'கலைஞர் 87' புத்தகம்-செப்.1ம் தேதி வெளியீடு!
சென்னை: முதல்வர் கருணாநிதியின் 87வது பிறந்த நாளையொட்டி அவருடன் பழகிய பல்வேறு துறை சார்ந்தவர்களின் கருத்துக்கள் புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ம் தேதி வெளியிடப்படும் இந்த விழாவில் நிதியமைச்சர் அன்பழகன் வெளியிடுகிறார்.
தி.மு.க. 'எம்.பி.' வசந்தி ஸ்டான்லி, தொகுத்துள்ள இந்தப் புத்தகத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பா.ஜ.க.தலைவர் எல்.கே.அத்வானி, பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட 29 அரசியல் கட்சித் தலைவர்களும், பா.சிவந்தி ஆதித்தன், சோ, நக்கீரன் கோபால் உள்ளிட்ட பத்திரிகைத் துறை சார்ந்தவர்கள் 8 பேரும், மதுரை ஆதீனம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேராயர் எஸ்றா சற்குணம், அருட்தந்தை வின்சென்ட் சின்னதுரை ஆகிய ஆன்மிகவாதிகளும், ரஜினிகாந்த், ஏவி.எம்.சரவணன், அமிதாபச்சன், கமல்ஹாசன், கவிஞர் வாலி உள்பட திரைத்துறையைச் சேர்ந்த 17 பேர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் கருணாநிதியின் பழைய கால நண்பர்கள் 5 பேர், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, டாக்டர் பிரதாப் சி.ரெட்டி, விளையாட்டு வீரர்கள் விஸ்வநாதன் ஆனந்த், புதுக்கோட்டை சாந்தி, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 20 பேரும் இந்தப் புத்தகத்தில் முதல்வர் குறித்த தங்கள் அனுபவங்களை பகிர்ந்துள்ளனர்.
'கலைஞர் 87'- புத்தக வெளியீட்டு விழா சென்னையில் செப்டம்பர் 1-ந் தேதி மாலை 6 மணிக்கு மியூசிக் அகாடமி அரங்கில் நடக்கிறது. விழாவுக்கு, நிதி அமைச்சர் அன்பழகன் தலைமை தாங்கி, 'கலைஞர் 87' புத்தகத்தை வெளியிடுகிறார். முதல் பிரதியை புதுச்சேரி முதல்வர் வைத்தியலிங்கம் பெற்றுக்கொள்கிறார்.
முதல்வர் கருணாநிதி ஏற்புரை வழங்குகிறார்.