இடி மின்னலுடன் வெடித்து கொட்டப்போகும் கனமழை.. 12 மாவட்ட மக்களே உஷார்..
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோல் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழையானது கர்நாடகா, கேரளா மாநிலங்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தாலும், தமிழகத்தில் போதுமான அளவுக்கு பெய்திருந்தது. ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை வழக்கமாக 328.4 மி.மீ மழை பெய்யும். இந்த முறை 354 மி.மீ அளவுக்கு மழை தாராளம் காட்டியிருக்கிறது. இது எதிர்பார்த்ததைவிட அதிகம் இல்லை என்றாலும், இதுவே போதுமானதுதான்.

மாவட்ட அளவில் பார்த்தால் திருநெல்வேலி, சென்னை, காஞ்சிபுரம் இவை மூன்றும் இயல்பை விட 60% அதிக அளவு மழையைப் பெற்றுள்ளன. திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் ஆகிய 8 மாவட்டங்களில் 20% முதல் 59% வரை அதிகமாக மழை பெய்திருக்கிறது.
ஆனால் திருப்பூர், மயிலாடுதுறை, நாகை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களில் 20% முதல் 59% வரை மழை குறைந்திருக்கிறது. ஏற்கெனவே கர்நாடகா தண்ணீரை கொடுக்காததால் டெல்டா மாவட்டங்கள் ஏமாற்றமடைந்தன. இப்படி இருக்கும்போது பருவமழையும் காலை வாரியிருப்பது விவசாயிகளை புலம்ப செய்திருக்கிறது.
சரி தென்மேற்கு பருவமழைதான் சரியில்லை, வடகிழக்காவது வாழவைக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவும் போதுமானதாக இல்லை. டெல்டா தவிர மற்ற இடங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் ஓரளவு இருக்கிறது. இனிதான் மழை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வடதமிழகம் மற்றும் அதனையொட்டிய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று கூறியிருக்கிறது.
சென்னையை பொறுத்த அளவில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-23 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது, காலை 10 மணியளவில் 12 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர்,சேலம், நாகை, திருவண்ணாமலை, விழுப்புரம், ராமநாதபுரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications