For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று வீர வாஞ்சிநாதன் நினைவு தினம்

By Staff
Google Oneindia Tamil News

Veera Vanchi rememberance day
செங்கோட்டை: இந்திய சுதந்திரத்திற்காக தீரமுடன் போராடிய வீர வாஞ்சிநாதனின் நினைவு தினம் இன்று.

இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்த போது சுதந்திரத்திற்காக பல்வேறு தலைவர்கள் போராடினார்கள். அகிம்சை வழி, தீவிரவாத வழி என இரண்டு வழிகளிலும் சுதந்திர போராட்ட தியாகிகள் போராடினர். இந்த தியாகிகளில் வீர வாஞ்சி நாதனும் ஒருவர்.

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்த ரகுபதி, ருக்மணி தம்பதியினரின் மூத்த மகனாக பிறந்தவர் சங்கரன் என்ற வாஞ்சிநாதன். இவர் 10ம் வகுப்பு வரை செங்கோட்டையில் படித்தார். பின் உயர் கல்விக்காக அவர் திருவனந்தபுரம் ஸ்ரீமூலம் திருநாள் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு அவர் பிகாம் படித்தார்.

வனத்துறையில் வாஞ்சிநாதனுக்கு வேலை கிடைத்ததால் அவர் பிகாம் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு புனலூர் வனப்பகுதியில் வேலைக்கு சேர்ந்தார்.

ஆங்கிலேயர்களை விரட்ட தர்ம பரிபாலன சங்கம் அப்போது செயல்பட்டது. இச்சங்கத்தில் வாஞ்சிநாதன் இணைந்தார். தனது நண்பர்களுடன் சேர்ந்து வாஞ்சிநாதன் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட தீர்மானித்தார். இதற்காக அவர் விடுதலை வேட்கை கொண்ட புரட்சிக்கர கருத்துகளை கொண்ட புத்தகங்களை படித்தார்.

வாஞ்சிநாதன் தனது 22வது வயதில் மூன்னீர்பள்ளம் சீதாராமையர் மகள் பொன்னம்மாளை திருமணம் செய்தார். அப்போது நெல்லை மாவட்டத்தில் சுதந்திர போராட்டம் தீவிரமடைந்தது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா உள்ளிட்டோரை ஆங்கிலேய அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்களுக்கு சிறையில் பல்வேறு கொடுமைகள் இழைக்கப்பட்டது. இதனை அறிந்த மக்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கொததித்தெழுத்தனர்.

நெல்லையில் பொதுமக்கள் கூடி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க அப்போதைய கலெக்டர் டபிள்யூ ஆஷ் துரை உத்தரவிட்டதை தொடர்ந்து பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 4 பேர் இறந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆத்திரம் கொள்ள செய்தது.

இந்நிலையில் வனத்துறை பணிக்கு நீண்ட விடுப்பு போட்ட வாஞ்சிநாதன் தன் நண்பர்களுடன் சேர்ந்து ரகசிய கூட்டம் ஒன்றை குற்றாலம், புனலுர் வனப்பகுதியில் நடத்தினார். இதன்பின் 1911ம் ஆண்டு செங்கோட்டை சாவடி அருணாசல பிள்ளை வீட்டில் சித்திரை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் வாஞ்சிநாதன், சாவடி சொங்கலிங்கபிள்ளை, தர்மராஜ் ஐயர், ஜெகநாத ஐயர், அரிகர ஐயர், மகாதேவ ஐயர், அழகப்ப பிள்ளை, புனலூர் ராமசாமி பிள்ளை, எட்டயாபுரம் சுப்பிரமணியம், தென்காசி சிதம்பரபிள்ளை, கடையநல்லூர் சங்கர கிருஷ்ணையர், தூத்துக்குடி சுப்பையா பிள்ளை, முத்துகுமாரசாமி பிள்ளை, ஓட்டப்பிடாரம் மாடசாமி பிள்ளை, தஞ்சாவூர் நீலகண்ட பிரம்மசாரி பிள்ளை ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஆஷ்துரையை சுட்டு கொலை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனை யார் செய்யவேண்டும் என்பதற்கு சீட்டு குலுக்கி போடப்பட்டது. இதில் வாஞ்சிநாதன் பெயர் வந்தது. இதனையடுத்து வாஞ்சிநாதன் வனப்பகுதியில் தலைமறைவு வாழ்க்கை வாழத்துவங்கினார்.

மறுபக்கம் வாஞ்சிநாதன் மனைவி குழந்தை பெற்றெடுத்தார். ஆனால் அக்குழந்தை இறந்துவிட்டது. குழந்தையின் இறுதி சடங்கில் கூட வாஞ்சிநாதன் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் ஆஷ்துரை கொடைக்கானலுக்கு 1911ம் ஆண்டு ஜீன் 17ம் தேதி ரயிலில் புறப்பட்டு செல்வதாக வாஞ்சிநாதனுக்கு தகவல் கிடைத்தது. இதனை பயன்படுத்தி ஆஷ்துரையை தீர்த்து கட்ட வாஞ்சிநாதன் முடிவு செய்தார். அவருக்கு உதவியாக சாவடி அருணாசலப்பிள்ளையும் உடன் சென்றார்.

இருவரும் மணியாச்சி ரயில்வே ஸ்டேஷனில் ஆஷ் துரையை சுட்டு கொல்ல முடிவு செய்தனர். முதலில் வாஞ்சிநாதன் சென்று ஆஷ்துரையை சுடுவது என்றும் அம் முயற்சி பலிக்கவில்லை என்றால் சாவடி அருணாசலபிள்ளை அப்பணியை தொடர்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

ஆஷ்துரை பயணம் செய்த ரயிலில் வாஞ்சிநாதனும், சாவடி அருணாசல பிள்ளையும் சென்றனர். ரயில் மணியாச்சி ரயில்வே ஸ்டேஷனில் நின்றபோது இருவரும் துப்பாக்கியை மறைத்து வைத்து கொண்டு ரயில் பெட்டியில் இருந்து இறங்கி ஆஷ்துரை இருந்த பெட்டிக்கு சென்றனர்.

சாவடி அருணாசல பிள்ளையை வெளியே நிற்க சொல்லவிட்டு வாஞ்சிநாதன் முதல் வகுப்பு பெட்டியில் ஏறினார். அங்கிருந்த ஆஷ்துரையை பார்த்து வாஞ்சிநாதன் துப்பாக்கியால் சுட்டார். இதை கண்ட ஆஷ்துரை மனைவி சத்தம் போட்டார். துப்பாக்கி சத்தம் கேட்டதும் ரயில்வே பயணிகள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.

பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து வந்து ஆஷ்துரையை அதே ரயிலில் நெல்லை கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். வாஞ்சிநாதனை பாதுகாப்பு அதிகாரிகள் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் கையில் சிக்க எண்ணாது கழிவறைக்குள் சென்று தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது காலை 10.50 மணி. சாவடி அருணாசல பிள்ளை கூட்டத்தை பயன்படுத்தி அங்கிருந்து தப்பி சென்றார்.
ஆஷ் துரையை சுட்டு கொன்ற வாஞ்சிநாதன் வீரமரணம் அடைந்தது சுதந்திர போராட்ட வீரர்களிடையே உத்வேகத்தை அளித்தது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் குடும்பத்தினருக்கு ஆங்கிலேயே அரசு பல தொல்லைகளை அளித்தது. சில ஆண்டுகள் கழிந்து வாஞ்சிநாதன் பெற்றோர் இறந்தனர். அவரது மனைவி பொன்னம்மாள் வறுமையில் வாடினார். அவர் சென்னைக்கு சென்றார். வாஞ்சிநாதனின் தம்பி கோபாலகிருஷ்னனும் வறுமை காரணமாக சென்னைக்கு சென்றுவிட்டார்.

வறுமையில் சிக்கி தவித்த வாஞ்சிநாதன் குடும்பத்தினரை அப்போது யாரும் கவனிக்கவில்லை. பொன்னம்மாள் வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தினார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தியாகிகள் பென்சனுக்கு விண்ணப்பித்தார். ஆனால் அப்போதைய காங் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பென்ஷன் வருவதற்கு முன்னரே பொன்னம்மாள் மறைந்தும் போனார்.

இதுவரை மணிமண்டபம் இல்லை..

வீரவாஞ்சிநாதனுக்கு செங்கோட்டையில் நடுகல் அமைக்கப்பட்டது. அவருக்கு மணி மண்டபம் கட்ட செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் 8-8-1957 அன்று அப்போதைய முதல்வர் காமராஜர் அடிக்கல் நாட்டினார். ஆனால் அதன்பின் வந்த அரசுகள் இதுவரை வாஞ்சிநாதனுக்கு மணிமண்டபம் கட்டுவதை கண்டுகொள்ளவில்லை.

ஆண்டுதோறும் ஜூன் 17ம் தேதி வீரவாஞ்சிநாதனுக்கு செங்கோட்டையில் வீரவணக்கம் செலுத்தும் விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டும் வழக்கம் போல் வாஞ்சி இயக்கம் சார்பில் இன்று (17ம் தேதி) காலை 10.50க்கு வீரவாஞ்சி நாதனுக்கு வீரவணக்கம் செலுத்தும் விழா நடக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X