For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வல்லுநர் குழு விசாரணை... அடுத்த கட்டத்தை நோக்கி பெகாசஸ் வழக்கு.... இதுவரை நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: பெகாசஸ் ஒட்டு கேட்பு விவகாரம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. பெகாசஸ் ஒட்டு கேட்பு தொடர்பாக வல்லுநர் குழு அமைத்து விசாரணை நடத்த உள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

பெகாசஸ் என்பது இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனம் தயாரித்த உளவு பார்ப்பதற்கான மென்பொருள். பயங்கரவாதிகளின் போன்களை ஒட்டு கேட்டு சதித்திட்டங்களை முறியடிக்கவே இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டது.

இஸ்ரேல் நிறுவனம் இந்த மென்பொருளை அரசாங்கங்களுக்கு விற்பனை செய்தது. ஆனால் பெரும்பாலான உலக நாடுகள் தங்களது நாட்டு குடிமக்களை உளவு பார்க்க இந்த சாப்ட்வேரை பயன்படுத்தியது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

பெகாசஸ் உளவு மென்பொருள் சர்ச்சை கடந்து வந்த பாதை:

2016: ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மனித உரிமை செயற்பாட்டாளர் மன்சூர் முதன் முதலில் பெகாசஸ் ஸ்பைவேர் மூலமான ஒட்டு கேட்பு குறித்து அம்பலப்படுத்தினார்.

2017: பெகாசஸ் மென்பொருள் மூலம் பொதுமக்களின் செல்போன்களை உளவு பார்ப்பதாக மெக்சிகோ அரசு மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் மெக்சிகோ அரசு மீது வழக்கும் தொடரப்பட்டது.

2017: அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளேடு பெகாசஸ் மென்பொருள் மூலம் எப்படி உளவு பார்க்கப்படுகிறது என்பதை பகிரங்கப்படுத்தியது.

2018: சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி துருக்கியில் கொல்லப்பட்டார். அவர் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னரும் பின்னரும் அவரது செல்போன்கள் பெகாசஸ் மூலம் ஒட்டு கேட்கப்பட்டதாக கூறப்பட்டது.

2019: வாட்ஸ் அப் மூலம் பெகாசஸ் மென்பொருளை அனுப்பி செல்போன்களில் தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேலின் என்.எஸ்.ஓ. நிறுவனத்துக்கு எதிராக ஃபேஸ்புக் வழக்கு தொடர்ந்தது.

2020: செல்போன்களில் பெகாசஸ் மென்பொருளை அனுப்புவதற்கு போலி ஃபேஸ்புக் பக்கத்தை இஸ்ரேல் உருவாக்கியதாக மதர்போர்டு என்கிற ஆன்லைன் ஊடகம் குற்றம்சாட்டியது.

2020: அல் ஜசீராவின் செய்தியாளர்கள் பலரும் பெகாசஸ் மூலம் வேவுபார்க்கப்பட்டதாக சர்ச்சை வெடித்தது. மொத்தம் 36 அல்ஜசீரா செய்தியாளர்களின் செல்போன்கள் பெகாசஸ் மூலம் ஒட்டு கேட்கப்பட்டதாக டொரண்டோ பல்கலைக் கழகத்தின் சிட்டிசன் ஆய்வகம் அறிக்கை வெளியிட்டது.

A Timeline of Pegaus Snooping Case

2021: பெகாசஸ் உளவு விவகாரம் இந்தியாவை உலுக்கியது. பெகாசஸ் புராஜக்ட் என்ற பெயரில் தி கார்டியன் உள்ளிட்ட 16 ஊடங்கங்கள் ஆய்வு நடத்தின. இந்த ஆய்வில் உலகம் முழுவதும் 50,000 பேர் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டன என்றும் இந்தியாவில் மட்டுமே 300க்கும் மேற்பட்டோர் ஸ்மார்ட்போன்கள் பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டதும் அம்பலப்படுத்தப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பிரசாந்த் கிஷோர், உச்சநீதிமன்ற பெண் ஊழியர் என பலரும் இந்த பட்டியலில் இடம்பெற்றிருந்தனர். இது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் தர கோரி நாடாளுமன்றத்தை எதிர்கக்ட்சிகள் முடக்கின.

2021 ஜூலை: பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டு கேட்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றக் கண்காணிப்பில் சிறப்பு குழு அமைத்து விசாரணை நடத்த கோரி சி.பி.எ.ம் ராஜ்யசபாஎம்.பி. ஜான் பிரிட்டாஸ், இந்து என்.ராம், சசிகுமார், வழக்கறிஞர் எம்.எல். சர்மா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் அடுத்தடுத்து வழக்கு தொடர்ந்தனர். உச்சநீதிமன்றத்தில் பெகாசஸ் தொடர்பாக மொத்தம் 9 வழக்குகள் தொடரப்பட்டன.

ஆக.5: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதி சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் பெகாசஸ் ஒட்டு கேட்பு குறித்து விசாரிக்க கோரும் மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில், பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டவர்கள் யாரும் ஏன் கிரிமினல் வழக்கு தொடரவில்லை என தலைமை நீதிபதி ரமணா கேள்வி எழுப்பினார். இதையடுத்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆக. 10: பெகாசஸ் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, கால அவகாசம் கேட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 16-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆக.16: உச்சநீதிமன்றம் வழக்கை தொடர்ந்து விசாரித்தது. அப்போது மத்திய அரசு பெகாசஸ் மென்பொருளை வாங்கி இந்திய குடிமக்களை வேவுபார்த்ததா இல்லையா? என கேள்வி எழுப்பினர். ஆனால் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுப்பதாக கூறினார். மேலும் மத்திய அரசு சார்பில் பிரமாணப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சில நிறுவனங்கள் முயற்சிக்கின்றன என கூறியிருந்தது இந்த பிரமாணப் பத்திரத்தில் இடம்பெற்றிருந்தது. மேலும் விசாரணை நடத்த குழு அமைக்க தயார் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதையடுத்து மத்திய அரசு விரிவான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

செப்..8: உச்சநீதிமன்ற விசாரணையின் போது கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதனால் கால அவகாசம் தேவை என மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதனை ஏற்று செப்டம்பர் 13-ந் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

செப்.13: உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று பெகாசஸ் உளவு விவகாரத்தில் கூடுதல் பிரமாணப் பத்திரிகையை தாக்கல் செய்ய முடியாது என மறுத்தது மத்திய அரசு. இதற்கு உச்சநீதிமன்றம் கடுமையான அதிருப்தியை தெரிவித்தது. மேலும் மத்திய அரசு தமது நிலைப்பாடு குறித்து பரிசீலனை செய்யவும் உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது. மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவில்லை எனில் உச்சநீதிமன்றமே உத்தரவுகளை பிறப்பிக்க நேரிடும் எனவும் கூறியது.

செப். 23: இன்றைய விசாரணையில், பெகாசஸ் ஒட்டு கேட்பு தொடர்பாக வல்லுநர் குழுவை அமைத்து விசாரிக்க உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இது தொடர்பாக அடுத்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்தார்.

English summary
Here is a Timeline of Pegaus Snooping Case in the Supreme Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X