பிரான்ஸ் தோற்ற சோகமாம்.. காவல் உதவி ஆய்வாளரை சரமாரியாக தாக்கிய பேன்ஸ்! திணறிய கேரள போலீஸ்
திருவனந்தபுரம்: கத்தாரில் நடைபெற்ற FIFA 2022 உலக கோப்பை கால் பந்து போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றதையடுத்து கேரளாவில் கொண்டாட்டங்கள் நேற்றிரவு களைக்கட்டின. இக்கொண்டாட்டங்கள் வன்முறையாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்று காவலர்கள் காயமடைந்துள்ளனர். மட்டுமல்லாது காவல்துறையினர் மீதும் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் கிரிக்கெட் போட்டி அனைவராலும் கொண்டாடப்பட்டாலும், தென் இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் கால்பந்து போட்டிக்குதான் ரசிகர்கள் அதிகம்.
அரசியல் தலைவர்களுக்கு கட்டவுட் வைப்பதை போல இவர்கள் கால்பந்து வீரர்களுக்கு கட்டவுட் வைத்து அசத்துவார்கள். அதேபோல கால்பந்து வீரர்களுக்கு சிலை வைத்த வரலாறெல்லாம் உண்டு.

வெற்றி கொண்டாட்டம்
உலகம் முழுவதும் அதிகமான மக்களால் விரும்பப்படும் விளையாட்டாக கால்பந்து இருந்தாலும், நாட்டிற்கு நாடு ரசிகர்கள் வேறுபடுவார்கள். உதாரணமாக வளர்ந்த நாடுகள் ஐரோப்பிய நாடுகளின் அணிக்கு ஆதரவளிக்கும். இந்தியா போன்ற வளரும் நாடுகள் தென் அமெரிக்க நாடுகளுக்கு ஆதரவளிக்கும். அந்த வகையில் கேரளாவிலும் FIFA 2022 தொடங்கியதிலிருந்து அர்ஜென்டினா கோஷம் மாநிலம் முழுவதும் ஒலிக்கத் தொடங்கியது. இந்நிலையில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் கேரள மக்களின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் விதமாக அர்ஜென்டினா வெற்றி பெற்று அசத்தியது. இதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை அர்ஜென்டினா தன்வசப்படுத்தியுள்ளது.

அரிவாள் வெட்டு
இந்நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக வீதியில் கூடிய ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகளை பகிர்ந்து ஆனந்த கூச்சலிட்டனர். ஆனால் இந்த கொண்டாட்டம் சில இடங்களில் கலவரமாக மாறியுள்ளது. அதாவது, கண்ணூரில் வெற்றி களிப்பில் அர்ஜென்டினா ரசிகர்கள் சத்தம் போட, தோல்வியில் இருந்த பிரான்ஸ் அணி ரசிகர்கள் எரிச்சலடைந்து ஒருவரையொருவர் மாறி மாறி தாக்கிக்கொண்டனர். இதில் மூவருக்கு வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. இதில் பயன்படுத்திய கத்தியையும் அதனை உபயோகித்தவர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மூவரும் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழப்பு
இதில் இருவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. அதேபோல கொல்லம் லால் பகதூர் சாஸ்திரி மைதானத்தில் இரவு கூடியிருந்த அர்ஜென்டினா ரசிகர்கள் ஆடிப்பாடி வெற்றியை கொண்டாடி கொண்டிருந்தனர். இதில் 17 வயதான அக்ஷய் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட அவரது நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அக்ஷய் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அக்ஷயின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கின்றனர். உடற்கூராய்வு முடிவு வந்த பின்னர்தான் இவரது உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

சலசலப்பு
அதேபோல திருவனந்தபுரத்தின் கோவளம் கடற்கரையில் ஏமாற்றத்தில் இருந்த பிரான்ஸ் அணி ரசிகர்களை சமாதானம் செய்ய முயன்ற காவல்துறையினர் மீது ரசிகர்கள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளனர். இதேபோல எர்ணாகுளத்தில் சாலையில் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்து காவலர்கள் இரண்டு பேரை தாக்கியுள்ளனர். இதனையடுத்து இருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆக இப்படியாக கொண்டாட்டங்கள் சிறுசிறு சலசலப்புகளுடன் நடந்த முடிந்துள்ளன.












Click it and Unblock the Notifications