மீண்டும் உச்சத்தில் கொரோனா பாதிப்பு.. தடுமாறும் பினராயி விஜயன் அரசு.. கேரளா மாடலில் என்ன பிரச்சினை
திருவனந்தபுரம்: கொரோனாவின் முதல் 2 அலைகளை மிகச் சிறப்பாகக் கையாண்ட கேரளா இப்போது வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைப்பதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது. இந்தியாவில் நேற்று பதிவான வைரஸ் பாதிப்புகளில் சுமார் 60% கேரளாவில் மட்டும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா அலை முழுமையாகக் கட்டுப்படுத்த பல மாதங்கள் வரை ஆனது. 2ஆம் அலை உச்சத்திலிருந்த சமயத்தில் வைரஸ் பாதிப்பு நான்கு லட்சம் வரை சென்றது.
இப்போது தான் கொரோனா பாதிப்பு 40 ஆயிரத்திற்குள்ளாகவே இருந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக நாட்டில் வைரஸ் பாதிப்பு குறைந்திருந்தாலும், ஒரு மாநிலத்தில் மட்டும் கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை.

வைரஸ் பாதிப்பு
கடந்த செவ்வாய்க்கிழமை நாட்டின் தினசரி வைரஸ் பாதிப்பு 37 ஆயிரம் இருந்தது. குறிப்பாக ஒரே மாநிலத்தில் மட்டும் மட்டும் அன்று 24,733 பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதாவது நாட்டில் ஒட்டுமொத்தமாகப் பதிவான வைரஸ் பாதிப்பில் 65% ஒரே மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலம் வேறு எதுவும் இல்லை நமது அண்டை மாநிலமான கேரளா தான்..!

அமைச்சர் சைலஜா டீச்சர்
இந்தியாவின் முதல் கொரோனா பாதிப்பு கேரளா மாநிலத்தில் தான் உறுதி செய்யப்பட்டது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட கேரள அரசு தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை எடுத்தது. இதனால் முதல் அலையில் கேரளாவில் பெரியளவில் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. அப்போது கேரள சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சைலஜா டீச்சர் இதற்காகப் பெரிதும் பாராட்டப்பட்டார். முதல் அலையைத் தடுப்பது மட்டுமின்றி, 2ஆம் அலை ஏற்பட்டால் அதைச் சமாளிக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆக்சின், கொரோனா படுக்கைகளை அதிகப்படுத்தப்பட்டன.

ஷாக் தந்த பினராயி விஜயன் அரசு
இதுபோன்ற சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக 2ஆம் அலையையும் கேரளா மிகச் சிறப்பாகக் கையாண்டது. நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் ஆக்சிஜன் இல்லாமல் திணறிய போது, அந்த மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பி உதவியது கேரளா. அந்தளவுக்கு மருத்துவ உட்கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், தேர்தலில் வென்று 2ஆவது முறையாக ஆட்சியமைத்த பினராயி விஜயன், பொதுமக்களுக்கு ஷாக் ஒன்றை அளித்தது.

புதிய அமைச்சர்
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் பார்த்துக் கொண்ட சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த சைலஜா டீச்சருக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்படவில்லை. கடந்த முறை அமைச்சராக இருந்த யாருக்கும் அமைச்சர் பதவி இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சராக வீணா ஜார்ஜ் நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற சமயத்தில் 2ஆம் அலை நாட்டில் குறையத் தொடங்கியிருந்தது. கேரளாவிலும் அதே நிலை தொடர்ந்தது.

பக்ரீத்
ஆனால், கடந்த ஜூலை மாதம் முதல் கேரளாவில் பிரச்சினை தொடங்கிவிட்டது. கூடுதலாகத் தளர்வுகளை அறிவித்தால், வைரஸ் பாதிப்பு அதிகரிக்கும் என மத்திய அரசு எச்சரித்த போதிலும். பக்ரீத் பண்டிகைக்குக் கூடுதல் தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்தது. இதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்த இந்திய மருத்துவர்கள் சங்கம், தளர்வுகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று கடிதமும் எழுதினர். இருப்பினும், கேரள அரசு தனது முடிவை மாற்றவில்லை. எதிர்பார்த்தபடியே பக்ரீத் பண்டிகைக்குப் பிறகு அங்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்தது. இதனால் வெறு வழியின்றி, அடுத்த 3 நாட்களுக்கு முழு ஊரடங்கைக் கேரளா அறிவித்தது.

ஓணம் பண்டிகை
அதன் பிறகு அங்கு வைரஸ் பாதிப்பு மெல்லக் குறைந்து வந்த நிலையில், இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த முறை ஓணம் பண்டிகையால்,.! இந்த முறை ஓணம் பண்டிகைக்கு எனத் தனியாக எந்தவொரு தளர்வுகளையும் கேரள அரசு அறிவிக்கவில்லை. இருந்தாலும்கூட மார்கெட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொரோனா வழிகாட்டுதல்களைப் புறந்தள்ளி மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடினர். இதைத் தடுக்க கேரள அரசும் பெரியளவில் நடவடிக்கை எடுக்கவில்லை.

உச்சத்தில் வைரஸ்
இதனால் வைரஸ் பாதிப்பு அங்கு கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கடந்த திங்கள்கிழமை ஓணம் கொண்டாடப்பட்ட நிலையில், அன்று மாநிலத்தில் 17,106 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து 24,296 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. கடந்த மே மாதத்திற்குப் பிறகு கேரளாவில் வைரஸ் பாதிப்பு இந்தளவு அதிகரிப்பது இதுவே முதல்முறை. கேரளாவில் இப்போது கொரோனா பாசிட்டிவ் விகிதம் 17.73%ஆக உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 2% கீழாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு
கேரளாவில் வைரஸ் பாதிப்பு உச்சத்தில் உள்ளதால் தான் அங்கிருந்து வரும் மக்களுக்குத் தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கேரளாவில் இருந்து வருவோருக்கு RT PCR சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல கர்நாடகா ஆந்திரா மாநிலங்களுக்கு பஸ் சேவை தொடங்கப்பட்ட போதிலும், கேரளாவுக்கு பஸ் சேவை இன்னும் தொடங்கப்படவில்லை.

வலுக்கும் கோரிக்கை
கடந்த காலங்களில் வைரஸ் பாதிப்பு சிறப்பாகக் கையாண்டு இந்தியாவுக்கே முன்னுதாரணமாகத் திகழ்ந்த கேரளா, இப்போது கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. வைரஸ் பாதிப்பு கட்டுக்குள்ளேயே உள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தொடர்ந்து கூறி வந்தாலும்கூட, பாசிட்டிவ் விகிதம் 17.73% உள்ளது அச்சமூட்டும் வகையிலேயே உள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுத்து வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் கேரளாவில் மோசமான நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இன்னும் சிலர் நிலைமையைக் கட்டுப்படுத்த மீண்டும் சைலஜா டீச்சரை சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கையும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications