கொச்சியிலிருந்து லட்சத்தீவுகள் வரை கடலுக்கடியில் கண்ணாடி இழை வடம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: கொச்சியில் இருந்து லட்சத்தீவுகள் வரை கடலுக்கு அடியில் கண்ணாடி இழை வடம் பொருத்தும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், வடகிழக்கு மாநிலங்களுக்கான விரிவான தொலைத்தொடர்பு திட்டத்தின் கீழ் அருணாச்சலப் பிரதேசம், அசாமின் கர்பி அங்லாங் மற்றும் திமா ஹசாஓ ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு கைபேசி சேவை வழங்கும் உலகளாவிய சேவை உதவி நிதித் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை கைபேசி சேவை இல்லாத 2374 கிராமங்களுக்கு (அருணாச்சலப் பிரதேசத்தில் 1683, அசாமின் இரண்டு மாவட்டங்களில் 691), ரூ. 2,029 கோடியில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தின் மூலம் சேவைகள் வழங்கப்படும்.
இந்தத் திட்டத்திற்கான நிதியை, உலகளாவிய சேவை உதவி நிதியம் என்ற அமைப்பு வழங்கும். 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்தத் திட்டத்தை நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்திலும், அசாமின் தொலைதூரப் பகுதிகளிலும் கைபேசி சேவை வழங்கப்படுவதன் மூலம் அந்தப் பகுதிகளில் பேரிடர் மேலாண்மை, மின் ஆளுகை போன்ற துறைகளில் டிஜிட்டல் இணைப்பு மேம்படுத்தப்படுவதோடு உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் தற்சார்பு இந்தியாவின் குறிக்கோளையும் பூர்த்தி செய்ய முடியும்.
கொச்சியிலிருந்து லட்சத்தீவுகள் வரை கடலுக்கடியில் கண்ணாடி இழை வடத்தைப் பொருத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் கொச்சிக்கும் லட்சத்தீவில் உள்ள 11 தீவுகளான கவரட்டி, கல்பேணி, அகட்டி, அமினி, அந்த்ரோத், மினிகாய், பங்காரம், பித்ரா, சேத்லாத், கில்தான், கடமாட் ஆகியவைகளுக்கும் இடையே கடலுக்கடியில் கண்ணாடி இழை வடம் மூலம் நேரடி தொலைத்தொடர்பு இணைப்பு வழங்கப்படும்.
இந்தத் திட்டத்திற்கு ரூ.1,072 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. யுனிவர்சல் சர்வீஸ் ஆப்லிகேஷன் என்னும் நிதியத்தால் இத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்கப்படும்.
பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று அரசு சேவைகளை வழங்குவதற்கும், சுற்றுலா, கல்வி, தொழில்கள், இதர துறைகளின் மேம்பாட்டுக்கும் இந்தத் திட்டம் பெரும் பங்காற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்தும் முகமையாக பிஎஸ்என்எல்-லும், தொழில்நுட்ப ஆலோசகராக டி சி ஐ எல்-லும் இருப்பார்கள்
மத்திய அமைச்சரவை, சுகாதாரம், மருத்துவம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்புக்காக, இந்தியா, சுரினாம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய அரசுக்கும், சுரினாம் குடியரசுக்கும் இடையேயான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், நமது நாட்டின் சுகாதார, குடும்ப நல அமைச்சகமும், அந்நாட்டின் சுகாதார அமைச்சகமும் இணைந்து, சுகாதாரத் துறையில் தொழில்நுட்ப மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை எடுக்கும்.
இந்தியாவுக்கும், சுரினாமுக்கும் இடையேயான இருதரப்பு உறவுகளையும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வலுப்படுத்தும்.
பொது சுகாதாரத் துறையில் உள்ள நிபுணத்துவத்தை பகிர்தலின் மூலமும், தொடர்புடைய பல்வேறு துறைகளில் இருதரப்பு ஆராய்ச்சியை ஊக்கப்படுத்துவதன் மூலமும், தற்சார்பு இந்தியா லட்சியத்தை அடைவதற்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும்.
இவ்வாறு மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.