"எந்த ஸ்கூல் கெத்துனு பார்ப்போமா".. பிரேமம் பட பாணியில்.. நடுரோட்டில் மோதிக்கொண்ட பள்ளி மாணவர்கள்
திருவனந்தபுரம்: கேரளாவில் பிரேமம் திரைப்பட பாணியில் இரு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பொது இடத்தில் வைத்து சண்டையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எந்தப் பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த மாணவர்கள் 'கெத்து' என நிரூபிப்பதற்காக மாணவர்கள் இப்படி ரவுடிகளை போல மோதிக்கொண்டது தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், செல்போன்களில் படம்பிடிக்கப்பட்ட வீடியோவை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வன்முறை எண்ணம் அதிகரிப்பு
சமீபகால நிகழ்வுகளை சற்று கூர்ந்து கவனித்தால் இன்றைய பள்ளி - கல்லூரி மாணவர்களின் மனநிலையிலும், அவர்களின் நடவடிக்கையிலும் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நம்மால் கவனிக்க முடியும். குறிப்பாக, கொரோனா ஊரடங்குக்கு பின்னர் மாணவர்களின் போக்கு வெகுவாக மாறியுள்ளது. சுமார் இரண்டு வருடமாக ஊரடங்கில் வீட்டிலேயே இருந்த மாணவர்கள் அதிக அளவில் பொழுதுபோக்குக்கும், செல்போன் விளையாட்டுகளுக்கும் அடிமையாகினர். மேலும், அதில் பெரும்பாலான விளையாட்டுகள் வன்முறையை மையப்படுத்தியே இருந்தன. அதேபோல, கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடு தழுவிய அளவில் வந்த திரைப்படங்களும் ரவுடியிஸத்தை மெச்சும் வகையில் இருந்தன. இவை இளைய தலைமுறையினர் மத்தியில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கத்தியுடன் சண்டையிடும் அளவுக்கு துணிச்சல்
இதன் காரணமாகவே, கொரோனா ஊரடங்குக்கு பிறகு பள்ளிகள் திறந்த சில நாட்களிலேயே மாணவர்களின் அட்டகாசங்கள் அதிகமாகின. இந்த மாநிலம் அந்த மாநிலம் என எந்த வித்தியாசமும் இல்லாமல் நாடு முழுவதுமே பள்ளி - கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் வன்முறையில் இறங்குவது அதிகரித்துள்ளது. வாரத்துக்கு ஒரு முறையாவது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இடையே பொது இடங்களில் தகராறு ஏற்படுவதும், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதிக்கொள்வதும் அதிகரித்துள்ளது. இது மிகவும் தீவிரமான பிரச்சினையாக மாறி வருகிறது.

'எந்த ஸ்கூல் கெத்து'
இந்நிலையில், கேரளாவில் இதுபோன்ற ஒரு சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இரண்டு அரசுப் பள்ளிகள் சில கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன. இதனிடையே, இந்த இரண்டு பள்ளி மாணவர்களுக்கு இடையே அண்மைக்காலமாக எந்த ஸ்கூல் கெத்து என்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு இரு தரப்பு மாணவர்களும் மோதிப் பார்க்க முடிவெடுத்தனர்.

மண்டை உடைந்த மாணவர்கள்
அதன்படி, நேற்று பள்ளி மாலை முடிந்ததும் அப்பகுதியில் உள்ள பேருந்து நிலையத்துக்கு இருதரப்பு மாணவர்களும் வந்தனர். பின்னர் அவர்கள் திட்டமிட்டப்படி பயங்கரமாக சண்டையிட்டுக் கொண்டனர். ஒருவரையொருவர் கிரிக்கெட் மட்டை, ஹெல்மெட் ஆகியவற்றால் தாக்கிக் கொண்டனர். இதில் பல மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. சிலருக்கு மண்டை உடைந்தது. மாணவர்கள் திடீரென ஆயுதங்களுடன் மோதிக்கொண்டதால் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து தகலவறிந்து போலீஸார் அங்கு வந்ததும் மாணவர்கள் ஓடிவிட்டனர். மாணவர்கள் சண்டையிட்டதை அங்கிருந்த பயணிகள் தங்கள் செல்போனில் படம்பிடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications