சுற்றுலா: சென்னைக்கு முக்கியத்துவம் தரும் மலேசியா-இறக்குமதி வரி ரத்து

இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு இதுவரை சுமார் 3 லட்சத்து 34 ஆயிரம் பேர் மலேசியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இதன்மூலம் மலேசியாவுக்கு சுமார் ரூ. 2 ஆயிரத்து 100 கோடி வரை வருமானம் கிடைத்துள்ளது. இந்நிலையில் மலேசியாவுக்கு வரும் இந்திய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை 6 லட்சமாக உயர்த்த மலேசிய சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது.
அந்நாட்டு சுற்றுலா துறை அமைச்சர் யென் யென் தலைமையிலான குழு இந்தியாவில் டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், மும்பை ஆகிய நகரங்களில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு, நேற்று சென்னை வந்தது.
அப்போது யென் யென் கூறுகையில்,
கோலாலம்பூருக்கு மலேசியன் ஏர்லைன்ஸ் சென்னையில் இருந்தும், ஏர் ஆசியா நிறுவனம் சென்னை மற்றும் திருச்சியில் இருந்தும் தினசரி விமான சேவையை செயல்படுத்தி வருகிறது. சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நோக்கத்தில் சென்னையில் இருந்து தினமும் மேலும் ஒரு ஏர் ஆசியா விமானத்தை இயக்க முடிவு செய்துள்ளோம்.
மலேசியாவை இந்தியர்களின் ஷாப்பிங் இடமாக மாற்றும் நோக்கத்தில் கடிகாரங்கள், அழகு பொருட்கள், எலக்ட்ரானிக் மற்றும் விளையாட்டு பொருட்களுக்கு ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளோம்.
ரூ. 17 ஆயிரத்துக்கு மலேசியாவில் 4 பகல், 3 இரவுகள் தங்கும் புதிய திட்டம் ஒன்றையும் அறிவித்துள்ளோம். மேலும் இந்திய பயணிகளுக்கு 24 மணி நேரத்தில் விசா கிடைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம் என்றார்.