• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடுக்காட்டில் பிரதேப் பரிசோதனை

By Super
|

யானை வாழ்ந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்" எனச் சொல்வார்கள்.

டெஹிவளை மிருகக்காட்சிசாலையிலும், கண்டி எஸல பெரஹராவிலும்தான் யானைகளைப் பார்த்திருக்கிறேன்.

மிருக மருத்துவம் பயிலும் பொழுது, என்றாவது ஒருநாள், ஒரு யானையைப் பிரேதப் பரிசோதனை செய்வேன் எனக் கனவிலும்நினைத்ததில்லை.

பயிற்சி முடிந்து மிருகமருத்துவர் பட்டத்துடன் தொழில் தொடங்கி இரண்டாவது நாளே ஒரு யானையின் மரணம் தொடர்பாக பிரேதப்பரிசோதனைக்குச் சென்றமை என் மிருக மருத்துவத்துறை வாழ்வில் வித்தியாசமான அனுபவம்தான்.

சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு மதவாச்சியில் நான் வேலை ஆரம்பித்த அலுவலகத்தில், அந்திசாயும் வேளை, கடமை முடிந்து வீடுதிரும்பும் நேரம், அலுவலக வாசலில் ஒரு பொலிஸ் ஜீப் வந்து நிற்கிறது.

elephant"பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் மற்றும் மூன்று கான்ஸ்டபிள்களுடன் வந்திறங்குகிறார்.

"டொக்டர், நான் பதிவியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி. பதிவியா காட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு யானையை பிரேதபரிசோதனை செய்யவேண்டும். அந்த யானையை கொன்று தந்தங்களை எடுத்த இரண்டுபேரைக் கைது செய்துள்ளோம். நீங்கள் வந்துயானையை பிரேத பரிசோதனை செய்து அறிக்கை தந்தபின்புதான் அந்த இரண்டு பேருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியும்.அதனால் இப்பொழுதே நீங்கள் எம்முடன் அந்த காட்டிற்கு வரவேண்டும்."

இன்ஸ்பெக்டர் வேகமாகச் சொல்லிமுடித்துவிட்டார்.

இதென்னடா கஸ்டகாலம், வேலைக்குச் சேர்ந்து இரண்டாவது நாளே இப்படியும் ஒரு சோதனை வரவேண்டுமா? என் மனதின் தயக்கத்தைவெளிக்காட்டிக் கொள்ளாமல், சரி...இன்ஸ்பெக்டர்... யானை எப்போது கொல்லப்பட்டது? எனக் கேட்டேன்.

"சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இந்தப் பதிலைக் கேட்டு நான் அதிர்ச்சியில் மூர்ச்சித்து விழாமல் இருந்ததுதான் அதிசயம்."

ஒரு மாதத்திற்கு முன்பு இறந்த யானை தற்பொழுது என்ன கோலத்தில் இருக்கும்? இவ்வளவு நாள்கள் கடத்திவிட்டு இப்போதுவந்திருக்கிறார்களே என்னை எரிச்சல் வாட்டியது...

பொலிஸ் ஜீப் என்னையும் ஏற்றிக்கொண்டு பதவியா காட்டை நோக்கிப் புறப்பட்டது. மதாவச்சிக்கும், பதவியாவுக்கும் இடைப்பட்டபிரதேசம் பசுமையாகக் காட்சியளித்தது. மரங்கள் அடர்ந்த அந்தக் காட்டுப்பாதையில் பயணம் மேற்கொண்டது முற்றிலும் வித்தியாசமானஅநுபவம்தான்.

ஒரு பெட்டிக்கடை அருகே தேநீருக்காக ஜீப் நிறுத்தப்பட்ட பொழுது அந்தக் கடைக்காரன் உபசரித்த பாங்கில் கிராமிய அப்பாவித்தனம்தென்பட்டது.

பத்து ரூபாயை அவனிடம் நான் நீட்டிய பொழுது அதனை வாங்கிக் கொள்ளாமல் இன்ஸ்பெக்டருக்கு இலவசமாகவே ஒரு பிரிஸ்டல்பாக்கட்டை நீட்டினான். மீண்டும் புறப்படும்பொழுது, அந்தக் கடைக்காரன் தனது நண்பர் என்றார் இன்ஸ்பெக்டர்.

பொலிஸாருக்கு நண்பர்களாக இருப்பவர்கள் பாவப்பட்டவர்கள் எனக்குள் நினைத்துக் கொண்டேன்.

இன்ஸ்பெக்டர் குறிப்பிட்ட பதவியா காட்டை அடைந்ததும் அவர் சொன்ன பிரகாரம் இறங்கினோம்.

ஜீப் அதற்கப்பால் செல்லாது. இனி நடந்துதான் காட்டுக்குள் போகவேண்டும். பதினைந்து நிமிடம் நடை.

ஒரு குளம் தென்பட்டது. குளத்தின் வலது பக்கத்தைக் காட்டி இதுதான் யானை என்றார் இன்ஸ்பெக்டர். என்னை மேலும் அதிர்ச்சியடையவைத்தது நான் கண்ட காட்சி. அங்கு இறந்த யானை இல்லை. பெரிய எலும்புக்குவியல். அதனைச்சுற்றி யானையின் ஊனம் வடிந்தசதைப்படலங்கள் பாசிபடர்ந்தமை போன்று தரை முழுவதும். யானை இக்கோலத்தில் இருந்தால் எங்கே பிரேத பரிசோதனை செய்வது,அருகே சென்று பார்த்தேன். மண்டை ஓட்டைத் தவிர இதர எலும்புகள் இருந்தன.

இன்ஸ்பெக்டரிடம் யானையின் தலை எங்கே என்று கேட்டேன்.

குளத்திலே தேடிப்பார்க்குமாறு அங்கு வேடிக்கை பார்க்க வந்த கிராமவாசிகளிடம் சொன்னார் இன்ஸ்பெக்டர்.

இருவர் குளத்தில் இறங்கி சொற்பவேளையில் யானையின் தலையுடன் வந்தனர். பரிசோதித்தேன். இரண்டு தந்தங்களும் சீவப்பட்டிருந்தன.

எனக்கு ஒரு யோசனை உதித்தது. தலையை கோடாரியால் பிளக்குமாறு சொன்னேன். தந்தங்களுக்காக யானையைக் கொன்றவர்களுக்குஅவை கிடைத்தன.

அந்தத் திருடர்களை சட்டத்தின் முன்னே நிறுத்துவதற்கு தேவையான ஆதாரம் யானையின் தலை பிளக்கப்பட்டபொழுதுஇன்ஸ்பெக்டருக்குக் கிடைத்தது.

அது என்ன?

அரை அங்குல விட்டமுள்ள ஈயக்குண்டு.

இன்ஸ்பெக்டர் முகத்தில் பிரகாசம்.

மிக்க நன்றி டொக்டர். இதுதான் தேவை இனி மரணச் சான்றிதழைத் தாருங்கள். நாளைக்கே வழக்குத் தொடரலாம்" என்றார் இன்ஸ்பெக்டர்.பராக்கிரமசாலியான யானையை அன்று அந்தக் கோலத்தில் கண்டது பதவியா பசுமை போன்று மனதில் பசுமையாகப் பதிந்துவிட்டது.

- டாக்டர் நடேசன்(uthayam@ihug.com.au)

இவரது முந்தைய படைப்புகள்:

1. எனது கணவன் எனது நாய்க்கு அலர்ஜி

2. இது ஒரு வகை வசியம்

3. விதையின் விலை பத்தாயிரம் டொலர்

4. அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும்....

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more