For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திரும்பி வருகிறது வரலாறு: இரண்டாவது நாவலராக ஓ.பி.எஸ் - பா. கிருஷ்ணன்

Google Oneindia Tamil News

நான் வந்துட்டேன்னு சொல்லு"

-குரல் கேட்டது. என்னது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்துவிட்டாரா என்று கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தால், "நான்தான் வரலாறு திரும்பி வந்துவிட்டேன்" என்றது ஓர் உருவம். "இப்போது கொஞ்சம் மாற்றத்துடன் வந்துட்டேன்" என்றது.

அதெல்லாம் போகட்டும் வரலாறு எப்படி திரும்பி வந்தது என்கிறீர்களா.. கொஞ்சம் ஃப்ளாஷ் பேக் அவசியம் நண்பர்களே!

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்ற அறிஞர் அண்ணா ஒரு மாநாட்டிற்குத் தலைமை வகிப்பதற்காக நாவலர் நெடுஞ்செழியனை, "தம்பீ வா! தலைமை தாங்கு!" என்று கூறி அழைத்தார். அண்ணாவின் இந்த அழைப்பை அடுத்து, அவருக்குப் பின் நெடுஞ்செழியனே கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைமை வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக, அன்றைய சட்டப் பேரவை உறுப்பினர்களில் பெரும்பாலானோரின் ஆதரவைத் திரட்டி, முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் கலைஞர் மு.கருணாநிதி.

இந்தக் காட்சியில் லேசான மாற்றத்தையும் பொருத்திப் பார்க்கலாம்.

Writer Paakis Article on Comparison Of Navalar Nedunchezhiyan and O Panneerselvam

அண்ணா இடத்தில் ஜெயலலிதா. வழக்குகள் காரணமாக தனது முதலமைச்சர் பதவியை அவர் அளித்தது ஓ. பன்னீர்செல்வத்திடம். ஜெயலலிதா மறைந்த பின்னர் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஓபிஎஸ்ஸே தொடர்ந்து முதலமைச்சராக நீடிப்பார் என்று நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, குறுகிய காலத்தில் முதலமைச்சர் ஆனவர் எடப்பாடி பழனிசாமி.

அண்ணாவுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பைக் கலைஞர் கருணாநிதி பிடித்துக் கொண்டார். அவர் ஆட்சியை இழந்த பிறகும் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தார். அதைப் போலவே ஜெயலலிதாவுக்குப் பின் முதலமைச்சர் பதவியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்ட எடப்பாடி பழனிசாமி தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும் பிடித்துவிட்டார்.

நாவலர் நெடுஞ்செழியனை அண்ணா அடையாளம் காட்டினாலும் முதலமைச்சர் பதவியையும் கட்சியின் தலைமையையும் ஏற்றவர் கருணாநிதி. அதைப் போல் பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா அடையாளம் காட்டினாலும் பதவியைக் கைப்பற்றியவர் எடப்பாடி பழனிசாமி. முன்பு முதலமைச்சர் பதவியைப் பிடித்தார். தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்ததை அடுத்து எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவியையும் பிடித்துவிட்டார்.

கருணாநிதி முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது முரண்டு பிடித்து அமைச்சரவையில் சிறிது காலம் இடம்பெறாமல் புறக்கணித்தார் நாவலர் நெடுஞ்செழியன். அதைப் போல் எடப்பாடியார் எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டதற்கு ஓ.பி.எஸ். அதிருப்தி வெளியிட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன.

கடந்த சில மாதம் முன்பு முதலமைச்சர் வேட்பாளராக யாரை அறிவிப்பது என்பதில் முரண்பாடுகள் நீடித்தன. கடைசியில் எடப்பாடியின் பெயர் அறிவிக்கப்பட்டது. அதைப் போல் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதிலும் சிறிது சர்ச்சை இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சட்டப் பேரவை அண்ணா திமுக உறுப்பினர்களின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படவில்லை. கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதற்குள் கட்சி உடைகிறது என்றெல்லாம் யூகங்கள் உலவின.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திங்கள்கிழமை கூடி, நீண்ட நேரம் விவாதித்துக் கொண்டிருந்தனர். இதற்குள் அவர் வருவாரா, இவர் வருவாரா என்றெல்லாம் யூகங்கள் இறக்கை கட்டிக் கொண்டு பறந்தன. அதிமுக ஆட்சியின்போது, சட்டப் பேரவைத் தலைவராக இருந்த தனபால் பெயர் முன்மொழியப்பட்டது என்று கூட செய்தி பரவியது.

இதற்கிடையில், வயிற்றில் புளியைக் கரைப்பதில் எக்ஸ்பர்ட் ஆன பாஜக "சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவரைத் தேர்வு செய்வதில் பாஜக முடிவு செய்யும்" என்று ஒரு பிட்டைப் போட்டுப் பார்த்தது.

எல்லா யூகங்களுக்கும் முற்றுப் புள்ளி வைப்பது போல் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராகியிருக்கிறார். இருந்தாலும், இந்தத் தேர்வில் ஓ.பி.எஸ்ஸுக்கு உடன்பாடில்லை என்றும் அவர் கூட்டத்துக்கு இடையிலேயே வெளியேறி புறப்பட்டுவிட்டார் என்றும் வதந்திகள் கசியவிடப்பட்டன.

அப்படியானால், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் கையெழுத்திட்டு எப்படி அறிக்கை அனுப்பியிருப்பார்கள்? இந்தக் கேள்வி விடை கிடைக்காமல் அநாதையாக இருக்கிறது.

இனிமேல் ஊடகங்கள் எல்லாம் கட்சி உடையும், சசிகலா தலையிடுவார் என்ற யூகங்களுக்கு பூ வைத்து பொட்டு வைத்து உலவச் செய்வது நிச்சயம்.

ஆனால், இதெல்லாம் நடப்பது சந்தேகமே. காரணம், சசிகலாவின் ஆதரவாளர்களான அ.மு.மு.கவினருக்கு அரை உறுப்பினர் கூட சட்டப் பேரவையில் இல்லை. கட்சியோ ரொம்ப பலவீனமாக இருக்கிறது. வேறு வழியே இல்லை.

1969ம் ஆண்டு கலைஞர் கருணாநிதி முதலமைச்சராகி, புதிய அமைச்சர்களை நியமித்தபோது ஒதுங்கியிருந்த நாவலர் நெடுஞ்செழியன் வேறு வழியில்லாமல் சில காலம் கழித்து மு.க. ஆட்சியில் கல்வியமைச்சராகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இதற்கிடையில் முன்பு ஏற்றுக் கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் பணியையும் தொடர்ந்தார்.

இந்தக் காட்சிகள் எல்லாம் மாறி மாறி திரைப்படங்களைப் போல் கண் முன் வந்து போயின.

நமக்கு முன்னே நின்றிருந்த வரலாறு, "இப்போது ஓ.பி.எஸ். நாவலரின் இடத்தில் இருக்கிறார். அவ்வளவுதான்!" என்று கூறி மறைந்தது.

எப்படியும் மீண்டும் வரத்தான் போகிறது!

English summary
Senior Journalist says the process of new opposition leader’s election comparing, though faced some difference of opinion, everything will again go smoothly as happened in the past.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X