LGBTQIA+ நபர்களுக்கு.. குடும்பங்களே வன்முறை தளமாக இருக்கிறது! கேரள உயர்நீதிமன்றம் கவலை
திருவனந்தபுரம்: LGBTQIA+ எனப்படும் மாற்று பாலினத்தவர்களுக்கு குடும்பம் என்பது வன்முறை தளமாக இருப்பதாக கேரள உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்திருக்கிறது.
உலகம் முழுவதும் மாற்றுப்பாலினத்தவர்கள் தங்களுக்கான அங்கீகாரத்திற்காக கடுமையாக போராடி வருகிறார்கள். ஆனால், இவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

இந்தியாவை பொறுத்த அளவில் பெண்களின் போராட்டங்களுக்கே இன்னும் தீர்வுக்காணப்படாத நிலையில், மாற்றுப்பாலினத்தவர்களின் குரல்கள் மிக மோசமாக ஒடுக்கப்படுகின்றன. அவர்கள் பாலியல் தொழிலாளர்களாக மாற்றப்படுகிறார்கள். குடும்பங்கள் அவர்களை அங்கீகரிப்பதில்லை. இப்படி இருக்கையில்தான் கேரள உயர்நீதிமன்றம் மிக முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது.
கேரள உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் 23 வயது இளம்பெண்ணின் பெற்றோர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதில், தங்களுடைய மகள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர் மற்றொரு பெண்ணிடம் கொண்டிருக்கும் (தன்பாலின) உறவு முறையானது மிகவும் கொடியது என்றும் எனவே தங்கள் மகளை மீட்டு கொடுக்க வேண்டும் என கோரியிருந்தனர்.
மனு நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் பி.எம்.மனோஜ் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கையின் அடிப்படையில் நீதிபதிகள் மனுதாரரின் 23வது மகளிடம் கலந்துரையாடினர். பின்னர்,
"உங்களது மகள் அவருடைய துணையை மனப்பூர்வமாக தேர்ந்தெடுத்திருக்கிறார். மட்டுமல்லாது அவரது பாலியல் தேர்வு சுதந்திரத்தை யாராலும் தடுக்க முடியாது. குடும்பங்கள் பெரும்பாலும் LGBTIQA+ நபர்களுக்கு எதிரான வன்முறையின் தளங்களாக இருக்கிறது" என்று கூறியுள்ளனர்.
மேலும், "இந்தியாவில் LGBTIQA+ நபர்கள் தங்கள் பாலின அடையாளத்தை வெளியிடுவது என்பது கடுமையான கலாச்சார நெறிமுறைகளை மீறும் செயலாக பார்க்கப்படுகிறது. LGBTIQA+ நபர்கள் தங்கள் அடையாளத்தின் காரணமாக சிறு வயதிலிருந்தே வன்முறை மற்றும் பாகுபாடுகளை எதிர்கொள்கின்றனர். இவையனைத்தும் கலாச்சார விதிமுறைகளிலிருந்துதான் வருகிறது. மாற்று பாலினத்தவர்களுக்கு எதிரான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பாகுபாடு அவர்களின் மனநலம், வேலைவாய்ப்பு, கல்விக்கான அணுகல், வீட்டுவசதி மற்றும் தங்குமிடம் ஆகியவற்றில் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும்" என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
எனவே இந்த வழக்கில் 23 வயது இளம்பெண்ணுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.
மாற்று பாலினத்தவர்கள் மீதான தாக்குதல்கள் இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் தீவிரமாக இருக்கிறது. குறிப்பாக பெரு நாட்டின் அரசாங்கம் மாற்றுப்பாலினத்தவர்களை மனநோயாளிகள் என்று வெளிப்படையாக அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், விவாதங்களையும் ஏற்படுத்தியிருந்தது.
மாற்றுப்பாலினத்தவர்கள் மனநோயாளிகள் என்றும், அவர்களுக்கான மருத்துவ உதவியை இலவசமாக வழங்கப்படும் என்றும் பெரு நாட்டு அரசால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ரஷ்யாவில் மாற்று பாலினத்தவர்களுக்கான அங்கீகாரம் முற்றிலுமாக மறுக்கப்பட்டிருக்கிறது. இப்படியாக சர்வதேச அளவில் மாற்று பாலினத்தவர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கேரள உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மாற்று பாலினத்தவர்கள் மீதான இந்தியாவின் புரிதலை தெளிவுப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications