கனடாவில் கடுமையாக சேதப்படுத்தப்பட்ட நாராயணர் கோவில்! "காலிஸ்தான்கள்" அட்டகாசம்? இந்தியா கடும் கண்டனம்
வாஷிங்டன்: கனடாவில் உள்ள இந்துக்கோவில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்த கோவிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும் எழுதப்பட்டிருந்தாதல் அங்குள்ள இந்துக்கள் கவலையடைந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
வட அமெரிக்கா நாடான கனடாவில் இந்தியர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். தமிழர்களும் அதிக எண்ணிக்கையில் வசித்து வரும் இங்கு ஏராளமான இந்துக் கோவில்களும் உள்ளன.
அங்கு வசிக்கும் இந்துக்கள் இந்தக் கோவில்களில் வழிபாடு நடத்துவது வழக்கம்.

இந்துக்கோவில் சேதம்
ஆனால், சமீப காலமாக அங்குள்ள இந்துக்கோவில்களை குறிவைத்து சிலர் வெறுப்புணர்வு குற்றங்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக கனடாவில் உள்ள காலிஸ்தான் தீவிரவாதிகள் இத்தகைய வெறுப்புணர்வு செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது கனடாவின் டொரோண்டோவில் உள்ள இந்துக் கோவில் ஒன்று சேதப்படுத்தப்பட்டுள்ளது அங்குள்ள இந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான வாசகம்
கனடாவின் டொரன்டோவில் உள்ள ஸ்வாமி நாரயண் என்ற கோவிலில் தான் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கோவிலை சேதப்படுத்திய காலிஸ்தான் தீவிரவாதிகள் கோவிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் எழுதியுள்ளனர். குறிப்பாக அந்த கோவில் சுவரில் 'காலிஸ்தான் ஜிந்தாபாத்' என்று எழுதப்பட்டிருந்தது. இதனால் இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த சம்பவம் எப்போது நடைபெற்றது என்ற விவரம் தெரியவில்லை.

இந்திய தூதரகம் கண்டனம்
இது தொடர்பாக கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய தூதரகம், ''டொராண்டோவில் உள்ள BAPS சுவாமிநாராயண் மந்திர் கோவிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதி அவதூறு செய்யப்பட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்'' என்று கூறியுள்ளது.

இந்துக்கள் கவலை அடைந்துள்ளனர்
கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திர ஆர்யா இந்த சம்பவம் குறித்து தனது ட்விட் பகுதியில் கூறியிருப்பதாவது:- கனடாவை சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் ஸ்ரீ சுவாமிநாராயண் கோவில் சேதப்படுத்திய சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. இது முதல் முறை கிடையாது. கனடாவில் உள்ள இந்துக் கோவில்கள் சமீபத்திய ஆண்டுகளில் பல முறை வெறுப்பு குற்றங்களால் குறிவைக்கப்பட்டுள்ளன. இதனால் கனடாவில் உள்ள இந்து சமூகத்தினர் கவலை அடைந்துள்ளனர்'' என்று பதிவிட்டுள்ளார்.

கடும் அதிர்ச்சி அளிக்கிறது
அதேபோல், பிராம்ப்டன் தெற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சோனியா சித்து இந்துக்கோவில் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'டொரோண்டோவில் உள்ள BAPS சுவாமிநாராயண் கோவில் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து அறிந்து கடும் அதிர்ச்சி அடைந்தேன். பன்முக கலாச்சாரம் மற்றும் பல நம்பிக்கைகள் உள்ளவர்களை கொண்ட சமூகத்தில் வாழ்கிறோம். எனவே இங்கு அனைவரும் பாதுகாப்பாக உணர வேண்டும். தங்களின் செயல்களுக்கான தண்டனையை அனுபவிக்க இதற்கு காரணமானவர்கள் கண்டறியப்பட வேண்டும்' என்றார்.












Click it and Unblock the Notifications