For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 மணி நேரத்தில் 14 ஆபரேஷன்கள்-சர்ச்சையில் மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள்

By Staff
Google Oneindia Tamil News

மதுரை: மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மூன்று மணி நேரத்தில் 14 பேருக்கு மார்பக புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆனால் இந்த சாதனை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து மதுரை அரசு மருத்துவமனையின் முதல்வர் எஸ்.எம். சிவக்குமார் நிருபர்களிடம் கூறுகையில்,

நாட்டில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேரில் 30 பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். குறிப்பாக மார்பக புற்றுநோய் அதிகரித்து வருகிறது.

இதற்கு பல்வேறு சிகிச்சை முறைகள் இருந்தாலும் அறுவைச் சிகிச்சை முறையே சிறந்தது. ஆனால் கதிர் இயக்க சிகிச்சை மார்பக புற்றுநோயை எளிதில் குணமாக்க உதவுகிறது.

கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி மதுரை அரசு மருத்துவமனை புற்றுநோய் அறுவை சிகிச்சைப் பிரிவு டாக்டர் மோகன் பிரசாத் தலைமையில் 14 டாக்டர்கள் கொண்ட குழுவினர் 3 மணிநேரத்தில் 14 பேருக்கு மார்பக புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளனர். இது ஒரு உலக சாதனையாகும் என்றார்.

கண்டனம் - சர்ச்சை...

ஆனால் இந்த அறுவைச் சிகிச்சைகளை சாதனைக்காக செய்தது தவறு. டாக்டர்கள் மக்களின் உயிரோடு விளையாடியுள்ளனர் என்று புகார் கிளம்பியுள்ளது.

குறைந்த நேரத்தில் ஆபரேஷனை செய்து இருப்பதால் அது தரமான ஆபரேஷனாக இருக்க முடியாது. இப்படி செய்தது மருத்துவ விதிமுறைகளை மீறிய செயலாகும் என்றும் பல்வேறு தரப்பில் இருந்து புகார் வந்துள்ளது.

விசாரணைக்கு உத்தரவு...

இது தொடர்பாக தமிழ் நாடு மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் வினாயகம் கூறும் போது, இது கண்டனத்துக்குரியது நாங்கள் இதற்கு அனுமதி வழங்கவில்லை. எனவே இது பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டு இருக்கிறோம் என்றார்.

மாநில சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் கூறுகையில், இந்த ஆபரேஷனுக்கு அனுமதியும் வழங்கவில்லை. இதை அங்கீகரிக்க எந்த குழுவையும் அனுப்பி வைக்கவில்லை. நோயாளிகளின் உயிர் தான் எங்களுக்கு முக்கியம். நோயாளிகளின் உயிர் விஷயத்தில் ஆபத்தோடு விளையாடியதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.

இதேபோல தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், அகில இந்திய மருத்துவ கவுன்சில்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் பிரகாசம் கூறும்போது, இந்த சாதனைக்காக டாக்டர்களுக்கு விருது கொடுக்கலாம். ஆனால் நோயாளிகளை இதற்கு பயன்படுத்தியது தவறு என்றார்.

சென்னை அரசு மருத்துவமனை புற்று நோய் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் கூறும் போது, வேகமாக ஆபரேஷன் செய்தால் நாம் எதற்காக ஆபரேஷன் செய்கிறோமோ அது முழுமை பெறாது.

மார்பக புற்று நோய் அறுவை சிகிச்சையை பொறுத்தவரை சிறு ஆபரேஷன் என்றாலும் 1 மணி நேரம் ஆகும். சிக்கலான ஆபரேஷன் என்றால் 3 மணி நேரம் கூட ஆகும். குறுகிய நேரத்தில் இத்தனை ஆபரேஷன் செய்ததால் இது சரியாக அமைந்திருக்குமா என்ற கேள்வி எழுகிறது என்றார்.

விழிப்புணர்வுக்காக செய்தார்களாம்...

ஆனால் சாதனைக்காக இவ்வாறு செய்யவில்லை என்று மதுரை டாக்டர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை டாக்டர் மோகன்பிரசாத் கூறுகையில், மதுரை அரசு மருத்துவமனையில், ஆபரேஷன் செய்ய வேண்டிய அதிக நோயாளிகள் இருந்தனர். ஒரு நாளைக்கு 4 ஆபரேஷன் வரை செய்வோம். நான் 15 நாட்கள் விடுமுறையில் சென்று இருந்தேன். இதனால் கூட்டம் அதிகமாக இருந்தது. எனவே தான் ஒரே நேரத்தில் 14 பேருக்கு ஆபரேஷன் செய்தோம்.

மேலும் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த அறுவை சிகிச்சைகளைகளை செய்தோம் என்று கூறியுள்ளார்.

அதே போல இது கின்னஸ் சாதனைக்காக செய்யப்படவில்லை என்று நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X