For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பழத்தால் உருவான பழம் நீ!

By Staff
Google Oneindia Tamil News

குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருப்பான். அறு படை வீடு கண்டவன் ஆறுமுகன். முருகன் என்றால் முதலில் நினைவுக்கு வருவது இந்தப் படை வீடுகள்தான்.

திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருச்செந்தூர், திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறு முருகன் தலங்களும் அறுபடை வீடு என அழைக்கப்படுகிறது.

பழனி அறுபடை வீடுகளில் பழமையானது. இங்கு முருகப் பெருமான் கோவணாண்டியாக கையில் தண்டத்துடன் காட்சியளிக்கிறான். அதனால் முருகனுக்கு தண்டாயுதபாணி என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

450 அடி உயரத்தில் பழனி மலை அமைந்துள்ளது. மலைக்கு 697 படிகள் ஏறி செல்ல வேண்டும். மலை மீது செல்ல விஞ்ச் எனப்படும் இழு வண்டியும் உள்ளது இதன் மூலம் மலையை 8 நிமிடத்தில் அடைந்து விடலாம். இந்த விஞ்ச் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்குகிறது.

தல வரலாறு:

கலகத்திற்கு பெயர் போன திரிலோக சஞ்சாரி நாரதர், யாருக்கும் கிடைக்காத அரிய மாம்பழத்தை சிவ பெருமானிடம் கொண்டு வந்து கொடுத்தார்.

அந்த பழத்தை பெற விநாயகருக்கும், முருகனுக்கும் கடும் போட்டி. யார் முதலில் உலகை சுற்றி வருகிறார்களோ அவர்களுக்குத்தான் அந்த பழம் என முடிவாகிறது.

இதையடுத்து உலகைச் சுற்றி வர தன் வாகனமான மயில் மீது ஏறி கிளம்பினார் முருகப் பெருமான். விநாயகரோ விவரமானவர். தாய், தந்தையே உலகம் என கூறி சிவனையும், உமையையும் சுற்றி வந்து பழத்தை பெற்றுக் கொண்டார்.

ஏமாற்றப்பட்டதாக கோபம் கொண்ட முருகன், பெற்றவர்களிடம் கோபம் கொண்டு, உடைகளைத் துறந்து, ஒரு முழக் கோவணத்துடன் குன்றின் மீது வந்தமர்ந்தார். முருகன் வந்து அமர்ந்த இடம் தான் பழனி என கூறப்படுகிறது.

முருகனே ஞானப்பழம். மாம்பழம் கிடைக்காமல் அவன் வந்து அமர்ந்த இடம் இது. முருகனைச் சமாதானப்படுத்த முயன்ற பார்வதி, முருகா நீயே ஞானப்பழம் உனக்கெதற்கு பழம். பழத்தின் காரணமாக, பழமான நீ வந்த அமர்ந்த இடம் இனி பழம் நீ என அழைக்கப்படும் என திருவாய் மலர்ந்தருளினார் உமையவள். பழம் நீ என்பதுதான் மருவி பழனி (பழநி) என்றாகி விட்டது.

மேலும் மீது கோபம் கொண்டு நீ குன்றின் அமர்ந்ததால் இனி குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகும் என உமையவள் கூறினாள். இன்றும் குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனை, முருகனை காணலாம்.

பழனி தமிழகத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த பழனி மலை புனிதமான சித்தர்கள் வாழ்ந்த இடம். பழனியில் இருக்கும் தண்டாயுதபாணி சிலை போக சித்தர் என்பவரால் வெகு காலம் முன் நிர்மாணிக்கப்பட்டது. காலம் எது என்பது உறுதியாகத் தெரியவில்லை. பழனி மலை இடும்பன் மலைக்கு அருகே உள்ளது.

பழனி மலை முருகனுக்கு நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு முருகனுக்கு செய்யப்படும் ராஜ அலங்காரத்தை காண கண் கோடி போதாது. அதே போல் முருகன் வெள்ளி ரதத்திலும், தங்க ரதத்திலும், தங்க மயில் வாகனத்திலும் வலம் வரும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும்.

முருகனுக்கு செய்யப்படும் ஒவ்வொரு அபிஷேகமும் கண் கொள்ளாக் காட்சி. இங்கு பிரார்த்தனை செய்து கொண்டு காவடி எடுத்துச் சென்றால் நிறைவேறாத காரியமும் நிறைவேறும் என்பது திண்ணம்.

பழனி மலை முருகன் தரிசனம் கண்ணுக்கு விருந்து. அங்கு கிடைக்கும் பஞ்சாமிர்தம் நாவிற்கு விருந்து. திருப்பதி என்றால் பெருமாளும் லட்டுவும் நினைவுக்கு வரும். அதே போல் பழனியில் திகட்டாத பஞ்சாமிர்தமும், நறுமணம் நிறைந்த விபூதியும் பிரசித்தியானவை.

பஞ்சாமிர்தம் - பஞ்ச என்றால் ஐந்து. அமிர்தம் என்றால் முக்தி தரும் பிரசாதம்.

பழனியில் உண்மையாகவே 5 பழங்களையும், கல்கண்டையும் கலந்து பஞ்சாமிர்தம் செய்யப்படுகிறது. முருகனுக்கு அபிஷேகம் செய்யபட்ட பின் இது விநியோகிகப்படுகிறது. முருகன் அருளும் பிரசாதமான இது முக்தியும் தரும் என பக்தர்கள் பஞ்சாமிர்தம் பெற்று செல்கிறார்கள்.

தூய வெண்நிறத்தில் நறுமணம் கமழும் விபூதி இங்கு கிடைப்பது மற்றொரு சிறப்பம்சமாகும்.

முக்கிய திருவிழாக்கள்:

* சித்திரைத் திருவிழா: பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில், ஏப்ரல் - மே மாதத்தில் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா 10 நாட்கள் பழனி நகரில் இருக்கும் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கொண்டாடப்படும்.

சித்ரா பெளர்ணமியன்று முருகன், வள்ளி, தெய்வானை சமேதரராக வெள்ளித் தேரில் பவனி வருவார். மறுநாள் தங்க ரதத்தில் முருகன் பழனியை வலம் வருவார்.

* அக்னி நட்சத்திர விழா: மே மாதம் 14 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

* வைகாசி விசாகம்: அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோவிலில் மே-ஜுன் மாதங்களில் கொண்டாடப்படுகிறது.

* தைப் பூசம்: பழனியின் மிகப் பிரசித்தமான திருவிழா. ஜனவரி- பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. முருக பக்தர்கள், காவடி தூக்கி, பாதயாத்திரையாக பழனி மலைக்கு வருவது வழக்கம்.

* ஸ்கந்த சஷ்டி விழா: இந்த விழா 6 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார விழாவாகும்.

* திருக்கார்த்திகை: நவம்பர்- டிசம்பர் மாதத்தில் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. தினமும் முருகன் தங்க ரதத்தில் பவனி வருவார். கார்த்திகை தினத்தன்று தங்க மயில் வாகனத்தில் பவனி வருவார்.

* பங்குனி திருவிழா: மார்ச் - ஏப்ரல் மாதத்தில் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவின்போது புகழ் பெற்ற பலரும் வந்து சொற்பொழிவு ஆற்றுவார்கள். கலை நிகழ்ச்சிகளும் நடை பெறும்.

* தங்கும் இட வசதி: பழனி கோவில் நிர்வாகத்திற்குட்பட்ட சத்திரம், பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ளது. 4 முதல் தர அறைகள் உள்ளன. வாடகை: ரூ 75

24 இரண்டாம் தர அறைகள் உள்ளன. வாடகை: 35.

22 முன்றாம் தர அறைகள் உள்ளன. வாடகை:ரூ 20.

இவை தவிர ஒரு பெரிய ஹால் உள்ளது. இங்கு 50 பேர் தங்கலாம். வாடகை:ரூ 300.

* போக்குவரத்து வசதி: பழனிக்கு பேருந்து வசதிகளும், ரயில் வசதிகளும் உள்ளது. போத்தனூர், பாலக்காடு, கோயம்புத்தூரிலிருந்து ரயில் வசதி உள்ளது. கோயம்புத்தூர், மதுரை, கொடைக்கானல், கரூர், ஈரோடு, பாலக்காடிலிருந்து ஏராளமான பேருந்து வசதி உள்ளது. வேலுண்டு வினையில்லை. மயிலுண்டு பயமில்லை. நல்லவை பல நல்கும் பழனி மலையானை தரிசித்து பலன் பல பெறுவோம்.

ஓம் முருகா! முருகா சரணம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X