கூட்டாஞ்சோறாய் கலந்திருந்த நட்பு..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கரம் கோர்த்து செல்லாமல்
மனங்கள் கோர்த்து சென்ற நாட்கள்

கண்ணீரின் சுவை இன்னதென அறியாமல்
சிரிப்பின் சத்தத்தை மட்டும் கேட்ட நாட்கள்

Poem on world friendship day

அரைக்கால் சட்டை முதல் அம்மாவின் ஊறுகாய் வரை
அத்தனையும் ஓன்று விடாமல் பகிர்ந்த நாட்கள்

ஒரு அறையிலும் வீடுகள் உண்டென
உணர்த்திய விடுதி அறை

அன்னையையும் தாண்டிய அன்பு உண்டென
உணர்த்திய தோழியின் அன்பு

கலாட்டாக்களை மட்டுமே கலந்து
சுவைத்த காலை காபி

சுவைத்தல் மறந்து பசித்தலுக்கு
சாப்பிட சொல்லித்தந்த மெஸ்

இருந்தும் இல்லாமல் முடிந்த
வகுப்பறை பாட நேரங்கள்

படித்தும் பிடிக்காமலும் எழுதி
தீர்த்த தேர்வு தாள்கள்

தீட்டான இடமென நினைத்து
நுழைவே நினைக்காத நூலகம்

ஆண் பெண் நட்பிலும் அழுக்கற்ற
அழகு உண்டென சொல்லிய நட்பு

களைகட்டும் ஊர் திருவிழாவை போல
சிம்போஸியம் ஆண்டு விழா
அதற்கு மட்டுமே கட்டும் புடவையோடு
வந்து ஒட்டிக்கொள்ளும் நாணம்

ஆறு மாதத்தின் ஆட்டத்துக்கும்
விடுப்பு கொடுத்து விழுந்து விழுந்து படித்த
செமஸ்டர் ஸ்டடி ஹாலிடேஸ்

அதுவரை புரியாத இன்ஜினீரிங் பாடங்களை புரியவைத்த
தேர்வுக்கு முந்தய அதிசய இரவுகள்

பஸ் காசை மட்டும் பர்சில் வைத்து
ஊர் சுற்றிய நாட்கள்

விசில் பறக்க வாய் மூட மறக்க
தியேட்டரில் பார்த்த சினிமாக்கள்

சிறகுகள் இல்லாமலே கனவுகளின் உலகில்
காற்றோடு பரந்த கல்லூரி சுற்றுலாக்கள்

தேர்வுக்கு முன்னாடி மட்டும் கட்டாயம் போகும்
அந்த கோவில் தரிசனங்கள்

பழம் பழம் என படித்தவனையும் படிக்கவிடாமல்
பாழ் செய்த பெருமை கொண்டோம்

களவும் கற்று மாற என காப்பியடித்தலை
கற்றுத்தந்த பீறியடிக்கல் தேர்வுகள்

வராத ஓவுட்புட்டை வா வா வென அழைத்து
குழந்தையாய் அழுத ஆய்வக தேர்வுகள்

ஆசிரியரின் பாடத்துக்கு அழகாய் தலையாட்டும்
ஆர்வமான முதல் பென்ச் மாணவனாய்
கழிந்த முதல் வருடம்

அடக்கத்திலிருந்து அசால்ட் ஆறுமுகமாய் மாறிய
ஆரம்பம் அந்த இரண்டாம் வருடம்

கல்லூரியின் துப்பட்டாக்கள் வீசிய சாமரமாய்
காதலையும் கண்களோடு சேர்த்த மூன்றாம் ஆண்டு

முடிய போகிறதே என முடிக்க விரும்பாமல்
அணுஅணுவாய் அனுபவித்த இறுதி ஆண்டு

இறுதியாய் மெழுகுவர்த்தியோடு கரைந்து
பரிமாறிக்கொண்ட பிரிவு விழா

என்ன எழுதவென தெரியாமல் எது எதுவோ எழுதி
இதயங்களை பரிமாறிக்கொண்ட ஆட்டோகிராப்

எப்பவும் தொடர்பில் இருப்போம் என்று கண்ணீரோடு
கைகுலுக்கி விடைகொடுத்த நட்பு

இறுதியாய் எதையோ தொலைத்துவிட்டதை போல
திரும்பி திரும்பி கல்லூரி வளாகத்தை பார்த்தபடியே
கடந்து சென்ற அந்த கடைசி நாள்

எங்கு எங்கிருந்தோ
வந்து இறுதியில்
கூட்டான்சோராய் கலந்திருந்த
கல்லூரி நட்பு
எங்கு எங்கோ
தொடர்பே இல்லாமலிருந்தாலும்
நெஞ்சின்ஓரம் கரைந்திருக்கு
சுகமான நினைவுகளாய் !!!

நண்பர்கள் தினம் நினைவுகளில் வீசி சென்ற சாரலோடு

- யாழினி வளன்

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Here is a poem on world friendship day written by our reader Yazhini Valan.
Please Wait while comments are loading...