• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சினிமா விமர்சனம்: கொடிவீரன்

By Bbc Tamil
|

சில வாரங்களுக்கு முன்புதான் இந்தப் படத்தின் இணைத் தயாரிப்பாளர் தற்கொலைசெய்துகொண்டதால் தலைப்புச் செய்திகளில் பேசப்பட்ட திரைப்படம்.

நடிகர்கள்

சசிகுமார், பசுபதி, விதார்த், மஹிமா நம்பியார், சனுஷா, பூர்ணா, பாலசரவணன், விக்ரம் சுகுமாரன்

இசை

என்.ஆர். ரகுநந்தன்

இயக்கம்

முத்தைய்யா

கொடிவீரன் (சசிகுமார்) தங்கை பார்வதி (சனுஷா) மீது பெரும் பாசம் கொண்டவன். அதே ஊரைச் சேர்ந்த வெள்ளைக்காரன் (பசுபதி), அவனுடைய தங்கை (பூர்ணா) கணவர் அதிகாரம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்துவருகிறார் உள்ளூர் வட்டாட்சியர் (விதார்த்). இதனால், வட்டாட்சியரையும் அவருக்கு உதவும் அரசு வழக்கறிஞரையும் கொலைசெய்வதென முடிவெடுக்கிறான் வெள்ளைக்காரன். இதற்கிடையில் அந்த வட்டாட்சியருக்கு தன் தங்கையை மணம் முடித்துக்கொடுக்கும் கொடிவீரன், வட்டாட்சியரை விட்டுவிடும்படி வெள்ளைக்காரனிடம் கேட்கிறான். ஆனால் வெள்ளைக்காரன் தொடர்ந்து கொலை முயற்சிகளில் ஈடுபட, ஒரு சண்டையில் அதிகாரம் கொல்லப்பட, தங்கையின் சபதத்திற்காக கொடிவீரனையும் வட்டாட்சியரையும் கொல்ல முயற்சிக்கிறார் வெள்ளைக்காரன். ஆனால், தன் அண்ணன் எப்படியும் தன் கணவரைக் காப்பாற்றுவார் என உறுதியாக இருக்கிறார் பார்வதி.

தன் கணவருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதால் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஒரு பெண் தூக்கில் தொங்குவதை தத்ரூபமாகக் காட்டுவதில் துவங்குகிறது படம். அப்படித் தூக்கில் தொங்கும் பெண்ணுக்கு அதே நேரத்தில் குழந்தை பிறக்கிறது. இவ்வளவு கொடூரமான துவக்க காட்சி, சமீப காலத்தில் எந்தத் திரைப்படத்திலும் வந்ததாகத் தெரியவில்லை.

இதற்குப் பிறகு படம் முழுக்க, வெட்டு, குத்து, மொட்டையடித்தல், கொலை, பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட சடலங்களுக்கு சடங்கு, தாலி அறுப்பது, பழிவாங்குவதற்கான சபதங்கள் என நகர்கிறது படம்.

பல ஆக்ஷன் திரைப்படங்களில் இப்படி வெட்டு, குத்து, பதிலுக்குப் பதில் கொலைகள் என்று இருப்பது வழக்கம்தான். ஆனால், வேறு படங்களில் இப்படி இறுதிச் சடங்குகளையும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட சடலங்களையும் அடிக்கடி காட்டி அதிர்ச்சி ஏற்படுத்தியதாக நினைவில் இல்லை.

தன் கணவனை இழந்தை பெண்ணுக்கு ஊரே சேலை வாங்கிப் போடுகிறது. இந்தக் காட்சியில் அண்ணனும் சேலை வாங்கிப் போட, ஆட்டுத் தலையை வெட்டியதுபோல எதிரியின் தலையை வெட்டச் சொல்கிறாள் தங்கை. மற்றொரு காட்சியில் அண்ணன், தங்கையிடம் தாலி அறுக்கச் சொல்கிறான். அதேபோல, கொடிவீரனின் தங்கையும் தாலி அறுக்க வேண்டுமென சபதம் கேட்கிறாள் தங்கை. எவ்வளவு நேரம்தான் இதுபோன்ற காட்சிகளைத் தாங்க முடியும்?

அதற்குப் பிறகு சசிகுமாருக்கான பஞ்ச் வசனங்கள். "அவன் கொடி வீரன் இல்ல, குலத்துக்கே வீரன்", "இந்த ஊரு எங்க அண்ணன் ஆடிப் பாத்திருக்கு, அடிச்சுப் பார்த்ததில்லையே", "தப்புப் பண்ணினா கண்ணன் வருவானோ இல்லையோ, எங்க அண்ணன் வரும்", "எங்க அண்ணன் எவன் எதுக்கயும் வர்றவன் இல்ல, எவனையும் எதிர்க்க வர்றவன்" என்று சசிகுமாரின் தங்கையும் ஊர்க்காரர்களும் பஞ்ச் வசனங்களைப் பேசுகிறார்கள். இது பரவாயில்லை என்று பார்த்தால், அஜீத் படங்களைப் போல வில்லனாக வருபவரும் "நீங்க நினைச்சவுடனே செய்ய அவன் ஆயிரத்தில ஒருத்தன் இல்ல, ஆயிரம் பேரு சேர்ந்த ஒருத்தன்" என்று ஹீரோவின் புகழ் பாடுகிறார்.

இதற்கு நடுவில் சோகப் பாட்டு, தத்துவப் பாட்டு, டூயல் என பல பாடல்கள்.

படத்தில் அரசு வழக்கறிஞர் ஒருவர் நடுரோட்டில், சிறையிலிருந்து வருபவரால் கொல்லப்படுகிறார். அதற்குப் பிறகும் காவல்துறையும் அரசும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. வட்டாட்சியர் உயிருக்கு பல முறை குறிவைக்கப்படுகிறது. அதையும் அவர் சொந்தமாகத்தான் சண்டைபோட்டுத் தீர்த்துக்கொள்கிறார்.

இந்தக் களேபரத்திற்கு நடுவில் கதாநாயகன் - கதாநாயகி இடையிலான காதல் பெரிதாக எடுபடவில்லை.

படத்தில் நடித்திருப்பவர்களின் நடிப்பில் எந்தக் குறையும் சொல்ல முடியாது. குறிப்பாக சனுஷா, மஹிமா நம்பியார், பூர்ணா, பசுபதி ஆகியோருக்கு குறிப்பிடத்தக்க படம்.

இந்தப் படத்தின் இயக்குனர் முத்தைய்யா, ஏற்கனவே குட்டிப் புலி, மருது, கொம்பன் என ஒரு சமூகம் சார்ந்தே படம் எடுத்தவர். இந்தப் படத்திலும் அந்தக் கோணம் உண்டு.

இந்தப் படத்தின் பாராட்டத்தக்க அம்சம், படத்தின் ஒளிப்பதிவு. கிடாரி படத்தின் மூலம் கவனத்தைக் கவர்ந்த எஸ்.ஆர். கதிர் இதிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

பிற செய்திகள் :

BBC Tamil
 
 
 
English summary
Sasikumar’s village drama Kodiveeran is hitting the screens this week. Here is the film review

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X