For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிதி நிலைமை மட்டும் சீராக இருந்திருந்தால் இன்னும் என்னவெல்லாமோ செய்திருப்பேன்! ஸ்டாலின் முழு உரை!

தமிழ்நாட்டின் நிதி நிலைமை பற்றி மிகப் வெளிப்படையாக பேசிய முதல்வர் ஸ்டாலின்.

Google Oneindia Tamil News

திருவள்ளூர்: நிதி நிலைமை மட்டும் சீராக இருந்திருந்தால் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தியிருக்க முடியும் என்றும் தாம் அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவேன் எனவும் முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் வகையில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.

முதலமைச்சர் ஸ்டலினின் பேச்சில் பல்வேறு முக்கியத் தகவல்கள் இடம்பெற்றிருந்தன. அவரது உரையின் முழு விவரம் வருமாறு;

வீழ்ச்சியுற்றுக் கிடந்த தமிழினம் பகுத்தறிவுக் கருத்துகளால் இனமான - மொழி உணர்ச்சி பெற்று, வீறுகொண்டு எழுந்த வீர வரலாற்றை ஒவ்வொரு தமிழரும் நினைவுகூரும் நாள்தான், இந்த வீரவணக்க நாள்!

ஆங்கிலேய ஆட்சியின் பிடியிலிருந்து நாம் விடுதலை பெறுவதற்கு முன்பாகவே இந்தி ஆதிக்கத்தை நிறுவ முயன்றவர்களை எதிர்த்து, தமிழ் காக்கத் தங்கள் உயிரையும் துச்சமென நினைத்து உயிரையும் விலையாய்க் கொடுத்த வீர மறவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாள், இந்த நாள்!
தமிழ்நாடு இதுவரையில் பல்வேறு மொழிப்போர் களங்களைச் சந்தித்திருக்கிறது.
1938 முதல் 1940 வரை முதல் களம்.
1948 முதல் 1950 வரை இரண்டாவது களம்.
1953 முதல் 1956 வரை, மூன்றாவது களம்.
1959 முதல் 1961 வரை நான்காவது களம்.
1986 ஐந்தாவது களம்.

Stalin said that if only the financial situation had been stable, he could have achieved many more achievements

இந்தத் தியாக வரலாற்றை மீண்டும் மீண்டும் சொல்வது, நம்முடைய தமிழினம் மீண்டும் தாழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்!
"இந்திக்குத் தமிழ்நாட்டில் ஆதிக்கமாம்
நீங்கள் எல்லோரும் வாருங்கள் நாட்டினரே! -
செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்த பின்னும்
இந்தத் தேகம் இருந்தொரு லாபம் உண்டோ?" என்று 1938-இல் பாவேந்தர் பாரதிதாசன் முழங்கினார்.
தந்தை பெரியார் -
மறைமலை அடிகள் -
நாவலர் சோமசுந்தர பாரதியார் -
துறவி அருணகிரி அடிகள், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் எனத் தமிழ் உணர்வாளர்கள் பலரும் எழுதியும் பேசியும் இந்தித் திணிப்பின் ஆபத்துகளை மக்களிடையே விளக்கினர்.
இதையெல்லாம் உள்வாங்கி,
'இருப்பது ஓர் உயிர்,
அது போகப் போவது ஒருமுறை,
அது நல்ல காரியத்துக்காக
நாட்டுக்காகப் போகட்டுமே' - என்று வாழ்ந்து, தமிழுக்காக உயிர் நீத்தவர்கள்தான் மொழிப்போர் தியாகிகள்!

1938-ஆம் ஆண்டு மொழிப்போராட்டத்தில் கைதாகி 1939-இல் சிறையில் மறைந்த நடராசனும், தாளமுத்துவும் - 1965-ஆம் ஆண்டு, தூக்கி நின்ற துப்பாக்கிக் குண்டுக்கு, மார்பு காட்டிக் காவல்துறைக்கு முன்னால் நின்ற அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர் படையில் சிவகங்கை இராசேந்திரனும் - 1965 மற்றும் 1966-ஆம் ஆண்டுகளில் தங்களது தேக்குமரத் தேகத்தைத் தீயால் எரித்துக் கொண்ட கீழப்பழுவூர் சின்னச்சாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன், சத்தியமங்கலம் முத்து, 'மாணவமணி' மயிலாடுதுறை சாரங்கபாணி போன்றோரும் - அமுது அருந்துவது போல விஷம் அருந்தி மறைந்த கோவை பீளமேடு தண்டபாணி, கீரனூர் முத்து, விராலிமலை சண்முகம் போன்றோரும் - இன்றைக்கும் படங்களாக நம் முன்னால், நம்முடைய உணர்வுகளில் நிறைந்து நம்மை வழிநடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்தத் தியாகிகளைப் போற்றுவதற்காக ஆண்டுதோறும் ஜனவரி 25-ஆம் நாளை மொழிப்போர்த் தியாகிகள் நாளாக நாம் கடைப்பிடிக்கிறோம்!
மொழிக்காகத் தங்களது தேக்குமரத் தேகத்தைத் தீக்குத் தின்னக் கொடுத்த தீரர்கள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள்.
1964-ஆம் ஆண்டு மொழிப் போர்க்களத்தின் முதல் தியாகி, கீழப்பழுவூர் சின்னச்சாமி. தனது 27 வயதில் தீக்குளித்து இறந்து, மொழிக்கு உயிரைக் கொடுத்த இளைஞர். தனது மகளுக்கு 'திராவிடச் செல்வி' என்றுதான் பெயர்சூட்டி இருந்தார் சின்னச்சாமி.

'ஏ! தமிழே!
நீ வாழ வேண்டும் என்பதற்காக
நான் துடியாய்த் துடித்துச் சாகப்போகிறேன்!" என்று கடிதம் அனுப்பிவிட்டு 25.1.1964 அன்று தீக்குளித்து தன்னுயிரைத் தியாகம் செய்தார் சின்னச்சாமி.
1965-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் நாள் சென்னை கோடம்பாக்கத்தில் சிவலிங்கம் என்ற 21 வயது இளைஞரும் தீக்குளித்தார். திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர். நுங்கம்பாக்கம் பகுதி பொருளாளர், சென்னை மாநகராட்சியில் மாதம் 75 ரூபாய் ஊதியம் வாங்கும் அலுவலக உதவியாளர். 'நாளைக்கு இந்தி ஆட்சிமொழி ஆகப்போகிறது, இது நமக்குத் துக்கநாள், கறுப்புச் சின்னம் அணியப் போகிறேன்' என்று சொல்லி வந்தவர், தீக்குளித்தார். இன்றைக்கும் சிவலிங்கம் அவர்களின் நினைவாக சென்னையில் ஒரு பாலம் அமைந்திருக்கிறது.

சிவலிங்கம் தீக்குளித்த மறுநாள் தீக்குளித்தார் விருகம்பாக்கம் அரங்கநாதன். அவருக்கு 35 வயது. தொலைபேசித் துறை ஊழியர். திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர். 1962 விலைவாசி உயர்வுப் போராட்டத்தில் பங்கெடுத்தவர். தனது மூன்று பிஞ்சுக் குழந்தைகளைக் கதறவிட்டு, தமிழுக்காக உயிர் கொடுத்தார் அரங்கநாதன். இந்த அரங்கநாதன் பெயரில்தான், சென்னை தியாகராயர் நகரில் 'அரங்கநாதன் சுரங்கப்பாதை - பாலம்' இருக்கிறது. அதனை அமைத்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் - அதனை அமைத்தது கழக ஆட்சி!
27.1.1965-இல் சிதம்பரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் வீரத் தியாகி ஆனார் அண்ணாமலைப் பல்கலைக்கழக பி.எஸ்சி., மாணவர் சிவகங்கை இராசேந்திரன். ஒரு போலீஸ்காரர் பெற்றெடுத்த புதல்வன். 18 வயதே ஆன அந்த மாவீரனுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக வாசலில் சிலை இருக்கிறது.

கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரி மாணவரான பீளமேடு தண்டபாணி, 1965 பிப்ரவரியில் நஞ்சுண்டு இறந்தார். அப்போது அவருக்கு வயது 21.
பிப்ரவரி மாதம் சத்தியமங்கலம் முத்து என்ற தி.மு.க. தொண்டர் தீக்குளித்தார். 22 வயது அவருக்கு. 1966 திருச்சியில் நடந்த 'திருச்சி - தஞ்சை மாவட்ட மாநாட்டில்' சத்தியமங்கலம் முத்துவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதே ஆண்டு நடந்த மதுரை தி.மு.க. மாநாட்டு அரங்குக்கு, சத்தியமங்கலம் முத்துவின் பெயர் சூட்டப்பட்டது.

அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன் 11.2.1965 அன்று தீக்குளித்தார். தி.மு.க.வைச் சார்ந்த இவர், அந்தப் பகுதியில் இளைஞர் மன்றம் நடத்தினார். அவருக்கு வயது 27. ஆசிரியர் வீரப்பனுக்கும், விராலிமலை சண்முகத்துக்கும் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு அன்பில் தர்மலிங்கம் அவர்கள் தலைமையில் நம் இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்கள் திறந்து வைத்தார்.
கீரனூரைச் சேர்ந்த முத்து, 1965 பிப்ரவரி மாதம் நஞ்சுண்டு இறந்து போனார். 22 வயதான அவர், உணவு விடுதியின் ஊழியர். கழக ஆட்சியில், 'தியாகி முத்து சீரணி அரங்கு' அமைக்கப்பட்டது.

22 வயதானவர் விராலிமலை சண்முகம். தி.மு.க. தொண்டர். எம்.ஜி.ஆர். ரசிகர் மன்ற துணைச் செயலாளர். 25.2.1965-இல் நஞ்சுண்டு இறந்தார். மளிகைக் கடை ஊழியர் அவர். விராலிமலை சண்முகம் படிப்பகத்தை நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்கள் திறந்து வைத்தார். சண்முகம் அவர்களின் குடும்பத்துக்குத் தலைவர் கலைஞர் அவர்கள் நிதியுதவி வழங்கினார்கள். சண்முகம் நினைவுச் சின்னத்தைப் பேராசிரியர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

திருச்சி பாலக்கரையில் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பாலத்துக்கு கீழப்பழுவூர் சின்னச்சாமி, விராலிமலை சண்முகம் ஆகியோர் நினைவாக 11.12.2006 அன்று 'சின்னச்சாமி - சண்முகம் பாலம்' எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். திருச்சி உய்யக்கொண்டான் ஆற்றங்கரையில்தான் சின்னச்சாமி கல்லறை அருகே, சண்முகம் உடலும் அடக்கம் செய்யப்பட்டது. அவர்கள் இருவர் பெயரும் சேர்ந்தே, பாலத்துக்கும் சூட்டப்பட்டது.

இவையெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தியாக வரலாறுகள்!
இந்தப் போராட்டத்தையே தூண்டினார் என்று நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களை இரவோடு இரவாகக் கைது செய்து, தனிமைச் சிறையில் - பாளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
இத்தகைய தியாகிகளை நமது முன்னோடிகளாக நாம் பெற்றிருக்கிற காரணத்தால்தான் இன்றுவரை மொழியைக் காப்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.
இவர்கள்தான் தமிழ்த்தாயின் புதல்வர்கள்! தமிழ்த்தாயின் பால் அருந்தி வளர்ந்த இந்தப் பிள்ளைகள்தான், தங்கள் உயிரைத் தந்து தமிழ்த்தாயைக் காத்தவர்கள்!
அதனால்தான் இன்று அவர்களை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம். அவர்களது தியாகத்துக்கு தலை வணங்குகிறோம்!

இந்தப் போராட்டத்துக்குப் பிறகு நடைபெற்ற 1967 தேர்தலில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலாக ஆட்சி அமைத்தது. யாரால் ஆட்சிக்கு வந்தோம் என்பதை மறந்தவர் அல்ல, நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்கள்.
தமிழ் காக்கும் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைந்த பிறகுதான், நான் பெருமையோடு சொல்கிறேன், தாய்த்தமிழ்நாட்டுக்குத் 'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டப்பட்டது.தமிழும் ஆங்கிலமும்தான் இங்கு பயிற்று மொழியாக இருக்கும்
என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

மொழிப்போர் தியாகிகள் செய்த உயிர்த்தியாகம் வீண்போகவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாகச் இந்தச் சட்டத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் கொண்டு வந்தார்கள்.
பள்ளி முதல் உயர்கல்விவரை தமிழில் படிக்கலாம் என்ற நிலை இங்கு இருக்கிறது. உலகத் தொடர்பு மொழியான ஆங்கிலத்திலும் திறன் பெறலாம் என்ற நிலை இருக்கிறது.

இன்றைக்கு உலகம் முழுக்க தமிழ்நாட்டு இளைஞர்கள் வலம் வர இந்த இருமொழிக் கொள்கைதான் காரணம்! இதற்கு அடித்தளமான தியாகிகளை ஐம்பது ஆண்டுகள் கடந்த பிறகும் நாம் போற்றுகிறோம் என்றால், அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
அவர்களது தியாகத்தை நாம் மதிக்க வேண்டும் என்பது முதல் காரணம்.

இன்றைக்கும் அந்த மொழியுணர்வை - இன உணர்வை - மான உணர்வை நாம் பெற்றாக வேண்டும் என்பது இரண்டாவது காரணம்.இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசானது இந்திமொழியைத் திணிப்பதை தனது வழக்கமாகவே வைத்துள்ளது. ஆட்சி நிர்வாகத்தில் இந்தியைத் திணிப்பது தொடங்கி கல்வி மூலமாகத் திணிப்பதுவரை தாங்கள் ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தியைத் திணிப்பதுதான் என்று நினைக்கிறார்கள்.

ஒரே நாடு
ஒரே மதம்
ஒரே தேர்தல்
ஒரே தேர்வு
ஒரே உணவு
ஒரே பண்பாடு - என்ற வரிசையில்,
ஒரே மொழியை வைத்து மற்ற தேசிய இன மக்களின் மொழிகளை அழிக்கப் பார்க்கிறார்கள்.
மாண்புமிகு உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையானது மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகச் செய்திகள் வந்தது. அந்த அறிக்கையில் என்ன இருக்கிறது? முழுக்க முழுக்க இந்திக்கு ஆதரவாக, இந்தியாவை இந்திமயமாக ஆக்க நினைப்பதாக இருந்தது.

இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியை வலுப்படுத்தவே அதன் பரிந்துரைகள் இருக்கிறது.இதனைக் கண்டித்து கடந்த ஆண்டு அக்டோபர் 18-ஆம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே இந்தித் திணிப்புக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
அப்போது சட்டமன்றத்தில் உரையாற்றிய நான், "தமிழ்மொழி என்பது நமது உயிராய் - உணர்வாய் - விழியாய் - எதிர்காலமாய் இருக்கிறது. அத்தகைய தமிழ்மொழியை வளர்க்கவும், பிறமொழி ஆதிக்கத்தில் இருந்து காக்கவுமே திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. கழகம் தோன்றிய காலம்முதல் இன்றுவரை மொழிக்காப்பு இயக்கமாகவே இருந்து வருகிறது" என்று குறிப்பிட்டேன்.

அதோடு, "1938-ஆம் ஆண்டுமுதல் இந்தி மொழித் திணிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நாமும் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். ஆதிக்க சக்திகளும் விடுவதாக இல்லை. நாமும் விடுவதாக இல்லை. இதுவெறும் மொழிப் போராட்டம் மட்டுமல்ல, தமிழினத்தை - தமிழர் பண்பாட்டைக் காக்கும் போராட்டமாக நாம் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம். தொடரவே செய்வோம்!" என்று தமிழ்நாடு பேரவையின் மூலமாக தமிழ்நாட்டு மக்களுக்கு நான் உறுதி அளித்தேன்.

அதே உறுதிமொழியை இந்த கூட்டத்திலும் உங்கள் முன்னால் உறுதி எடுக்கிறேன். அந்த உறுதிமொழியில் என்றைக்கும் உறுதியாக இருப்பேன்; இருப்போம்! இந்தி மொழித் திணிப்புக்கு எதிரான நமது போராட்டம் எப்போதும் தொடரும்! தொடரும்! தமிழைக் காக்கும் நமது முயற்சிகள் எப்போதும் தொடரும்! தொடரும்! - அதைச் சூளுரைக்கத்தான் தி.மு.க. மாணவரணியின் சார்பில் இந்த மொழிப்போர் தியாகிகளைப் போற்றும் வீரவணக்க நாள் கூட்டங்களைத் தமிழ்நாடு முழுவதும் நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். கழக முன்னணியினர் அனைவரும் பல்வேறு பகுதிகளில் - பல்வேறு மாவட்டங்களில் - பல்வேறு தலைநகரப் பகுதிகளில் இன்றைக்கு உரையாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நான் திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். உங்கள் மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன். திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்திருக்கிறேன் என்று சொன்னால், ஏரிகள் நிறைந்த மாவட்டம். திருக்கோயில்கள் நிறைந்த மாவட்டம். இதைச் சொன்னால்தான் ஜெகத் அவர்களுக்கு மகிழ்ச்சி வரும். கழகத்தின் தீரர்கள் நிறைந்த மாவட்டம். திராவிட இயக்கத்தை தோற்றுவித்த மூவரில் ஒருவரான டாக்டர் நடேசனார் அவர்கள் பொன்னேரிக்கு அருகில் இருக்கும் சின்னப்பூங்கனேரியைச் சார்ந்தவர்.

அந்தக் காலத்தில் சென்னையில் மட்டும்தான் கல்லூரி இருந்தது. இவ்வாறு கல்லூரியில் படிக்க வந்த நம்முடைய தமிழ் மாணவர்கள் தங்கிப் படிப்பதற்காகச் சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு விடுதி, அந்த விடுதிக்குப் பெயர் என்ன தெரியுமா? 'திராவிடன் ஹாஸ்டல்'. அதை உருவாக்கி, இலவசமாக அவர்கள் தங்கிப் படிக்க ஏற்பாடு செய்தவர்தான் மரியாதைக்குரிய டாக்டர் நடேசனார் அவர்கள். அந்தத் திராவிடன் இல்லத்திற்கு உரையாற்றுவதற்காக வந்த சர்.பிட்டி.தியாகராயரும், டி.எம்.நாயரும், நடேசனாரும் இணைந்து உருவாக்கியதுதான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்கிற 'நீதிக்கட்சி' ஆகும். அந்த வகையில் திராவிட இயக்கம் கருக்கொள்ளக் காரணமாக இருந்த இந்த மாவட்டத்தில் நடைபெறும் மொழிப்போர்த் தியாகிகள் நாள் கூட்டத்தில் நான் கலந்து கொள்வதைப் பெருமையாக கருதுகிறேன்.

இந்தக் கூட்டத்தை மிக எழுச்சியோடு, உணர்ச்சியோடு ஏற்பாடு செய்திருக்கும் நம்முடைய பால்வளத் துறை அமைச்சர், அதேபோல் மாவட்டத்தின் செயலாளர் சந்திரன், டி.ஜே.கோவிந்தராஜன், சட்டமன்ற உறுப்பினர் நண்பர் வி.ஜி.இராஜேந்திரன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழகத் தோழர்கள் அத்தனை பேருக்கும் நான் இந்த நேரத்தில் தலைமைக் கழகத்தின் சார்பில் மாணவரணியின் சார்பில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு இந்தி மொழித்திணிப்பை பா.ஜ.க. அரசு பட்டவர்த்தனமாகச் செய்கிறது. இந்திமொழி நாள் கொண்டாடும் ஒன்றிய அரசு மற்ற மாநில மொழிகளின் நாள் கொண்டாடுவது இல்லை. இந்தி மொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் என்பது மற்ற மொழிகளைப் புறக்கணிப்பதாக மட்டுமல்ல, அழிப்பதாகவும் அமைந்திருக்கிறது. இந்தியை ஆட்சிமொழியாக - அலுவல் மொழியாக மட்டுமல்ல அதிகாரம் செலுத்தும் மொழியாக பா.ஜ.க. அரசு உயர்த்திக் கொண்டு இருக்கிறது. மேலாதிக்கம் செலுத்தும் மொழியாக அதனை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இந்தியும், ஆங்கிலமும் அலுவல்மொழியாக இருக்கிற நிலையில், ஆங்கிலத்தை மொத்தமாக அகற்றப் பார்க்கிறார்கள். இணைப்பு மொழியாக இருக்கிற ஆங்கிலத்தை அகற்றுவதன் மூலமாக இந்திக்கு அந்த இடத்தைத் தாரை வார்க்கிறார்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் சம வாய்ப்பு, சம உரிமை வழங்கி, அந்த மொழிகளை இந்திய நாட்டின் ஆட்சிமொழி மற்றும் அலுவல் மொழிகள் ஆக்கிட முயற்சிகள் எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு முழுக்க முழுக்க இந்திமயமாக்குவது சரியா என்பதுதான் நாம் எழுப்பும் கேள்வி!
தி.மு.க. ஆட்சியின் மொழிக் கொள்கை என்பது,

* தமிழும் - ஆங்கிலமும் என இருமொழிக் கொள்கைதான், நமது தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை!
* தமிழ்மொழி, இந்திய அரசின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக ஏற்கப்பட வேண்டும்.
* மாநில ஆட்சி மொழிகள் அனைத்தும், இந்திய அரசின் ஆட்சிமொழியாக ஆக வேண்டும்.
* இந்தி பேசாத மக்கள் மீது, இந்தி மொழி திணிக்கப்படக் கூடாது.
* நேருவின் வாக்குறுதியின்படி இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும்வரை, ஆங்கிலம் தொடர வேண்டும்.
* தமிழ்நாட்டில் இயங்கும் ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இணை அலுவல் மொழியாக தமிழை அங்கீகரித்து, அனைத்து அலுவலகச் செயல்பாடுகளும் தமிழிலேயே இயங்க உரிய சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்.
* சென்னை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழை ஆக்க வேண்டும் - இவைதான் நமது மொழிக் கொள்கை!

இந்தித் திணிப்பை எதிர்ப்பதும் - நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கையை நிராகரிப்பதும் இதனால்தான்.
பா.ஜ.க. அரசின் தமிழ் விரோத நடவடிக்கைக்கு ஒரே ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்று சொன்னால், 2017 முதல் 2020 வரை சமஸ்கிருதத்தை வளர்க்க 643 கோடி ரூபாயைச் செலவு செய்திருக்கிறது பாஜக அரசு. இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஒரியா ஆகிய மொழிகளுக்கு பாஜக அரசு செலவு செய்ததைவிட 29 மடங்கு அதிகம் என்பதை விளக்கும் புள்ளிவிவரங்கள் 2020-ஆம் ஆண்டு ஒன்றிய பண்பாட்டு அமைச்சரக அறிக்கை மூலமாகத் தெரிய வந்தது. சமஸ்கிருதத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகை 643 கோடி ரூபாய். தமிழுக்கு ஒதுக்கப்பட்ட தொகை 23 கோடி ரூபாய்க்கு 6 லட்சம் குறைவு! இவர்கள்தான் தமிழ்ச் சங்கமம் நடத்துகிறார்கள்! என்ன ஒரு வேடம்?

நாம் எந்த மொழிக்கும் எதிரிகள் அல்ல. ஒருவர் தனது ஆர்வத்தின் காரணமாக எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கத்தோடு திணிக்க நினைத்தால் அதனை நாம் ஒருபோதும் ஏற்க மாட்டோம்.
தமிழுணர்வு என்பது நம் ஊனோடும் உயிரோடும் கலந்தது. அதனால்தான், கடந்த நவம்பர் 26-ஆம் நாளன்று, சேலம் மாவட்ட தாழையூரில் 85 வயதான நமது முன்னாள் ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் தாழையூர் தங்கவேல் அவர்கள் தனது உடலைத் தீக்குத் தின்னக் கொடுத்து ஒன்றிய பாஜக அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து வீரமரணம் தழுவினார்.

இன்றைய நாள் இந்தி எதிர்ப்பு என்பது இந்தியைப் படிக்கலாமா - கூடாதா என்ற விவாதமாக இல்லை. எந்த மொழியைப் படிப்பதும் அவரவர் உரிமை, விருப்பம். ஆனால் இன்றைய மொழிப்போராட்டம் என்பது, இந்தியாவை ஆள இந்திமொழிக்குத்தான் தகுதி இருக்கிறது என்ற பா.ஜ.க.வின் மொழி ஆதிக்கத்தை எதிர்க்கும் போராட்டம்! அதனால் அதனை எதிர்த்து தொடர்ந்து போர்முழக்கம் செய்கிறோம்.

ஒருபக்கம் இந்திமொழி ஆதிக்கத்தை எதிர்க்கும் நாம், இன்னொரு பக்கம், தமிழ் காப்புச் செயல்பாடுகளை அழுத்தமாகச் செய்து வருகிறோம்.
திராவிட மாடல் ஆட்சியானது கடந்த இருபது மாத காலத்தில் தமிழுக்கும் - தமிழ்நாட்டுக்கும் செய்திருக்கும் சாதனைகள் என்பவை, மகத்தானவை. ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டியதை ஒன்றரை ஆண்டு காலத்தில் செய்து கொடுத்திருக்கிறோம்.

"சொன்னதைச் செய்வோம்
செய்வதைச் சொல்வோம்!" - இது தலைவர் கலைஞரின் முழக்கம்!
"சொல்லாததையும் செய்வோம்
சொல்லாமலும் செய்வோம்" - இது எனது முழக்கம்.
* மகளிருக்கு இலவசப் பேருந்து
* மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி
* புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்
* உழவர்களுக்கு இலவச மின் இணைப்புகள்
* செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்
* 234 தொகுதியிலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்
* நகர்ப்புரச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்
* இல்லம் தேடிக் கல்வி
* மக்களைத் தேடி மருத்துவம்
* நான் முதல்வன்
* இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48
* தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப்பதக்கத் தேடல்
* சமத்துவபுரங்கள்
* உழவர் சந்தைகள்
* அரசு முன்மாதிரிப் பள்ளிகள்
* பத்திரிக்கையாளர் நலவாரியம்
* எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம்
* இலக்கிய மாமணி விருது
* கலைஞர் எழுதுகோல் விருது
* பேராசிரியர் அன்பழகனார் பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டம்
* பெருந்தலைவர் காமராசர் கல்லூரிகள் மேம்பாட்டுத் திட்டம்
* முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு
* பெரியார் - சமூகநீதி நாள் உறுதிமொழி
* அம்பேத்கர் - சமத்துவநாள் உறுதிமொழி
* வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாள்
* கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்
* அன்னைத் தமிழில் அர்ச்சனை
* அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்
* மாவட்டம்தோறும் புத்தகச் சந்தைகள்
* கோவில் நிலங்கள் மீட்பு
* 20 கலை அறிவியல் கல்லூரிகள்
* புதிய மேம்பட்ட ஐடிஐ நிறுவனங்கள்
* காவல் ஆணையம்
* கல்லூரிக் கனவு
* வேலைவாய்ப்பு முகாம்கள்
* தமிழ்ப் பரப்புரைக் கழகம்
* தமிழ்நாடு பசுமை இயக்கம்
* சிறு, குறு புத்தாக்க நிறுவனங்கள்
* பொறுப்புமிக்க மாணவர்களை உருவாக்கும் சிற்பி திட்டம்
* போதைப் பொருள் ஒழிப்பு
* ஆன்லைன் ரம்மி ஒழிப்பு சட்டம்
* நீட் தேர்வு விலக்குச் சட்டம்
* ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையம்
* வழக்கறிஞர் சேமநல நிதி 10 லட்சமாக உயர்வு
* நீதிமன்றங்கள் அமைக்க நிலங்கள் ஒதுக்கீடு - இதுபோன்ற ஏராளமான திட்டங்களை கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நிறைவேற்றிக் கொடுத்துள்ளோம்.

நிதி நிலைமை மட்டும் சீராக இருந்திருக்குமானால் இன்னும் பல சாதனைகளை நாம் செய்து காட்டி இருப்போம். இதைச் சொல்கின்ற காரணத்தால், இன்னும் கொஞ்சம் இருக்கிறதே அதை விட்டுவிடப்போகிறீர்களா? என்று கேட்காதீர்கள். நிச்சயம் நிறைவேற்றுவோம். இது 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' தந்த உறுதிமொழி. மறந்துவிடாதீர்கள்.

பத்து ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு பல்வேறு வழிகளில் பாதாளத்துக்குப் போனது. அன்றைய ஆட்சியாளர்களுக்கு மக்களைப் பற்றிய எந்த அக்கறையும் - கவலையும் இல்லை. ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு தங்களது நாற்காலி நிலைத்தால் போதும் என்று இருந்தார்கள். அதனால் மக்களை மறந்தார்கள். அதனால் அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டின் ஆட்சி நிர்வாகமானது தரை தட்டி நின்றது.
* கல்வியில்
* மருத்துவத்தில்
* உள்கட்டமைப்பில்
* வேளாண்மையில்
* பொருளாதார வளர்ச்சியில்
* சட்டம் ஒழுங்கில் - மிகமிக மோசமான நிலையில் இருந்தது தமிழ்நாடு.
இவை அனைத்தையும் கடந்த ஓராண்டுகாலத்தில் மாற்றியது மட்டுமல்ல - தூக்கி நிறுத்தியது மட்டுமல்ல - முன்னேற்றியும் இருக்கிறோம்! அதுதான் திமுக!
அதனால்தான் முன்னணி ஊடகங்கள், இந்தியா டுடே போன்ற இதழ்கள் தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலம் என்ற பெருமையை நமக்குக் கொடுத்திருக்கின்றன.
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு ஒவ்வொரு துறையிலும் எத்தனையாவது இடத்தில் இருந்தது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
* தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, அமைதியாக ஊர்வலம் சென்று கொண்டிருந்தவர்களைக் கலைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி, 13 பேரைத் துள்ளத் துடிக்கச் சுட்டுக் கொன்றதும், 'அதனை டிவியைப் பார்த்துதான் நானே தெரிந்து கொண்டேன்' என்று அன்றைய முதலமைச்சர் பழனிசாமி சொன்னதும்தான் அதிமுக ஆட்சியின் சாதனை!
* பொள்ளாச்சியில் பெண்களைப் பாலியல் வன்முறை செய்து படம் எடுத்து மிரட்டியவர்களைக் காப்பாற்றியதும் - அ.தி.மு.க. பிரமுகர்களான அவர்கள் துணிச்சலாக மாவட்ட எஸ்.பி. அலுவலகத்துக்கே வந்து பேட்டி அளித்ததும், அந்த விவகாரத்தையே அமுக்கியதும்தான் அதிமுக ஆட்சியின் சாதனை!
* அம்மையார் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளைகள் - அதை ஒட்டி நடந்த கொலைகள் - தற்கொலைகள் - மர்ம மரணங்கள்தான் அதிமுக ஆட்சிக்காலத்து சாதனைகள்!
* ஊழல் வழக்கில் பழனிசாமிமீது சி.பி.ஐ. விசாரணை நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதும் - அது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, 'யார் மீதுதான் ஊழல் புகார் இல்லை' என்று டெல்லியில் பழனிசாமி பேட்டி அளித்ததும், உச்சநீதிமன்றத்திற்கு ஓடிச் சென்று தடை உத்தரவு பெற்றதால் பழனிசாமி பதவியில் தொடர்ந்ததும்தான் அதிமுக ஆட்சியின் சாதனைகள்!
* குட்கா விற்பனையை இரண்டு அமைச்சர்கள், சில காவல்துறை அதிகாரிகள் துணையோடு நடத்தியதும்தான் கடந்த கால அ.தி.மு.க ஆட்சியின் மறக்க முடியாத சாதனைகள்!

இதை எல்லாம் மக்கள் மறக்கவில்லை! இதற்கான தக்க பாடத்தைத்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் கற்பித்தார்கள். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலிலும் அந்தக் கட்சிக்கு மக்கள் பாடம் புகட்டத் தயாராக இருக்கிறார்கள். அடுத்து நடக்க இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் நிச்சயமாக மக்கள் பாடம் கற்பிப்பார்கள்.

தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் விரோதமான சக்திகள் யாராக இருந்தாலும் தேர்தல் களத்தில் மட்டுமல்ல, அரசியல் களத்திலும் தோற்கடிக்கப்பட வேண்டும்.தமிழில் வணக்கம் சொல்வதன் மூலமாகவோ - திருக்குறளையும், பாரதியார் கவிதைகளையும் மேற்கோள் காட்டுவதன் மூலமாகவோ - தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற நினைக்கக் கூடாது.

இந்தியைப் புகுத்துவதன் மூலமாக தமிழை அழிக்கப் பார்ப்பதும் - தமிழ்நாடு என்று சொல்லக் கூடாது என்ற சர்ச்சையைக் கிளப்புவதன் மூலமாக தமிழ்நாட்டின் அடையாளத்தை அழிக்கப் பார்ப்பதும் - மாநில உரிமைகளைப் பறிப்பதன் மூலமாக சுயாட்சித் தன்மையை சிதைக்கப் பார்ப்பதும் - மிக மோசமான பண்பாட்டுப் படையெடுப்புகள்! இதுவும் காலம் காலமாக நடக்கிறது. இதனை நாமும் காலம் காலமாக எதிர்த்துக் கொண்டு இருக்கிறோம். நமது பண்பாட்டைச் சிதைத்து இன்னொன்றைத் திணிக்கும் நோக்கம் கொண்டவர்கள் பின்வாங்கி இருக்கிறார்களே தவிர - நாம் எந்தக் காலத்திலும் பின் வாங்கியது இல்லை! அடிபணிந்தது இல்லை! அடங்கிக் கிடந்தது இல்லை! இதனை தமிழின விரோத சக்திகள் இனியாவது புரிந்து திருந்த வேண்டும். தங்களைத் திருத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மக்களால் திருத்தப்படுவார்கள் என எச்சரிக்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் என்பது பூசணிக் கொடியைப் போன்றது என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்வார்கள். பூசணிக் கொடி என்பது மெல்லியதாக இருக்கும். ஆனால் பூசணிக்காய் என்பது மிகப்பெரியதாக இருக்கும். மெல்லிய கொடியில் விளையும் காய் பெரிதாக இருக்கும். அதாவது நாம் செய்யும் செயல் என்பது மிகச் சிறியதாக இருந்தாலும் அதனால் மக்கள் அடைகின்ற பயன் என்பது மிகமிகப் பெரியது என்று சொல்வார் பேரறிஞர் அண்ணா அவர்கள். அத்தகைய செயல்கள் மூலமாக ஏராளமான நன்மைகளைத் தமிழுக்கும் - தமிழ்நாட்டுக்கும் செய்து கொடுத்த ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.

முந்தைய அதிமுக ஆட்சியில் அனைத்து விதங்களிலும் தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துவிட்டு ஆட்சி நடத்தினார்கள்.
கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் ஆட்சியில் இருக்கும் வரை நீட் தேர்வு தமிழ்நாட்டில் நுழையவில்லை. இன்னும் சொன்னால் அவர்கள் தலைவராக ஏற்றுக் கொண்ட முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் வரையிலும் நீட் நுழையவில்லை. அவர் மறைவுக்குப் பிறகு, பழனிசாமி ஆட்சிக்கு வந்ததில் இருந்துதான் நீட் நுழைந்தது.

விவசாயிகளை ஒட்டுமொத்தமாக விளைநிலத்தில் இருந்து வெளியேற்றும் தந்திரமாக மூன்று வேளாண் சட்டங்களையும் அதிமுக ஆட்சியாளர்கள் தலையை ஆட்டி ஆதரித்தார்கள். பச்சைத் துண்டை போட்டுக் கொண்டு - நானும் விவசாயிதான் என்று சொல்லிக் கொண்டே - பச்சைத் துரோகத்தை விவசாயிகளுக்குச் செய்தார்கள்.

காவிரி இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, அதிமுக ஆட்சி - காவிரி நடுவர் மன்ற உறுதித்தீர்ப்பின் கருத்துருவைச் சொல்லாமலும், சரியான வாதங்களை வைத்து வாதாடததாலும் 10 டி.எம்.சி தண்ணீரை நாம் இழந்தோம்.
இவை அனைத்தையும் விட குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து சிறுபான்மையினருக்கும், ஈழத்தமிழர்க்கும் அதிமுக ஆட்சியாளர்கள் துரோகம் இழைத்தார்கள். குடியுரிமைச் சட்டம் மக்களவையில் தாக்கல் ஆனபோதும் அதிமுக உறுப்பினர், அந்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்தார். மாநிலங்களவையில் தாக்கல் ஆனபோதும் அதிமுக உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தார்கள். மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருக்கிறது. மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை. அன்று அதிமுக உறுப்பினர்கள் அளித்த 11 வாக்குகளால் அது பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெற்றுவிட்டது. இதை எல்லாம் மறக்க முடியுமா?

இந்தி திணிக்கப்படும்போதும் - நிதி உரிமைகள் பறிக்கப்படும்போதும் - நமக்குத் தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளைத் தராமல் காலதாமதம் செய்யும்போதும் - அதனைத் தட்டிக் கேட்க முதுகெலும்பு இல்லாமல் அதிமுக ஆட்சியாளர்கள் அப்போது இருந்ததைத் தமிழ்நாடு பார்த்தது.

இப்படி வரிசையாகத் தமிழ்நாட்டுக்குத் தனது ஆட்சிக் காலத்தில் துரோகம் இழைத்த கட்சிதான் அதிமுக என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள்.
விடியலுக்காக ஏங்கி நின்ற மக்களைக் காக்க, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததற்குப் பின்னால் நாம் துணிச்சலோடும் - நெஞ்சுரத்தோடும் - தந்தை பெரியாரின் பேரப்பிள்ளைகளாக - அண்ணாவின் வாரிசுகளாக - கலைஞரின் வார்ப்புகளாக - எதிர்த்துப் போராடியதையும் தமிழ்நாடு இப்போது பார்த்துக் கொண்டு இருக்கிறது.

*குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்திலேயே எதிர்த்துத் தீர்மானம் போட்டு நிறைவேற்றினோம்.
*மூன்று வேளாண் சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்திலேயே எதிர்த்து தீர்மானம் போட்டு நிறைவேற்றினோம்.
* நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்ட அவசர சட்ட மசோதவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினோம்.
* காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்ட ஒன்றிய அரசு அனுமதிக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றினோம்.
* சேது சமுத்திரத் திட்டத்துக்கு அன்றைய பாஜகவும் - அதிமுகவும் முட்டுக்கட்டை போட்டார்கள். அந்தத் தடையை உடைக்கும் வகையில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தோம்.
* இந்தியைத் திணிப்பைக் கண்டித்து சட்டமன்றத்திலேயே தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினோம்.
* மாநில உரிமைக்கு ஒன்றிய அரசு தடை போடுமானால் அதனை எதிர்த்து சட்டமன்றத்திலும் - நாடாளுமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் குரல் எழுப்பி வருகிறோம்.

இதுதான் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி! இதுதான் முத்தமிழறிஞர் ஆட்சி! இதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி!
தந்தை பெரியாரும் - பேரறிஞர் அண்ணாவும் - முத்தமிழறிஞர் கலைஞரும் - மறையவில்லை நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இவைதான் எடுத்துக்காட்டுக்கள்.

சனவரி 25-ஆம் நாளன்று மொழிப்போர்த் தியாகிகள் நினைவு நாளைக் கொண்டாடுகிறோம் என்றால் உயிரைக் கொடுத்த தியாகிகள் எங்களை உணர்வாக இருந்து இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளம் ஆகும்.
எங்களை வாரிசு என்று சொல்பவர்களுக்கு நான் சொல்வேன்...
ஆமாம் நாங்கள் வாரிசுகள் தான்.
கோட்பாடுகளுக்கு வாரிசுகள்.
கொள்கைகளுக்கு வாரிசுகள்.
இலட்சியங்களுக்கு வாரிசுகள் - அதனை நிறைவேற்றும் கடமை எங்களுக்குத் தான் இருக்கிறது. அந்தக் கடமையை நிறைவேற்றுவதன் மூலமாகக் காலத்தின் வாரிசுகளாக நாங்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறோம்.

நம்முடைய தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஒரு கூட்டத்தில் சொன்னார், 'நானும் பேராசிரியரும் இன்று இருக்கிறோம் என்றால், எங்களுக்குப் பின்னால் யார் என்று கேட்டால் அதற்கான விடைதான், தம்பி ஸ்டாலின்' என்றார். அத்தகைய தலைவரின் நம்பிக்கையைக் காப்பாற்றவே நித்தமும் உழைத்துக் கொண்டு இருக்கிறேன்.

தமிழுக்கும் - தமிழ் இனத்துக்கும் - தமிழ்நாட்டின் மேன்மைக்கும் - தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், அனைவரையும் ஒருங்கிணைத்து நமது அரசு என்று சொல்லி, அயராது பாடுபட்டு வருகிறேன்.

'எல்லார்க்கும் எல்லாம்' என்ற திராவிட மாடல் சிந்தனையானது, இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் பரவி வருகிறது.
நூற்றாண்டுகால திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்த நான் - இன்று திராவிட இயக்கத்தின் இலட்சியங்களையும் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தும் திராவிட மாடல் ஆட்சியை வழிநடத்தும் வாய்ப்பைப் பெற்றது, எனது வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெருமையாக நான் கருதுகிறேன்!

சர்.பிட்டி.தியாகராயர் -
டி.எம்.நாயர் -
மருத்துவர் நடேசனார் -
தந்தை பெரியார் -
பேரறிஞர் அண்ணா -
முத்தமிழறிஞர் கலைஞர் -
இனமானப் பேராசிரியர் - ஆகியோரின் சிந்தனைகளையும் கனவுகளையும் நிறைவேற்றித் தரும் வாய்ப்பு என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்திருக்கிறது என்பதுதான் எனக்குக் கிடைத்த பெருமை!

ஊருக்கு உழைத்தல் யோகம் என்று சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரையில், ஊருக்கு உழைத்தலே தியாகம்! ஊருக்கு உழைத்தது மட்டுமல்ல - உயிரையே தந்திருக்கும் தியாகிகளின் நினைவுநாளில் - அந்த தியாகிகளைப் போற்றும் அதேவேளையில்- அவர்கள் உருவாக்க நினைத்த தமிழ்நாட்டுக்கு எந்நாளும் உழைப்போம் - உழைப்போம் என்று உறுதியேற்று... மொழிப்போர் தியாகிகள் வாழ்க.

English summary
Chief Minister Stalin has said that if only the financial situation had been stable, he could have achieved many more achievements and will definitely fulfill his promises.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X