• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேராசிரியர் சான் இரால்சுடன் மார்

By Sridhar L
|
- முனைவர் மு. இளங்கோவன்

தமிழின் தொன்மை இலக்கியங்களான சங்க இலக்கியங்களை முதற்கண் முனைவர் பட்ட ஆய்வுக்கு உட்படுத்திய ஐரோப்பிய நாட்டு அறிஞர் முனைவர் சான் இரால்சுடன் மார் அவர்கள் ஆவார்.

அடிப்படையில் இங்கிலாந்து இராணுவத்தில் தம் தொடக்ககால வாழ்க்கையை ஈடுபடுத்திக் கொண்ட மார் அவர்கள் பின்னாளில் தமிழ்மொழியையும் தமிழர்களின் இசையான கர்நாடக இசையையும் அறிந்து தமிழுக்குத் தம் வாழ்க்கையை ஒப்படைத்துக் கொண்டார்.

தமிழ் இலக்கியம் இலக்கணம் அறிந்துதமிழிசையும் அறிந்தவர்களைத் தமிழகத்தில் விரல்விட்டு

எண்ணிவிடலாம். இங்கிலாந்திலிருந்து ஒருவர் இத்தகு சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தகுந்தது.

சான் இரால்சுடன் மார்( Dr.John Ralston Marr ) இங்கிலாந்தில் உள்ள சர்ரே(surrey) மாநகரத்தில் உள்ள இலெதர்கெட்டு என்ற ஊரில் 1927 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் ஐந்தாம்நாள் பிறந்தவர். இவரின் தாய் பெயர் மோனிகா நைட்லி மார்(Monica Knightly Marr). தந்தையார் பெயர் இரால்சுடன் மார் (RalstonMarr) ஆகும். செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த மார் அவர்கள் தம் இளமைக் கல்வியை விம்பில்டனில் உள்ள டான்கெட் தொடக்கப் பள்ளியில் பயின்றவர். பின்னர் சான் பௌமெண்டு பள்ளியில் தங்கிப் பயின்றவர்

(1938-40).

அடுத்து ஓல்டு விண்சுடரில் உள்ள பௌமெண்டு கல்லூரியில் (Beaumont College)) தங்கிப் பயின்றவர்(1940-45). இக்கல்வி நிறுவனங்கள் யாவும் செசுயூட் நிறுவனம் சார்ந்த பள்ளிகள் ஆகும்.

சான் இரால்சுடன் மார் தமக்கு 16 அகவையிருக்கும்பொழுது இந்திய இசைகளில் ஈடுபாடு வரப்பெற்றார். பௌமெண்டு கல்லூரியில் பயின்று கொண்டிருந்தபொழுது பள்ளி விடுமுறையில் பிரிட்டிசு ஒலிபரப்புக் கழகத்திற்குச் சென்றார்(B.B.C.). அங்குப் பணிபுரிந்து கொண்டிருந்த கபூர்தலா சார்ந்த மகாராசகுமாரி, இந்திராதேவி, முனைவர் நாராயணமேனன் ஆகியோரைக் கண்டு உரையாடியுள்ளார். இளமைக் கல்வி முடித்த மார் அவர்கள் இராணுவப் பணியில்

சேர்ந்தார்.

இந்திய இசையில் அவருக்கிருந்த ஆர்வத்தின் காரணமாக இராயல் விமானப்படை பிரிவிலிருந்து காலாட்படை பிரிவிற்கு மாற்றல் வாங்கிக் கொண்டார். அங்குப் போர்ப் பயிற்சியுடன் உருது மொழியும், இராணுவச் சட்டமும் படிக்கும் கூடுதல் வாய்ப்புக் கிடைத்தது. இது 1946.சனவரி 1 இல் நடந்தது பிறகு மார்கேதர்காம், சர்ரே எனுமிடத்திற்கு மார்ச் 1946 இல் மாற்றலானார்.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் தன்னுரிமைத் தீர்மானம் நிறைவேறியதன் காரணமாக இந்திய இராணுவத்திற்குத் துணை போகும் பிரித்தானியப் பணிக்கு அனுப்பப்பட்டார். இதனால் அவருக்கு இந்திய வீரர்களுடனான பழக்கம் ஏற்பட்டது. பெரும்பாலோர் இலண்டனில் நடந்த வெற்றிவிழாவில் (சூன் 8, 1946) பங்கேற்க வந்திருந்தனர். அதில் மூவரை விம்பிள்டனில் இருந்த அவர் வீட்டிற்கு அழைத்துள்ளார். இராணுவப் பணி தொடர்பிலான மார் அவர்களின் இந்தியப் பயணம் ஆகஸ்ட் 12, 1946ல் மும்பாய் நோக்கிய எம்/வி.சியார்ச்சு எனும் கப்பலில்

நடந்தது. ஆகத்து 29 ஆம் தேதி வந்தடைந்தார். கல்யாண் புறநகர் பகுதியில் ஒருவார இருப்பிற்குப் பின் ஓடிசி பெங்களூருக்குச் செப்டம்பர் 9 ஆம் நாள் வந்தடைந்தார்.

இராணுவப்பணிக்காகப் பெங்களூர் வந்த மார் அவர்கள் கர்நாடக இசை பற்றிய அறிவதிலும் கற்பதிலும் ஆர்வம் காட்டினார். 1947 பிப்ரவரி 12 இல் இந்திய இராணுவப் பணிக்குச் சபல்பூருக்குப் பணியின் பொருட்டுச் சென்றார். அங்கு மிகுதியான இராணுவ வீரர்கள் தென்னிந்தியாவிலிருந்து வந்திருந்தனர். அவர்கள் தமிழையும் கர்நாடக இசையையும் பற்றி அறிய உதவினர். 1947 மே மாதம் இந்தியப் படைக்கலப் பிரிவில் 226 ஆம் படையணியில் இரங்கூனுக்கு அருகில் பணிபுரியும் வாய்ப்பு அமைந்தது.1948 இல் இராணுவ வீரர்கள் பலரும் இந்தியாவுக்குத் திரும்பி விட்டனர்.

இதனிடையே 1947 இல் இந்தியத் தன்னுரிமைத் திருநாளில் மிங்கல்ஆடன் என்ற இடத்தில் (இரங்கூனுக்கு அருகில்)பொதுமக்கள் நடுவே தென்னிந்திய இசையான கர்நாடக இசையில் முதன்முதல் மார் பாடல் பாடினார். மலேசியாவில் உள்ள சோகூரில் இங்கிலாந்து படைப்பிரிவு இருந்தபொழுது அங்குக் கடமையாற்றிய மார் அவர்கள் அக்தோபர் 1948 இல் தம் தாய்நாடான இங்கிலந்துக்குச் சென்றார்.அவர் மலேசியாவில் தங்கியிருந்தபொழுதும் இந்தியாவின் பிற பகுதிகளில் தங்கியிருந்தபொழுதும் பெரும் எண்ணிக்கையிலான தென்னிந்திய இசை

குறித்த 78 ஆர்.பி.எம் பதிவுத்தட்டுகளை வாங்கிப் பாதுகாத்தார். சப்பான் படை மலேசியா, சிங்கப்பூர்,பர்மா உள்ளிட்ட நாடுகளைக் கைப்பறுவதற்கு முன்பாக இவற்றை வாங்கிச் சேர்த்தார்.

1948 அக்டோபரில் அறிஞர் மார் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனை ஏற்பாட்டது. ஆம். இலண்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள கீழைக்கலையியல் ஆப்பிரிக்கவியல் பள்ளியில் கல்லூரிப்படிப்பு பயிலத் தொடங்கினார். தொல்லியல் துறையில் பணிபுரிந்த மார்ட்டீனர் வீலர் அவர்களின் மேற்பார்வையில் படித்தவர்.

முதலாண்டில் தெலுங்கு கற்பதும் தென்னிந்திய இசை அறிவதுமாக இவர் படிப்பு இருந்தது.இளங்கலையில்(1949-53) தமிழும் சமற்கிருதமும் படித்தார். மார் அவர்களின் பேராசிரியராக இலண்டனில் இருந்தவர் எம்.எச்.தாம்சன் குறிப்பிடத்தகுந்தவர். இத் தாம்சன் உ.வே.சா.அவர்களிடம் கற்றவர்.

1953 இல் மார் அவர்கள் வெண்டி அம்மையாரை மணந்து கொண்டார். அதே நேரத்தில் மேற்கல்வி பயில இவருக்கு உதவித்தொகை கிடைத்தது. தம் மனைவி வெண்டி அவர்களுடன் இந்தியா வந்து(1953 நவம்பர்) தமிழ், இசையாய்வைத் தொடர்ந்தார். முதலில் சென்னையில் இருந்தார். அடுத்த ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தங்கி ஆய்வுகள் செய்தார். இசை கற்றார். சங்க இலக்கியம் சார்ந்த தலைப்பைத் தேர்ந்தெடுத்து ஆய்வைத் தொடங்கினார். மார் இலண்டனில் முனைவர் பட்டம் பெற்றவர். பேராசிரியர் சிதம்பரநாதன் செட்டியார் உள்ளிட்டஅறிஞர்களிடம் தமிழறிவு பெற்றார்.

மார் அவர்கள் கர்நாடக வாய்ப்பாட்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சித்தூர் சுப்பிரமணியம் அவர்களிடமும் பிற ஆசிரியர்களிடமும் கற்றவர்.சென்னையில் இசைக் கல்லூரியில் பணிபுரிந்த முடிகொண்டான் வேங்கடராம ஐயரிடமும் இசை கற்றவர்.

மார் அவர்களின் மூத்தமகன் சென்னையில் பிறந்தான்(1954 சூன்).இக்காலகட்டத்தில் தமிழகத்தின் பல ஊர்களுக்குச் சென்று தமிழர்களின் வாழ்க்கைமுறைகளை அறிந்தார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள நெப்பத்தூர் என்ற ஊரில்தங்கியிருந்தவர். இந்த ஊரில் மார் அவர்களின் பெயரில் நிலம் இருப்பதாகவும் அறியமுடிகிறது. தம்மைத் தஞ்சாவூர் பண்ணையார் எனவும் 'மிராசுதாரர்' எனவும் கூறுவதில் மகிழ்பவர். தம் காலத்தை இந்த ஊரில் போக்க மார் நினைத்ததாகவும் அறியமுடிகிறது. காரணம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அமைதியான வாழ்க்கை,இசைகேட்கும் வாய்ப்பு,கலைக்கோயில்களைக் கண்டு மகிழும் வாய்ப்பு உள்ளமை மார் அவர்களை இந்த ஊரில் தங்கச் செய்தது. ஆனால் யாது காரணமாகவோ இந்த ஊருக்கு மீண்டும் வந்து தங்கவில்லை, இது தமிழர்களுக்குப் போகூழேயாகும்.

1954 இல் இங்கிலாந்து சென்ற மார் தமிழ் விரிவுரையாளராக இலண்டன்பல்கலைக்கழகத்தில் உள்ள கீழைக்கலையியல் ஆப்பிரிக்கவியல் பள்ளியில் (School of Oriental and African Studies) 1955 இல் பணியில் இணைந்தார். தாம் பணிஓய்வுபெறும் 1992 செப்டம்பர் மாதம் வரை அங்குப் பணியில் இருந்தார். இங்குப் பணிபுரிந்தபொழுது தமிழ்மொழி,இலக்கியங்களைக்

கற்பித்ததுடன் தமிழிசையான கர்நாடக இசை, இந்தியக் கலைகள், தொல்லியல் துறை ஆய்வுகளில் கவனம் செலுத்தினார்.

1973 முதல் தொடர்ந்து இந்தியாவுக்கு வருகை தந்த மார் அவர்கள் பல பன்னாட்டுக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டவர்.பலரையும் இங்கிலந்திலிருந்து அழைத்து வந்து தமிழகத்தை அறிமுகப்படுத்தியதுடன் தமிழ்விரிவுரைகளைக் கேட்கவும் உதவியவர்.

கீழைக்கலையியல் ஆப்பிரிக்கப் பள்ளியில் பயின்ற இவர் மாணவி வழியாக இலண்டனில் உள்ள பாரதிய வித்தியா பவன் பற்றி அறிந்தார். அதன் பிறகு அந்த அமைப்பின் செயற்குழு உறுப்பினராகவும். பின்னாளில் பொதுச் செயலாளராகவும் பணிபுரிந்தார். இப்பணிக்காலங்களில் தென்னிந்தியா சென்று இந்தியக் கலை வளர்ச்சிக்குப் பாடுபட்டார். பாரதிய வித்தியா பவனில் கர்நாடக இசை பற்றிய கொள்கைகளைப் பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் விளங்கியவர்.

கீழைக்கலையியல் ஆப்பிரிக்கவியல் பள்ளியில் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் இவர் அறிவுரைஞராகத் தொடர்ந்து பணிபுரிகிறார். இவரிடம் தமிழ் குறித்த தொடக்கக்கல்வி கற்றவர்களும்,ஆய்வுப்பட்டத்திற்குப் பதிந்து ஆய்வுமேற்கொண்டவர்களும் பலராவர். இங்கிலாந்தில் தமிழ்குறித்த அடிப்படைக்கல்வி முதல் ஆய்வுப்படிப்புவரை உள்ளது.

இதற்குரிய பாடத்திட்டங்கள் வடிவமைத்தல்,தமிழ் ஆய்வு வளர்ச்சிக்கு உதவுதல் உள்ளிட்ட பணிகளில் முன்னின்றவர் மார் அவர்கள் ஆவார்.தமிழகத்திலிருந்து அறிஞர் பொற்கோ அவர்களை இலண்டன் பல்கலைக்கழகத்தில் தம்முடன் பணிபுரிவதற்கு அழைத்துச் சென்று இலண்டனிலும் தமிழகத்திலும் தமிழ்க்கல்வி,ஆராய்ச்சி வளர்ச்சியடைய விதை தூவியவர் அறிஞர் மார் அவர்கள் ஆவார்.

இலண்டனில் நடைபெறும் பரதநாட்டிய நிகழ்வுகளுக்குத் தலைமை தாங்கும் தகுதி படைத்தவர். மேடையில் பேசத் தொடங்கும்முன் வணக்கம் எனக் கை குவித்து விளிக்கும் அழகு தனியழகு ஆகும். நாட்டியத்தில் இடம்பெறும் அடவுகள் பற்றியும், பாடியவர்கள் குரல் சிறப்பு,தமக்குப் பிடித்த இராகம்,பின்னணி இசைக்கருவியிசையின் சிறப்புப் பற்றியெல்லாம் விரிவாக எடுத்துப்பேசும் ஆற்றல் உடையவர். நிறையப் படிப்பார். குறைவாகப் பேசுவார்.

இலண்டன் உலக நாடுகளின் தலைநகராக விளங்கிய பெருமைக்கு உரியது. ஆங்கிலேய ஆட்சி உலகம் முழுவதும் இருந்தபொழுது அந்தந்த நாடுகளுக்குத் தம் நாடு சார்ந்த அலுவலர்களை அனுப்பிவைத்தனர்.அப்பொழுது அந்த அலுவலர் தாம் செல்லும் நாட்டில் வழங்கும் மொழி,இனம்.பண்பாடு பற்றி அறிந்து செல்லும் முகமாகப் பல மொழிகளையும் கற்பிக்கும் வசதி இலண்டன் பல்கலைக்கழகத்தில் இருந்தது.

இந்திய,பாகித்தான், இலங்கைத்(சிலோன்) துறை என்னும் பெயரில் தொடக்கத்தில் ஒரு துறை அமைந்து அந்த அந்த நாடுகள்,மொழி பற்றிய கல்வியை வழங்கியது. அவ்வாறு பன்மொழி பயின்ற சூழல் படிப்படியாக இன்று தேய்ந்து வருகிறது.தமிழ்மொழியைத் தமிழர்கள் யாரும் அங்குப் படிப்பதில்லை. பிறமொழிக்காரர்கள்தான் தமிழ் படிக்கின்றனர். அவர்களுக்குப் பயன்படும் வகையில் கற்பித்தல், ஆய்வு முயற்சிகள் உள்ளன.இவற்றை வடிவமைத்து ஒழுங்குப்படுத்தியது மார் எனில் மிகையன்று. தமிழ்ப்பகுதியில் மார்,பொற்கோ இருந்து உருவாக்கிய பாடத்திட்டங்கள் அண்மைக்காலம் வரை பின்பற்றப்பட்டது. மார் அவர்களிடம் படித்தவர்களில் டேவிட் சுல்மான் (இசுரேல்) நிறைய ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்.

அமெரிக்கா,இங்கிலாந்து நாடுகளில் தமிழை முழுவதுமாக எழுத பேச,படிக்கத் தெரிந்தவர்களுள் மார் குறிப்பிடத்தகுந்தவர்.

மாரின் முனைவர் பட்ட ஆய்வேடான எட்டுத்தொகை பற்றிய நூல் The Eight Anthologies A Study in early Tamil Literature சென்னை ஆசியவியல் நிறுவனம் வெளியிட்டுள்ளது (1985). எட்டுத்தொகைகள் பற்றியதாக தலைப்பு இருப்பினும் புறநானூனு,பதிற்றுப்பத்து என்ற இரண்டு புற நூல்களில்தான்மாரின் கவனம் குவிந்துள்ளது. இந்த நூலில் சங்கக் கவிதையியல் பற்றி தொடக்கத்தில் ஆராயும் மார் தொல்காப்பியத்தில் நாம் பார்க்கும் மரபுவழிப்பார்வையை விட்டுவிட்டுப் புதிய பார்வையில் அதனைப் பார்த்து,புதிய தகவல்களைத் தந்துள்ளார்.

அதுபோல் புறநானூறு பற்றி அரிய செய்திகளைத் தரும் மார் ஆங்கிலம்வல்லாருக்கு உதவும் வகையில் தமிழின் சங்க இலக்கிய ஆய்வுகளைச்செய்துள்ளார். புறநானூறு நூலில் இடம்பெறும் திணை,துறை ஆய்வுகள் குறிப்பிடத்தக்கன. அரசர்களைப் பற்றிய தகவல்களும் சிறப்பு. பதிற்றுப்பத்தில் இடம்பெறும் சேரமன்னர்கள் பற்றிய தகவல்கள் சிறப்பிற்கு உரியன.இந்த நூலில்பல புதிய பார்வைகளை மார் வைத்துள்ளார்.இடைச்செருகல்கள் தமிழிநூல்களில் இடம்பெற்றுள்ளதை எடுத்துரைத்துள்ளார்.

இந்த ஆய்வேடு மேனாட்டு அறிஞர்களால் மேற்கோள்களாக எடுத்துக்காட்டும்தரத்தது. தாய்லாந்து நாட்டில் அரச பதவியேற்பு நிகழ்வில் தமிழ்ப் பயன்பாடுஎன்ற அவர்கட்டுரை(1969) கீ.ஆ.ஆ.பள்ளி இதழில் வெளிவந்துள்ளது. தாராசுரம் கோயில் கலைக்கூறுகள் பற்றி எழுதிய கட்டுரையும் இவர் கலையுணர்வு காட்டுவனவாகும்.

பேராசிரியர் மார் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான இந்திய அரசின் தாமரைத்திரு (பத்மசிறீ) விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலண்டனில் வாழ்ந்துவரும் பேராசிரியர் தமிழ் நினைவுகளில் அடிக்கடி மூழ்கி இன்றும் மகிழ்ந்து வருகிறார்.

(அறிஞர் மார் அவர்களைப்பற்றி இணையத்திலோ,நூல்களிலோ யான் அறிந்தவரை குறிப்புகள் இல்லை.பன்னாட்டு அறிஞர்களின் துணையுடன் இக்கட்டுரை உருவாகியுள்ளது. இக்கட்டுரை, படம் இவறை முழுமையாகவோ,பகுதியாகவோ,தழுவியோ பயன்படுத்துவோர் உரிய வகையில் இந்தப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது என்ற குறிப்புடன் வெளியிடுவது நன்று.

தமிழ்ஓசை நாளேட்டில் முதற்கண் வெளிவரும் இக்கட்டுரை உலகத்தமிழர்களின் பயன்பாட்டுக்கு உதவும் நன்னோக்கில் இணையத்தில் என்பக்கத்தில் வெளியிடுப்படுகிறது. சிலர் என் கட்டுரைகள்,படங்கள் இவற்றைக் கவர்ந்து தம்பெயரில் முழுமையாகவும் தழுவியும் தமிழக நாளேடுகள், மாதிகைகள்,கல்லூரி மலர்களில் வெளியிடுவதால் இக்குறிப்பு இங்கு இடப்படுகிறது. மீறிச்செய்வோர் பற்றி இனி கருணை காட்டாமல் இணையத்ததில் பதிவுகள் சான்றுடன் வெளியிடப்படும்)

நனி நன்றி:

தமிழ் ஓசை களஞ்சியம்,அயலகத் தமிறிஞர்கள் தொடர்-20, 08.02.2009

முனைவர் பொற்கோ(தமிழ்நாடு)

முனைவர் பசுபதி(கனடா)

முனைவர் நா.கண்ணன்(கொரியா)

முனைவர் நா.கணேசன்(அமெரிக்கா)

தமிழ்நாடன்(துபாய்)

காப்பாளர் பாரதிய வித்தியாபவன்(இலண்டன்)

சிவகுருநாதபிள்ளை(இலண்டன்)

தட்ஸ்தமிழ் நன்றி: http://muelangovan.blogspot.com/

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

lok-sabha-home

 
 
 

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more