
புரட்டாசியில் நோ அசைவம்..ஒன்லி சைவம்தான்..ஆன்மீகம் மட்டுமல்ல அறிவியல் காரணமும் இருக்கு!
மதுரை: தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் ஆறாவது மாதம். வெயிலும் மழையும் கலந்த மாதம். கோடை கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. எனவேதான் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை ஒதுக்கி சைவ உணவுகளை சாப்பிட்டனர் நம்முடைய முன்னோர்கள்.
புரட்டாசி மாதம் இன்னும் சில நாட்களில் பிறக்கப் போகிறது. புரட்டாசி மாதம் பெருமாள் மாதம் என்பார்கள். காலையிலேயே பெருமாள் கோவில்களில் பலரும் நாமத்துடன் வலம் வருவார்கள். காய்கறி கடைகளில் மக்கள் கூட்டம் அலை மோதும் என்பதால் ஆடு, கோழிகள் எல்லாம் டென்சன் இன்றி கிராம வீதிகளில் ஜாலியாக வலம் வரும்.
புரட்டாசியில் கன்னி ராசியில் சூரியன் இருக்கிறார். புதனின் ஆட்சி, உச்ச வீடு. பச்சைக் காய், கனிகள், போன்ற உணவுகளெல்லாம்தான் புதனுக்கு காரகமாக வரும். அதனால்தான் அந்த மாதத்தில் அசைவ உணவுகள் தவிர்க்கப்படுகிறது. சைவ உணவுகளை விரும்பி சாப்பிடும் மாதமாக புரட்டாசி மாதம் அமைந்துள்ளது. இதற்கு ஆன்மீக ரீதியான காரணம் மட்டுமல்லாது அறிவியல் ரீதியான காரணமும் உள்ளது.
புரட்டாசி சனிக்கிழமை விரதம்: திருமண தடையா? பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றுங்கள்! தோஷம் நீங்கும்!!

புரட்டாசி பெருமைகள்
புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தி, விரதம் இருந்து சனிக்கிழமைகளில் பெருமாள் ஆலயங்களுக்கு செல்வது வழக்கம். இதற்கு காரணமாக ஜோதிட ரீதியாக பல கருத்துக்கள் கூறப்படுகின்றன.ஜோதிடத்தில் 6வது ராசி கன்னி ராசி. இந்த ராசியின் அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம் அதாவது புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்கு உரிய கிரகம் என்பதால் அசைவம் சாப்பிடக்கூடாது பெருமாளை நினைத்து விரதமிருந்து துளசி நீர் குடிக்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகின்றது.

என்ன உணவு சாப்பிடலாம்
புரட்டாசி மாதம் என்பது புதனுடைய வீட்டில் சூரியன் இருக்கக்கூடியது. புதன் என்பது ஒரு சாத்வீகமான கிரகம். செளமியன் என்று புதனைக் குறிப்பிடுவது உண்டு. செளமியன் என்றால் சாது. சாத்வீகமானவர். புதனுடைய உணவு என்று எடுத்துக்கொண்டால், அது உப்பு சப்பு இல்லாத உணவுதான். துவர்ப்பு சக்தி அதிகமுள்ள உணவுகளெல்லாம் புதனுடைய உணவு. இந்த புதனுடைய உணவாக அசைவ உணவுகள் வரவே வராது. காய், கனிகள், பிரசாதங்கள் இதுபோன்ற உணவுகளெல்லாம்தான் புதனுக்கு வரும். அதனால்தான் அந்த மாதத்தில் அசைவ உணவுகள் தவிர்க்கப்படுகிறது.

துளசி தீர்த்தம்
கன்னி ராசி காலப்புருஷ ராசி சக்கரத்தின் படி மேஷ ராசிக்கு 6 ஆம் வீடாகிய கன்னி ராசி. ருண ரோக ஸ்தானம் என்பதால் இம்மாதத்தில் வயிறு சம்பந்தமான அஜீரண பிரச்சினைகள் அதிகரிக்கும். உடல் வெப்ப நிலையும் அதிகரிப்பதோடு பித்தம் அதிகரிக்கும். இதனால் இம்மாதத்தில் அசைவம் உண்டால் அவை செரிமான கோளாறுகளை ஏற்படுத்தும், வயிறு பிரச்சினைகள் ஏற்பட்டு கெட்டக்கொழுப்பு உடலில் தங்கிவிடும் ஆதலால் அசைவ உணவை தவிர்த்து மகாவிஷ்ணுவை வணங்குவதோடு உடம்புக்கும், வயிற்றிற்கும் நன்மை தரக்கூடிய துளசி தீர்த்தத்தை முன்னோர்கள் குடிக்கச் சொன்னார்கள்.

முன்னோர்கள் அறிவுரை
தமிழ் மாதங்களில் புரட்டாசி என்பது வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம். ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. பல மாதங்களாக, வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து, புரட்டாசி மாதத்தில்தான் வெப்பத்தை தணிக்க ஆரம்பிக்கும். இதனால், அந்த மாதத்தை சூட்டை கிளப்பிவிடும் காலம் எனக் கூறுவார்கள். இது கோடை கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது. இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவதை ஒதுக்கினர் நம் முன்னோர்.

நவராத்திரி பண்டிகை
அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய் கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும். சாதாரணமாக சைவ உணவு நமது உடலிற்கு எல்லா வகையிலும் உகந்தது. இந்த மாதிரியான காலங்களில் அசைவ உணவுகளைத் தவிர்த்தால் நமக்கு நல்லது. அது மட்டுமல்லாது புரட்டாசி மாதம் நவராத்திரி பண்டிகை நடைபெறுகிறது. மகாளய பட்சம் 16 நாட்கள் மறைந்த முன்னோர்கள் நம் வீடு தேடி வருவார்கள். இந்த காலத்தில் அசைவ உணவை தவிர்த்து சைவ உணவு சாப்பிடுவதே அனைவருக்கும் நல்லது என்றும் முன்னோர்கள் கூறியுள்ளனர்.