அனுமன் ஜெயந்தி கோலாகலம்..100008 வடை மாலையில் ஜொலித்த நாமக்கல் ஆஞ்சநேயர்..பக்தர்கள் தரிசனம்
நாமக்கல்:
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. பிரம்மாண்டமான ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை சாற்றி சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு அதிகாலை முதலே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
சுசீந்திரம் தாணுமாலையான்சுவாமி கோவிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
அனுமன் ஜெயந்தி மார்கழி மாதம், அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று அனைத்து அனுமன் கோயில்களிலும் வைணவக் கோயில்களிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் பிற மாநிலங்களில் வைகாசி மாதம் வளர்பிறையில் வரும், தசமி திதியன்று, அனுமன் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள்.
நாமக்கல் கோட்டையில் உலக பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒரே கல்லாலான ஆஞ்சநேயர் 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இதையொட்டி இன்று காலை 5 மணி முதல் 10 மணி வரை 1,00,008 வடைமாலை அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணி முதல் நல்லெண்ணெய், சீயக்காய்தூள், பஞ்சாமிர்தம், பால், தயிர், மஞ்சள், சந்தனத்தால் சிறப்பு அபிஷேகமும், பிற்பகல் 1 மணிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உள்பட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர். தொடர்ந்து பகல் 1 மணிக்கு ஆஞ்சநேயருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இன்று விழாவுக்கு உள்ளூர் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி சாமி தரிசனம் செய்ய கோட்டை ரோட்டில் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவால் நாமக்கல் நகரம் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லி ஜெய் மாருதி ஞானபீடம் ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி இன்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. இன்று மாலை 6 மணிக்கு ராமர்-சீதா திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடக்கிறது. காட்டுராமர் கோவில் நெல்லை அருகன்குளம் காட்டுராமர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி காலை 8.30 மணிக்கு சிறப்பு ஹோமம், 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 12.30 மணிக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. எட்டெழுத்து பெருமாள் கோவிலில் உள்ள ராமதூதபக்த ஆஞ்சநேயருக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும், பழ அலங்காரமும், புஷ்பாஞ்சலியும் சிறப்பாக நடைபெற்றது.
ஆஞ்சநேயர் ஜெயந்தியையொட்டி சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உள்ள 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலைக்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காலை 8 மணிக்கு 18 அடி உயரமுள்ள விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், 1000 லிட்டர் பால், தயிர், களபம், சந்தனம், குங்குமம், பச்சரிசி மாவு, எலுமிச்சை பழம் சாறு, கரும்புச் சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், மாதுளைச் சாறு, தேன், விபூதி, நெய் உள்பட 16 வகையான பொருட்கள் அடங்கிய சோடச அபிஷேகம் நடைபெற்றது. இந்த அபிஷேகத்தை காண அதிகாலையிலேயே ஏராளமான பக்தர்கள் சுசீந்திரத்தில் குவிந்திருந்தனர். அனுமன் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications