
சபரிபீடம்..அம்பு எய்து தேர்வு செய்த ஐயப்பன்... சபரிமலையில் ஆலயம் எழுப்பிய பரசுராமர்
சபரிமலை:
தர்மசாஸ்தாவான ஐயப்பன், தான் தவமிருக்க எண்ணிய இடத்தை தேர்வு செய்து அம்பை எய்தார். அந்த அம்பு விழுந்த இடம் தான் இந்த சபரிமலை. ஐயப்பனின் கட்டளையை ஏற்று பரசுராமர் கோவில் எழுப்பிய இடமே சபரிமலை என்றும் சபரி பீடம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. ஐயப்பன் வீற்றிருக்கும் சபரிபீடம் என்றழைக்கப்படும் சபரிமலை என்ற பெயரே, தன் மீது அளவுகடந்த பாசம் வைத்திருந்த ஒரு பெண் பக்தையின் பெயரால் தான் உருவானது என்பது பெரும்பாலான ஐயப்ப பக்தர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஆன்மீகவாதிகளுக்கும், ஐயப்ப பக்தர்கள் அனைவருக்குமே சபரிமலை என்ற பேரை கேட்டாலே மெய் சிலிர்க்கும். சபரிமலைக்கு எப்போது போய் ஐயப்பனை தரிசனம் செய்வோமோ என்றும் மனம் ஏங்கும். நெய் அபிஷேகப்பிரயனான ஐயப்பனைப் பற்றியும் அவருடைய வரலாற்றைப் பற்றியும் கேட்டாலே ஐயப்ப பக்தர்கள் அப்படியே நேரம் போவதே தெரியாமல் பேசிக்கொண்டிருப்பார்கள்.
போனவருஷம் மாதிரி இல்ல.. கோலாகல ஏற்பாடுகளுடன் திமுகவினர்! அன்பகத்தில் நிர்வாகிகளை சந்திக்கும் உதயநிதி
மண்டலபூஜை நடைபெறும் இந்த கால கட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினசரியும் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு செல்கின்றனர். கடந்த 10 நாட்களில் மட்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனுக்கு குளிர குளிர நெய் அபிஷேகம் செய்து தரிசனம் செய்துள்ளனர்.

கார்த்திகை மாத விரதம்
சுத்த பிரம்மச்சாரிய கடவுளான சபரிகிரி வாசன் ஐயப்பனை தரிசிப்பதற்காகவே, கார்த்திகை 1ஆம் தேதியிலேயே மாலை அணிந்து விரதமிருந்து 41 நாட்கள் காத்துக்கிடந்து, ஐயப்பனின் முகத்தை கண்ட உடனே மனதில் தோன்றும் எண்ணம், போதும் ஐயப்பா, இதுக்கு மேல எனக்கு வேற சொத்து சுகம் எதுவும் வேணாம், உன்னை கண்டது ஒன்றே போதும் என்ற பேரானந்தம் ஏற்படுமே, அந்த சுகத்திற்கு ஈடாக எத்தனை கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் ஈடாகாது.

சபரிபீடம்
ஐயப்பன் வீற்றிருக்கும் சபரிபீடம் என்றழைக்கப்படும் சபரிமலை. நீலிமலை ஏற்றத்தில் அமைந்திருப்பது தான் சபரி பீடமாகும். இந்த சபரிபீடம் அல்லது சபரிமலை என்ற பெயர் எப்படி உருவானது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஸ்ரீராமவதாரம் நிகழ்ந்த திரேதாயுகத்தில் தான் சபரி என்ற அன்னை இந்த மலையில் வசித்து வந்தாள். அந்த சபரி அன்னை ஸ்ரீராமபிரான் மீது அளவு கடந்த அன்பும் பக்தியும் கொண்டிருந்தாள். ஸ்ரீராமபிரானை எப்போது காண்போம் என்று தவித்துக்கொண்டிருந்தாள். ஸ்ரீராமபிரானுக்காக காட்டில் கிடைக்கும் இலந்த பழங்களை சேகரித்து வைத்தாள்.

ராமனுக்காக காத்திருந்த அன்னை
சபரி அன்னை, தான் சேகரித்து வைத்த இலந்த பழங்களை கடித்து சுவைத்துப் பார்த்து, அதில் இனிப்பான பழங்களை மட்டும் பத்திரமாக சேமித்து வைத்து ஸ்ரீராமபிரானுக்காக காத்திருந்தாள். சபரி அன்னையை காண்பதற்கான சந்தர்ப்பம் ஸ்ரீராமபிரானுக்கு பல ஆண்டுகள் கழித்தே கிடைத்தது. ஸ்ரீராமபிரான் 14 ஆண்டுகள் வனவாசம் இருப்பதும், தான் வசித்து வருகின்ற இதே காட்டில் தான் தங்கியிருப்பதாகவும், சபரி அன்னைக்கு தெரிந்ததும், ஸ்ரீராமபிரானை காண்பதற்காக ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்தார்.

ராமனைக் கண்ட சபரி
தன்னுடைய தீவிர பக்தையான சபரி அன்னை தனக்காக காட்டில் காத்திருப்பதை அறிந்துகொண்ட ஸ்ரீராமபிரானும், அவரைத் தேடி காட்டுக்குள் வந்தார். ஸ்ரீராமபிரானை கண்டதும் ஆவலில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. ஸ்ரீராமனுக்காக பத்திரப்படுத்தி வைத்திருந்த இலந்த பழங்களை அவருக்கு கொடுத்தார். அது சபரி அன்னை கடித்து எச்சில் படுத்திய பழங்களாக இருந்தாலும் கூட, அந்த அன்னையின் தீவிர பக்தியைக் கண்டு மெய்சிலிர்த்து இலந்தை பழங்களை ருசித்து சாப்பிட்டார். பின்னர், சபரி அன்னைக்கு மோட்சம் அளித்ததோடு, அந்த அன்னை வாழ்ந்து வந்த மலைக்கும் மோட்சம் அளித்தார். அன்றிலிருந்து அந்த மலையும் சபரிமலை என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

சபரிமலை ஐயப்பன்
பொதுவாக கடவுள் மனிதனுக்கு மோட்சம் அளித்து ஆட்கொள்வது இரண்டு வகையில். பக்தர்களுக்கு கடுமையான சோதனைகளை கொடுத்து, இறுதியில் தானே நேரடியாக தோன்றி பக்தர்களை மோட்சமளித்து ஆட்கொள்வதுண்டு. இன்னொரு வகையானது, பக்தர்கள் தன்னிடம் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், தன்மீது வைத்திருக்கும் எல்லையற்ற அன்புக்கு கட்டுப்பட்டு அவர்களுக்கு காட்சி கொடுத்து தன் வசப்படுத்தி அவர்களுக்கு மோட்சமளிப்பது. சபரி அன்னைக்கு ஸ்ரீராமர் காட்சி கொடுத்ததும் இந்த வகையில் தான்.

அம்பு எய்த ஐயப்பன்
ஐயப்பனும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவரும் அந்த மலைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். தர்மசாஸ்தாவான ஐயப்பன், தான் தவமிருக்க எண்ணிய இடத்தை தேர்வு செய்து அம்பை எய்தார். அந்த அம்பு விழுந்த இடம் தான் இந்த சபரிமலை. உடனடியாக பரசுராமரை அழைத்து தனக்கு அம்பு விழுந்த இடத்தில் கோவில் எழுப்புமாறு கூறிவிட்டு தேவலோகம் சென்று விட்டார். ஐயப்பனின் கட்டளையை ஏற்று பரசுராமர் கோவில் எழுப்பிய இடமே சபரிமலை என்றும் சபரி பீடம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இன்றைக்கும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களும், இந்த சபரி பீடத்திற்கு வந்து வந்து கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டு செல்கின்றனர்.