த நபர் போல நாடகம் ஆடி இறப்புசான்றிதழ் வாங்கிவிடுவதுதான் இவர்களின் பிளான்.

வீடியோ எடுத்த உறவினர்
ஆனால், சவப்பெட்டியில் நீண்ட நேரம் இருந்ததால் சற்று அசைந்து எழுந்து இருக்கிறார். அப்போது எதேச்சையாக இந்த தம்பதியின் உறவினர் ஒருவர் வீடியோ எடுத்துவிட்டார். தம்பதியின் திட்டம் அறியாமல் இறந்த நபர் உயிர் பிழைத்துவிட்டார் என்று இணையத்திலும் பரப்பி விட்டார். இதற்குள் மருத்துவமனைக்கு தகவல் கிடைத்து இறப்புச்சான்றிதழ் கொடுக்கப்படவில்லை.

நொந்து போன தம்பதி
ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே என்று இந்த தம்பதி பெரும் கவலையில் ஆழ்ந்து இருக்கிறது. அதோடு இப்படி ஒரு ஏமாற்று நாடகத்தை போட்டதற்காக போலீசார் வழக்கும் பதிவு செய்து இருக்கின்றனர். கடனில் இருந்து தப்பிக்க போட்ட பிளானால் தற்போது போலீஸ் வழக்கும் வந்ததால் நொந்து கொண்டிருக்கிறதாம் இந்த தம்பதி.












Click it and Unblock the Notifications