For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை

By Staff
Google Oneindia Tamil News

விக்கிப்பீடியா என்பது ஒரு லாப நோக்கற்ற இணைய கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சித் திட்டம். இத்திட்டம் 2001ல் தொடங்கி இன்று 250 உலக மொழிகளில் செயல்பட்டு வருகிறது.

தமிழ் விக்கிப்பீடியா திட்டம் 2003ல் தொடங்கி 18,000+ கட்டுரைகளைக் கொண்டிருக்கிறது. ஆங்கிலம் போல் தமிழில் ஏராளமான தகவல் தளங்கள் இல்லை. தமிழ் விக்கிப்பீடியா மட்டுமே ஒரே ஒருங்கிணைந்த தகவல் தளமாக இருப்பதால், தமிழ் விக்கிப்பீடியாவை வளர்க்க வேண்டியது முக்கியம்.

இங்கு யார் வேண்டுமானாலும் தங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் கட்டுரை எழுதலாம். அவை உடனுக்குடன் கோடிக்கணக்கான உலகத் தமிழர்கள் பார்வைக்கு வரும். ஒரு நாளைக்கு 50,000+ மேற்பட்ட முறை தமிழ் விக்கிப்பீடியா பக்கங்கள் வாசிக்கப்படுகின்றன. குறைந்தது ஒரு லட்சம் விரிவான கட்டுரைகளாவது இருந்தாலே ஒரு குறைந்தபட்ச பயனை நல்க இயலும்.

தற்போது தமிழ்நாட்டு வெளியே உள்ள தமிழர்கள், குறிப்பாக இலங்கை மற்றும் உலகத் தமிழர்களே அதிகம் பங்களித்து வருகின்றனர். தமிழ் விக்கிப்பீடியாவுக்கு தமிழ்நாட்டினர் பங்களிக்க இருக்கும் மிகப் பெரிய தடைகள்:

* கணினியில் தமிழில் எழுதத் தெரியாமை.
* தமிழில் கோர்வையாக கட்டுரை எழுத இயலாமை.
* இணையம் குறித்த அடிப்படை அறிவின்மை. வலையில் எழுதும் பழக்கமின்மை.
* சரியான கணினி, இணைய வசதிகள் இல்லாமை.

எனவே இது குறித்த பயிற்சி, விளக்கக் கூட்டங்களை நடத்தி வருகிறோம்.

ஜூன் 13, 2009 அன்று சென்னை எல்டாம்ஸ் சாலையில் உள்ள கிழக்குப் பதிப்பகத்தில் தமிழ் வலைப்பதிவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தி கூட்டம் நடத்தினோம்.

இதில் தமிழ் விக்கிப்பீடியர்களான பன்னீர்செல்வம், ரவிசங்கர், சா. கணேஷ், அ. ரவிசங்கர் ஆகியோர் பங்கு கொண்டு விளக்கினர். தமிழ் வலைப்பதிவர்கள், பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள் முதலியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வை NHM நிறுவன மென்பொருள் பிரிவின் மேலாளர் K.S.நாகராஜன் முன்னின்று ஏற்பாடு செய்திருந்தார்.

ஜூன் 14, 2009 அன்று சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள F5ive Technologies நிறுவனத்தில் தமிழ் இணையத்துக்கும் விக்கிப்பீடியாவுக்கும் முற்றிலும் புதியவர்களுக்குப் பயிற்சி பட்டறை நடந்தது. இந்நிகழ்வை F5ive technologies நிறுவன உரிமையாளர் கிருபா முன்னின்று ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த இரு நிகழ்வுகளிலும் கணினியில் தமிழில் எழுதுவது தொடங்கி, விக்கிப்பீடியாவில் எப்படி ஒரு கட்டுரையை எழுதுவது தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

10 முதல் 20 பேர் அமரக்கூடிய வசதி, இணைய இணைப்புடன் கூடிய இரு கணினிகளை யார் ஏற்பாடு செய்து தந்தாலும், இது போல் தமிழகம், பிற மாநிலங்கள், உலகெங்கும் கூட இலவசமாக பயிற்சிப் பட்டறைகள் நடத்த தயாராக உள்ளோம்.

கூடுதல் விவரங்கள், தமிழ் விக்கிப்பீடியா தொடர்பான ஐயங்களுக்கு [email protected] என்ற மின்மடல் முகவரிக்கு எழுதுங்கள். அல்லது, 99431 68304 என்ற எண்ணுக்கு அழைத்தும் பேசலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X