• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாயின் காலடியில்..

By Staff
|

நாசர் ஆறாவது படிக்கும் போது அவனோட வாப்பா மெளத்தாகி விட்டார்கள். இப்ப நினைத்தால் கூட மனசுக்குதிக்கென்று உள்ளது. வாப்பா மெளத்தான போது அவன் பள்ளி வகுப்பறையில் இருந்தான். சாஹா மாமா உடனேபள்ளிக்கு வந்து வகுப்பறையை தேடி கண்டுபிடித்து விஷயத்தை வாத்தியாரிடம் இரகசியமாக சொன்னார்.

வாத்தியார் சண்முகம் அதிர்ச்சியுற்று, நாசர் நீ வூட்டுக்கு போவலாம் என்றார்.

நாசருக்கு ஒன்றும் புரியவில்லை. புஸ்தக மூட்டையை எடுத்துக் கொண்டு சாஹா மாமாவை புரியாமல் பின்தொடர்ந்தான்.

சாஹா மாமா, சீக்கிரமா வா என்றார்.

நாசர், காதர் மாமாவை ஓட்டமும் நடையுமாக அந்த பள்ளிக்கூட தாழ்வாரத்தில் பின் தொடர்ந்தவாறே, என்னமாமா.. ஏன் என்னை கூட்டிட்டு போறீங்க..? என்றான்.

சாஹா மாமா திரும்பி பார்க்காமல், நீ வா.. சொர்றேன்.. என்று வியர்க்க விறுவிறுக்க நடந்தார்.

நாசர், சொல்லுங்க மாமா என்றான்.

சாஹா மாமா, சொல்றேங்குறேன்ல.. கொஞ்சம் பேசாம வாயேன்.. என்று படபடத்தார்.

சாஹா மாமா வெளியே வந்து தனது மிதிவண்டியை எடுத்து பூட்டை திறந்தார், பின்னாடி காத்து இல்ல.. முன்னாடிஉக்காரு என்றார்.

மிதிவண்டி பயணம் சங்கடமாக இருந்தது இருவருக்கும்... எப்படி மெளத் செய்தியை சொல்வது என்று தெரியாமல்சாஹா மாமாவும், ஏன் சாஹா மாமா இப்படி பாதியிலே கூட்டிட்டு போறாஹா என்று தெரியாமல் நாசரும்தவித்தனர். தெரு முனையில் மிதிவண்டி திரும்பியது.. தூரத்தில் வீட்டு வாசலில் மக்கள் கூட்டம்..

நாசர், என்ன மாமா இது.. வூட்டு வாசல்ல ஒரே கூட்டம்? என்றான்.

சாஹா மாமா பதில் ஏதும் கொடுக்க வில்லை. மிதிவண்டியை வேகமாக ஓட்டி வந்து வீட்டு வாசலில் நிறுத்திஇறங்கு என்றார். நாசர் இறங்கினான். அந்த ஊர் தர்காவில் மாலை ஆறு ஆறரை மணிக்கு தான் குண்டு போடுவதுவழக்கம். ஆனால் சாஹா மாமா நாசர் காதில் காலையிலேயே அந்த குண்டை போட்டார், வாப்பா மெளத்தாபோயிட்டாஹாப்பா என்று..

நாசர் அந்த குண்டை வாங்கி கொண்டு உள்ளே ஓடினான், ம்மா.. என்று கதறியபடி..

நாசரின் உம்மா சாராமா நாசரை பார்த்ததும், வாப்பாவ பாருடா.. நம்மலெல்லாம் உட்டுட்டு போயிட்டாஹடாஎன்றார்.

நாசரின் புஸ்தக மூட்டையை நாசரின் லாத்தா பாத்திமா வாங்கினார், வாப்பா நாசர் வந்திருக்கான் வாப்பா..பாருங்க வாப்பா.. என்று அழுதார்.

நாசர் கதறியபடி வாப்பாவை பார்த்தான். வாப்பா அசைவில்லாமல் படுக்கையில் இருந்தார். நாசருக்கு தனதுவாப்பா தூங்குவது போல் தான் இருந்தது. இப்ப எந்திருச்சிடுவாஹா என்று கூட அவன் மனசு சொல்லியது.

என்ன செய்வது? சாதாரண நித்திரையாக இருந்திருந்தால் எழுந்து தான் இருந்திருப்பார்கள். ஆனால் இது நிரந்தரநித்திரையாச்சே!.. நிஜநித்திரையாச்சே!!.. எங்கேயிருந்து எழுவது?.. அழுவதை தவிர வேறு வழியில்லை.. நாசர்அழுதுக் கொண்டே திரும்பி பார்த்தான்..அவனது நானா ஷரீப் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தான்..

இரண்டு மூன்று காத்தாடி அவனை சுற்றி வைக்கப்பட்டிருந்தது..ஷரீப் வாப்பா மெளத்தான துயரம் தாங்கமுடியாமல் தூக்க மாத்திரை சாப்பிட்ட விஷயம் நாசருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

நாசர் ஷரீபை சுட்டிக்காட்டி, சேத்த நானாக்கு என்னாச்சும்மா.. என்றான்.

சாராமா வாயை திறக்குமுன் நாசரின் தங்கை அந்த வீட்டின் கடைக்குட்டி ரெஜியா, சேத்த நானாக்குஒண்ணுமில்லை.. மச்சான் டாக்டர கூப்ட போயிருக்காஹா.. டாக்டர் வந்து பார்த்தா எந்திருச்சிடுவாஹா என்றதும்

பாத்திமா ரெஜியாவை தன் பக்கம் இழுத்து கட்டிக்கொண்டே, ஒண்ணுமில்ல.. சேத்த நானா.. வாப்பா கூடவேபோயிடறேன்னு அழுவுனாஹால்ல... அதுல மயக்கம் வந்து.. என்று இழுத்ததும்..

நகருங்க.. நகருங்க.. என்ற வாசல் பக்கமிருந்து சத்தம் கேட்டது..

பாத்திமாவின் கணவர் ஹாஜா மரைக்கான் ஒரு மருத்துவரை அழைத்து வந்தார். அந்த மருத்துவர் வந்து ஷரீபைபரிசோதித்து விட்டு ஊசி போட்டார். ஒரு ஆபத்துமில்லை என்று கூறி விட்டு போனார்.

----------------------------

Mosqueநாசரின் வாப்பாவை அந்த ஊரில் மரைக்காப்பா என்று தான் அழைப்பார்கள். ஊரில் எல்லோருக்கும்மரைக்காப்பாவை பிடிக்கும். சென்னைக்கு சென்று நிறைய பகட்டுப் பொருட்கள்(fancy goods)வாங்கி வந்துஅவரது சொந்த ஊரின் அருகாமையில் உள்ள சிறுசிறு கிராமங்களுக்கு சென்று வீடுவீடாக போய் விற்றுசம்பாதித்து வந்தார்.

அலைச்சல பார்க்கலண்டா நல்ல வருமானம் தான்.. அல்ஹம்துலில்லாஹ்.. என்று தன் வியாபாரத்தை பற்றி அவரேசொல்வதுண்டு.. அவர் என்னதான் பகட்டுப் பொருட்களை வாங்கி வந்து விற்றாலும் பகட்டாக நடந்துகொண்டதில்லை என்பதே அவரது சிறப்பம்சம்.

மெளத்தாக போவதற்கு ஒரு ஆறு மாதத்திற்கு முன்னால் தான் அவர் தனது மூத்த மகனான ஷரீபை அழைத்து,டேய்.. எங்கூட வந்து தொழில கத்துக்க.. முந்தி மாதிரி என்னால அலைய முடியல.. பண்டய உடம்பா இல்ல..என்று கூறி ஷரீபை அழைத்து சென்று வியாபாரம் செய்ய காட்டி கொடுத்தார்.

வாப்பாவின் மெளத்திற்கு பிறகு ஷரீப் தலையெடுத்து குடும்பத்தை கவனித்து வந்தான். வாப்பாவின் தொழிலைதொடர்ந்து நடத்தியும் வந்தான். நாசர் தனது உம்மாவிடம், ம்மா நானும் படிப்பை நிறுத்திட்டு சிங்கப்பூர் கடைலசேர்ந்துடவா? என்றதும்

அங்கிருந்த ஷரீப் குறுக்கிட்டு, ஏன்.. ஏன்.. அதெல்லாம் ஒண்ணும் வாணாம்.. நீ தான் நல்லா படிக்கிறீல..நம்பளுக்கு தான் மண்டைல ஒரு பலாயும் ஏறல.. நீயாவது படி.. படிப்பெல்லாம் ஒண்ணும் நிறுத்த வாணாம்..என்றான்.

அப்படி சொன்ன அதே ஷரீப் தான் ரெண்டு வாரத்துல வந்துடறேன் என்று சொல்லிவிட்டு வேலை விஷயமாசென்னைக்கு புறப்பட்டு சென்றவன் இரண்டு மாதமாகியும் வீடு திரும்பவேயில்லை.

தாயுள்ளம் படபடத்தது. அவனுக்கு ஏதாவது ஒண்ணுகெடக்க ஒண்ணு ஆயிருக்குமோ.. அல்லாஹ்காப்பாத்துவான்.. என்று அழுது புலம்பினார்.

சாஹா மாமா முஹல்லா வாசிகளை அழைத்து என்ன செய்யலாம்? ஏது செய்யலாம்? என்று கூட்டி யோசனைகேட்டார். போலீசுக்கு போகலாமா? என்று யோசித்து வந்தனர்.

அந்த சமயத்தில் கூட ஷரீப் வரவேயில்லை. ஆனால் அவன் போட்ட கடிதம் ஒன்று பல நாட்களுக்கு பிறகுகிடைத்தது. கடிதத்தில் என்னை தேட வேண்டாம். நான் இனிமே வூட்டுக்கு வரவே மாட்டேன் என்றுஎழுதியிருந்தான்.

சோகத்திற்கு மேல் சோகம் வந்து குடும்பத்தை உலுக்கியது. சாராமாவிற்கு எல்லா பிள்ளைகளை விட ஷரீப் மீதுதான் பிரியம் அதிகம். ஏனெனில் அவன் சாராமாவின் தகப்பானாரை அச்சில் வார்த்தது போல் அப்படியேஇருந்ததே காரணம்.

எங்க வாப்பாவ மாதிரியே இருக்கான் என்று அவர் சொல்லாத நாளே கிடையாது.

அதன் பிறகும் சாராமா துவண்டு விட வில்லை. அவர் அதே தெருவில் இருந்த ஒரு பணக்கார வீட்டிற்கு அன்றாடம்சென்று காலையில் சமையல் வேலை செய்து கொடுத்து விட்டு வந்தார். மாலையில் தோசை, இட்லி, புராட்டாபோன்றவைகள் சுடுவார். நாசரும், ரெஜியாவும் பள்ளி விட்டு வந்ததும் போய் வீடுவீடாக போய் தோசைவேணுமா?, இட்லி வேணுமா? என்று கேட்டு விற்று விட்டு வருவார்கள்.

நாசரையும், ரெஜியாவையும் அப்படி வேலைக்கு அனுப்புவது சாராமாவிற்கு மிகுந்த சங்கடமாக இருக்கும்.

அவர் ரெஜியாவிடம் கேட்பார், ஏன்ம்மா நீ வூடு வூடா போய் விக்கிறது ஒனக்கு வெக்கமா இருக்கா? என்று

அந்த வாயாடி சிறுமி, இல்லம்மா.. வாப்பாவும் இப்படி தானே வீடு வீடா போய் ஜாமான் வித்துட்டு வருவாஹா?என்று கேட்கும் பாருங்கள்..சாராமா துடித்து போய் விடுவார்.

அப்பொழுது அவருக்கு மரைக்காப்பா சொன்னது ஞாபகம் வரும், என் புள்ளைலயே இவ(ரெஜியா) ஒரு மாதிரி..இவ பேச்ச பாரேன்.. நல்லா ஓதுரா.. எனக்கு என்னமோ தெரியல.. இவ நல்லா.. பெரிய ஆளா வருவா.. நீவேண்ணா பாரேன்.. என்று அடிக்கடி சொல்வார்.

மரைக்காப்பா தன் பிள்ளை என்ற பிரியத்தில் சொல்லியிருந்தாலும் ரெஜியா அவர் சொன்ன மாதிரியேமதரஸாவில் குரான் ஓதுவதில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தாள். எங்கேயாவது ஹதீஸ் சொல்கிறார்கள் என்றால் தனதுஉம்மாவை மல்லுகட்டி போவணும் என்று நிற்பாள்.

தலைக்கு துண்டு அணியாமல் வாசலுக்கு செல்வது என்றால் எனக்கு வெக்கமா இருக்கிறது என்றும் அல்லாஅடிப்பான்.. என்று எட்டு வயது சிறுமி சொல்கிறாள் என்றால் அவளது இஸ்லாமிய உணர்வை பார்த்துக் கொள்ளவேண்டியது தான்.

சாராமா நோன்பு பெருநாள், ஹஜ் பெருநாள் போன்ற விசேஷங்களில் பனியான், வட்லப்பம், ஜாலூர் பிராட்டாஎல்லாம் சுடுவார். அவர் சுடும் விசேஷ அலியதிரம் என்ற ஒரு வகை மாவு பலகாரத்திற்கு ஏக கிராக்கி.வெளியூரிலிருந்து எல்லாம் ஆட்கள் சீருந்தில் வந்து எவ்வளவு நேரமானாலும் காத்திருந்து வாங்கி சென்றனர்.கேட்கும் விலையை கொடுத்தனர்.

சாராமா தனி ஆளாக இருந்து குடும்பத்தை கரை சேர்த்தார். சாஹா மாமா வாராவாரம் பக்கத்து ஊரில் இருந்துவந்து பார்த்துக் கொள்வார். பாத்திமாவும் அப்போதைக்கு அப்போது தனது கணவர் சம்பாதித்து வந்து கொடுக்கும்காசில் தனது தாயாருக்கு என்று சேர்த்து வைத்து வந்து கொடுப்பார்.

சாராமா வாங்க மறுப்பார், நீ என்னா செய்வா?.. பொம்பள புள்ள வச்சிருக்கே.. புள்ள பேர்ல சேர்த்து வையேன்..என்று-

பாத்திமா, அதெல்லாம் போட்டுட்டு தாம்மா வர்ரேன்.. நீ ரெஜியா பேர்லயாவது பேங்க்ல போட்டு வையேன்என்பார்.

சாராமா நாசரை கல்லூரி படிப்பு எல்லாம் படிக்க வைத்து இருந்தார். நாசரும் நன்றாக படித்து கணினி பாடத்தில்நல்ல சதவிகிதம் எடுத்து தேர்ச்சியும் பெற்றான். சென்னைக்கு வேலை தேடி புறப்படும் காலம் வந்தது.

சாஹா மாமாக்கு தெரிந்த ஒருவர் சென்னையில் ஒரு வீடு பிடித்து பயண முகவராக தொழில் செய்து வந்தார். அவர்தான் நாசரை அழைத்து, நம்ம எடத்துல தங்கிக்க.. அப்படியே வேல தேடு என்று கட்டாயப்படுத்தினார்.

சென்னைக்கு புறப்படும் போது, ரெண்டு வாரத்துல திரும்பி வந்துடறேன்.. என்றான்.

சாராமாவிற்கு ஷரீபின் ஞாபகம் வந்தது. கண்களில் முத்து முத்தாக கண்ணீர்.

நாசர், என்னம்மா.. என்னாச்சு..? என்றான்.

ரெஜியா குறுக்கிட்டு, சேத்த நானாவும் ரெண்டு வாரத்துல வந்துடறேன்னு தான் சொல்லிட்டு போனுச்சி.. செல்லநானாவும் அதே தான் சொல்லுது.. எங்கே நீங்க வராம லட்டர் மட்டும் தான் வருமோன்னு ம்மா கவலைப்படுறாஹா.. ஏம்மா..? என்றாள்.

நாசர், ம்மா நான் சம்பாதிக்க போறதே உங்களுக்காக தான்ம்மா.. கவலப்படாதீங்கம்மா அல்லாஹ் இருக்கான்..என்றான்.

சாராமா நாகூர் எஜமானின் சந்தனத்தை நாசரின் வாயில் போட்டு விட்டார்.

சாராமா, தம்பி.. எங்கேயும் போறதுக்கு முன்னாடி அங்கே மோத்தி பாவா தர்ஹாக்கு போயிட்டு.. அப்புறம்இன்னொரு தர்ஹா இருக்குன்னு சொன்னீயே.. என்றதும்

நாசர் குறுக்கிட்டு மெளண்ட் ரோடு தர்ஹாவா? என்றான்.

சாராமா, ஆமா வாப்பா.. மறக்காம போய்ட்டு தான் வாப்பா எதுக்கும் போவணும்.. என்றதும்

நாசர், என்னம்மா நான் போவாம இருப்பேனா..? என்றான்..

ரெஜியா, அதெல்லாம் செல்ல நானா தர்ஹாக்கெல்லாம் போவாஹாமா.. ஏன் நானா..? என்றாள்.

நாசர் ஆமாம் என்பது போல் தலையை ஆட்டினான்.

ரெஜியாவிடம், ம்மாவ பார்த்துக்க.. என்று கூறி விட்டு புறப்பட்டான்.

--------------------

அஞ்சலாளர் கொடுத்த கடிதத்தை வாங்கியதும் சாராமாவின் கைகளில் சிறிது நடுக்கம்.

ரெஜியா அதை கவனித்து விட்டு, ம்மா.. என்ன இப்படி கைலாம் நடுங்குது.. ஒண்ணும் இல்லம்மா.. எல்லாம் நல்லசெய்தியா தான் இருக்கும்.. இங்கே கொடுங்க நான் பார்க்கிறேன்.. என்று கடிதத்தை வாங்கி பிரித்து படித்தாள்.

அல்ஹம்துலில்லாஹ் முழுதாக படித்ததும் இருவரும் சொன்ன வார்த்தை இது.

சென்னையில் அவன் வேலை வேண்டி எடுத்த முயற்சிகள் அல்லாஹ்வின் கருணையாலும் பெரியோர்களின்பரக்கத்தாலும் அவனது தாயார் அல்லும் பகலும் அழுது அழுது கேட்ட துவாவினாலும் சரியான பலனைதந்திருந்தது. அதாவது நல்ல இடத்தில் வேலை கிடைத்திருந்தது.

-----------------

சென்னை..

பாந்தியன் சாலையின் அருகே உள்ள குறுக்கு சந்தில் நாசர் நுழைந்தான்..

மோத்தி பாவா தர்கா..

தர்காவில் தஸ்லீமாத்து செய்தான்..தர்காவை ஒட்டி இருந்த பள்ளிவாசலில் அசருக்கு பாங்கு சொன்னார்கள்..அசர்ஜமாத் தொழுகைக்காக இகாமத் கொடுத்தார்கள்..

சஃப்ஃபை நேராகவும் அழாககவும் ஆக்கிக் கொள்ளுங்கள்.. அல்லாஹ் ரஹ்மத் செய்வான் என்றார் இமாம்.

நிற்கும் வரிசை சரியாக இருக்கிறதா என்று பார்த்து அழகாக்கப்பட்டது.. தொழுகைக்கு இமாமை பின் தொடர்ந்துஅனைவரும் தக்பீர் கட்டினார்கள்..

அல்லாஹீ அக்பர்..

ஒரு கால் இழந்து, நீளமான தாடி வைத்த நபர் ஒருவர் வந்து நாசரது இடது பக்கத்தில் இருந்த காலியான இடத்தில்அமர்ந்து தொழுகையில் சேர்ந்து கொண்டார்..

தொழுகையை முடிக்கும் விதமாக முதலில் வலது பக்கமாக திரும்பி ஸலாம் கொடுத்து விட்டு மறுபடியும் இடதுபக்கமாக ஸலாம் கொடுக்க திரும்பிய நாசர் அதிர்ந்தான்..

பக்கத்தில் இருந்த அவர் வேறு யாருமல்ல..சரியாக கணித்து விட்டீர்கள்.. ஆமாம்.. சாட்சாத் ஷரீபே தான்..தனதுசேத்த நானாவான ஷரீபை ஒரு கால் இழந்த நிலையில் பார்த்ததும் நாசர் இடிந்து போய் விட்டான்..

அழுது மடிந்தான்..,என்ன நானா இப்படி.. என்றான். ஷரீபின் அழுகை அவரது தாடியை நனைத்தது. இருவரும்கட்டி தழுவி கொண்டார்கள்.

ஷரீப் எல்லாவற்றையும் விளக்கமாக எடுத்து சொன்னான், ஒரு ஆக்ஸிடண்ட்ல கால் போயிடுச்சு.. என்பொழப்புக்கு நல்லா அலைஞ்சாத் தான் காசு.. என்னால எப்படி அலஞ்சு திரிஞ்சு.. ம்.. நா அங்கே வந்தா ம்மாக்குரொம்ப கஷ்டமா போயிடும்.. அதான்.. எனக்கு என்னம்மோ நல்ல வாழ்க்கை அமைஞ்சுட்ட மாதிரி லட்டர் எழுதிபோட்டேன்.. என்றான்..

ம்மா எப்படி இருக்காஹா?.. ம்மா எப்படி இருக்காஹா? என்னால இரண்டு தடவை தான் எழுத முடியுது. ஆனால்ஷரீப் மூச்சிற்கு முன்னூறு தடவை இதையே தான் கேட்டான். ரெஜியா, பாத்திமா, ஹாஜா மரைக்கான்,பாத்திமாவின் பிள்ளை எல்லோரையும் விசாரித்து அறிந்தான்.

-------------------------

நள்ளிரவு நேரம்..

ஊரே அடங்கி விட்டது..

சாராமாவின் வீட்டு கதவு தட்டப்பட்டது..

சாராமா ரெஜியாவிடம் வாச கதவ யாரோ தட்டுற மாதிரி இருக்கு என்று படுக்கையில் இருந்து எழுந்தார்.

ரெஜியா, ம்மா மை கசமா இருக்கு.. யாருன்னு கேட்டு தொறமா என்றாள்.

சாராமா, யாருமா சாஹாவா..? என்ன இந்த நேரத்துல.. என்று அவராகவே கேட்டுவிட்டு..கதவை திறந்தார்..

நாசர் நின்றிருந்தான்.

சாராமா, என்னட வாப்பா.. ஏன் சொல்லாம கொல்லாம.. ரெஜியா.. செல்லநானாடி.. என்றவர் இன்னொரு ஆள்இருட்டில் நிற்பதை பார்த்து விட்டு இது யாரு? என்றவர் உற்று பார்த்தார். தனது வாப்பாவை போல் இருக்கும் ஓர்உருவம்.. யாரா இருக்கும்..?..

அது ஷரீப் தான்..

ம்மா.. நான் தான்ம்மா.. -ஷரீப் உள்ளே வந்தான் கட்டையால் ஊன்றிக் கொண்டு..

ஷரீப் ஒரு கால் இழந்து வருவதை பார்த்ததும் வந்ததற்கு சந்தோஷப்படுவதா இந்த நிலைமையில் வந்ததற்கு அழுதுதீர்ப்பதா என்று தெரியவில்லை சாராமாவிற்கு..

ரெஜியா சேத்த நானா.. ஏன் சேத்த நானா உனக்கு என்னாச்சு.. ஏன் இப்படி.. என்று வந்து கட்டிக் கொண்டாள்.

ஷரீப், இப்படி யாரும் சங்கடப்பட வாணாம்னு தான்ம்மா நான் வரல.. என்று அழுதான்.

சாராமா பொங்கி பொங்கி வந்த அழுகையை அடக்க விரும்பாமலும் வாயடைத்து நின்றதில் வார்த்தை வராமலும்அதிர்ச்சியில் இருந்தார்.

ரெஜியா, ம்மா தான் சேத்த நானா.. எவ்வளவு கஷ்டப்பட்டாஹா.. தெரியுமா சேத்த நானா.. நீங்க வந்திருந்தாலும்ம்மா உங்களையும் கஷ்டப்படாம நிச்சயமா ம்மா பார்த்து தான் இருந்திருப்பாஹா.. என்றாள்.

ஷரீப் கட்டையை வைத்து விட்டு உம்மாவின் காலடியில் உட்கார்ந்தான்..

ம்மா நான் செஞ்சது தப்பா இருந்தா என்னய அடிச்சிடும்மா.. என்ன ஏசிடும்மா.. என்று உம்மாவின் காலைவிழுந்து கட்டிக் கொண்டு அழுதான்.. துடித்தான்.. ரெஜியாவிற்கு எப்பொழுதோ படித்த ஹதீஸ் ஒன்று ஞாபகத்திற்குவந்தது.

ஹஜ்ரத் முஹம்மது நபி(ஸல்) அவர்கள், உங்கள் தாய்மார்களின் காலடியில் தான் சொர்க்கம் உள்ளது என்றுசொன்ன ஹதீஸ் தான் அது.

துவா

ஸலாமுடன்

- அ. முஹம்மது இஸ்மாயில்(dul_fiqar@yahoo.com.sg)

இவரது முந்தைய படைப்புகள்:

1. தேவை இந்த மனங்கள்

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more