என்ட பேரு ஸ்டாலின்... சகாவு பினராயி விஜயன் சிங்கம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் மாஸ் பேச்சு
திருவனந்தபுரம்: கேரளாவில் மார்க்சிஸ்ட் மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ட பேரு ஸ்டாலின் என மலையாளத்தில் பேசினார்.
கேரள மாநிலம் கண்ணூரில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கிய கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 23 வது ஆண்டு அகில இந்திய மாநாடு நாளை நிறைவடைகிறது.
இதில் மத்திய - மாநில உறவுகள் என்ற தலைப்பில் உரையாற்றத் தொடங்கிய மு.க.ஸ்டாலின் மலையாள மொழியில் பேசி மனம் கவர்ந்தார்.

கம்யூனிஸ்ட் அறிக்கைகளை மொழிபெயர்த்தவர் பெரியார்
"தமிழ்நாட்டிற்கும் கேரளாவுக்கு இடையே சங்க கால உறவு உள்ளது. திராவிடம் - கம்யூனிஸம் இடையிலான உறவும் 80 ஆண்டுகால பழமையானது. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்கள் சிறை வைக்கப்பட்டது கேரளாவின் கண்ணூரில். அங்கு இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தந்தை பெரியார் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கைகளை தமிழில் மொழிபெயர்த்தவர்.

மலையாளத்தில் பேசிய ஸ்டாலின்
எல்லாவற்றிற்கும் மேல் என்ட பெயர் ஸ்டாலின். இந்த மாநாட்டில் பங்கேற்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அழைத்தவுடன் நான் வருவதற்கு ஒப்புக்கொண்டேன். தமிழ்நாட்டில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், நான் இந்த கூட்டத்தில் பங்கேற்றதற்கு பினராயி விஜயன் உடனான நட்பும் காரணம்.

பினராயி விஜயன் சிங்கம்
மாநில உரிமைகளை காப்பதில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சிங்கம் போல் செயல்பட்டு வருகிறார். கேரளாவில் பினராயி விஜயனின் ஆட்சி சிறந்த ஆட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. மத்திய பாஜக அரசை பற்றி கவலைப்படாமல் சிறப்பான ஆட்சியை அவர் வழங்கி வருகிறார்.

கேரளாவில் ஸ்டாலினுக்கு வரவேற்பு
முன்னதாக சென்னையிலிருந்து தனி விமானத்தில் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணூருக்கு சென்றடைந்தார். அவரை விமான நிலையம் சென்று கேரள மாநில அமைச்சர்கள் வரவேற்பு கொடுத்தனர். இந்த விழாவில் பங்கேற்க வந்திருந்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியையும் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.












Click it and Unblock the Notifications