அட்லாண்டிக் கடலுக்கு மேல் அற்புதம்! சிவப்பாக ஒளிர்ந்த மேகம். . வியந்துபோன நெட்டிசன்கள்
வாஷிங்டன்: இயற்கை என்றாலே ஒரு ஆச்சர்யம் தான் என்கின்ற வகையில், அட்லாண்டிக் கடலுக்கு மேலே விமானத்தில் பறந்துகொண்டிருந்த ஒருவர், மேகங்கள் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
காற்றும் தண்ணீரும் கலந்த மேகங்கள் பொதுவாக வெண்மை நிறத்தையே கொண்டிருக்கும். இந்த இரண்டுமே எந்த ஒளியையும் கிரகிக்கும் தன்மை கொண்டவை அல்ல.
ஆனால், ஒளியை அப்படியே மேகங்கள் ஊடுருவச்செய்யும். கிட்டதட்ட கண்ணாடி போன்று என வைத்துக்கொள்ளுங்களேன். இப்படி இருக்கையில், திடீரென சிவப்பு நிறத்தில் மேகக்கூட்டங்கள் மிளிர்ந்தது சமூக வலைத்தளங்களில் கவனத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சிவப்பு நிறத்தில் மிளிர்ந்த மேகம்
உலகின் 2-வது மிகப்பெரிய கடலான அட்லாண்டிக் கடல் வழியாக விமானத்தில் சென்ற போது அங்கு திரண்டு இருந்த மேகக்கூட்டங்கள் சிவப்பு நிறத்தில் மிளிர்ந்ததை பார்த்து ஆச்சரியம் அடைந்த விமானி, அதை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் டிரெண்ட் ஆனது. அதோடு, மேகக்கூட்டங்கள் சிவப்பு நிறத்தில் மிளிர்வதற்கான காரணம் குறித்தும் நெட்டிசன்கள் விவாதிக்கத் தொடங்கினர்.

நெட்டிசன்களின் விவாதம்
குறிப்பாக ரெட்டிட் சமூக வலைத்தளில் தீயாய் இந்த புகைப்படம் பரவியது. அதேபோல் இது குறித்த விவாதங்களும் நெட்டிசன்கள் மத்தியில் பட்டையை கிளப்பின. ஒரு சில நெட்டிசன்கள் இது உலகம் தனது இறுதி நாளை எட்டிவிட்டதற்கான சமிக்ஞை என்று பீதியை கிளப்பினார். இதுபோல மர்மமான வெளிச்சத்தை நான் பார்த்ததே இல்லை என்று விமானி கூறுகிறார். பிறகு ஏன்?அதற்கு மேலே தொடர்ந்து அவர் விமானத்தை செலுத்தினார் என ஒரு நெட்டிசன் வினோத கேள்வியையும் எழுப்பி, விவாதத்தை மேலும் சூடாக்கினார்.

மீன்பிடிப்பதற்காக . .
இப்படியே விவாதம் சென்று கொண்டிருந்த நிலையில், சில நெட்டிசன்கள் எதார்த்த நிலையையும் கண்டறிந்து பதிவிட்டனர். அப்படி நெட்டிசன் ஒருவர் பதிவிடும் போது, மீன்களை கவருவதற்காக மீன்பிடி படகுகள் மூலம் இத்தகைய ஒளிக்கீற்று அடிக்கப்படுகிறது. இந்த ஒளிதான் மேகக்கூட்டத்தில் பார்த்திருப்பார் என பதிவிட்டார். உண்மையில் மீன்பிடிப்பதற்காக கடலில் மீனவர்களால் பாய்ச்சப்படும் ஒளிக்கீற்றின் பிரதிபலிப்பே மேகக்கூட்டங்களின் நிற மாற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. பசுபிக் கடல் பகுதியில் செளரி பிஷிங் எனும் மீன் பிடி முறை மிகவும் பாரம்பரியம் ஆனது என்று சொல்லப்படுகிறது.

உண்மை என்ன?
மீன்களை பிடிப்பதற்காக (கவருவதற்காக) எல்.ஈ.டி விளக்குகள் படகுகளில் இருந்து கடல் மீது பாய்ச்சப்படும். இந்த ஒளியினால் கவரப்பட்ட செளரி வகை மீன்கள் கூட்டம் கூட்டமாக சிவப்பு நிறம் பாய்ச்சப்படும் இடத்திற்கு வந்து சேரும். அப்போது வலைகளை வீசும் போது கொத்துக்கொத்தாக மீன்கள் அகப்படும். செளரி என்பது 14 இன்ச் நீளம் கொண்ட சிறிய வகை மீன் என்று கூறப்படுகிறது. கடலின் மேற்புரத்தில் அதிகமாக காணப்படும் இந்த வகை மீன்கள் அவ்வப்போது குதித்து குதித்து நீரில் ஓடிக்கொண்டு இருக்கும்.












Click it and Unblock the Notifications