தை பொங்கல்..மகர சங்கராந்தி..லொஹரி..போஹாலி பிஹு..பண்டிகைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
சென்னை: புது பானையில் பொங்கல் வைத்து பொங்கி வரும் அழகைப் பார்த்து பொங்கலோ பொங்கல் என்று உற்சாகமாக கூறி வெல்லம் கலந்து நெய் ஊற்றி சூரியனுக்கு படையலிட்டு சாப்பிடுவார்கள். தமிழகத்தில் பொங்கல் போல வட இந்தியாவில் மகர சங்கராந்தி பண்டிகையாக கொண்டாடுகின்றனர். எந்தெந்த மாநிலங்களில் எந்த பெயர்களில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது எப்படி கொண்டாடுவார்கள் என்னென்ன மாதிரியான உணவுகள் சமைத்து சாப்பிடுவார்கள் என்று பார்க்கலாம்.
தை மாதம் முதல் நாள் அன்று உலகிற்கு வெளிச்சம் கொடுத்து விளைச்சலுக்கு உதவி புரியும் சூரியன், மண், கால்நடைகள் அனைத்துக்கும் மரியாதை செய்யும் விதமாக, நன்றி தெரிவிக்கும் விதமாகவும் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் தை பொங்கல் திருநாள் போல வட இந்தியாவில் மகர சங்கராந்தி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வு உத்தராயணம் என்றும் தெற்கு நோக்கிய நகர்வு தட்சிணாயணம் என்று அழைக்கப்படுகிறது. தை முதல்நாள் உத்தரயணத்தின் துவக்கம் ஆனி மாதம் முடியும் வரை உத்தராயணம். ஆடி மாதம் முதல் மார்கழி முடிய தட்சிணாயணம்.
பெரும்பாலான கும்பமேளாக்கள் இந்த நாளில்தான் தொடங்குகின்றன. குறிப்பாக இந்த நாளில் தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான உறவு வலுக்கும் என்றும், குடும்பப் பொறுப்பை மகன் ஏற்று நடத்தும் நாளாகவும் இது அனுசரிக்கப்படுகிறது.
உலகிற்கு ஒளி கொடுக்கும் கதிரவனின் வடதிசை பயணத்தின் துவக்கமும், தென்திசை பயணத்தின் முடிவும் தை பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. ஜீவராசிகளின் வாழ்வாதத்திற்குத் தேவையான ஜீவனை தரும் சூரியனை போற்றும் விதமாகவும், விளைச்சலுக்கும், உழவுத் தொழிலுக்குத் தேவையான உதவிகளை செய்யும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் எத்தனையோ பண்டிகைகள் கொண்டாடினாலும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் நான்கு நாட்கள் களைகட்டும். வீடுகளை சுத்தம் செய்து வெள்ளையடித்து அலங்காரம் செய்து, மாவிலை தோரணங்கள் கட்டி,கணுப்பிள்ளை, வேப்பிலை, கம்பு, ஆவாரம்பூ போன்றவைகளை சேர்த்து காப்பு கட்டுவார்கள்.
ஆந்திரா

ஆந்திராவில் மகர சங்ராந்தி என்ற பெயரில் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நம் ஊர் பொங்கல் திருநாளைப் போல்தான். முதல் நாள் போகி, மறுநாள் மகர சங்ராந்தி மற்றும் மூன்றாவது நாள் கன்னுமா என மூன்று நாட்களுக்குக் கொண்டாடுகிறார்கள். போகியில் பழையனவற்றை எரித்து, மாலையில் கொலு வைக்கிறார்கள். இந்தப் பண்டிகையில் முக்கியமாக முன்னிறுத்தப்படுவது பலவர்ணக் கோலங்கள். மகர சங்ராந்தி அன்று காலையில் குளித்து பூஜை செய்து, பானையில் சூரியப் பொங்கல் வைத்து உண்டு மகிழ்கிறார்கள். இவர்களின் கன்னுமா என்பது மாட்டுப் பொங்கலாகும். முதல் இருநாள் மட்டும் அரசு விடுமுறை என்றாலும், கிராமங்களில் கன்னுமாதான் மிகவும் விசேஷம். இந்த நாளில் மாடுகளின் ரேஸ், கோழி சண்டை போன்ற கிராம விளையாட்டுக்கள் உண்டு. மகர சங்ராந்தி வரை இதற்கு முன்பாக வரும் மாதம் முழுவதும் விடியற்காலை பூம்பூம் மாட்டுடன் வருபவர்களுக்கு தானியங்களை தானமாக அளிக்கின்றனர்.
கர்நாடகா

மகர சங்ராந்தி என்ற பெயரிலேயே அழைக்கப்படும் பொங்கல் இங்கு ஒரேஒரு நாள் மட்டும் கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் இடையே மிகவும் பிரபலமான பண்டிகையாகும். அன்றைய தினத்தில் விவசாயிகள் குளித்துவிட்டு அறுவடை தானியங்களுடன் தங்கள் வேளாண்மைக் கருவிகளையும் வைத்து பூஜை செய்வார்கள். இந்தப் பூஜையில் வைக்கப்பட்ட இளநீர்களை எடுத்துச்சென்று அருகிலுள்ள மலைகள் மீதுஏறிநின்று வேகமாக கீழே தூக்கி வீசுவார்கள். அது விழும் தூரத்திற்கு தங்கள் கிராம எல்லைகள் விரிந்து வளரும் என்பது நம்பிக்கை. மைசூர் மற்றும் மாண்டியா பகுதிகளில் மட்டும் மாட்டு ரேஸ் நடக்கிறது. இங்கு பானையில் பொங்கல் வைக்கும் பழக்கம் இல்லை. கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெறும். நம்முடைய ஊரில் கரும்பு சாப்பிடுவது போல கர்நாடகாவில் மகர சங்கராந்தி நாளில் கரும்பு சாப்பிடுவார்கள். வெல்லம், கரும்பு, வேர்க்கடலை மற்றும் எள் ஆகியவற்றை ஒரு சிறிய பாக்கெட்டுகளில் ஒன்றாகப் போட்டு உற்றார், உறவினர்களுக்கு பரிசாக கொடுப்பார்கள்.
கேரளா

கேரளா மாநிலத்தில் ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜை நடைபெறும் தினம் மட்டும் பண்டிகை விசேஷமாக கொண்டாடப்படும். தமிழக எல்லையில் உள்ள சில மாவட்டங்களில் மட்டும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மற்ற இடங்களின் கோயில்களில் அன்றைய தினத்தில் சிறப்பு ஆரத்திகள் எடுக்கப்படும். மற்றபடி புத்தாடை, புது உற்சாகம் மற்றும் அரசு விடுமுறை என எதுவும் கிடையாது.
புனித நீராடல்

உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மகர சங்கராந்தி நாளில் தம்முடைய பாவங்கள் தீர்ந்து மோட்சம் கிடைக்கும் என அருகிலுள்ள கங்கை, யமுனை, நர்மதா போன்ற புண்ணிய நதிகளில் குளித்து முடிப்பதே தலையாய கடமையாகக் கருதுகிறார்கள். இதனால், மகர சங்ராந்தியின் குதூகலம் மற்றும் கொண்டாட்டங்கள் நதிக்கரைகளில்தான் பார்க்கமுடியும். இங்கு ஊஞ்சல்களை அமைத்தும் ஆடி மகிழ்கிறார்கள். குளித்த பின் தானியங்களை பிராமணர்களுக்குத் தானமாக வழங்கிவிட்டு, இனிப்புகளை செய்து சாப்பிடுகிறார்கள். இவற்றில் உடலுக்குச் சூட்டைத் தரும் வெல்லம் மற்றும் எள் தவறாமல் இடம்பெறும். இது குளிர்காலம் என்பதே இதன் முக்கியக் காரணம். இத்துடன் கேழ்வரகுக் கிச்சடியும் செய்து சாப்பிடுகிறார்கள். கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் உண்டு. அதில், அந்தந்தப் பகுதிகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களை பூஜையில் படைக்கிறார்கள். இந்தப் பண்டிகையில் செய்யப்படும் இனிப்புகளின் பெயர் சிக்கி வேர்க்கடலை மற்றும் வெல்லம், கஜக் எனப்படும் வெள்ளை எள் மற்றும் வெல்லம், தில்கா லட்டு வெள்ளை எள், கோவா மற்றும் வெல்லம் சேர்த்து சாப்பிடுவார்கள். இந்த நாளில் பீகாரில் மட்டும் அவலுடன் தயிர் மற்றும் வெல்லம் கலந்து ஒரு பலகாரம் செய்து சாப்பிடுகிறார்கள்.
ஒரிசா மற்றும் சத்தீஸ்கர்
ஒரிசா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் மட்டும் ஆட்டம், பாட்டம் என இதை ஒரு வாரம் முழுவதும் கொண்டாடுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகள் என்பதால், தம் அறுவடைகளை முடித்த லாபம், ஒவ்வொரு குடும்பத்தினரின் கைகளிலும் கண்டிப்பாக இருக்கும். எனவே, இந்த சந்தோஷத்தைக் கொண்டாட ஆண், பெண் இருபாலருமே மது அருந்தி மயங்கி இருப்பதும் பண்டிகையின் ஒரு அங்கமாகக் கருதுகிறார்கள். இந்த நாளுக்காக ஒரிசாவின் பூரி ஜெகநாத் கோயிலில் இரண்டுமுறை அலங்காரங்கள் செய்து சிறப்புப் பூஜைகள் செய்கிறார்கள். சத்தீஸ்கர் கோயில்களிலும் சிறப்புப் பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுவது உண்டு.
மகராஷ்டிரா
மகராஷ்டிராவில் இந்தப் பண்டிகையின் போது கருப்பு எள் மற்றும் வெல்லம் கலந்த இனிப்புகளை பரிமாறிக் கொள்வார்கள். கருப்பு எள்ளை மராத்தியர்கள் மிகவும் புனிதமாகக் கருதுவதால், அன்றைய நாளில் சில பழமைவாதிகள் கருப்புநிற உடைகளை அணிவதையும் ஒரு பாரம்பரியமாக கடைபிடிக்கிறார்கள். குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் சாதாரண புத்தாடை உடுத்துவார்கள். சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் கரும்பு, வெல்லம் மற்றும் எள்ளை பானையில் வைத்து பூஜை செய்வார்கள். நகரவாசிகள் மாலையில் பூஜை செய்து வெல்லம், எள்ளு மற்றும் கரும்புத் துண்டுகளை ஒரு சிறிய பானையில் போட்டு பூஜை செய்வார்கள். இதற்கு அருகிலுள்ள பெண்களை ஒற்றைப்படை எண்ணிக்கையில் அழைத்து, அவர்களுக்கும் சிறுசிறு பானைகளில் வெல்லம், கரும்பு மற்றும் எள் ஆகியவற்றைப் போட்டுக் கொடுக்கிறார்கள். இந்த நாள் முதல் நல்ல காற்று இங்கு வீசத் தொடங்குவதால், பல்வேறு நிறங்களில் விதவிதமானப் பட்டங்களை செய்து மாலையில் பறக்கவிட்டு விளையாடும் பழக்கம் அவர்களிடம் உள்ளது.
குஜராத்
இந்த மாநிலத்திலும் மகர சங்ராந்தி என்ற பெயரில் கொண்டாடினாலும், பட்டங்கள் பறக்கவிடும் பண்டிகை என்றுதான் கூறுவார்கள். இந்த நாளில் விதவிதமான டிசைன்களில், பலவர்ண நிறங்களில் பறக்க விடப்படும் பட்டங்களைப் பார்க்க பலரும் கூடுவார்கள். அன்றைய தினம் அரசு விடுமுறை என்றாலும், புத்தாடைகள் அணிவது கிடையாது. இங்குள்ளவர்களுக்கு பலவகைகளான காய்கறிகள் சேர்த்து சமைக்கப்படும் 'உண்டியா' எனும் பதார்த்தத்தை பூரியுடன் சேர்த்து சாப்பிடுவதென்றால் கொள்ளைப் பிரியம். இவற்றை செய்து விற்பதற்கென்றே சாலையோர, தெருவோர திடீர் கடைகள் உருவாகி விடும்.
லொஹரி பண்டிகை
பஞ்சாப்பில் 'லொஹரி' என்றழைக்கிறார்கள். இந்த மாநிலத்தில் இருந்து பிரிந்த இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஹரியானா, பஞ்சாபிகள் அதிகம் வாழும் டெல்லி ஆகிய மாநிலங்களிலும் இதை லொஹரி என கொண்டாடுகின்றனர். பஞ்சாபிகளின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரங்களை முன்நிறுத்தும் பண்டிகையாக இருப்பதால், அங்குள்ள அனைத்து மதத்தவர்களும் இதைக் கொண்டாடுகிறார்கள். இந்த லொஹரி 13ஆம் தேதி இரவு துவங்கி மறுநாள் வரை நீடிக்கும். குறிப்பாக 13.ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு குடும்பத்தார் அனைவரும் வந்து, தீயை மூட்டி அதைச் சுற்றிலும் அமர்ந்து கொள்வார்கள். தெருவாசிகள், இப்படி பொது இடங்களில் தீமூட்டி அமர்ந்துகொண்டு கொண்டாடுவது உண்டு. இதற்கேற்றபடி இந்தக் காலங்களில் அங்கு கடும் குளிர் நிலவுகிறது. அப்போது பாரம்பரிய பாடல்களுடன் நடனமாடி மகிழ்கிறார்கள். இங்கும் எள் மற்றும் வெல்லம் கலந்து செய்த இனிப்பு வகைகள் பரிமாறப்படும். அந்த வருடம் ஆண் பிள்ளைகள் பிறந்த பஞ்சாபிகளின் வீடுகளில் லொஹரி சிறப்புத் திருவிழாவாக இருக்கும். இந்த நாளில் வேண்டுதல் செய்துகொள்வதும் உண்டு. எள், வெல்லம் மற்றும் பால் கலந்த இனிப்புகள் அதிகம் செய்வார்கள்.
அசாம்
அசாம் மாநிலத்தில் 'போஹாலி பிஹு' என்ற பெயரில் அசாமிய காலண்டரின் 'மாக்' மாதத்தின் முதல் நாளாக ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடுகிறார்கள். இதன் முதல் நாள் விசேஷம் மாலையில் உருக்கா என்ற பெயரில் தொடங்குகிறது. அந்த நாளில் சொந்தபந்தங்கள் அனைவரும் அல்லது குடும்பத்துடன் ஒரே இடத்தில் கூடி இரவு விருந்தை அசைவ உணவுடன் உண்டு மகிழ்வார்கள். இரண்டாவது நாள், விடியலில் குளித்து மூங்கில் மற்றும் வைக்கோல் கொண்டு 'மேஜி' என்றழைக்கப்படும் ஒன்றை பிரமிடுகள் வடிவில் செய்வார்கள். இதை அறுவடை செய்த நிலங்களில் அமைத்து பூஜை செய்து நாம் போகியில் எரிப்பதுபோல் எரித்து விடுவார்கள். வீட்டு பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி பெறுகிறார்கள். அன்றைய தினம், அவலில் தயிர் கலந்து ஒரு உணவுப்பண்டம் மற்றும் எள்ளில் வெல்லம் கலந்து ஒரு இனிப்பு சாப்பிடுவார்கள். இந்தப் பண்டிகையில் அக்கம், பக்கம் உள்ளவர்கள் ஒருவொருக்கொருவர் அழைத்துக்கொள்வார்கள். அசாம் மாநில அரசு இரண்டு நாள் அரசு விடுமுறை அளிக்கிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications