For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அம்பிகையில் உருவான சப்த கன்னியர்கள்

Google Oneindia Tamil News

Saptamatrikas
சப்தமாதாக்கள் அல்லது சப்தகன்னியர் வழிபாடு என்பது அம்பிகை வழிபாட்டின் அங்கமாகக் காணப்படுகின்ற கிராமிய தெய்வ வழிபாடு ஆகும். சக்தி அம்சத்தில் சப்த மாதர்கள் வழிபாடு சிறப்பிடம் பெறுகிறது.

கி.பி 510 ஆம் ஆண்டில் சப்தகன்னியர்கள் வழிபாடு சிறப்புற்று இருந்ததாக கல்வெட்டுக்களிலும், இலக்கியங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. சப்தகன்னியர்கள் எழு தாய்மார்கள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.

சப்தகன்னியர்கள் பிறந்த கதை

அண்ட முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க வேண்டி மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண் பெண் இணைவில் பிறக்காமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே இந்த சப்த கன்னிகைகள். அவர்கள் ப்ராம்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னிகைகள் சப்த மாதர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

நம் உடலோடு தொடர்பு கொண்டுள்ளவர்கள்

சப்தமாதர்களுக்கும் நம் உடலுக்கும் தொடர்பு உள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அவை : பிராம்மி தோலுக்கு தலைவி. மகேஸ்வரி நிணத்திற்கு தலைவி. கவுமாரி ரத்தத்திற்கு தலைவி. நாராயணி சீழிற்குத் தேவதை. வாராஹி எலும்பின் தெய்வம். இந்திராணி சதையின் தேவதை. சாமுண்டி நரம்பின் தலைவி.

ப்ராம்மி

அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் பிராம்மி. மேற்கு திசையின் அதிபதி.கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமாவாள். நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள். நான்கு முகங்கள், நான்கு கரங்கள். மஞ்சள் வண்ணம் பிடித்த வண்ணம். கமண்டலம், அக்ஷமாலையைப் பின்னிரு கரங்களில் ஏந்தி முன்னிரு கைகளில் அபயவரதம் காட்டுவாள். ருத்திராக்ஷ மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவள்.

மான் தோல் அணிந்திருப்பவள்.ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள். இவளது காயத்ரி மந்திரத்தை படிக்கும் மாணவர்கள் தினமும் ஜபித்து வந்தால்,ஞாபக மறதி நீங்கிவிடும். (அசைவம் தவிர்க்க வேண்டும். வீட்டிலும், வெளியிலும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.) ஐ.ஏ.எஸ்., வங்கிப்பணி, அரசுப்பணி முதலானவற்றிற்கு தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்.

வாராஹி

அம்பிகையின் பிருஷ்டம் பகுதியிலிருந்து உருவானவள் வராஹி. நமது பிருஷ்டம் பகுதி கழிவுகளை வெளியேற்றுவதும்,உடம்பைத் தாங்குவதும்,ஓய்வு தருவதும் ஆகும். இதன் சக்தியாக பன்றி முகத்தோடு காட்சியளிப்பவள். இவள் அம்பிகையின் முக்கிய மந்திரியாக விளங்குகிறாள். வராஹம் எனப்படும் பன்றியின் அம்சமானது விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றாகும். இவளுக்கும் மூன்று கண்கள் உண்டு. இது சிவனின் அம்சமாகும்.

அம்பிகையின் அம்சமாக பிறந்ததால், இவள் சிவன்,ஹரி,சக்தி என்ற மூன்று அம்சங்களைக் கொண்டவளாவாள். எதையும் அடக்க வல்லவள். சப்த கன்னிகைகளில் பெரிதும் வேறுபட்டவள். மிருகபலமும்,தேவகுணமும் கொண்ட இவள் பக்தர்களின் துன்பங்களை தாங்கிக் காப்பவள். பிரளயத்தில் இருந்து உலகை மீட்டவளாகச் சொல்லப்படுகின்றாள். எருமையை வாகனமாக உடையவள்.

கலப்பை, உலக்கை ஆகியவற்றைப் பின்னிரு கரங்களில் தாங்கி அபயவரதம் காட்டுவாள். லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும்.

மகேஸ்வரி

அம்பிகையின் தோளில் இருந்து உருவானவள் மகேஸ்வரி. ஈஸ்வரன் இவளது சக்தியால்தான் சம்ஹாரமே செய்கிறார். மகேசனின் சக்தி இவள். முக்கண் படைத்தவள். ஜடா மகுடத்துடன் காட்சியளிப்பாள். மான், மழு ஏந்தி, அபயவரதம் காட்டி நான்கு கரங்களுடன் இருப்பாள். தூய வெண்ணிறமே பிடித்த வண்ணம். வடகிழக்கு என்னும் ஈசானியம் திசையை நிர்வகித்து வருபவள்.

இவளை வழிபட்டால்,நமது கோபத்தைப் போக்கி சாந்தத்தை அளிப்பாள்.இவளது வாகனம் ரிஷபம் ஆகும். அம்பிகையின் இன்னொரு அம்சமாக போற்றப்படுகிறாள்.

இந்திராணி:

அம்பிகையின் பிறப்புறுப்பிலிருந்து தோன்றியவள் இந்திராணி. இந்திரனின் அம்சம். கற்பகமலர்களை கூந்தலில் சூடியவள். யானை இவளது வாகனம். சொத்து சுகம் தருபவர். உலகத்தின் சகல உயிர்களும் தோன்ற பெண் பிறப்புறுப்புதான் காரணமாக இருக்கிறது.

தன்னை வழிபடுபவர்களின் உயிரைப் பேணுவதும், அவர்களுக்கு நல்ல வாழ்க்கைத்துணையை அமைத்துத் தருவதிலும், மிகவும் தலைசிறந்த அதேசமயம் முறையான காமசுகத்தைத் தருவதும் இவளே!.

மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால், அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும், கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால், மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.

இந்திரனின் சக்தியான இவள் ரத்ன மகுடம் தரித்தவள். பொன்னிற மேனி உடையவள். நாற்கரத்தினள். சக்தி ஆயுதமும், வஜ்ராயுதமும் தாங்கி அபயகரம் காட்டுவாள். சத்ரு பயம் போக்குபவள். மாகேந்திரி என்ற பெயரையும் கொண்டவள்.

கௌமாரி

கவுமாரி. கவுமாரன் என்றால் குமரன். குமரன் என்றால் முருகக்கடவுள். ஈசனும், உமையாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் எனப்படும் முருகக்கடவுள். முருகனின் அம்சமே கவுமாரி.

இவளுக்கு சஷ்டி, தேவசேனா என்ற வேறு பெயர்களும் உண்டு. மயில் வாகனத்தில் வருபவள். அஷ்ட திக்கிற்கும் அதிபதி இவளே. கடலின் வயிறு கிழியுமாறு வேற்படையைச் செலுத்திய சக்தி இவள். இவளை வழிபட்டால், குழந்தைச் செல்வம் உண்டாகும். இளமையைத் தருபவர்

வைஷ்ணவி

அம்பிகையின் கைகளில் இருந்து பிறந்தவள் வைஷ்ணவி. இவள் விஷ்ணுவின் அம்சம். கருடனை வாகனமாக கொண்டவள். வளமான வாழ்வு தருபவர். சகல சவுபாக்கியங்கள்,செல்வ வளம் அனைத்தையும் தருபவளே வைஷ்ணவி. குறிப்பாக தங்கம் அளவின்றி கிடைத்திட வைஷ்ணவி வழிபாடு மிக அவசியமாகும்.

சாமுண்டி

ஈஸ்வரனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய பத்திரகாளியானவள், தனது கோரமான முகத்தை மாற்றி சாமுண்டியாக ஆனவள். இவள் தனது ஆறு சகோதரிகளுடன் சேர்ந்து தாருகன் என்ற அரக்கனை அழித்தாள்.

பதினாறு கைகள், பதினாறு விதமான ஆயுதங்கள், மூன்று கண்கள், செந்நிறம், யானைத் தோலால் ஆன ஆடையை அணிந்திருப்பவள். சப்தகன்னிகைகளில் முதலில் தோன்றியவள் இவளே! சப்த கன்னிகைகளில் சர்வ சக்திகளையும் கொண்டிருப்பவள். மனிதர்களுக்கு மட்டுமல்ல; தேவர்களுக்கே வரங்களை அருளுபவள் இவளே!

இவளை வழிபட்டால்,எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு,நமக்குத் தேவையான சகல பலங்கள்,சொத்துக்கள்,சுகங்களைத் தருவாள். இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது, இவளை அழைத்தால், புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு, முடியாததையும் முடித்துவைப்பாள்.

படைப்பு ரகசியம்

சப்த கன்னிகைகளின் சூட்சும படைப்பு ரகசியம் என்னவெனில்,பெண்ணின் சக்தியிலிருந்து பெண்மையாக உருவெடுத்தவர்கள். கன்னிகையாக இருப்பதற்குக் காரணம் மேலோட்டமாக மட்டுமே விளக்க முடியும். சப்த கன்னிகையின் ஸ்தானத்தை உணர விரும்புபவர்கள் தொடர்ச்சியாக ஐந்து வருடங்களுக்கு தினமும் இந்த சப்த கன்னிகைகளின் காயத்ரி மந்திரங்களில் ஏதாவது ஒன்றை ஜபித்துவந்தால் உணரலாம்.

மனதால் நினைத்தாலே அபயம் கிட்டும்

கன்னித்தன்மை (விர்ஜின்) என்பது உயிர்களை உருவாக்கி அளிக்கும் நிலைக்கு முந்தைய பவித்ரமான நிலை. கன்னித்தன்மை என்றால் மிகவும் தூய்மையான என்றும் ஒரு அர்த்தம் உண்டு.

கன்னித்தன்மையை தாய்மைக்கு இட்டுச்செல்லலாம். அதற்கு அனுமதி ஒவ்வொரு ஜீவனுக்கும் உண்டு. ஆனால்,கன்னித்தன்மையை களங்கப்படுத்தக் கூடாது. (அப்படி களங்கப்படுத்தினால் களங்கப்படுத்துபவனுக்கு மேற்கூறிய சப்தகன்னிகைகளின் வரங்களில் ஏதாவது ஒன்று மட்டுமாவதை இழந்தே ஆக வேண்டும் என்பது சாபம்) இவர்களின் அவதார நோக்கமும் தங்களுடைய முழுமையான சக்தியோடு விளங்கிடுதல் மற்றும் ஆண்மைசக்தி எனப்படும் சிவமூலத்தை துணையாகக் கொள்ளாததும் இவர்களின் சிறப்பாகும்.

சப்தகன்னியர்கள் பெண்களுக்கு மட்டுமல்ல;ஆண்களுக்கும் ஒரு பலமே!

சப்த கன்னியரை, அன்புடன் மனதால் நினைத்தாலே போதும். நம் அன்னையாக, உயிர் தரும் தோழியராக, அன்பும், அபயமும், அருளும் அற்புத தேவியர்.

English summary
In Hinduism, Saptamatrikas are the seven divine mothers and is often associated with Shiva and Shakti. The Saptamatrikas are Brahmani, Vaishnavi, Maheshwari, Kaumari, Varahi, Indrani and Chamundi. Stories about Sapta Matrikas are found in the Varaha Purana, Kurma Purana and the Mahabharata. Yogeshwari, a Shakti created by Shiva, is also mentioned among the Saptamatris and then the count becomes eight.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X