For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதியின் கலை வாரிசு கனிமொழி- அன்பழகன்

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi and Kanimozhi
சென்னை: முதல்வர் கருணாநிதியின் கலை வாரிசாக கனிமொழி உருவெடுத்துள்ளார் என்று நிதியமைச்சர் பேராசிரியர் அன்பழகன் கூறினார்.

கனிமொழியின் 'சிகரங்களில் உறைகிறது காலம்' என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா சென்னையில் எழுத்தாளர் ஜெயகாந்தன் தலைமையில் நடந்தது. நூலை அன்பழகன் வெளியிட, மலையாள எழுத்தாளர் சக்கரியா பெற்றுக் கொண்டார்.

நூலை வெளியிட்டு அன்பழகன் பேசுகையில்,

இந்த நூலை நான் 2, 3 நாள் தொடர்ந்து படித்தேன். புதுக்கவிதை புரிந்து கொள்ள முடியாத காரணத்தால் அதை பழைய கவிதையாக மாற்றி படித்துப் புரிந்து கொண்டேன்.

பெரியார் புதிய எண்ணங்களை இயல்பான நடையில் எழுதுவார். அண்ணா தான் புதிய பரிணாமத்தை புகுத்தினார். அவரது புதிய பரிணாமத்தை மேலும் விரிவாக புதிய முறையாக்கிய பெருமை கருணாநிதிக்கு உண்டு.

அண்ணா விட்டுச் சென்ற அரசியல் இடத்தை மட்டுமல்ல, அவரது இலக்கியம், கலைக்கான இடத்தையும் பிடித்துக் கொண்டவர் கருணாநிதி. அண்ணாவைப்போல தமிழர்களின் இதயத்திலும் அவர் இடம் பிடித்துள்ளார்.

கருணாநிதியின் அரசியல் இடத்தைப் பெற தகுதியானவர்கள் இருக்கிறார்கள். அவரின் கலை, இலக்கிய இடத்தை யார் நிரப்புவார்கள் என்ற கவலை எங்களுக்கு இருந்தது. அந்த இடத்தை கனிமொழி பிடித்துள்ளார்.

திராவிட இயக்கத்தின் அடிப்படை சிந்தாந்தங்களை புதுப்புது சிந்தனையோடு கனிமொழி தனது படைப்புகளில் வழங்கியுள்ளார்.

எண்ணங்கள் மட்டுமல்ல கனிமொழியின் கவிதையின் வடிவமும் புதிது. அவரிடம் தனி கற்பனை வளம் உள்ளது. மாற்றுக் கட்சியினரும் பாராட்டும் அளவுக்கு அவரது படைப்புகள் உள்ளன.

ஜாதி ஒழிப்பு, பெண் அடிமை ஒழிப்பு, சுயமரியாதை என்று புதிய சமுதாய அடிப்படையை உருவாக்குவது தான் திராவிட இயக்க சித்தாந்தம். அதை சிந்திக்க தூண்டுகிற வகையில் கனிமொழி எழுதுகிறார்.

கனிமொழியின் கவிதை திறனுக்கு அவரது ஜீன்களும் ஒரு காரணம். அதனால் தந்தைக்கு மட்டுமல்ல பாட்டனாருக்கும் அவர் கடமைப்பட்டுள்ளார் என்றார் அன்பழகன்.

எழுத்தாளர் ஜெயகாந்தன் பேசுகையில், கனிமொழியின் "சிகரங்களில் உறைகிறது காலம்' என்ற கவிதை நூலை ஒரு மாதமாக திரும்ப திரும்ப படித்து வருகிறேன். படிக்க படிக்க யோசிக்கத் தூண்டுகிறது.

சிகரங்களில் உறைகிறது காலம் என்று தனது கவிதை நூலுக்கு கனிமொழி பெயரிட்டுள்ளார். திருவள்ளுவர், பெரியார், அண்ணா ஆகியோர் சிகரங்களாகத் திகழ்ந்தார்கள். இப்போது வாழும் சிகரமாக கருணாநிதி இருக்கிறார். கனிமொழியும் ஒரு சிகரமாக வாழ்த்துகிறேன் என்றார்.

ஏற்புரையாற்றிய கனிமொழி பேசுகையில், இந்த மேடையில் ஒரு கவிஞராக நின்று கொண்டிருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் பெற்றோர் தான். அந்த சுதந்திரத்தை எனக்கு அவர்கள் கொடுத்திருக்கிறார்கள். பெண்கள் சமூக சிக்கல்களை எழுதும் போது, அதுவும் அரசியலில் இருப்பவர்கள் எழுதும் போது அவை எத்தகைய சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது எனக்கு தெரியும்.

அப்படிப்பட்ட வலிகளை, அடிகளை தாங்கிக் கொண்டு, கருத்து சுதந்திரத்திற்கான அனைத்து கதவுகளையும் திறந்துவிட்டு, சுதந்திரம் வழங்கிய எனது தாய், தந்தைக்கு என் நன்றி. நான் நானாகவே இருக்க அவர்கள் என்னை அனுமதித்துள்ளார்கள். அதற்கு பெரிய மனோதைரியமும், மற்றவர் சுதந்திரத்தை மதிக்கக் கூடிய பண்பும் வேண்டும். அத்தகைய பண்பை பெற்றிருக்கிற பெற்றோரை நான் பெற்றிருக்கிறேன்.

எந்த சிந்தனையாளரும் திராவிட இயக்கத்தவராக இருந்தாலும் சரி, திராவிட இயக்கத்தவராக இல்லாதவரும் சரி திராவிட இயக்கத்தின் தாக்கம் இல்லாமல் எழுத முடியாது. பெரியார், அண்ணாவின் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு தான் கற்பனையோடு எழுத முடியும். அந்த இருவரின் வழியில் வந்த என் தந்தையையும் நான் உள்வாங்கிக் கொண்டு தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். என் எழுத்தில் மையமாக இருப்பது திராவிட இயக்கம் தான்.

எல்லாமே ஒன்று தான், நாடே ஒன்று தான் என்ற கருத்து இலக்கிய உலகில் விதைக்கப்பட்டுள்ளது. அதை வளரவிட்டால், நாம் யார், நம் தனித்துவம் என்ன என்பது தெரியாமல் போய்விடும். அந்த கருத்தை முறியடிக்க தொடங்கியது தான் திராவிட இயக்கம். நம்மை அடையாளம் காட்ட வேண்டி, தமிழர் உணர்வு, தமிழர் நிலை என்ன என்பதை எழுத்துலகமும், இலக்கியமும் சொல்ல வேண்டிய காலகட்டம் இது. அந்த பணியில் இருக்கும் பலரில் நானும் ஒருவளாக இருக்கிறேன். அப்படி எழுதிய தலைவர்களின் அடியொற்றி நானும் என் பணியை தொடர்வேன் என்றார்.

நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி, துணைவியார் ராஜாத்தி அம்மாள், துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கவிஞர் இளையபாரதி, பரத நாட்டியக் கலைஞர் அலர்மேல் வள்ளி, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன், சட்டப் பேரவை காங்கிரஸ் கொறடா பீட்டர் அல்போன்ஸ், வக்ஃப் வாரிய தலைவர் அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X