For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐப்பசி பவுர்ணமி- சிவாலயங்களில் அன்னாபிஷேகம்- லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Annabhishekam
ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. தஞ்சாவூர், கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய ஊர்களில் நடைபெற்ற அன்னாபிஷேகத்தை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து ஆலயத்தில் வழங்கப்பட்ட பிரசாதத்தை பக்தியுடன் உண்டனர்.

ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்படுகிறது. அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்தமாக சமைக்கப்பட்ட சாதத்தால் இறைவனை அலங்கரிப்பது இதன் சிறப்பம்சமாகும்.

பிரசாதத்தின் பெருமை

“அன்னம் பரப்பிரம்மம்" என்பர். உணவை இறைவனாகப் பார்க்கிறது ஆன்மிகம். உடலை வளர்ப்பதுடன், உள்ளத்தையும் வளர்ப்பது அன்னம் தான். இதனால் தான், ஐப்பசி பவுர்ணமி அன்று, சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடத்தப் படுகிறது. பிரசாதத்தை “ப்ர+சாதம்" என சொல்ல வேண்டும். “சாதம்" சாதாரண உணவு; “ப்ர" என்றால், கடவுள். அதுவே கடவுளுக்கு படைக்கப்பட்டு விட்டால், அதிலுள்ள தோஷங்கள் விலகி, “பிரசாதம்" ஆகி விடுகிறது. இதனால் தான், சிவனுக்கு அன்னாபிஷேகம் நடத்தி, உணவளித் தனர்.

தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்

தமிழ்நாட்டில் அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அன்னாபிஷேகம் பிரசித்தி பெற்றது. அங்குள்ள பெருவுடையாருக்கு நூறு மூடை அரிசி சமைத்து அபிஷேகம் செய்தனர். ஐப்பசி சதயத்தில் தான், ராஜராஜ சோழனுக்கு பிறந்தநாள் வருகிறது. அதை முன்னிட்டு, இந்த தர்மத்துக்கு அவன் ஏற்பாடு செய்திருக்கலாம். கால வெள்ளத்தில், இது எல்லா சிவாலயங்களுக்கும் பரவியிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

கங்கை கொண்ட சோழபுரம்

ராஜராஜசோழனின் மகனான ராஜேந்திர சோழனும் தன் தந்தையைப் போன்றே கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரம்மாண்டமான சிவாலயத்தை கட்டியுள்ளான். இங்குள்ள இறைவனுக்கும் பிரகதீஸ்வரர் என்ற நாமத்தையே சூட்டினான். இங்கு சோழர் காலத்தில் சிறப்பாக நடைபெற்ற அன்னாபிஷேகம், காலப்போக்கில் மறைந்து போனது. தற்போது, காஞ்சிப்பெரியவர் வழிகாட்டுதலின்படி மீண்டும் அன்னாபிஷேகம் நடந்து வருகிறது.

சுமார் பதின்மூன்றரை அடி உயரமும் அறுபது அடி சுற்றளவும் கொண்ட இந்த சிவலிங்கத் திருமேனிக்கு, 108 மூட்டை அரிசி அன்னமாக சமைக்கப்பட்டு அன்னா பிஷேகம் நடைபெற்றது. பின்னர் இறைவனுக்குப் படைக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட்டது. கங்கை கொண்ட சோழபுரத்தைச் சுற்றியுள்ள கிராமங்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் கூடி அன்னாபிஷேகத்தை தரிசித்து மகிழ்ந்தனர். இந்த அன்னாபிஷேக நாளன்று இறைவனைத் தரிசித்து பிரசாதத்தை உட்கொண்டால் உணவுக்கு பஞ்சம் ஏற்படாது என்பது அனைவரின் நம்பிக்கை.

அன்னத்தின் பெருமை

முனிவர் ஒருவர், ஒரு தேசத்தின் ராஜாவைச் சந்தித்தார். அவரை வரவேற்ற அவன், தனியறையில் தங்க வைத்து, சகல வசதிகளையும் செய்து கொடுத்து, சாப்பிட்டு விட்டுப் போகும்படி கட்டாயப்படுத்தினான்; முனிவர் மறுத்தார். இருப்பினும், நியமத்துடன் சமைத்துப் போடுவதாக வாக்களித்து, சமையலுக்கும் தனியாட்களை ஏற்பாடு செய்தான்; முனிவரும் சாப்பிட்டார். பலவகை உணவுகளால் வயிறு மந்தமாயிற்று; தூக்கம் வந்தது. சற்று நேரம் தூங்கி, பின் விழித்ததும், கண் எதிரே இருந்த சுவரில் ஒரு முத்துமாலை தொங்கியதைப் பார்த்தார். உள்ளே சென்ற உணவின் தாக்கமோ என்னவோ… அதை எடுத்து வைத்துக் கொண்டால் என்ன என்று முனிவருக்கு தோன்றியது. அதையெடுத்து தன் வஸ்திரத்தில் முடிந்து வைத்துக் கொண்டார்.

சற்று நேரம் கழித்து, ராஜாவிடம் விடைபெற்று, தன் ஆசிரமத்துக்குப் போய் விட்டார். அவர் சென்ற பிறகு தான், மாலை காணாமல் போன விஷயம் வெளிப்பட்டது. அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்தனர். அந்த அறைக்கு வந்து போன அப்பாவிகளுக்கெல்லாம் உதை விழுந்தது; ஆனால், அவர்களோ ஒரேயடியாக மறுத்தனர். முனிவர் மீது சந்தேகம் என்ற சிந்தனை கூட யாருக்கும் வரவில்லை. அவர் முற்றும் துறந்தவர் என்பதில் எல்லாருக்கும் முழு நம்பிக்கை.

அன்றிரவு, முனிவருக்கு வயிறு, “கடமுடா" என்றது; கடும் பேதி. வயிறு குறைய, குறைய மனசும் பழைய நிலைக்கு வந்து விட்டது. “அவசரப்பட்டு தப்பு செய்து விட்டோமே… விசாரணையில் அப்பாவிகளெல்லாம் அடி வாங்கியிருப்பரே… என்ன நடந்தாலும் பரவாயில்லை. ராஜாவிடம் இதை ஒப்படைத்து, கொடுக்கிற தண்டனையைப் பெற்றுக் கொள்வோம்" என்று சென்றார். ராஜாவிடம் உண்மையைச் சொல்லி, மாலையை ஒப்படைத்தார்
.
“யாரோ ஒருவன் இதைத் திருடி உங்களிடம் ஒப்படைத்திருக்கிறான். அவனைக் காப்பாற்ற நீங்கள் திருடியது போல் நாடகமாடுகிறீர்கள். நீங்களாவது, திருடுவதாவது…இதைக் கேட்கவே மனம் சகிக்கவில்லை…" என்றான் ராஜா.

அவ்வளவு நம்பிக்கை!

முனிவரோ, தன் கருத்தில் விடாப்பிடியாய் நின்றார்.

ராஜா அவரிடம், “நீங்கள் சொல்வது உண்மையாயினும், அதற்கும் ஒரு காரணம் இருந்திருக்க வேண்டுமே… அதுபற்றி ஏதாவது உங்கள் பேரறிவுக்கு புலப்படுகிறதா?" எனக் கேட்டான்.

“மன்னா… நேற்றைய உணவை சமைத்தது யார்? அதற்கு பயன்படுத்திய பொருட்கள் எந்த வழியில் வந்தன என சொல்…" என்றார்.

“சுவாமி… திருடன் ஒருவன் ஒரு அரிசிக் கடையை உடைத்து மூடையை தூக்கிச் சென்ற போது, பறிமுதல் செய்த அரிசி அது. அரிசிக்குரியவர் உரிய ஆவணம் தராததால், அரண்மனை கிட்டங்கியில் சேர்க்கப்பட்டது…" என்றான்.
“பார்த்தாயா… திருட்டு அரிசியை சாப்பிட்டதால், திருட்டு புத்தி வந்துள்ளது…" என்றார் முனிவர்.

“அப்படியே இருந்தாலும் கூட, அப்படி ஒரு அரிசியை சமைக்க காரணமான நான் தான் குற்றவாளி…" என்ற ராஜா, முனிவரை அனுப்பி விட்டான்.
உணவு பயிரிடும் விதம், பயிரிடுபவர், சமைப்பவர் இவற்றைப் பொறுத்தே சாப்பாட்டின் தரம் அமையும். அதைச் சாப்பிடும் போது, அந்த குணநலன்கள் மனிதனை தாக்கும். அதனால் தான், இறைவனுக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடுகிறோம். பயிரிடும் போதும், சமைக்கும் போதும், சாப்பிடும் போதும் நல்லதையே சிந்தித்தால், நாம் உண்ணும் உணவே பிரசாதம் ஆகிவிடும்.

English summary
Aippasi month is one of the auspicious Tamil months. Annabhishekam is performed at Lord Siva temples in the month of Aippasi. A large number of devotees offered worship to Sri Brahadeeswarar at Gangaikondacholapuram on Thursday on the occasion of ‘maha annabhishekam.’ About 100 bags of rice was cooked in a massive kitchen for the ritual. Special ‘pujas’ were performed in the evening to Sri Brahadeeswarar and Sri Brahanayaki.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X