• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆவணி அவிட்டம்

By Staff
|

உபநயனம் செய்வித்த அன்றே சந்தியாவந்தனம் செய்யாமல் விட்டவர்கள் யாரும்இருக்கமாட்டார்கள்... என்னைத் தவிர.

பதின்மூன்று வயதான எனக்கான உபநயனமும், என்னுடைய அக்காவின் திருமணமும்ஒரே நாளில் நடந்தேறியது. முகூர்த்தத்திற்கு நாழியாகிறதே என்னும்பரபரப்பில் என்னுடைய பெற்றோர் இருந்தார்கள். சித்தப்பாக்களுக்கோமாப்பிள்ளை ரூமில் மின்விசிறி வேகமாய் ஓடவில்லை என்பதில் டென்ஷன்எகிறிக்கொண்டிருந்தது. மாடியேறிக் குளிக்க முடியாது என்போரை திருப்பிவிடுவதில் மாமாக்களும் பிஸி. வாத்தியாருக்கோ காசி யாத்திரைக்குசென்றவரை தடுத்தாட்கொள்வதும், என்னுடைய காதில் ரகசியமாகபிரம்மோபதேசம் செய்வதும் க்ளாஷ் ஆகக் கூடாதே என்னும் பயம். எனக்கோ,பூணூல் தரித்தவுடந்தான் டிபன் கிடைக்கும் என்பதால், செல்லப்பாவின்நெய்மணக்கும் கேசரியும், உப்புமாவும் காலியாகிப் போயிருக்கக் கூடாதேஎன்னும் கவலை.

கல்யாண வீடு களேபரத்தில், அன்று மாலை ஆரம்பிக்கவேண்டியசந்தியாவந்தனத்தை சந்தோஷமாக மறந்தே போனோம். நலங்கில் ரொம்பஉரிமையெடுத்துக் கொண்டு தன் பையன் அப்பளாத்தை தலையில் ஒழுங்காகஉடைக்கவில்லை என்ற மாமியார் கோபத்தை நைச்சியமாகப் பேசி சமாதானப்படுத்துவதில் சிலர் அக்கறை காட்டிக் கொண்டிருந்தார்கள். கொடுத்தஅட்வான்சுக்கு அதைப் பிடி... என்னை இப்படி படம் எடு என்று படுத்தியதில்,மாலை ரிசப்ஷனுக்கு வீடியோகாரன் டேக்கா கொடுத்திருந்தான். எப்பொழுதும்என்னைப் பார்த்தவுடன் நான் யார் என்று தெரிகிறதா? என்று படுத்தும்ஒன்றுவிட்ட மாமா ஒருவர், என்னை ஒதுக்குப்புறமாக அழைத்துக்கொண்டு போய்,எது எப்படி ஆனாலும், எந்த ராஜா, எந்த பட்டினம் போனாலும், காலையிலும்மாலையிலும் பதினாறு தடவையாவது காய்த்ரி ஜெபிச்சுடு என்று சொன்னசீரியஸில், காய்த்ரி ஜபத்துக்கு நிறையவே பயம் கலந்த ரெஸ்பெக்ட்கிடைத்தது.

Meditationஅந்த வயதிலும் சரி... இப்பொழுதும் சரி... கண்ணை மூடி உட்கார்ந்துகொண்டு, மனதை அலைபாயாமல், ஜெபிக்க ஆரம்பித்த ஐந்தாவது நிமிடத்தில்கண் அசந்திருப்பேன். ஸ்கூலில் ஒரு தடவை ஆழ்நிலை தியானம் என்னும் சர்வமத வகுப்பு ஒன்றுக்கு அழைத்துச் சென்றார்கள். நிறைய சுவாரசியமானஅறிவுரைகள். கொஞ்சம் மனத்திற்கான விளையாட்டுகள். மேலாண்மைதத்துவங்கள். வயலின் வகுப்பு. நிறைய குட்டிக்கதைகள் என்று போரடிக்காமல்இருந்தது எங்களுடைய மிகப் பெரிய ஆச்சரியம். அந்த நாளின் கடைசிபகுதியாக டிரம்ப் கார்ட் மாதிரியான தியானம் செய்முறையைவிளக்கிவிட்டு, அனைவரையும் பத்து நிமிடம் கண்மூடி, தியானம் பயிலசொன்னார்கள்.

எப்பொழுது நிகழ்ந்தது என்று தெரியாது. ஆரம்பத்தில் பக்கத்துவீட்டுஸ்ரீநிதியும், மொட்டைமாடி டேங்கை க்ளீன் செய்யவேண்டிய முறைவாசலும்,பிள்ளையாருக்குப் போட வேண்டிய நூற்றியெட்டுத் தோப்புக்கரணக் கடனும்,பெஞ்சில் பெயர் பொறித்திருப்பதால் ஃபைனைத் தீட்டுவார்களோ கவலையும்,பள்ளியில் நடக்கும் அடுத்த சினிமா ஷூட்டிங்கும் அன்புள்ள ரஜினிகாந்த்மாதிரி பெரிய நட்சத்திரங்களை வைத்திருக்கவேண்டும் வேண்டுதலும்,மாறுகோ... மாறுகோவுக்கு ஆடலமைத்த பிரபுதேவா என்னை படபிடிப்புக்குக்கூட்டிச் செல்ல வேண்டுமே என்பதுமே ஓடிக் கொண்டிருந்தது. எப்படி அமைதியாகிப்போனேன் என்று தெரியாது. இழுத்து இழுத்து விட்ட மூச்சாக இருக்க வேண்டும்.அல்லது கண்ணை மூடிக் கொண்டே, இறுக மூடாமல் அரைப் பார்வை பார்த்ததாகஇருக்கலாம். சத்தமில்லாமல், வாய்க்குள், நாக்கை அசையாமல் உச்சரித்தஓம் செய்திருக்கலாம். தூங்கியேப் போனேன்.

நீண்ட வெள்ளை அங்கியுடன், குண்டு கறுப்பு கண்ணாடியுடன், என்னை மெல்லத்தொட்டவர்தான் மீண்டும் நிலைக்குக் கொண்டு வந்தார். சக மாணவர்களின்சிரிப்பை அடக்குவதற்காக சொன்னாரா என்று தெரியாது. உண்மையானதியானத்தின் முதல் படி, தூக்கம்தான். தூங்க ஆரம்பிப்பதுதான், பாசாங்கற்றதியான முயற்சியின் ஆரம்ப நிலை என்றபோது முதன்முதலாக எழுதியகதைக்குக் கிடைத்த பின்னூட்டம் போல் சந்தோஷமாக இருந்தது. நண்பர்கள்விடவில்லை. ராவெல்லாம் முழிச்சிருந்து என்ன பண்றே என்று கேள்விகள்கேட்டு என்னை நிறைய ஸ்ரீநிதி கதைகளை சொல்ல வைத்தார்கள். அவற்றில்சில பாக்யராஜ் செய்தவை. சில அக்கா படித்த மில்ஸ் அண்ட் பூனில் வருபவை.சில மதனகாமராஜன் கதைகளில் சொன்னவை. சில யு-ஏ முத்திரை வழங்கக்கூடிய உண்மை கற்பனைகள்.

ஆனாலும், அப்பொழுதும் சந்தியாவந்தனம் தொடர்ந்ததில்லை. பூணூல்கிடைக்கும்வரை, நமக்கும் தோளில் மூன்று கயிறு இருக்காதா... திருமணம்ஆனபின் ஆறு ஆகாதா... குழந்தை பிறந்தால் அல்டிமேட் பெரிய பதவியாகமூன்று மூன்றாக -- ஒன்பது கிடைக்காதா என்னும் அவா. கிடைத்தவுடன், அதனால்என்ன பயன், எதற்காக அணிந்திருக்கிறேன், செய்யவேண்டியதை ரிலிஜியஸானகடமையுணர்வோடு செய்கிறேனா என்றால்... இல்லை.

சின்ன வயதுகளில் பள்ளிக்கூடம் இருக்கும். ஒன்பது மணிக்கு சைரன் ஊதிஅழைக்கும் பள்ளிக்கு, சாதாரணமாக எட்டு மணிக்கு எழுந்தால் போதுமானது.ஆவணி அவிட்டம் இருக்கும் நாள் மட்டும், ஏழுமணிக்கே எழுப்புவார்கள். அரைடிராயரை மட்டுமே போட்டுக்கொண்ட கால்களுக்கு, வேஷ்டி கிடைக்கும். வேஷ்டிகட்டி, தோளில் தூண்டு போட்டுக் கொண்டு நடப்பதே பெருமிதமாக இருக்கும்.இதும் ஏற்கனவே சொன்ன கிடைக்காத ஒன்று வகையறாவில் சேரும். காலில்தடுக்கி தடுக்கி சரசரக்கும் சத்தம் போடுவது பிடிக்கும். பட்டு சரிகையோடுநீலமும் சிவப்புமாக இருக்கும் மயிற்கண் வேட்டியினால், இல்லாத மினுக்கும்,பிரீமியர் மில்ஸ் விளம்பரத்தில் சொல்லிக் கொடுக்கும் கெளரவமும்கிடைத்திருப்பதாக தோன்றும்.

ஆவணி அவிட்டத்திற்காக செய்யப்படும் சமையல் மிகவும் முக்கியமானது. சாதம்போட்ட பால் பாயஸம், வடை என்பது நிச்சயம் இருக்கும். அனேகமாக,கொலஸ்ட்ராலுக்காக டடீஃபு போட்டு செய்யாமல் சுத்த தேங்காயில் குளித்தஅவியல், அம்மாவின் கையை அரக்காக்கியிருக்கும் பீட்ரூட் கறி, கடலைபருப்புகூட்டோ என்று சந்தேகிக்கவைக்கும் கோஸ் கூட்டு, சாலடில் தற்போது மண்டைமண்டையாகக் காணப்படும் வெள்ளரிக்காயின் பிஞ்சு பச்சடி, தெளிவானகுளத்தின் பாசி நிறைந்த தண்ணீரில் டக்கென்று கண்ணில் சிக்கும் மீன்களைப்போல் தக்காளிகளைத் தாங்கி நிற்கும் பொன்னிற ரசம், வெண்டக்காயைவறுத்துப் போட்ட மோர்க்குழம்பு, பலருக்கு அலர்ஜி கொடுத்தாலும் எனக்காகசேனை மசியல், கிண்ணம் நிறைய பருப்பு, அமெரிக்காவின் நீர்நிலைகளில்போடப்படும் சில்லறைகளைப் போன்ற முள்ளங்கித் தான்கள் நிறைந்தஅரைத்துவிட்ட சாம்பார், உருளை ரோஸ்ட் என்று மெனு தயாராகிக்கொண்டிருக்கும்.

சங்கர மடம் மிகவும் அழுக்காக இருக்கும். பழைய பூணூலை தூக்கியெறிந்துவிட்டுபுதியதை மாட்டிக்கொள்ள கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கும். இவ்வளவுநேரமும் குத்திட்டு மட்டுமே உட்கார்ந்து கொள்வது உடம்புக்கு நல்ல எக்ஸர்சைஸ்.கீழே அப்படியே உட்கார்ந்தால், பட்டு வேட்டி பாழாகிப் போகும். டேபிள்,சேரில் உட்கார்ந்து கொண்டு பூணூல் மாற்றிக் கொள்ள இனிமேல்தான் வேதங்களைஅர்த்தப்படுத்தவேண்டும். கால் வைக்கும் இடமெங்கும், முந்தின பேட்ச் செய்தப்ரோஷனங்கள் ஓடிக் கொண்டிருக்கும். கூரை இல்லாத ஏழ்மையானபள்ளிக்கூடத்தில், நான்காம் வகுப்புக்கான கணக்குப் பாடமும், மூன்றாம் க்ளாஸ்தமிழ் வகுப்பும், பக்கத்து பக்கத்து மரத்தடியில் இடித்துக்கொள்வதை ஒத்து இங்கும்ஆறரை மணியின் யஞ்ஞோபவீதனத்தாரணமும், எங்களின் பிராயசித்தமும்,கூட்டலும், திருக்குறளுமாக மாறி மாறி குழப்பும்.

நான் செய்த பாவங்களைக் கழுவி விடுவதற்காக பிராயசித்தம்செய்யப்படுவதாக வாத்தியார் சொல்வார். வெள்ளீஸ்வரர் கோவிலில்உறங்கிக் கொண்டிருந்த பூனையைக் கோணிப் பையில் போட்டு, வீட்டுக்குஎடுத்துக் கொண்டு வந்து, அது பால்குடிக்காக ஏங்கித் தவித்தது முதல் பாவம்.போன வருடத்தில் பெரிதாக எதுவும் பாவங்கள் இழைக்கவில்லை. அம்பையராகஇருந்தபோது தண்டபாணி மிரட்டி வைத்திருந்ததால், அவன் க்ளீன் போல்ட்ஆனவுடன், அவுட் கொடுக்காதது பாவமாகத் தோன்றவில்லை. அவசர அவசரமாகமதிய உணவை முடித்துவிட்டு நான்கு தெரு தள்ளிச்சென்று, ரேகாவின் வீட்டில்ஆரம்பித்து அவள் படிக்கும் பெண்கள் பள்ளியின் வாசல் வரை நிழல் தொடருவதும்தவறில்லை. ஷூ காலோடு விநாயகரை கும்பிட்டபோதே, அவரிடம் மன்னிப்புகேட்டுவிட்டேன். படு சின்சியராக படித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீநிதியின் மேல்கல்லெறிவது கூட விளையாட்டாகத்தான் செய்கிறேன். அப்படியே, அவைதப்புதான் என்றாலும், அடுத்த ஆவணி அவிட்டத்தில் பிராயசித்தார்த்தம்செய்தால், பாவங்களைக் கழுவி விடலாம்.

நான் பாவமே செய்யாமல் பிராயசித்தம் செய்தது என்னுடைய கல்லூரிகாலத்தில்தான். வட இந்தியாவில் இருந்ததால் ரக்ஷாபந்தனுக்குத்தான், அதிகமுக்கியத்துவம் இருக்கும். ராக்கியை முன்னிட்டு ஒரு வாரம் முன்பில் இருந்தே,தபால்கள் வண்ணமயமாக வந்து கொண்டிருக்கும். வணி அவிட்டமும் ரக்ஷாபந்தனும்ஒரே நாளன்றுதான் என்றாலும், தபால் நிலையத்தின் கைங்கரியத்தினாலோ,தங்கைகளின் சோம்பலினாலோ, கோடை காலம் முடியும் வரை அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். கடிதத்தைப் பிரித்து, கர்மசிரத்தையாக அவர்கள்அனுப்பியதை கையில் கட்டிக் கொள்வார்கள். பதிலாக, தமக்கைகள்மணியார்டர்களை எதிர்பார்த்து காத்திருக்கலாம். பொங்கலுக்கு அடுத்தநாள்கணுப்பொடி வைப்பதுதான் எனது நீண்ட ஆயுளுக்கும், நலனுக்குமாக தமிழர்களின்பழக்கம். அதனால், எங்கள் வீட்டில் ஆவணி விட்டத்திற்கும், தங்கைகளுக்கும்அதிக சம்பந்தமில்லை.

கல்லூரியில் இருந்த நான்கு வருடங்களில் முதல் வருடம் என்னை ரேகிங்செய்தவர்களைத் தண்டித்ததால் பாவம் இழைத்திருப்பேன். இரண்டாம் வருடம் மெஸ்தேர்தலில் நின்றவனை ஜெயிக்க வைப்பதற்காக தில்லுமுல்லு செய்திருக்கலாம்.மூன்றாம் வருடம் உன்மத்தருள் உத்தமராக இருந்த காலம். அந்த வருடம்தான்புதிதாக சேர்ந்திருந்த தமிழ்ப் பேராசிரியர், டில்லியில் இருந்துவாத்தியாரை வருவித்திருந்தார். அவரை மாணவர்களுடன் பகிர்ந்தும்கொண்டார். டெல்லி வாத்தியாருக்கு தமிழர்களைப் பார்த்த குஷியில்சம்ஸ்கிருத ஸ்லோகங்களுக்கும் விளக்கம் சொல்லிக் கொண்டே ஆவணிஅவிட்டத்தை நடத்தினார். முன்று நூல்களை அணிந்து கொள்வதன் மூலம்சிம்பாலிக்காக கடவுளுடன் இணைகிறோம் என்னும் போது மிகவும்ஆர்வமாகத்தான் இருக்கும். தாயத்தைக் கட்டிக் கொண்டால், வீரமும், பலமும்,மரியாதையும் கிடைப்பது போல் பூணூல் மாட்டிக் கொள்வதாலும் சந்தியாவந்தனம்செய்வதாலும் நீண்ட நாள் வாழலாம் என்னும் மந்திரங்களை உணர்த்தினார்.

அமெரிக்கா வந்தபிறகு பூணூலினால் தொல்லைகள்தான் ஜாஸ்தியாகிப் போனது.மூன்று மாதமே இருக்கும் சம்மருக்காக கடற்கரையில் சட்டையைக் கழற்றினால்,வெற்று மார்பை அலங்கரித்தது. ஜிம் சென்று முப்பது நிமிடம் ஓடிக்களைத்தபிறகு, குளிக்க சென்றாலும், புருவங்களை உயர்த்த வைத்தது. துடிக்கிறஆட்டத்தைப் பார்க்க, நைட் க்ளப் செல்லும் சம்யங்களில், இருபது டாலருக்கு,மூன்று நிமிட ஆட்டக்காரியையும் உறுத்தவைக்கிறது.

இப்பொழுதெல்லாம் என்னுடைய பூணூல் பீச் அலைகளில் தொலைவதில்லை. வீட்டின்சாவியைப் போல், பெட்ரூமில் இருக்கும் தினசரி காலெண்டரின் ஆணியில் மாட்டப்பட்டிருக்கிறது.

- பாஸ்டன் பாலாஜி(bsubra@yahoo.com)

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more