
மிதக்கும் கப்பல் போல மின்னொளியில் ஜொலிக்கும் பழனி..குடமுழுக்கு யாகசாலையில் தமிழ் புறக்கணிப்பா?
பழனி: குடமுழுக்கு விழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவில் மின்னொளியில் ஜொலிக்கிறது. யாகசாலை பூஜைகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. தமிழ்க் கடவுள் பழனி முருகன் திருக்கோயிலுக்கு நடைபெற்று வரும் திருக்குடமுழுக்கு விழாவின் வேள்விச்சாலையில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தெய்வத் தமிழ்ப் பேரவையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

முருகப்பெருமானின் அறுபடைவீடுகளில் மூன்றாம் படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவது பழனி தண்டாயுதபாணி கோவில் ஆலயம். இந்த ஆலயத்திற்கு 17 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் 27ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. கோவில் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தூரத்தில் இருந்து பழனி மலை கோவிலை பார்க்கும் போது மிதக்கும் கப்பல் போல தெரிகிறது.
தமிழில் மந்திரங்கள் ஓதி குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று தெய்வ தமிழ் பேரவையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வலியுறுத்தி பழனியில் ஆர்பாட்டமும் நடத்தினர்.
இந்த நிலையில் ஆகம விதிப்படி சமஸ்கிருதத்திலும் தமிழிலிலும் குடமுழுக்கு நடைபெறும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார். இந்த நிலையில் யாக சாலை பூஜையில் தமிழ் ஓதுவார்கள் யாகசாலைக்கு வெளியே அமரவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தெய்வத் தமிழ்ப் பேரவையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டுத் திருக்கோயில்களில் தமிழ்க் குடமுழுக்கு நடத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்புகளின்படி, குடமுழுக்கு விழாவின் அனைத்துச் சடங்குகளிலும் சமற்கிருதத்திற்கு இணையான எண்ணிக்கையில் தமிழ் மந்திரம் ஓதப்பட வேண்டும்.
அதன்படி, பழனி முருகன் குடமுழுக்கிற்காக அமைக்கப்பட்டுள்ள 90 வேள்வி குண்டங்களில், 45 தமிழ் வேள்விக்கும், 45 சமற்கிருத வேள்விக்கும் ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசு இதனை அப்பட்டமாக மீறி, வேள்விச்சாலையில் முழுக்க முழுக்க சமற்கிருத அர்ச்சகர்களை மட்டுமே அனுமதித்து, தமிழ்மொழியைப் புறக்கணித்துள்ளது.
தமிழில் வேள்வி நடத்துவோரை வேள்விச்சாலைக்குள் தமிழ் மந்திரங்கள் கூற அனுமதித்து, தெய்வச் சடங்குகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்காமல், தமிழ் ஓதுவார்களை மட்டும் வேள்விச்சாலைக்கு வெளியே நிறுத்தி, தனியாக மேடைபோட்டு அமர்த்தி, தீண்டாமையைக் கடைபிடிக்கிறது தமிழ்நாடு அரசு.
பிப்ரவரி மாத ராசி பலன் 2023: குருவால் நிம்மதி பெருமூச்சு விடப்போகும் ராசிக்காரர்கள்..நிதானம் தேவை!
தமிழிலும் குடமுழுக்கு மந்திரங்கள் ஒலிக்கும் என்று உயர் நீதிமன்றத்திலும், தமிழ்நாடு சட்டமன்றத்திலும் தமிழ்நாடு அரசு உறுதி கூறியது, அப்பட்டமான ஏமாற்று வேலை என்று உறுதிப்பட்டுள்ளது. தமிழில் வேள்வி நடத்த 45 தமிழ் பூசகர்களே தேவை என்ற நிலையில், கடந்த 22.01.2023 அன்று பழனியிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் உதவி ஆணையர் திருமதி. இலட்சுமி அவர்களை நேரில் சந்தித்த தெய்வத் தமிழ்ப் பேரவை நிர்வாகிகள் 45க்கும் மேற்பட்ட தமிழ் வேள்வி மற்றும் கிரியை நடத்துவோரின் பட்டியலை வழங்கினர்.

தமிழ்நாடு அரசு அப்பட்டியலைப் புறக்கணித்துள்ளதுடன், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அரசு சார்பிலேயே வேள்வி நடத்த பயிற்சி வழங்கி, சான்றிதழும் பெற்ற தமிழ் மந்திர அர்ச்சகர்களையும் வேள்வி நடத்த அழைக்காமல் புறக்கணித்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. நீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிரானது என்றும் தெய்வ தமிழ் பேரவையினர் குறிப்பிட்டுள்ளனர்.