தமிழ்நாடு வரைபடத்திலிருந்து அமெரிக்கக் குடியிருப்புகள் வரை- நேராக செல்லாத நெடுஞ்சாலைகள் - அ.குமரேசன்
நெடுஞ்சாலைத் திட்டம் ஒன்று தயாரிக்கப்படுகிறது. அதற்கான வரைபடத்தில் சாலையாகக் காட்டப்படும் நேர்கோட்டில் பல வயல்களும் கிணறுகளும் இருக்கின்றன. அதாவது அந்த வயல்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட வேண்டியவை, அந்தக் கிணறுகள் கல்லும் மண்ணும் போட்டு மூடப்பட வேண்டியவை.
பதறிப் போகிறார்கள் அந்த வயல்களுக்கும் கிணறுகளுக்கும் உரிமையாளர்களான விவசாயிகள். சம்பந்தப்பட்ட உயரதிகாரியைப் போய்ப் பார்க்கிறார்கள். மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அவர்கள் அரசாங்கம் கொடுக்கிற தொகையைப் பெற்றுக்கொண்டு வயல்களையும் கிணறுகளையும் விட்டுத்தர வேண்டும் என்கிறார் அதிகாரி. தங்களுடைய வயல்களைப் போலவே வரைபடத்தில் இருக்கிற வேறு சில வயல்கள், கிணறுகள் வழியாகச் சாலைக்கோடு செல்லவில்லையே, வளைந்து செல்கிறதே என்று விவசாயிகள் கேட்கிறார்கள். அந்த வயல்களும் கிணறுகளும் செல்வாக்கான ஆட்களுக்குச் சொந்தமானவை என்று தெரியவருகிறது. செல்வாக்குக்கு ஈடாகப் பணம் கைமாறுகிறது. சில நாட்களில் திருத்தப்பட்ட வரைபடம் தயாராகிறது. புதிதாக வரையப்பட்ட சாலைக்கோடு இவர்களுடைய வயல்களையும் தொடாமல், இவர்களுடைய கிணறுகளையும் தாண்டிக்கொண்டு வளைந்து செல்கிறது.

இதெல்லாம் தமிழகத்தின் முன்னாள் வரைபட நிகழ்வுகள்தான். நேரான நெடுஞ்சாலை திடீர்த்திடீரென வளைந்து செல்வது ஏன் என்ற கேள்விக்கான பதில் இப்படிப்பட்ட வரைபடங்களில் இருக்கிறது. நெடுஞ்சாலைகள் மட்டுமல்ல, ஊருக்குள் ஒரு புதிய மேம்பாலம் கட்டப்படுகிறது என்றால், அதற்குக் கீழே இருந்திருக்கக்கூடிய குடிசைகளில் மட்டும் ஏன் தீ விபத்து ஏற்படுகிறது என்ற வினாவுக்கும் விடை கிடைக்கிறது. நகரம் அழகுபடுத்தப்படுகிறபோது சில குடியிருப்புகள் அப்புறப்படுத்தப்படுவதற்குக் காரணம் அவை அதுவரையில் நகரத்தை அசிங்கப்படுத்திக்கொண்டிருந்தனவா என்ற கேள்விக்கும் பதில் கிடைக்கிறது. அந்த பதில்களில் இருக்கும் ஒரு பொதுவான தன்மை - அங்கெல்லாம் குடியிருந்தவர்கள் பொருளாதாரத்திலும் சமூகநிலையிலும் ஒடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டவர்கள். கறுப்பாக, தரமற்ற வேலைகளைச் செய்கிறவர்களாக இருந்த/இருக்கிற அவர்கள் அசிங்கமானவர்களாகத்தானே இருக்க முடியும்?
அங்கேயும் இதே விதி
இங்கே மட்டுமல்ல, அமெரிக்காவிலும் இதே விதி கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. இங்கே சாதியம் என்றால் அங்கே இனவாதம். "நெடுஞ்சாலைகள் ஏன் நேர்கோடுகளில் செல்லவில்லை - காரணம் இருக்கிறது. அமெரிக்க உள்கட்டுமானத்தில் இனவாதம் கட்டப்படுவது எப்படி?" -இப்படியொரு தலைப்பில் 'இன்சைடர்' இணையத்தள ஏட்டில் ஐரீன் ஜியாங் எழுதியுள்ள கட்டுரை அமெரிக்க சமூகக் கட்டுமானத்தின் கோணல்களைக் காட்டுகிறது.
1956ம் ஆண்டில் அமெரிக்க அரசு நெடுஞ்சாலைச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது. அந்தச் சட்டம், நெடுஞ்சாலைகள் அமைப்பதற்காகப் பெரிய குடியிருப்புப் பகுதிகள், வணிக மையங்கள் போன்றவற்றைக் கைப்பற்றுவதற்கான அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு அளித்தது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநில அரசுகள் கையகப்படுத்தி, அதுவரையில் குடியிருந்தோரை அப்புறப்படுத்திய பகுதிகளில் பெரும்பாலானவை கறுப்பின மக்களும், கலப்பினத்தவர்களும், வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களும் வாழ்ந்த இடங்களாகும். நெடுஞ்சாலைகள் போடப்படுவதற்காக அந்த மக்கள் எங்கெங்கோ வீசிப் போடப்பட்டார்கள் என்று தெரிவிக்கிறது அந்தக் கட்டுரை.
புறநகரைத் தகர்த்த புல்டோசர்
எடுத்துக்காட்டாக, மின்னசோட்டா மாநிலத்தின் ரோண்டோ நகரில், கறுப்பின மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த ஒரு புறநகர்ப் பகுதி கையகப்படுத்தப்பட்டது. அருகில் உள்ள ஒரு தொழில் வணிகப் பகுதியைச் சார்ந்து, தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக்கொண்ட அந்த மக்கள் ரோண்டோ நகரத்தை விட்டே வெளியேற்றப்பட்டார்கள். மாநிலங்களுக்கிடையேயான 1,500 மைல் (2,400 கி.மீ.) நீள நெடுஞ்சாலை - 94 என்ற திட்டத்துக்காக இவ்வாறு அந்த மக்கள் ஊர் கடத்தப்பட்டார்கள். வீடுகள் புல்டோசர்களால் தரைமட்டமாக்கப்பட்டன.
இருபதாம் நூற்றாண்டின் நடுக்கட்டத்தில் இவ்வாறு தரைமட்டமாக்கப்பட்ட பல கறுப்பர் குடியிருப்புகளில் ஒன்றுதான் இது. மியாமி மாநிலத்தின் ஓவர்டவுன், விஸ்கான்ஸின் மாநிலத்தின் மில்வாக்கி, மேரிலாண்ட் மாநிலத்தின் பால்டிமோர் உள்ளிட்ட பல நகரங்களில் இவ்வாறு குடியிருப்புகளைத் தகர்த்து நெடுஞ்சாலைகள் போடப்பட்டன. அந்தக் குடியிருப்புகளின் பொதுத்தன்மை, அவற்றிலெல்லாம் ஏழைகளான கறுப்பினத்தவர்களும், வெள்ளையர் அல்லாத பிற இனத்தவர்களும் குடியிருந்தார்கள் என்பதே.
அதே வேளையில், வெள்ளையர்கள் மிகுதியாகக் குடியிருந்த வட்டாரங்களை நெடுஞ்சாலைகள் தொடவில்லை. மாறாக, சாலைகள் அந்த வட்டாரங்களைச் சுற்றிச் செல்லுமாறு பார்த்துக்கொள்ளப்பட்டது.
"நமது நெடுஞ்சாலைகளில் நேரடியாகவே இனவாதம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது," என்று கடந்த ஏப்ரலிலி 'தி கிரியோ' என்ற இணையத்தளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார் பீட் புட்டிஜீக். இவர், போக்குவரத்துத்துறை செயலர் என்பது கவனிக்கத்தக்கது. கறுப்பினத்தவர்களும் பொருளாதாரத்தில் மிகப் பின்தங்கியவர்களும் வசித்த பகுதிகளில் நெடுஞ்சாலைகள் போடப்பட்டு, அந்த மக்கள் நசுக்கப்பட்டார்கள். அவர்கள் வீட்டை இழக்கிற மன உளைச்சலுக்கு உள்ளானார்கள்.
வழக்கம்போல அங்குள்ள பழமைவாதிகள் (அதாவது வெள்ளையினப் பெருமைவாதிகள்), பீட் புட்டிஜீக்கின் கருத்தைக் கேலி செய்கிறார்கள். அவர் மிகைப்படுத்திப் பேசுகிறார் என்கிறார்கள்.
காரணம் இருக்கிறது
ஆனால், அவரைக் கேலி செய்கிறவர்கள், ஆவணங்களைப் படித்துப் பார்க்கட்டும் என்கிறார் டாக்டர் ராபர்ட் புல்லார்ட். டெக்ஸாஸ் சதர்ன் பல்கலைக்கழக சுற்றுச் சூழலியல் மற்றும் கொள்கை ஆய்வுத்துறைப் பேராசிரியரான இவர், "நெடுஞ்சாலைகள் ஏன் நேராக இல்லை இல்லை என்பதற்குக் காரணம் இருக்கிறது. வேறு நிற சமூகங்கள் வசித்த வட்டாரங்களின் வளமான வணிக வளாகங்களை அழித்தே சாலைகள் வந்தன," என்கிறார். "நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டுள்ள விதத்தைப் பார்த்தால், வசதியான, வெள்ளையினத்தவர்களுடைய குடியிருப்புகளும் வணிக மையங்களும் தவிர்க்கப்பட்டிருப்பதைக் காணலாம்," என்றும் கூறுகிறார் சூழலியல் நீதி இயக்கத் தந்தை என்று குறிப்பிடப்படுகிறவரான புல்லார்ட். இவர் தற்போது, அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகையில் சூழலியல் நீதி ஆலோசனைக் குழு உறுப்பினராகப் பணியாற்றுகிறார்.
சூழலியல் நீதிக்காகக் கடந்த 40 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிற புல்லார்ட், "மேலுமொரு நாற்பதாண்டுகள் நாம் காத்திருக்க முடியாது. அனைத்து சமூக மக்களுக்கும் உயிர்வாழும் உரிமையும், வளமாக இருக்கும் உரிமையும் இருக்கிறது," என்கிறார்.
சிதைத்துப்போட்ட 'சிவப்புக்கோடு'
இத்தகைய சாலைக் கட்டுமானங்களில் மட்டுமல்ல, மாநில அரசுகளின் முதலீட்டுத் திட்டங்களிலும் இன அடிப்படையிலான பாகுபாடுகள் இருந்து வந்திருப்பதை சமூக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 'சிவப்புக்கோடு' (ரெட்லைனிங்) என்று விமர்சிக்கப்பட்ட திட்டம் ஒன்றை 1950களில் அமெரிக்க அரசு கொண்டுவந்தது. குறிப்பிட்ட வட்டாரங்களில் வாழும் மக்களின் இனம், பொருளாதாரம் ஆகிய 'ரிஸ்க்' நிலைகளை அடிப்படையாகக் கொண்டு அந்தப் பகுதிகளில் மாநில அரசுகள் முதலீடு செய்வதற்கான அந்தத் திட்டம், வெள்ளையர் அல்லாத, வருவாய் குறைந்த மக்கள் வாழ்ந்த பகுதிகளைப் புறக்கணித்தது. கலப்பு நிறத்தவர்களும், "நீக்ரோ" என்று வெள்ளையர்களால் குறிப்பிடப்பட்ட கறுப்பினத்தவர்களும், வெளிநாட்டவர்களும், ஊடுருவியவர்கள் என்று சித்தரிக்கப்பட்ட தாழ்ந்த நிலை மக்களும் வாழும் பகுதிகள் அதிகம் 'ரிஸ்க்' உள்ள பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டன. கறுப்பின அமெரிக்கர்கள் உள்ளிட்ட வேறு இனத்தவர்களுக்கான "பொருளாதார மரணதண்டனை" போல அந்தத் திட்டம் அமைந்தது என்கிறார் 'இன்சைடர்' கட்டுரையாளர்.
அரசு முதலீட்டுடன் தொடர்புள்ள வீட்டுக்கடன் போன்ற ஏற்பாடுகள் கூட அந்த மக்களுக்கு மறுக்கப்பட்டன. தொழிற்சாலைக் கழிவுகளையும், நகரக் குப்பைகளையும் கொட்டுவதற்கான இடங்களாக அந்த மக்கள் வாழ்ந்த பகுதிகள் உறுத்தலே இல்லாமல் மாற்றப்பட்டன. ரெட்லைனிங் நடைமுறையால் வெள்ளையர்களிலும் வருவாய் குறைந்தவர்கள் பாதிக்கப்பட்டதுண்டு. ஆனால் அவர்களுக்கு அருகமைப் பகுதிகளிலேயே மாற்று ஏற்பாடுகள் உடனுக்குடன் செய்துகொடுக்கப்பட்டன. மற்றவர்களோ கைவிடப்பட்டார்கள் என்று மனித உரிமைப் போராளிகள் தெரிவிக்கிறார்கள். இவ்வாறு கைவிடப்பட்ட சிலரது அனுபவங்களையும் பதிவு செய்திருக்கிறார் கட்டுரையாளர் ஐரீன் ஜியாங்.
நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் வாகனங்களில் வருவோர் ஓய்வெடுப்பதற்காக அமைக்கப்பட்ட விடுதிகளிலும் கூட, "வெள்ளையர் ஓய்வகம்" என்ற பெயர்ப்பலகைகள் நெடுங்காலமாக அகற்றப்படாமலே இருந்திருக்கின்றன.
தேவாலயங்களுக்கும் இழப்பு
"ஒரு குடியிருப்புப் பகுதி இடித்துக் காலி செய்யப்படுகிறது என்றால் சுற்றியிருக்கும் வணிகக்கூடங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களை இழக்கின்றன, தேவாலயங்கள் கூட தங்களுடைய சபை உறுப்பினர்களை இழக்கின்றன," என்று நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக சமூகவியல்துறை பேராசிரியரும், ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆய்வுத்துறைத் தலைவருமான மேரி பாட்டிலோ கூறுகிறார்.
முன்பு சிவப்புக்கோடு போட்டு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் போதிய முதலீடுகள் செய்யப்படாததால், மரங்கள் வளர்ப்பு உள்ளிட்ட பணிகள் கூடப் புறக்கணிகப்பட்டன. பசுமை வளம் மறுக்கப்பட்ட நிலையில், இன்றைய புவிவெப்ப அதிகரிப்புச் சூழலில் இந்த வட்டாரங்களின் மக்கள் இதய நோய், ஆஸ்துமா உள்ளிட்ட உடல் பாதிப்புகளுக்கும் உள்ளாகிறார்கள் என்று சமூகவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். பொதுசுகாதார ஏற்பாடுகள் கட்டமைக்கப்படாத அந்த நாட்டில், இந்த மக்கள் தங்களின் வருவாயில் பெரும்பகுதியை இப்படிப்பட்ட நோய்களுடன் போராடுவதிலும் இழக்கிறார்கள் என்று விவரிக்க வேண்டியதில்லை.
இத்தகைய பாதிப்புக்கு உள்ளானவர்களில் ஒருவர் கேட் மிங்கோயா. மருத்துவக் காப்பீட்டின் கீழ் வராத ஆஸ்துமா சிகிச்சைக்காகத் தனது வருமானத்தில் பெரும் பகுதியைக் கட்டணமாகச் செலுத்திக்கொண்டிருக்கிற இவர், 'கிரண்ட்வொர்க் யுஎஸ்ஏ' என்ற அமைப்பில் சமூகத்திறன் வளர்ப்புப் பிரிவு இயக்குநராக இருக்கிறார். புறக்கணிக்கப்பட்ட பகுதிகளின் மக்களிடையே சமத்துவ உரிமைகளுக்கான விழிப்புணர்வைப் பரப்புவதிலும் ஈடுபட்டுள்ள மிங்கோயா, "நெடுஞ்சாலைகளுக்காக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு மாற்றாக, அனைத்து சமூகங்களுக்கும் பாகுபாடின்றிப் பலனளிக்கிற பணிகளில் அமெரிக்க அரசு ஈடுபட்டாக வேண்டும். அதற்கேற்ப நாட்டின் போக்குவரத்து உள்கட்டுமானக் கொள்கைகளைப் புதுப்பிப்பதற்கான வாய்ப்பு அரசுக்கு இருக்கிறது," என்கிறார். ஆக, இந்தப் பாகுபாடுகளுக்கான வேர் இன்றளவும் அமெரிக்க அரசுத்திட்டங்களில் புதைந்திருப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.
நெடுஞ்சாலைகள் நேராகச் செல்லாததன் ஏற்றத்தாழ்வுகளை நேர் செய்வதற்கான இந்த வாய்ப்பை அமெரிக்க அரசு பயன்படுத்திக்கொள்ளுமா? இல்லையேல் பழமைவாதிகளின் பரிகாசத்திற்கு உள்ளாகக்கூடாதென்று பதுங்கிக்கொள்ளுமா? "கறுப்பர் உயிரும் பொருட்படுத்தப்பட வேண்டியதே," என்ற முழக்கம் சமத்துவ உரிமைகளுக்கான இயக்கமாக அங்கே வலுவாகப் பரிணமிப்பதைப் பொறுத்து இந்தக் கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். இனம், நிறம், மதம், சாதி என்று எங்கெல்லாம் சம உரிமைகளைத் தரைமட்டமாக்கிய பாகுபாட்டுச் சாலைகள் நீண்டிருக்கின்றனவோ அங்கெல்லாம் அது போன்ற இயக்கம் வேரூன்றுவதைப் பொறுத்துப் புதியதோர் உலகம் செய்யப்படும்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications