For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொன்னி பொங்கல் மலர் கட்டுரைகள்

Google Oneindia Tamil News

Ponni
- முனைவர் மு.இளங்கோவன்

பொன்னி என்னும் இலக்கிய ஏடு புதுக்கோட்டையிலிருந்து 1947 இல் வெளிவந்தது. இந்த இதழ் பின்னர் சென்னையிலிருந்தும் வெளிவந்தது. புதுவையில் பிறந்து, தமிழ்க் கவிதைச்சிறப்பால் உலகத் தமிழர்களின் உள்ளங்களில் எல்லாம் இடம்பெற்ற பாவேந்தர் பாரதிதாசனையும் அவர் படைப்புகளையும் வெளியுலகிற்கு அறிமுகம் செய்யும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு இந்த இதழ் தம் இதழ்ப்பணியைச் செய்தது. இந்த இதழ் தமிழ்ப்பற்றுடன் எழுத வந்த பல இளம் எழுத்தாளர்களின் படைப்புகளையும் மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளையும் வெளியிட்டு ஊக்கப்படுத்தியது.

பொன்னி இதழின் ஆசிரியர் முருகு.சுப்பிரமணியன் ஆவார். பதிப்பாளர் அரு.பெரியண்ணன் ஆவார். முருகு சுப்பிரமணியன் புதுக்கோட்டையை அடுத்த கோனாப்பட்டு ஊரில் பிறந்த இளைஞர். அரு.பெரியண்ணன் ஆத்தங்குடியைச் சேர்ந்த இளைஞர். இருவரும் உறவினர்கள். இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் சுடர்விட்டுக் கிளர்ந்த தமிழ் உணர்வை இலக்கியநயம்கொண்ட படைப்புகளாக வெளிவர உதவியவர்கள் இந்த இளைஞர்கள் எனில் மிகையன்று.

பொன்னி இதழ் வெளியிட்ட ஆசிரிய உரைகளும். கட்டுரைகளும். கவிதைகளும். நாடகங்களும். தொடர்களும், சிறுகதைகளும், கருத்துப்படங்களும், நகைச்சுவைகளும், வண்ணப்படங்களும் தமிழக வரலாற்றில் நினைவுகூரத்தக்க பெருமைக்குரியன. மேற்கோள்காட்டும் தரத்தினையுடையனவாகும். பொன்னி இதழ் ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்ட பொங்கல் மலர்கள் குறிப்பிடத்தக்க ஆவணங்களாக வெளிவந்துள்ளன. இக்கட்டுரையில் பொன்னி வெளியிட்ட பொங்கல் மலரில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் குறித்த அறிமுகம் இடம்பெறுகின்றது.

பொன்னி இதழ் 1948, 49, 50, 53 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த நான்கு பொங்கல் மலர்கள் இங்கு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன(51,52 ஆம் ஆண்டுக்குரிய மலர்கள் கிடைக்கவில்லை). இந்த நான்கு மலர்களில் 1948 ஆம் ஆண்டு பொன்னி பொங்கல் மலரின் முகப்பு அட்டையில் ஐங்குறு நூற்றுப் பாடலுக்குத் தகுந்த காட்சி படமாக வரையப்பட்டுள்ளது (பாணர் முல்லை பாட… புதல்வனொடு பொலிந்ததே). 1949 ஆம் ஆண்டு வெளிவந்த பொங்கல் மலரில் சிலப்பதிகாரத்தின் மாதவி நாட்டியம் ஆடும் படம் இடம்பெற்றுள்ளது. 1950 ஆம் ஆண்டு பொன்னி பொங்கல் மலரில் பாவேந்தர் பாரதிதாசனின் சேரதாண்டவம் நூலில் இடம்பெறும் ஆதிமந்தி, ஆட்டனத்தி ஊஞ்சல் ஆடும் கவிதைக்காட்சிகளை நினைவூட்டும் படம் இடம்பெற்றுள்ளது. அதுபோல் 1953 ஆம் ஆண்டு பொங்கல் மலரில் ஐங்குறுநூற்றுப் பாடலுக்குத் தகுந்த படம் வரையபட்டுள்ளது (நின்னே போலும் மஞ்ஞை ஆல). பாவேந்தரின் பாடல்கள் மலரின் உள் பகுதிகளில் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தின் பிற இதழ்கள் புராண, இதிகாச, புனைந்துரைகளை நினைவுகூர்ந்து மலர் வெளியிட்டுக்கொண்டிருந்த சூழலில் தரம்செறிந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளைத் தாங்கி பொன்னி இதழின் பொங்கல் மலர்கள் வெளிவந்துள்ளன.

பெரியார், அண்ணா, கருணாநிதி, திரு.வி.க, பாவேந்தர் பாரதிதாசன், மு.வரதராசனார், அகிலன், கண்ணதாசன், க.அன்பழகன், தில்லை வில்லாளன், இளமைப்பித்தன், இராதா மணாளன், வாணிதாசன், கோவை இளஞ்சேரன், மு.அண்ணாமலை, விசு.திருநாவுக்கரசு, நாரா. நாச்சியப்பன், கோவைக்கிழார், கே.ஏ.மதியழகன், சத்தியவாணி முத்து, டி.கே.சீனிவாசன், சி.பி.சிற்றரசு, முத்து, க.அப்பாத்துரை ,ரா.தணலன், மெ.சுந்தரம், நா.பாண்டுரங்கன், டாக்டர் அ.சிதம்பரநாதன், நாரண. துரைக்கண்ணன், ஆசைத்தம்பி, ஏ.கே.வேலன், கமலா விருத்தாசலம், சுகி, உள்ளிட்டவர்களின் படைப்புகள் பொன்னி பொங்கல் மலரில் இடம்பெற்றுச் சிறப்பு சேர்த்துள்ளன.

தொன்னாப்பிரிக்கா உள்ளிட்ட பிறநாட்டுத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளும் பொன்னி பொங்கல் மலரில் இடம்பெற்றுள்ளன. பொன்னி இதழ் தமிழகத்தில் மட்டுமன்றித் தமிழர்கள் வாழ்ந்த பிற நாட்டிலும் படிக்கப்பெற்றுள்ளது. பொன்னியில் வெளிவந்துள்ள விளம்பரங்கள் அக்காலத்தில் புகழுடன் விளங்கிய நிறுவனங்களைப் பற்றி அறிவதற்குத் துணைசெய்கின்றன.

கட்டுரைகள்

பொன்னி பொங்கல் மலர் கட்டுரைகள் பல பொருண்மைகளைக் கொண்டுள்ளன. மொழி, இனம், அரசியல், பகுத்தறிவு, இலக்கியம், பெண்ணுரிமை, அறிவியல், மருத்துவம், புதினம், நாட்டு நடப்பியல் என்று பல பொருண்மைகளில் எழுதப்பெற்றுற்றுள்ளன. தமிழகத்தின் புகழ்பெற்ற இலக்கிய ஆளுமைகள் இதில் பங்களித்துள்ளனர். பொழுது போக்கு என்று இல்லாமல் அனைத்துக் கட்டுரைகளும் படித்துப் பயன்பெறத்தக்கனவாக உள்ளன. அந்தக் காலத்திற்கு அந்த நேரத்திற்கு என்று இல்லாமல் எதிர்காலத்திற்குரிய குறிப்புகளையும் கட்டுரைகள் தாங்கியுள்ளன. சமூக மேம்பாட்டுக்கான பல செய்திகள் கட்டுரையாளர்களால் முன்மொழியப்பட்டுள்ளன.

பொன்னி பொங்கல் மலரில் வெளிவந்துள்ள கட்டுரைகளுள் பெரியார் அவர்கள் எழுதியுள்ள “இதுதான் புராணம்” என்னும் கட்டுரை(1948) அந்த நாளில் மக்கள் புராண இதிகாசக் கதைகள் கொண்டு நடிக்கப்பட்ட நாடகங்கள், திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பதைக் கண்டிக்கிறது. என்.எஸ்.கிருஷ்ணன், இராதா போன்ற மக்கள் கலைஞர்களைப் பாராட்டி எழுதப்பட்டுள்ளது. இராமாயணம், நல்லதங்காள் கதை, சத்தியவான் சாவித்திரி கதை, குசேலர் கதை உள்ளிட்டவற்றை எடுத்துக்காட்டி, அறிவுக்குப் பொருந்தாத இக்கதைகளை நாடகமாக, திரைப்படமாக நடிப்பதால் மக்கள் ஆண்டுக்குப் பல கோடி ரூபாய்களை இழப்பதைச் சமூக அக்கறையுடன் காட்டுகின்றது.

அறிஞர் அண்ணாதுரை அவர்கள் “அவர் சென்ற பாதை” என்ற தலைப்பில் திராவிட இயக்கத்தின் தன்னிகரற்றத் தலைவராக விளங்கிய சர்.பிட்டி. தியாகராயரின் தியாக வாழ்க்கையை நினைவுகூர்கின்றது. “போர் முடிந்ததா?” என்ற தலைப்பில் மு.வரதராசனார் எழுதிய கட்டுரை தமிழாசிரியர்கள் மற்ற ஆசிரியர்களுக்கு இணையாக மதிக்கப்படாமல் இருந்த நிலையை எடுத்துரைத்து நமச்சிவாய முதலியார் போன்ற அறிஞர்களால் இந்த நிலை மாற்றப்பட்டது என்ற வரலாற்றைப் பதிவு செய்துள்ளது.

தமிழ் கற்ற அறிஞர்கள் பண்டிதர்கள் என்று பிற கல்வித்துறையாளர்களால் எள்ளி நகையாடப்பட்டதை எடுத்துரைத்துத் தமிழகத்தில் தமிழாசிரியர்கள் கடந்துவந்த பாதையை விளக்கியுள்ளது. இளவழகனார் எழுதிய “இளைஞருக்கு” என்ற கட்டுரை இளமைப் பருவத்தின் மேன்மையை எடுத்துரைத்து, செயற்கரும் செயல் செய்ய இளைஞர்களை ஆற்றுப்படுத்துகின்றது.

கா.அப்பாத்துரையார் எழுதியுள்ள திருவாங்கூர்த் தமிழகம் என்னும் கட்டுரை குறிப்பிடத்தக்க கட்டுரையாகும். கேரளம் தமிழர்கள் செறிந்து வாழ்ந்த பகுதி எனவும், கேரளமும் தமிழகமும் பிரிக்க முடியாத தொடர்புடைய பகுதிகள் எனவும் குறிப்பிடுகின்றது. பழந்தமிழகத்தின் கலைகள் பலவும் இன்றும் மலையாளத்தில் வழங்கப்படுவதை அப்பாத்துரையார் எடுத்துக்காட்டியுள்ளார். முருகு சுப்பிரமணியன் அவர்களின் தமிழ்ப்பாட்டு என்ற கட்டுரை தமிழிசை பற்றியும் தமிழிசை இயக்கம் பற்றியும் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.

வித்துவான் விசு.திருநாவுக்கரசு எழுதிய சிரித்த முல்லை என்ற கட்டுரை முல்லைநில மேன்மை ஒழுக்கத்தைக் குறிப்பிடுகின்றது.

மா.இளஞ்செழியன் எழுதிய “இந்திப் போர் முன்பு” என்ற கட்டுரை தமிழ் எழுச்சிக்குக் காரணமான இந்தி எதிர்ப்புப் பற்றிய வரலாற்றை நினைவுகூர்கின்றது. கோவை இளஞ்சேரனின் நடிப்புக்கு ராதா என்ற கட்டுரை எம்.ஆர்.இராதாவின் நடிப்பு பற்றியும் அவரின் நாடகங்கள் பற்றியும் செய்திகளைக் கொண்டுள்ளன. வரிச்சுவடி என்ற நா.மு.மாணிக்கத்தின் கட்டுரை தமிழ்க் கலைக்களஞ்சியத்தில் அரிச்சுவடிக்குத் தரப்பட்டுள்ள விளக்கத்தை மறுத்துத் தமிழ் விளக்கம் தருகின்றது.

தமிழக எழுத்தாளர்கள் என்ற நாரணதுரைக்கண்ணனின் கட்டுரை தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை மதிப்பிடுகின்றது. க.அன்பழகனின் வைதீகம் வளர்த்த பகை என்ற கட்டுரை தீண்டாமைக்குக் காரணமான வைதீகம் பற்றி பேசுகின்றது. அவன் இருக்குமிடம் என்ற தலைப்பிலான திருச்சி வீ.முனிசாமியின் கட்டுரை திருக்குறள் ஒன்றிற்கு விளக்கமாக அமைகின்றது. தாழ்த்தப்பட்டோர் கதி என்ற சுப.நாராயணன் அவர்களின் கட்டுரை தாழ்த்தட்ட மக்கள் சமூகத்தில் உயர்வதற்கான வழிகளைக் குறிப்பிடுகின்றது. இரா. நெடுஞ்செழியனின் “சொல்லேருழவர்” என்ற கட்டுரை பேச்சுக்கலையின் சிறப்பினைப் பேசுகின்றது.

1949 ஆம் ஆண்டு பொங்கல் மலரில் பெரியார் ஈ.வே.இராமசாமி அவர்களின் மதமும் கடவுளும் என்ற கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. பழங்காலத்தில் மதமும் கடவுளும் தோற்றம் பெற்றதைப் பெரியார் மிகச்சிறப்பாக விளக்கியுள்ளார். நிறைவில் இன்றைய மதமும் கடவுளும் அழிக்கப்பட்டேயாக வேண்டும் என்று அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். அரசியல் அமைப்பு அவை என்னும் தலைப்பில் எஸ்.முத்தையாவின் கட்டுரை உள்ளது. இதில் அரசியல் அமைப்பு குறித்த பல செய்திகள் இடம்பெற்றுள்ளன.

அறிஞர் அண்ணா எழுதிய “வெற்றிகொண்ட வேந்தர்” என்ற கட்டுரை தந்தை பெரியாரின் தியாக வாழ்க்கையை விளக்குகின்றது. “இரண்டும் வேண்டும்” என்ற இளவழகனாரின் கட்டுரையில் அன்பு, வீரம் என்ற இரண்டு பண்புகளும் வேண்டும் என்பதை இலக்கியச் சான்றுகளுடன் விளக்கியுள்ளார்.

“தினைப்புனத்தில்” என்ற வித்துவான் விசு.திருநாவுக்கரசின் கட்டுரை இலக்கிய இன்பம் தரும் வகையில் கலித்தொகைப் பாடல் ஒன்றை விளக்குகின்றது. “தமிழை அலங்கரிக்கும் சிற்பிகள்” என்ற தலைப்பில் அமைந்த கட்டுரை இருபதாம் நூற்றாண்டில் தமிழுக்கு உழைத்த அறிஞர்களின் பணிகளைப் படத்துடன் விளக்கியுள்ளது. “புரட்சிக்கவிஞர்” என்ற என்ற மு.வரதராசனாரின் கட்டுரை பாவேந்தரின் பாடல்களில் உள்ள புரட்சிக் கருத்துகளை எடுத்துக்காட்டி, அவர் ஒரு புரட்சிப் பாவலர் என்று மெய்ப்பிக்கின்றது.

விலைவாசி குறையுமா என்ற தியாகராசனின் கட்டுரை விலைவாசி உயர்வுகுறித்த சமூகக் கட்டுரையாக அமைகின்றது. கா.அப்பாத்துரையாரின் கட்டுரை தமிழ் இலக்கியச் சிறப்பு என்னும் தலைப்பில் அமைந்து சங்கம் பற்றியும், சங்க நூல்கள் குறித்தும் சிறப்பாக எடுத்துரைக்கின்றது. மக்கள் இயல்பு என்ற தலைப்பில் டர்பன் ச.மு.பிள்ளை என்பவர் எழுதியுள்ளார். “புதுமைப்பித்தனின் கடைசி இரவு” என்ற தலைப்பில் புதுமைப்பித்தனின் மனைவி கமலா விருத்தாசலம் எழுதியுள்ள கட்டுரை புதுமைப்பித்தனின் கடைசிநிமிட வாழ்வைக் கண்முன்கொண்டு வந்து நிறுத்தும் துயரக் கட்டுரையாக உள்ளது.

புதுமைப்பித்தனின் வாழ்க்கை முடிவை அவர் மனைவி துயரத்துடன் பதிவு செய்துள்ளமை இங்குக் குறிப்பிடத்தகுந்தது முரு.சேதுராமனின் காதல் என்ற கட்டுரை இலக்கியங்களில் இடம்பெறும் காதல் பற்றிய செய்திகளை எடுத்துரைக்கின்றது. ஏ.பி.ஜனார்த்தனம் எழுதிய தமிழ்த்தொண்டு என்ற கட்டுரை திராவிட இயக்கம் செய்த தமிழ்த்தொண்டை நினைவூட்டுகின்றது.

டி.கே.சண்முகம் அவர்களின் “கலைகள் உருப்பட” என்ற கட்டுரை நாடகக்கலை வளர்ச்சிக்குரிய வழிகளைச் சொல்கின்றது. பழ.இராமசாமி எழுதிய “கண்டுங் காணாதது” என்ற கட்டுரை அறிவியல் கட்டுரையாக அமைந்து அணுக்கள் குறித்த பல செய்திகளைத் தருகின்றது. மெ.சுந்தரத்தின் கட்டுரை கங்கையும் காவிரியும் என்ற தலைப்பில் அமைந்து இனகலப்பு பற்றிய செய்திகளை எடுத்துரைக்கின்றது. மா.இளஞ்செழியனின் மரணவரி என்ற கட்டுரை மரணம் குறித்த பல சிந்தனைகளை முன்வைக்கின்றது.

பத்திரிகை உலகம் என்ற நாரண.துரைக்கண்ணன் அவர்களின் கட்டுரைச் செய்தி ஏடுகளின் விதிமுறைகள், சமூகப்பொறுப்புகளை விவரிக்கின்றது. எஸ். சதாசிவத்தின் தமிழ்நாடு என்ற கட்டுரை தமிழகத்தின் இயற்கை அழகை வியந்து பேசுகின்றது. முன்னேறும் மனித இனம் என்ற ரா.தணலன் அவர்களின் கட்டுரை தனியுடைமை ஒழித்துப் பொதுவுடைமைக்கு மக்கள் தயாராகி வருவதை விளக்குகின்றது. ரகுநாதனின் இலக்கிய நேர்மை என்ற கட்டுரை தமிழகத்தில் நிகழும் இலக்கியத்திருட்டுகளை எடுத்துரைக்கின்றது. ஆ.சண்முகம் அவர்களின் மணியம்மையார் என்ற கட்டுரை மணியம்மையாரை அறிமுகம் செய்கின்றது. இரா.நெடுஞ்செழியனின் “நகைச்சுவை” என்ற கட்டுரை நகைச்சுவையுணர்வின் சிறப்பினை எடுத்துரைக்கின்றது.

1950 ஆம் ஆண்டுக்கான பொன்னி பொங்கல் மலரில் வெளிவந்துள்ள கட்டுரைகள் பலதரப்பட்டவையாக உள்ளன. “அந்த நாடகம்” என்ற தலைப்பில் அறிஞர் அண்ணா எழுதிய கட்டுரை உருசிய அறிஞர் அலெக்சாண்டர் கிரிபாயிடாவ் என்பவரின் எழுத்துப்பணியை அறிமுகம் செய்யும் கட்டுரையாகும். பிற நாட்டு வரலாறுகளை எடுத்துரைத்து, நம் நாட்டிலும் இதுபோன்ற திருப்பங்கள் ஏற்பட வேண்டும் என்று அறிஞர் அண்ணா செயல்பட்டுள்ளமையை அறியமுடிகின்றது. திரு.வி.கலியாணசுந்தரம் அவர்களின் இயற்கைக் கழகம் என்ற கட்டுரை இற்கைச் சிறப்பின் மேன்மையை எடுத்துரைக்கின்றது. நீதி நிர்வாகப்பிரிவினை குறித்த முன்னாள் அமைச்சர் முத்தையாவின் கட்டுரை நீதி நிர்வாகம் பற்றி எடுத்துரைக்கின்றது.

“மாறுதல் வேண்டாமா” என்ற கோவைக்கிழார் கட்டுரை சமூகத்தில் உள்ள தேவையற்ற மூடப்பழக்கவழங்கள் ஒழிக்கப்பட வேண்டும் அதனால் சமூகத்தில் மாற்றம் வேண்டும் என்று கூறுகின்றது. கா.அப்பாத்துரையார் எழுதிய கட்டுரை தமிழகமும் திராவிடமும் என்று அமைந்து தமிழ் திராவிடம் பற்றிய பல புரிதல்களைத் தருகின்றது.

“பிழை நீக்க எழுவீர்” என்ற தலைப்பில் அமைந்த முருகு சுப்பிரமணியத்தின் கட்டுரை தமிழில் பிழையின்றி எழுத வேண்டும் என்ற வற்புறுத்தலை முன்வைக்கின்றது. கே.ஏ.மதியழகனின் “முதல் லேடி டாக்டர்” என்ற கட்டுரை மருத்துவப்பணிபுரிந்த ப்ளாக்வெல் அம்மையாரைப் பற்றி எடுத்துரைக்கின்றது. பெண்கள் மருத்துவத் துறையில் பணிபுரிவதற்கு இருந்துவந்த தடையினை இந்தக் கட்டுரை எடுத்துரைக்கின்றது. சி.பி.சிற்றரசு எழுதிய “மதக்கோட்டையை முற்றுகையிட்ட மாவீரன்” என்ற தலைப்பில் அஞ்சா நெஞ்சன் அழகிரியின் பகுத்தறிவு வாழ்க்கையை எடுத்துரைக்கின்றது. ஒன்பது சுவை என்னும் கட்டுரை தமிழில் குறிப்பிடப்படும் ஒன்பான் சுவைகளைப் படத்துடன் விளக்குகின்றது. உண்மை வாழ்வு என்ற டர்பன் ச.மு. பிள்ளையின் கட்டுரை பகுத்தறிவு வாழ்க்கையை வாழ வேண்டுகின்றது.

“தமிழ்நாட்டு இளங்காளைகளே” என்ற எஸ். சதா சிவத்தின் கட்டுரை தமிழக இளைஞர்களுக்கு எழுச்சியையும் ஊக்கத்தையும் தரும் கட்டுரை. விதி என்ற ரா.தணலன் அவர்களின் கட்டுரை விதி என்ற பகுத்தறிவுக்கு ஒவ்வாத பழக்கத்தைக் கண்டிக்கின்றது. “மக்களாட்சி” என்ற க.அன்பழகனின் கட்டுரை உண்மையான மக்களாட்சி மலர வேண்டும் என்பதை எடுத்துரைத்து அன்றையா நாட்டு நடப்பைப் பதிந்துவைத்துள்ளது. “அன்றும் இன்றும்” என்ற மெ.சுந்தரத்தின் கட்டுரை பதிற்றுப்பத்துப் பாடலை எடுத்துக்காட்டி, இன்றைய நிலையை இணைத்துப் பேசுகின்றது. விசு.திருநாவுக்கரசின் மாயக்குறத்தி என்ற கட்டுரை குறவஞ்சி இலக்கியக் காட்சிகளை நினைவூட்டுகின்றது. டாக்டர் அ.சிதம்பரநாதன் அவர்களின் “மரபும் இலக்கிய வளர்ச்சியும்” என்ற கட்டுரை தமிழ் இலக்கியங்களின் மரபார்ந்த செய்திகளை விரித்துப் பேசுகின்றது.

ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் “சரித்திரம் திருத்தப்பட வேண்டும்” என்ற கட்டுரை தமிழக வரலாற்றைச் சரியாக எழுத வேண்டும் வேட்கையை முன்வைக்கின்றது. தமிழகர்கள் வடக்கிலிருந்து ஆரியர்களால் துரத்தப்பட்டவர்கள் என்ற கருத்தை மறுத்துரைக்கின்றது. தமிழில் நாவல்கள் என்ற நாரண துரைக்கண்ணனின் கட்டுரை புதினம் பற்றிய பல செய்திகளைப் பதிவு செய்துள்ளது. ஏ.கே.வேலனின் நாடகம் என்ற கட்டுரை நாடகத்தின் நிலையை விளக்கியுள்ளது. “காற்றைக் கையால் பிடிக்கமுடியுமா” என்ற பொ.திருஞான சம்பந்தன் கட்டுரை அறிவியல் கட்டுரையாக அமைந்துள்ளது. கமலா விருத்தசலத்தின் புதுமைப்பித்தன் கதைகள் என்ற கட்டுரை புதுமைப்பித்தன் படைப்பு பற்றிய பல உண்மைகளைப் புரிந்துகொள்ள உதவுகின்றது.

1953 ஆம் ஆண்டு பொன்னி பொங்கல் மலர் வடிவமைப்பில பல மாற்றங்களைக் கொண்டுள்ளது. முகப்பில் பொருளடக்கம் இடம்பெற்றுள்ளது. கவிதை கட்டுரைகளுடன் பேட்டிக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரை அவர்களின் கட்டுரை “தமிழக அரசியலும் தமிழரும்” என்ற தலைப்பில் அமைந்து தமிழ் ஆட்சிமொழி, தமிழ்க்கல்விமொழி, மொழிவழி மாநிலம் குறித்த சிந்தனைகளைப் பதியவைத்துள்ளது. கல்கி அவர்களைப் பூவை எஸ்.ஆறுமுகம் அவர்கள் நேர்காணல் செய்துள்ளதன் வழியாகக் கல்கி பற்றியும்,இலக்கிய நடப்பு குறித்தும் பல செய்திகளைத் தெரிந்துகொள்ள முடிகின்றது. பொங்கல் விழா என்ற நா.கி.நாகராசனின் கட்டுரை சோர்வகற்றும் திருநாள் எனப் பொங்கலைக் குறிப்பிடுவதுடன் சோர்வுக்கான காரணங்களையும் குறிப்பிடுகின்றது. டாக்டர் மு.வரதராசனாரின் “புறக்கணிப்பு” என்ற கட்டுரை சமூகத்தில் புறக்கணிப்பு எத்தகைய தீங்குகளை ஏற்படுத்தும் என்பதை நெறிப்பட விளக்குகின்றது.

லக்ஷ்மி எழுதிய “கருப்ப இசிவு” என்ற மருத்துவக்கட்டுரை பெண்களுக்குக் கருவுறுகாலத்தில் ஏற்படும் சிக்கல்களை எடுத்துரைத்து அவர்களுக்கு உதவும் பல செய்திகளைக் கொண்டுள்ளது. “பொற்காலம்” என்ற எஸ். சதாசிவத்தின் கட்டுரை அணுவின் ஆற்றலை நமக்கு எடுத்துரைக்கின்றது. சிவாஜி கணேசன் பேட்டிக்கட்டுரையில் சிவாஜியின் நடிப்புலக அனுபவம் பற்றிய பல செய்திகளை அறியமுடிகின்றது. கள்ளும் காமமும் என்ற பி.எல்.சாமியின் கட்டுரை வள்ளுவர் குறிப்பிடும் கள், காமம் பற்றிய செய்திகளை விரிவாக ஆராய்கின்றது.

பொன்னியில் கட்டுரை எழுதியவர்கள் பலரும் எழுத்தாளர்களாகவும், இலக்கியவாதிகளாகவும், அரசியல் தலைவர்களாகவும் விளங்கியவர்கள் ஆவர். இவர்களை ஒருங்கிணைத்து இலக்கியப் பணிபுரிந்த பொன்னியின் தரம் அதன் படைப்புகளால் நன்கு புலப்படுகின்றது.

நன்றி: http://muelangovan.blogspot.in

English summary
Ponni pongal malar articles were popular in Tamil literary circles once upon a time. Anna , Karunanidhi and other eminent writers have contributed to this literary magazine known for its Tamil pride.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X