For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கலாமின் மனித நேயம்

By Staff
Google Oneindia Tamil News

குடியரசு தலைவர் அப்துல் கலாம் கடந்த அக்டோபர் 17ம் நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைநிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.

மத்திய அரசிடம் நிலுவையில் இருந்த மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களை நிராகரிக்கப்பரிந்துரைத்து மத்திய உள்துறை அமைச்சகம் குடியரசு தலைவருக்குக் கோப்பு அனுப்பியது.

குடியரசு தலைவர் அம்மனுக்களை மறுபரிசீலனை செய்யுமாறு உள்துறை அமைச்சகத்துக்குக் குறிப்பு எழுதிஅம்மனுக்களைத் திருப்பி அனுப்பினார்.

மீண்டும் உள்துறை அமைச்சகம் தனது முடிவை மாற்றிக் கொள்ளாமல் குடியரசு தலைவர் அம்மனுக்களைநிராகரிக்கத்தான் வேண்டுமென அவரிடம் அனுப்பியது.

வரலாற்றிலே இல்லாத வகையில் இரண்டாவது முறையும் குடியரசு தலைவர் அக்கோப்பில் கையெழுத்திடமறுத்ததோடு, ""இந்த மனுக்கள் யாவும் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளன.

மரண தண்டனைக் கைதிகளைக் கருணை அடிப்படையில் பரிசீலனை செய்து அவர்களை வாழ வழி செய்வதற்கானமுயற்சியில் ஈடுபட வேண்டும். அவர்களுக்குக் கவுன்சிலிங் நடத்தி ஆன்மீக வழிகாட்டு நெறிகளைப் போதிக்கவேண்டும்.

இது போன்ற கைதிகளைச் சுமையாகக் கருதாமல் மனித சொத்தாக பாவித்து நல்வழிப்படுத்த அரசு முயலவேண்டும்.

இது போன்ற கைதிகள் இனி இந்த உலகில் வாழும் எஞ்சிய நாட்களைத் தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வாழஅனுமதிக்க வேண்டும் என்று மனித நேயத்தோடு குறிப்பிட்டுள்ளார்.

1962-67ம் ஆண்டுகளில் குடியரசு தலைவராக இருந்த சர்வே பள்ளி இராதா கிருஷ்ணனும் மரண தண்டனைக்குஎதிராகவே இருந்தார். அவரின் பதவிக் காலத்தில் அவரிடம் அளிக்கப்பட்ட கருணை மனுக்களை மத்திய அரசின்பரிந்துரைக்காக அனுப்பாமல் நிறுத்தி வைத்தார்.

ஆனால் தற்போதைய குடியரசு தலைவர் அப்துல் கலாம் இராதா கிருஷ்ணனை விட ஒரு படி மேலே சென்று மரணதண்டனை கூடாதென வெளிப்படையாக தனது கருத்தை கூறியிருக்கிறார். அதோடு இதுகுறித்துநாடாளுமன்றத்தில் பொது விவாதம் நடத்தி முடிவெடுக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார்.

குடியரசு தலைவரைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் ஒய். கே. சார்வால்,இந்து நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் மரண தண்டனைக்கு எதிரான கருத்தை அழுத்தமாகவெளியிட்டிருக்கிறார்.

""சட்டத்தை காக்கும் பொறுப்பில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதியாக, எனக்கு முன் சட்டத்தின் படி மரணதண்டனை விதிப்பதற்குத் தகுந்த வழக்குகள் வரும் தருணங்களில் நான் எனது தனிப்பட்ட கருத்துகளை அங்குபுகுத்த முடியாது.

மரண தண்டனை, சட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் வரையில் நான் மரண தண்டனை விதிக்க முடியாது எனக்கூற முடியாது. ஆனால் தனிப்பட்ட முறையில், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இல்லாமல், ஒரு சாதாரணக்குடிமகனாக, நம் நாட்டில் மரண தண்டனையே இருக்கக் கூடாது என்றே நான் கருதுகிறேன்.

அதற்கு மாற்றாக, முழு வாழ்நாளும் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனக் கூறலாம். ஐரோப்பாமுழுவதிலும் மரண தண்டனை கிடையாது.

அமெரிக்காவின் பல மாகாணங்களில் மரண தண்டனை கிடையாது. இன்னும் வேறு பல நாடுகளிலும் மரணதண்டனை கிடையாது. இது ஒரு சமூக அரசியல் சிக்கலாகும் என்று மிகச் சரியாகவே குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மரண தண்டனை குறித்த விவாதம் மீண்டும் எழுந்திருக்கிறது. பல்வேறு தரப்பினரும்,குறிப்பாக மனித உரிமை ஆர்வலர்கள், குடியரசு தலைவருக்கு நன்றி கூறியும், இந்தியாவிலிருந்து முற்றிலுமாகமரண தண்டனையை ஒழிக்க வற்புறுத்தியும் அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர்.

மரண தண்டனை குறித்த எதிர்ச் சிந்தனைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே வெளிப்படத் தொடங்கிவிட்டன.இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மரண தண்டனைக்கு எதிரான கருத்துகள் மேற்கத்திய நாடுகளில் மிகப்பரவலாக வெளிப்பட்டன.

குறிப்பாக பிரெஞ்சு எழுத்தாளர் ஆல்பர்ட் காம்யூ மரண தண்டனையை எதிர்த்து எழுதிய "தி கில்லடின்" எனும் சிறுநூல் இன்றளவும் மரண தண்டனைக்கு எதிரான ஒரு முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது.

இந்தியாவிலும் மனித உரிமை ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும் கூட அவ்வப்போது மரண தண்டனைக்குஎதிரான கருத்துகளை கூறி வந்தள்ளனர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பகத்சிங், சுகதேவ், ராசகுருஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்ட பொழுது, மரண தண்டனை குறித்த பரவலான விவாதம் எழுந்தது.

மிதவாதிகளான காங்கிரஸ் தலைவர்கள் கூட, பகத்சிங்கின் பாதையை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவரதுநோக்கம், நமது நோக்கம் ஒன்றே என்ற அடிப்படையில் அவரது மரண தண்டனைக்கு எதிராகக் குரல்எழுப்பினர்.

1942ம் ஆண்டு நடைபெற்ற ஆகஸ்டு புரட்சிப் போராட்டத்தில் குலசேகரப் பட்டினத்தில் வெள்ளைக்காரசார்ஜண்ட்டை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ராசாபாலன், காசிராஜன் ஆகிய இருவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

1946ம் ஆண்டு சென்னை மாகாண பிரதமராகப் பதவி ஏற்ற பிரகாசம், அப்போதைய ஆளுநரிடம் வாதாடிஅவர்களை விடுதலை செய்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத்தைச் சேர்ந்த கேப்டன் நிவாஸ் கான், காப்டன் தில்லான்மற்றுமொருவர் ஆகியோருக்கு பிரிட்டிஷ் இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இதற்கு எதிராக இந்தியா முழுவதும் காங்கிரஸ் மற்றும் பல கட்சிகள் போராட்டம் நடத்தின. போராட்டத்தின்தீவிரத்தை உணர்ந்து அப்போதைய இந்திய வைசிராய் வேவல், தனக்குள்ள சிறப்பதிகாரத்தைப் பயன்படுத்திஅவர்களை விடுதலை செய்தார்.

இப்படி மரண தண்டனை விதிக்கப் பட்டவர்கள் ஒட்டுமொத்தமாக விடுதலை செயப்பட்ட சம்பவங்களும் உள்ளன.

குறிப்பிட்ட வழக்குகளில் மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் எழுந்த அதே நேரத்தில் இந்தியாவிலிருந்துஒட்டுமொத்தமாக மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்ற குரலும் எழுந்த வண்ணம் இருந்தது.

ஆங்காங்கே இருக்கும் மனித உரிமை அமைப்புகள் தங்கள் மாநாடுகளில் தீர்மானங்கள் மூலம் அக்கருத்தைவலியுறுத்தி வந்தன. ஆனால் பரந்துபட்ட அளவில் ஒரு விவாதமாக அது எழவில்லை.

1998ம் ஆண்டு பூந்தமல்லி தடா சிறப்பு நீதிமன்றம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26பேருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்த போது இந்தியா மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள மனிதஉரிமை ஆர்வலர்கள் அனைவரையும் அது உலுக்கிவிட்டது.

யாராலும் கற்பனை செய்து பார்க்க இயலாத இக்கொடூரத் தீர்ப்பு மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரத்திற்கு வலுசேர்த்தது.

இத்தீர்ப்பைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட 26 தமிழர் உயிர்காப்புக் குழு இவ்வழக்கினை உச்ச நீதிமன்றத்தில்நடத்துவதோடு தங்கள் பணி முடிந்து விடவில்லை எனக் கருதியது.

அதன் விளைவாக இந்தியாவெங்கும் மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரப் பணியை வெகு வேகமாக எடுத்துச்செல்கிறது.

இந்தியா மட்டுமல்லாது, உலகளாவிய அளவில் செயல்படும் பொது மன்னிப்பு அவை (அம்னஸ்டி இண்டர்நேசல்)போன்ற மனித உரிமை அமைப்புகளுக்கு எழுதி அவர்களது கருத்தைப் பெற்று வெளியிட்டது.

மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரம் மிக வலுவாக பரவத் தொடங்கியது. சாரண மக்கள் மத்தியில் இது பெரும்விவாதமாகவே எழுந்தது. அரசியல் தலைவர்கள் மரண தண்டனை குறித்த தங்கள் கருத்தைச் சொல்லியே ஆகவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டனர்

இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினரும் மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்என்ற கருத்தை அழுத்தமாக வெளியிட்டனர்.

அப்படிக் கூறியவர்களில் உச்ச நீதிமன்ற, பல்வேறு மாநிலங்களின் உயர் நீதிமன்ற நீதிபதிகளும், மூத்தவழக்கறிஞர்களும் அடங்குவர்.

செனையில் மரண தண்டனைக்கு எதிரான வழக்கறிஞர் மாநாடு நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் சட்டக்கல்லூரி மாணவர்கள் மரண தண்டனைக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.

ஜகத்தின் மனசாட்சியாக செயல்படும் எழுத்தாளர்களும் மரண தண்டனைக்கு எதிராக அணி திரண்டனர்.செனையில், மரண தண்டனைக்கு எதிரான எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது.

பல்வேறு புகழ் பெற்ற எழுத்தாளர்கள் இதில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பதிவு செய்தனர்.

திரையுலக கலைஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள் என சமூகத்தின் மதிப்பு மிக்கவர்கள் பலரும் மரணதண்டனைக்கு எதிரான இயக்கத்தில் இணைந்து செயல்பட்டனர்.

மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரப் பயணம் ஒன்று சென்னையில் தொடங்கி, தமிழ்நாடு முழுவதும்சென்றது.

அப்பயணத்தில் ராஜீவ் கொலை வழக்கில் பூந்தமல்லி நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின் உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்கள் துயரங்களை எடுத்துக் கூறினர்.

இப்பிரச்சாரப் பணிகளின் உச்சக்கட்டமாக 1999ம் ஆண்டு நவம்பர் 30ம் நாள் செனையில் மரண தண்டனைக்குஎதிரான பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மாபெரும் பேரணி ஒன்று நடைபெற்றது.

பேரணியின் முடிவில் அன்றைய முதலமைச்சர் கருணாநிதியிடம் மரண தண்டனைக்கு எதிராக லட்சத்திற்கும்மேற்பட்டோர் கையெழுத்திட்ட மனு அளிக்கப்பட்டது.

2004ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தனஞ்சய் சர்ஜியின் கருணை மனுநிராகரிக்கப்பட்டு அவருக்கு மரண தண்டனை உறுதியான போது மீண்டும் மரண தண்டனைக்கு எதிரான விவாதம்இந்தியாவெங்கும் எழுந்தது.

அவரது மரண தண்டனையை நிறுத்தக் கோரி இந்தியாவெங்கிலும் உள்ள மனித உரிமை அமைப்புகள் பல்வேறுவகையிலும் முயற்சி செய்தன. ஆனால் மிக வேதனையூட்டும் வகையில் அவரது மரண தண்டனையை நிறுத்தமுடியவில்லை. தனஞ்சய் சர்ஜி தூக்கிலிடப் பட்டார்.

அதுவே இந்தியாவில் நிறைவேற்றப்படும் கடைசி மரண தண்டனையாக இருக்க வேண்டும் என்பதேஇந்தியாவெங்கும் உள்ள மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.இன்று குடியரசு தலைவர்மரண தண்டனைக்கு எதிராக வெளியிட்டிருக்கும் கருத்தினைத் தொடர்ந்து மீண்டும் ஒரு விவாதம் எழுந்துள்ளது.

தனஞ்சய் சர்ஜிக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய ஊழியரின் வயது எழுபத்தி இரண்டு. ஓய்வு பெறும்வயதை தாண்டி பல ஆண்டுகள் ஆகியும் அவர் இன்னும் பணியில் இருப்பதற்கு ஒரே காரணம் அப்பணியைமேற்கொள்ள வேறு யாரும் முன் வராததே ஆகும்.

மரண தண்டனை விதித்த நீதிபதி கூட அத்தண்டனையை நிறைவேற்றும் பணியைச் செய்ய முன் வரமாட்டார்.இதிலிருந்தே மரண தண்டனையின் கொடூரத் தன்மை புரியும்.

மரண தண்டனையின் நோக்கம் அச்சுறுத்துவதற்கே என்றால் இத்தனை ஆண்டுகளில் குற்றங்களின் எண்ணிக்கைபெருமளவு குறைந்திருக்க வேண்டும். ஆனால் உண்மையில் திட்டமிட்ட கொலைகளின் எண்ணிக்கைபெருகியுள்ளது என்பதற்குக் காவல் துறையினரின் ஆவணங்கள் ஆதாரமாக இருக்கின்றன.

உண்மையில், தங்கள் வழக்கை திறமையான வகையில் எடுத்து நடத்த வாய்ப்பும் வசதியும் இல்லாத, ஒடுக்கப்பட்ட,ஏழை மக்களே மரண தண்டனைக்குப் பெருமளவு பலியாகின்றனர்.

உலகச் சூழலில் இன்று கிட்டத்தட்ட 111 நாடுகளில் மரண தண்டனை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. 27நாடுகளில் சட்டத்தில் இருந்த போதும் நடைமுறையில் மரண தண்டனை விதிக்கப்படுவது இல்லை.

ஏகாதிபத்திய, சர்வாதிகார நாடுகளில் கூட மரண தண்டனை ஒழிக்கப்பட்டு விட்ட நிலையில், அகிம்சையின்பிறப்பிடமாக, காந்தியடிகளின் தேசமாகத் திகழும் இந்தியாவில் மட்டும் இந்தக் கொடூரத் தண்டனைஇன்றளவிலும் நீடித்து வருவது வேதனைக்குரியது மட்டுமல்ல, வெட்கக் கேடானதும் கூட.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், ஜனநாயக விரோத தண்டனையான மரண தண்டனையைஒழிப்பதில் மனித உரிமைகளை மதிக்கும், மனித நேயம் கொண்ட ஒவ்வொருவருக்கும் பெரும் பொறுப்புஉள்ளது.

குடியரசு தலைவர், உச்ச நீதீமன்றத் தலைமை நீதிபதி உள்ளிட்ட நாட்டின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களே மரணதண்டனைக்கு எதிராக மிக அழுத்தமாகக் கருத்து வெளியிட்டிருக்கும் இத் தருணமே, இந்தியாவிலிருந்து மரணதண்டனையை முற்றிலுமாக ஒழிக்க மிகச் சிறந்த தருணமாகும்.

இந்த வாய்ப்பை தவறவிட்டால் இனி இதை விட நல்ல வாய்ப்புக் கிடைப்பது அரிது. எனவே, உலகெங்கிலும்உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் இத்தருணத்தில் ஒன்றிணைந்து இந்திய அரசிற்கு அழுத்தத்தைக் கொடுக்கவேண்டும்.

முன் எப்போதும் இல்லாத வகையில், மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் அரசியல், அதிகாரவர்க்கங்களிலிருந்தும் எழுந்திருக்கும் இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி இந்திய அரசும் மரண தண்டனையைமுற்றிலுமாக ஒழிக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதே மனிதநேயம் கொண்ட அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.

-பூங்குழலி

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X