For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கார்த்திகை தீபம்..முருகன் ஆலயங்களில் கோலாகலம்..திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம்

Google Oneindia Tamil News

மதுரை: கார்த்திகை தீப திருவிழா தமிழகம் முழுவதும் உள்ள முருகன் ஆலயங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை முதலே முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதி வருகிறது. திருப்பரங்குன்றத்தில் கிரிவலப்பாதையில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பு வாய்ந்தது ஆகும். கார்த்திகை மாதம் 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 28ஆம் தேதி காலை நடைபெற்றது.

Karthikai Deepam: Devotees visit Murugan Temples car festival at Thiruparangundram

விழாவையொட்டி சுப்பிரமணிய சுவாமி- தெய்வானையுடன் தினமும் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், தங்க குதிரை வாகனம், வெள்ளி பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு 8 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு வைர கிரீடம், நவரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி கோவிலுக்குள் உள்ள 6 கால் மண்டபத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார். அங்கு யாகம் வளர்க்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்கப்பட்டு பூஜை நடந்தது. மேளதாளங்கள் முழங்க முருகப்பெருமானுக்கு சிரசில் தங்க கிரீடம் சாற்றப்பட்டது. மேலும் முருகப்பெருமானின் திருக்கரத்தில், நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட செங்கோல் சூடி பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. பட்டாபிஷேகத்தை தொடர்ந்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் தீப, தூப ஆராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கார்த்திகை தீப விழாவின் சிகர நிகழ்ச்சியாக 6ஆம் தேதி மதியம் 11 மணிக்கு கார்த்திகை தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர். இன்று மாலை 6 மணிக்கு மலைமேல் மகா தீபம் ஏற்றப்படுகிறது. திருப்பரங்குன்றம் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவுக்காக மலைமீது மகா தீபம் ஏற்றப்படும். இதற்காக மூன்றரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரையில் 300 லிட்டர் நெய், 100 மீட்டர் காடாதுணியால் ஆன திரியில், 5 கிலோ கற்பூரத்தில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்ட பிறகு பிறகு இரவு 8 மணி அளவில் 16 கால் மண்டபம் அருகில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. சிவபெருமான் அடிமுடி தெரியாவண்ணம் பிரம்மா, விஷ்ணுவுக்கு காட்சி அளித்ததையும் நினைவூட்டும் விதமாகவும், சொக்கப்பனை ஏற்றப்படுவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. சிவ பெருமானை ஜோதிசொரூபமாக காணவே சிவன், முருகன் கோவில்களில் சொக்கப்பனை கொளுத்துகின்றனர்.

பழனியில் குவிந்த பக்தர்கள்

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பழனி கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் வருகையை ஒட்டி மலைக் கோயிலுக்கு சென்றுவரும் பாதை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும் .

பழனியில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 30ஆம் தேதி காப்பு கட்டு தலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மலைக்கோவிலில் தினமும் மாலை சண்முகார்ச்சனை, சின்னக்குமார சுவாமி தங்கசப்பரத்தில் யாகசாலை புறப்பாடு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாலையில் சாயரட்சை பூஜையைத் தொடர்ந்து மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்பட்டது. பின்னர் பரணி தீபத்தில் இருந்து சுடர் பெறப்பட்டு மலைக்கோவிலில் 4 திசைகளிலும் விளக்குகள் ஏற்றப்பட்டன.

திருக்கார்த்திகையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கே சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு தொடர்ந்து சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் யாகசாலை பூஜைக்கு சின்னக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பிறகு மேள தாளம் முழங்க சிவாச்சாரியார்களால் கோவில் முன்பு உள்ள தீப ஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்பட்டது. பின்னர் பனை, தென்னை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனையில் எண்ணெய், நெய் ஊற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பழனி மலைக்கோவிலைத் தொடர்ந்து பெரியநாயகி அம்மன் கோவில், திரு ஆவினன்குடி கோவில்களிலும் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது.விழாவை முன்னிட்டு பழனி மலைக்கோவிலில் இன்று தங்க ரத புறப்பாடு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் காலையிலேயே ஏராளமாக பக்தர்கள் மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

English summary
The festival of Karthika Deepa is celebrated in Murugan temples all over Tamil Nadu. From early in the morning, devotees are thronging the Arupadai houses of Lord Muruga. Car festival procession was held in Tiruparangundram along Girivalapathi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X