For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாழப் பறக்கும் காக்கைகள் - 24: காஷ்மீர்: பொருந்தா உறவா புதிய புத்தகமா?

By Shankar
Google Oneindia Tamil News

- கதிர்

தமிழ்நாடு சட்டசபை பலம் 234. ஆட்சி அமைக்க தேவையான மெஜாரிடி 118. அதிமுக 62. திமுக 56. மற்ற கட்சிகள் 116.

இரண்டு பெரிய கட்சிகளும் சேர்ந்து கூட்டணி அரசு அமைத்தால்..? சான்ஸே இல்லை என்கிறீர்களா. அதுதான் நடந்திருக்கிறது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்!

உண்மையில் அதிமுக - திமுக கூட்டணியை விடவும் அசாத்தியமானது மக்கள் ஜனநாயக கட்சி - பாரதிய ஜனதா கட்சி கூட்டணி.

திமுக, அதிமுக திராவிட கட்சிகள். ஒரே மரத்து கனிகள். அல்லது ஒ.கு.ஊ.ம. அவை பெரிய சித்தாந்த சிக்கலால் பிரிந்து நிற்கவில்லை. தலைவர்களின் தனிப்பட்ட அகந்தை மோதலின் விளைவு அந்த பிளவு.

ஜம்மு காஷ்மீரில் அப்படி அல்ல. காஷ்மீர் மக்களுக்கானது என்று பெயரிலேயே பிரகடனம் செய்யும் கட்சி பிடிபி. பாரத தேசத்தின் பிரஜைகளுக்கானது என்கிறது பிஜேபியின் திருநாமம். இந்திய அரசியலில் தேசியத்துக்கு மாற்றாக உதித்ததுதானே பிராந்தியம்.

பெயரளவில் முடியவில்லை வித்தியாசம். காஷ்மீர் என்ற வார்த்தையை மொத்த
மாநிலத்தையும் குறிப்பிட நாம் பயன்படுத்துகிறோம். நிஜத்தில் அது அந்த மாநிலத்தின் வடபகுதியை குறிக்கும். அங்கே வாழ்பவர்கள் மிகப் பெரும்பான்மையாக முஸ்லிம்கள். 96 சதவீதம்.

Kathir's Thaazha Parakkum Kaakkaigal- 24

கீழ் அல்லது தென்பகுதியான ஜம்முவில் இந்துக்கள் 65 சதவீதம். சீக்கியர்கள் 31. அவர்களும் இந்துக்களுக்கு இணையாக பார்க்கப்படுகிறார்கள். எனவே ஜம்முவின் முஸ்லிம் அல்லாதோர் எண்ணிக்கை 96 சதவீதம்.

மத அடிப்படையில் மாநிலத்தில் சச்சரவு ஏற்படக்கூடாது; இரு பகுதி மக்களும் இந்தியர் என்ற உணர்வோடு வளர வேண்டும்; வளம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியல் சாசனம் அவர்களை ஒற்றை மாநிலமாக அங்கீகரித்தது. ஆனால் அந்த கனவு நிறைவேறவில்லை.

ஆரம்பம் முதலே இரு தரப்பினரும் அவரவர் அணுகுமுறையில் உறுதியாக நின்றனர். அதனால் ஒருங்கிணைப்பு உருவாகவே இல்லை. டெல்லி, சென்னையில் இருந்து செல்பவர்களை ‘இந்தியாவில் இருந்து வருகிறீர்களா' என்று விசாரிக்கும் வழக்கம் காஷ்மீர் பகுதியில் உண்டு. படித்தவர்கள் நாசூக்காக கேட்பார்கள்.

அவர்களை பொருத்தமட்டில், இத்தகைய "இந்தியர்களை" விட நெருக்கமாக இருப்பவர்கள் எல்லைக்கோடுக்கு அப்பால் உள்ள மக்கள். பாகிஸ்தானியர் என நாம் அடையாளம் காண்பவர்களை அவர்கள் "காஷ்மீரிகள்" என்கிறார்கள். உ.பி.களாகவும் ர.ர.ளாகவும் மதிக்கிறார்கள்.

தமிழ்நாட்டு மக்களுக்கும் இலங்கை தமிழர்களுக்குமான உறவைப் புரிந்து கொள்வதில் மீதி இந்தியாவுக்கு இருக்கும் குழப்பம் போன்றதே இதுவும்.

ஏர் இந்தியா மகாராஜாவின் தலைப்பாகை போல் வரைபடத்தில் தெரியும் மொத்த ஜம்மு காஷ்மீர் மாநிலமும் நமது கையில் இல்லை. கிட்டத்தட்ட பாதி பாகிஸ்தான் வசம் இருக்கிறது.

மாநிலத்தின் வடகிழக்கில் அது ஆக்கிரமித்த பகுதிகளை சீனாவுக்கு தாரை வார்த்திருக்கிறது. ஆகவே, எல்லை என்று நாம் சொல்வது உண்மையில் எல்.ஓ.சி எனப்படும் கட்டுப்பாட்டு கோடுதான். அந்த கோட்டுக்கு அப்பால் வசிப்பவர்களை அந்நியர்களாக கருத மறுக்கும் காஷ்மீர் முஸ்லிம்கள் மனநிலையின் வரலாற்று பின்னணி இதுதான்.

ஜம்மு மக்கள் இதிலிருந்து அடியோடு மாறுபடுகிறார்கள். இந்துக்களாகவும் சீக்கியர்களாகவும் அடையாளம் காணப்படும் இவர்கள் இந்தியாவுடன் ஐக்கியமானவர்கள். டெல்லியை தேசிய தலைநகராக ஏற்றுக்கொண்டவர்கள்.

சுதந்திரத்துக்குப் பிறகு முதல்முறையாக இரு பிராந்தியங்களும் ஏறத்தாழ சம பலத்துடன் ஆட்சியில் பங்கேற்பது இப்போதுதான். பிடிபியும் பிஜேபியும் அமைத்துள்ள கூட்டணி அமைச்சரவையில் 13:11 என்ற விகிதத்தில் இலாகாக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.

காஷ்மீருக்கு முழு சுயாட்சி உரிமை கேட்கிறது பிடிபி. சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவையே அரசியல் சாசனத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்கிறது பிஜேபி.

தனித்தன்மையை காப்பதற்காக காஷ்மீரில் வேறு மாநிலத்தவர் குடியேற கூடாது என்பது பிடிபி நிலை. எல்லா இந்தியர்களுக்கும் அங்கே குடியேறவும் சொத்து வாங்கவும் சுதந்திரம் உண்டு என்பது பிஜேபி வாதம்.

Kathir's Thaazha Parakkum Kaakkaigal- 24

தீவிரவாதம் எது என்பதில்கூட இரு கட்சிகளுக்கும் தீவிரமான கருத்து வேறுபாடு உண்டு. பாகிஸ்தான் ஆட்டுவிக்கும் பயங்கரவாதிகள் என்று பிஜேபி சுட்டிக் காட்டுபவர்களை ‘வழி தவறிய காஷ்மீர் பிள்ளைகள்' என்கிறது பிடிபி.

ராணுவத்துக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிறது பிடிபி. அந்த அதிகாரம் இருப்பதால்தான் காஷ்மீர் இன்னும் இந்தியாவில் இணைந்திருக்கிறது என்று பிஜேபி நம்புகிறது.

இவ்வளவு அடிப்படையான வேறுபாடுகள் இருப்பதால்தான் முதல் இரு இடங்களைப் பிடித்தும் இக்கட்சிகள் கூட்டணி அரசு அமைக்க முடியமல் திணறின. இரண்டு மாதங்களாக இடைவிடாமல் பேசி, அவரவர் நிலையில் இருந்து சற்று நகர்ந்து நடுப்பாதைக்கு வந்தன.

சந்தேகமே இல்லை, இது சமரசம்தான். ஆனால் பிடிவாதத்தைத் தளர்த்தி கொள்கையில் சமரசம் செய்து கொள்வது கொடிய குற்றம் அல்ல. லட்சியங்களும் கொள்கைகளும் நல்லதுதான்.

அதே சமயம், சாத்தியங்களை ஆராய மறுத்து கண்களை மூடிக் கொள்வது அறிவுடமை அல்ல.

அடைந்தால் மகாதேவி அதில்லையேல் மரணதேவி என்பது சினிமாவுக்கு பொருத்தமான வசனம். மயிர் நீப்பின் உயிர்வாழா கவரிமான் என்பது இலக்கியத்துக்கு அழகு சேர்க்கும்

கற்பனை. அரசியல் என்பது சூத்திரங்கள் அடிப்படையிலான அறிவியல் அல்ல. அது சமூக மேம்பாடுக்கான உளவியல் கலை. அதில் சாத்தியங்களே பிரதானமானது.

நரேந்திர மோடிக்கும் முகமது சயீதுக்கும் நன்றாகவே தெரிந்திருக்கிறது அந்த உண்மை. வடக்கையும் தெற்கையும் இணைத்து விட்டோம் என்று 84 வயது முதல்வர் சொன்னதில் அது பிரதிபலிக்கிறது. இரு துருவங்களின் சங்கமம் என்று மோடி இன்னும் வெளிப்படையாக சொன்னார்.

‘மேற்கில் எப்படி சூரியன் உதிக்கும் என இனி நான் கேட்க மாட்டேன்' என்று காங்கிரஸ் தொடர்பாளர் மனீஷ் திவாரி சொன்னதுதான் டாப்.

பொருந்தாத இந்த உறவு எத்தனை நாள் தாக்கு பிடிக்கும் என்று காங்கிரஸ், தேசிய மாநாடு தொடங்கி கம்யூனிஸ்ட் வரை கட்சிகள் சந்தேகம் எழுப்புகின்றன.

பொறுத்திருந்துதான் பார்ப்போமே. வறட்டு பிடிவாதத்தை தள்ளிவைத்து விட்டு நடப்பதை கவனித்தால் தெளிவு கிடைக்கும்.

தேர்தல் அமைதியாக நடந்ததற்கு பாகிஸ்தானும் தீவிரவாதிகளும்கூட காரணம் என்று முப்தி முகமது கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நன்றி செலுத்தவே அவர் தயாராகி விட்டார்.

'காஷ்மீர் மக்கள், தேர்தல் கமிஷன், ராணுவம், இந்திய ஜனநாயகம் ஆகியவற்றை ஒரே அடியில் அசிங்கப்படுத்தி விட்டார் முதல்வர். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என எதிர்க்கட்சிகள் உதிக்கின்றன.

கட்சிகள் எந்த அளவுக்கு போலித்தனமாக செயல்படுகின்றன என்பதற்கு இன்னொரு உதாரணம் இது. மக்களையோ தேர்தல் ஆணையத்தையோ ராணுவத்தையோ அவர் எங்கே அவமதித்தார்? அவர்களின் மேலான பணிகளுடன் பாகிஸ்தான் அரசும் தீவிரவாதிகளும் இந்த தேர்தல் அமைதியாக நேர்மையாக நடக்க ஒத்துழைத்தார்கள் என்று சுட்டிக் காட்டினார்.

இதே ராணுவம், ஆணையம், மக்கள் எல்லாரும் இதற்கு முந்தைய தேர்தல்களின் போதும் இருந்தார்கள். பணி செய்தார்கள். ஆனாலும் குண்டுகள் வெடித்தன. பலிகள் நிகழ்ந்தன. சாவடிகள் சூறையாடப்பட்டன. ஓட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது. தற்கொலை தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்துவது பெரிய விஷயமா, என்ன?

ஆனால் இம்முறை அப்படி நடக்கவில்லை. ஆகவே தீவிரவாதிகளும் அவர்களை பின்னிருந்து இயக்கும் பாகிஸ்தான் ராணுவமும் கைகட்டி வேடிக்கைப் பார்த்தனர் என்பது மறுக்க முடியாத நிஜம்.

ஏன் அப்படி அமைதி காத்து தேர்தலுக்கு மறைமுகமாக ஒத்துழைப்பு தந்தார்கள் என்பது வெளிப்படையாக தெரியவில்லை. ஓரளவு ஊகிக்க முடியும்.

‘எங்களுக்கு நல்ல வெற்றி வாய்ப்பு இருக்கிறது. அதை கெடுத்து விடாதீர்கள்' என்று முப்தியின் பிடிபி கட்சியே தூது விட்டிருக்கலாம். தனிநாடு என்ற கோரிக்கையை மட்டும் தவிர்த்துவிட்டு பார்த்தால், தீவிரவாதிகளுக்கு கொள்கை அளவில் மிகவும் இணக்கமான கட்சி பிடிபி. அது அதிகாரத்துக்கு வந்தால் சர்வதேச மன்றங்களில் காஷ்மீர் பிரச்னை மீண்டும் மையத்துக்கு நகர வாய்ப்பு கிட்டலாம் என்று பாகிஸ்தான் ராணுவமும் தீவிரவாதிகளும் நினைத்திருக்கலாம்.

‘போதும் இந்த ஆயுதப் போராட்டம். உலகெங்கும் ஆயுதப் போராட்ட குழுக்கள் அரசுகளால் இரக்கமின்றி நசுக்கப்படுகின்றன. சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் சபையும் தலையிடத் தயாராக இல்லை. அமைதிக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்துதான் பார்ப்போமே' என்றுகூட சலிப்பின் அடிப்ப்படையில் தோன்றியிருக்கலாம்.

இருந்தால் அது இயல்பானது. பிரிவினை இயக்கத்தின் முன்னணி முகமாக ஒரு காலத்தில் உருவெடுத்த சஜ்ஜத் கனி லோனே ஜனநாயகப் பாதைக்கு திரும்பி, அடுத்தடுத்த இரண்டு தோல்விகளால் தளர்ந்து விடாமல் மீண்டும் போட்டியிட்டு ஜெயித்து, பிஜேபி புண்ணியத்தில் அமைச்சராகவும் பதவி ஏற்றிருக்கிறார். மன மாற்றத்தின் விளைவுதானே.

சிந்திக்க விரும்பாதவர்களின் மனம் மாறுவதில்லை.

காஷ்மீரில் இன்று நாம் காண்பது காம்ப்ரமைஸ் பாலிடிக்ஸ். இது காலத்தின் கட்டாயம்.

ஆறாண்டு ஆயுள் காலத்தை இந்த கூட்டணி வெற்றிகரமாகக் கடக்க முடிந்தால் இந்தியாவின் பொற்காலம் உயிர்த்தெழுந்து விட்டதாக உலகம் புரிந்து கொள்ளும்.

அந்த வகையில் காஷ்மீரில் எழுத தொடங்கியிருப்பது வரலாற்றின் புதியதொரு அத்தியாயம் அல்ல.

புத்தம் புதிய புத்தகம்!

(தொடரும்...)

English summary
The 24th Chapter of Kathir's Thaazha Parakkum Kaakkaigal discusses about the new govt formation in Jammu and Kashmir state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X