For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாழப் பறக்கும் காக்கைகள்- 11 பனானா ஸ்டேட் நோக்கி ஒரு பயணம்

By Shankar
Google Oneindia Tamil News

-கதிர்

குற்றம் நடக்காத நாடு கிடையாது. என்ன மாதிரியான குற்றங்கள் நடக்கின்றன, குற்றவாளிகள் யார் என்பதை வைத்து அந்த சமூகம் எப்படிப்பட்டது என்பதை புரிந்து கொள்ளலாம். அங்கே சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் அரசு செயல்படுகிறதா என்பதை அறியலாம். அரசாங்கத்தின் அதிகாரம் செல்லுபடியாகாத நாடுகளை பனானா ரிபப்ளிக் என்று குறிப்பிடுவது வழக்கம்.

மாநிலங்களுக்கும் இது பொருந்தும். ஒரு காலத்தில் பிகார், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஊடகங்களால் அவ்வாறு அழைக்கப்பட்டன. தென்னிந்தியாவில் அதிகமான மக்கள் படித்தவர்கள், அரசியல் மற்றும் சட்டம் குறித்த விழிப்புணர்வு மிகுந்தவர்கள் என்பதால் இங்கே சட்டத்தின் ஆட்சியை அராஜகத்தால் சீர்குலைக்க முடியாது என்ற நம்பிக்கை இருந்தது.

நடக்கும் சம்பவங்கள் அந்த நம்பிக்கையைத் தகர்த்துவிடும் போலிருக்கிறது.

கோடம்பாக்கம் பள்ளியில் ஒரு மாணவன் தவறு செய்தான் என ஆசிரியர் தண்டிக்கிறார். அவன் அப்பாவுக்கு ஃபோன் போடுகிறான். திபுதிபுவென பல வாகனங்களில் அடியாட்கள் வந்து இறங்குகிறார்கள். யாரடா அந்த ஆசிரியன் என்று தேடுகிறார்கள். மாணவன் அடையாளம் காட்டுகிறான். ஆசிரியரை அடித்து துவைத்து குற்றுயிராக வீசிவிட்டு செல்கிறது கும்பல். அனைத்து மாணவர்கள், ஆசிரியர்கள் கண் முன்னால் நடந்த சம்பவம். போலீசில் புகார் கொடுத்தும் உடனடியாக எந்த நடவடிக்கையும் இல்லை. மாணவர்களும் ஆசிரியர்களும் மறியல் செய்கிறார்கள். முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியாது என்பது புரிந்தபின் 27 பேர் மீது வழக்கு பதிவு செய்கிறது போலீஸ். ஆனால் ஏவிவிட்ட புண்ணியகோடி கைதாகவில்லை.

‘என் மகன் தமிழில் பேசினான் என்பதற்காக ஆசிரியர் அவனை அடித்து உதைத்து கயப்படுத்தினார். நான் புகார் கொடுத்தேன். ஆனால் போலீஸ் அந்த ஆசிரியரை கைது செய்யவில்லை. பள்ளி மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக இந்தியாவில் அதிக வருமான வரி செலுத்தும் நபர்களில் ஒருவனான என் மீது கேஸ் போட்டு, என் கம்பெனி அதிகாரிகளை பொய் புகாரில் கைது செய்துவிட்டனர்' என்று சொல்லி முன் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுப் போடுகிறார். ஏமாற்றிப் பிழைக்க மட்டுமல்ல சட்ட்த்தின் பிடியில் சிக்காமல் தப்பவும் தமிழை ஆயுதமாகக் கையில் எடுப்பவர்கள் அதிகமாகி விட்டனர்.

இந்த ஆசாமி தமிழகத்தை உலுக்கிய காந்தப் படுக்கை மோசடியில் சம்பந்தப்பட்டவர்; பணத்தை வாரி இறைத்து அரசு உயர் அதிகாரிகளையும் போலீஸ் அதிகாரிகளையும் பாக்கெட்டில் போட்டிருப்பவர் என்று ஒன்றிரண்டு பத்திரிகைகள் மட்டும் துணிச்சலாக அடையாளம் காட்டின. மற்றவை வழக்கம்போல் மவுனம் காத்தன.

கோட்டூர்புரத்தில் ஒரு கோயிலுக்கு சொந்தமான 3 கிரவுண்ட் நிலத்தை ஒரு ஆசாமி ஆக்கிரமிக்கிறார். கட்டடம் கட்ட பூஜை போடுகிறார். அதிந்துபோன பக்தர்கள் போலீசில் புகார் கொடுக்கிறார்கள். வந்து பார்த்த காக்கிச் சட்டைகள், ‘அவரோடு மோதாமல் அட்ஜஸ்ட் செய்து போங்கள்' என்று மக்களுக்கு அட்வைஸ் செய்கின்றன. அவர்கள் அறநிலைய அதிகாரிகளை அணுகுகின்றனர். அவர்கள் ஆவணங்களைப் பார்வையிட்டு, 'இது அறநிலைய துறைக்கு சொந்தமான இடம். யாரும் அத்துமீறி பிரவேசிக்கக் கூடாது' என்று போர்டு நட்டு, வேலியிட்டு பூட்டுப் போட்டுச் செல்கின்றனர். அதையெல்லாம் நொறுக்கிவிட்டு, உள்ளே இருந்த கிணறையும் தூர்த்துவிட்டு, கட்டட வேலையை மீண்டும் தொடங்குகிறார் அபகரிப்பாளர். மக்கள் அ.நி.துறையிடம் ஓடுகின்றனர். அதிகாரி மாநகராட்சியில் புகார் கொடுக்கிறார். மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, கட்டட வேலையை உடனே நிறுத்த உத்தரவு போட்டு, அதை ஒரு எச்சரிக்கையாகவும் போர்டு எழுதி வைக்கின்றனர். அதையும் உடைத்து வீசிவிடு கட்ட வேலையை தொடர்கிறார் அபகரிப்பு ஆசாமி.

மக்கள் கோர்ட்டுக்கு போகிறார்கள். 'இப்படியெல்லாமா நடக்கிறது? மாநகராட்சி அதிகாரிகள் செய்ய வேண்டிய வேலையை எல்லாம் கோர்ட் சூப்பர்வைஸ் பண்ணிக் கொண்டிருக்க முடியுமா?' என ஆவேசப்பட்ட நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரியை ஆஜராகுமாறும், அபகரிப்பு ஆசாமிக்கு நோட்டீஸ் அனுப்புமாறும் உத்தரவு பிறப்பிக்கின்றனர். ஆசாமி பெயர் ரவி என்பதைத் தவிர அவரைப் பற்றி எந்த தகவலும் பின்னணியும் எந்த பேப்பரிலும் வரவில்லை.

பாண்டி பஜார், ரத்தன் பஜார், பர்மா பஜார் என்று நெருக்கடி மிகுந்த பல இடங்களிலும் கோர்ட் உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம், நடைபாதை கடைகளை அப்புறப்படுத்துகிறோம் என்ற பெயரில் நடவடிக்கை எடுக்கப்படும் ஒவ்வொரு முறையும் 24 மணி நேரத்தில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் தலைதூக்குகின்றன.

மீட்டர் போடாமல் ஓட்டும் ஆட்டோக்களை மடக்கிப் பிடித்து அபராதம் விதிக்கும் போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் போலீஸ் அதிகாரி பகிரங்கமாக மல்லுக் கட்டுகிறார்.

நியமனங்கள், பணியிட மாற்றங்கள் எதுவுமே விலையின்றி நடப்பதில்லை. கேமராவில் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட உயர் பதவிகளுக்கான இன்டர்வியூக்களில் நேரடியாகவே பேரம் நடப்பதாக செல்போனில் பதிவான காட்சிகள் சமூக ஊடகங்களில் வலம் வந்து பதைக்க வைக்கின்றன.

குறைந்தபட்சம் 25 சதவீத லஞ்சத்தை முன்பணமாகக் கொடுத்த பிறகுதான் கான்ட்ராக்டுகள் கைக்கு வந்து சேர்கின்றன என்று புள்ளி விவரங்கள், ஆதாரங்களுடன் நாளிதழில் செய்தி வெளியாகும்போது மறுப்பு சொல்ல அதிகாரிகள் முன்வருவதில்லை.

இத்தனை நூறு கோடிக்கு ரோடு போட்டிருக்கிறோம் என்று அரசு வக்கீல் பட்டியல் கொடுக்கிறார். எங்கெல்லாம் போட்டீர்கள், சொல்லுங்களேன் கேட்போம் என்கிறார் நீதிபதி. அ.வ மவுனம் சாதிக்கிறார்.

இலாகாக்கள் இடையே மோதல் இருந்தாலும் ஒரு அதிகாரிக்கு சட்டச் சிக்கல் ஏற்படும்போது மொத்த அதிகார வர்க்கமும் அவருக்கு பாதுகாப்பு அரணாக மாறிவிடுகிறது. அமைச்சர் பதவி வகித்தவர்கள் தண்டனைக்கு ஆளாவதைப் பார்த்த நம்மால் ஒரு அதிகாரி செய்த குற்றத்துக்காக தண்டனை அனுபவிப்பதைப் பார்க்கும் பாக்கியம் இன்னும் கிட்டவில்லை.

Kathir's Thaazha Parakkum Kaakkaigal -11

நூறு குழந்தைகளின் உயிரைக் குடித்த கும்பகோணம் பள்ளி தீ விபத்து என்றாலும் சரி, எழுபது பேர் உயிரை பலிவாங்கிய முகலிவாக்கம் அடுக்குமாடி கட்டட வீழ்ச்சி என்றாலும் சரி, உரிமையாளர்கள் நிர்வாகிகள் குற்றவாளிகள் என்று அடையாளம் காட்டி அரசுத் தரப்பு தண்டனை வாங்கித் தருகிறதே தவிர, விதிமுறைகளை மீறி அந்த கட்டடங்கள் கட்டவும் இயங்கவும் அனுமதித்த அதிகாரிகளில் ஒருவர்கூட நடவடிக்கைக்கு உள்ளாகவில்லை. தண்டனை அனுபவிக்கவில்லை. நீதிபதிகள் கேள்வி எழுப்பியபோது, இலாகாபூர்வமான விசாரணை நடப்பதாகச் சொல்லி சமாளித்தது அரசு.

எந்த முறைகேடு பற்றியும் எவரும் வாய் திறக்க முடியாமல் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஊர்வாயை மூடும் முயற்சிதான் தொடர்கிறது. பருப்பு இறக்குமதி செய்ததில் மூவாயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக வரும் தகவல்கள் குறித்து விசாரித்து அரசு வெள்ளை அறிக்கை தர வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி கேட்டதற்காக ராமதாஸ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு. தனியாரிடம் முட்டை வாங்குவது, மின்சாரம் வாங்குவது ஆகியவற்றில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து அரசுக்கு பல்லாயிரம் கோடி இழப்பு நேர்வதாக கட்சிகள் மற்றும் விஷயம் அறிந்த அமிப்புகள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. அவர்களுக்கும் எச்சரிக்கையும் மிரட்டலுமே பதிலாக தரப்படுகிறது.

அரசியல்வாதிகள் ஊழலின் உருவமாக மக்களால் பார்க்கப்பட்டாலும், உண்மையில் அவர்களைவிடப் பெரிய குற்றவாளிகள் ஊழலுக்கு வழி காட்டும் அதிகாரிகள்தான். அரசியல்வாதிகள் தவறு செய்தால் ஐந்தாண்டுக்கு ஒருமுறை மாற்றும் அதிகாரம் மக்களுக்கு இருக்கிற்து. ஆனால் அதிகாரிகளைத் தொடவே முடியாது. நேர்மையான ஒருசில அதிகாரிகள் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால் அவர்களை உடனடியாக பதவியில் இருந்து தூக்கியடிக்க இந்த ஊழல் அதிகாரிகள் ஒரே அணியாகச் செயல்படுகின்றனர்.

ஒரு காலத்தில் மிகுந்த மதிப்பு பெற்றிருந்தது ஐஏஎஸ், ஐபிஎஸ் பிரிவுகள். இன்று அந்த பெயர் அடியோடு அழிந்துவிட்ட்து. அதிகாரிகளில் பெரும்பான்மையினர் ஊழல்வாதிகள் ஆகி, பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளனர். எனினும் மொத்த சீரழிவுக்கும் அவர்கள் மட்டுமல்ல காரணம். அவர்களின் ஊழலை தடுக்காமல், குறைந்தபட்சம் அம்பலப்படுத்தக்கூட உதவாமல், தான் மட்டும் நேர்மையாக நடந்து, பொது மேடைகளில் மக்களுக்கு உபதேசம் செய்யும் அதிகாரிகளும் அந்த பொறுப்பில் இருந்து தப்ப முடியாது.

அரசு என்பது மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள், போட்டித் தேர்வுகள் மூலம் தேர்வான அதிகாரிகள், ஊழியர்கள், போலீஸ், கோர்ட் எல்லாமும் சேர்ந்ததுதான். ஒவ்வொரு பிரிவாக மக்களின் நம்பிக்கையை இழந்து வந்த நிலையில் நீதிமன்றம் இறுதிப் புகலிடமாக காட்சியளிக்கிறது. ஆனால் அங்கிருப்பவர்களும் சட்டம் மற்றும் நியாயத்தின் அடிப்படையில் எடுக்க வேண்டிய உறுதியான முடிவுகளை துணிச்சலுடன் எடுக்காமல் தள்ளிப்போடுவதும், பொறுப்பைத் தட்டிக் கழிப்பதும் ஆபத்தான போக்கு. பனானா ஸ்டேட் நோக்கிய பயணத்தின் கடைசி பஸ் ஸ்டாப் இதுதான்.

English summary
The 11th chapter of Kathir's Thaazha Parakkum Kaakkaigal analyses how bureaucracy spoils politicians and the whole system.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X