• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாசத்தைத் தேடி

By Staff
|

அதிகாலை உறக்கம் இமைகளை திறக்கவிடாமல் அழுத்த,போர்வையால் உடலை இழுத்து மூடிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும், இன்றைக்குவிடுமுறைதானே உறங்கினால் என்ன என உள்மனதில் எழுந்த சின்ன ஆசையையும் உதறிவிட்டு மெல்ல எழுந்து அமர்ந்தான் பரத். பரத் உயர்நிலையில்பயிலும் மாணவன். முகத்தை துடைத்து எழுந்தவன் அருகிலிருந்த கடிகாரத்தில் மணிபார்த்துவிட்டு, அறையிலிருந்து வெளிவருகையில் வீடு நூலகத்தைவிடஅமைதியாயிருந்தது.

பக்கத்து அறையை தட்ட கை எத்தனித்தபோது மனது தூங்கட்டும் என மறுத்தது. பாட்டி சாமான்களோடு சத்தம் இல்லாமல் யுத்தம் செய்துகொண்டிருந்தாள்.

பரத் முகப்பு கதவை திறக்கவும் முந்திய இரவு மழையினால் குளிர்ந்த காற்று மூச்சுவிட முடியாமல் முட்டியது. படிகளை விட்டு இறங்கி வராண்டாவில்சுவற்றில் சாய்ந்தபடி வெளியே நோட்டமிட்டான்.

மழையின் மகிழ்ச்சியை மரங்களும், செடிகளும் மலர்ச்சியோடு கொண்டாடியது. அந்த மகிழ்ச்சியை சகிக்காத பகலவன் படிந்திருந்த நீரை பருக பொங்கி வந்துகொண்டிருந்தான். குளிரின் அடர்த்தி உடலை குறுகச் செய்தது. கைகளை மார்பின் குறுக்கே கட்டியபடி வீட்டிற்குள் வந்தான். பார்வதி பார்த்துப் பார்த்து வாசனைமூக்கை துளைக்க சமைத்துக் கொண்டிருந்தாள்.

டேய் பரத்...ஸூ,ஸாக்ஸை ஊற வைத்து வைச்சா என்ன? வயசு ஏற ஏற பொறுப்பு கூடணும். எத்தனை நாளைக்கு மதுவே செஞ்சி கொடுப்பா? நாளைக்கேஅவளுக்கு கல்யாணம் ஆயிடுத்துன்னா என்ன பண்ணுவே? நீ அவகூட போவியா..? இல்லை..அவ இங்கே பணிவிடைக்கு வருவாளா?

Father and sonகாலையிலையே பாட்டி தன்னை வம்புக்கு இழுக்க வேண்டும் என்பதற்காகவே பேசுவது போல் இருந்தது. அத்தைக்கு அப்படியொரு வைபவம் நடந்தாஎன்ன பண்ணலாம்னு யோசிக்கிறேன்.

அப்படின்னா....என் பொண்ணுக்கு கல்யாணமே நடக்காதுங்கிறீயா?

நான் என்ன கடவுளா? அப்படியெல்லாம் சொல்ல...என் வாயை வீணா கிளறி வாங்கி கட்டிக்காதீங்க. முகத்தை கண்ணாடியில் உற்றுப் பார்த்துக்கொண்டேபேசினான்.

அதான் கோயில்ல வைக்காத குறையா கொண்டாடிட்டு இருக்காளே.

புரிஞ்சிக்கிட்டு புலம்புவதில் பிரயோசனம் இல்ல பாட்டி. விளக்கம் கேட்காம சில விசயங்கள்ல விலகி நிற்கிறது உங்களைப்போல வயசானங்களுக்கும்உன்னைப் போன்ற வயசு பையனுக்கும் நல்லது.

பரத் ஆளில்லைன்னா அதிகமா பேசுறீயே ஏன்?

எல்லாம் நீங்க கற்றுக் கொடுத்த பாடம் பாட்டி. தலைமுடியை பல கோணங்களில் சீவி அழகு பார்த்துக் கொண்டே பாட்டிக்கு பதிலும் கொடுத்தான்.

பரத் பார்வதியின் மகன் வயிற்றுப்பிள்ளை. அவளின் ஓரே மகன் ஆனந்த். மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா சென்ற ஆனந்த் படிப்பு முடிந்த கையோடு, தான்காதலித்து கல்யாணம் செய்து கொண்டதாக செய்தி மட்டுமே அனுப்பினான்.

தன் மகன் தன்னிடமிருந்து பிரிக்கப்பட்டுவிட்டான் என்ற செய்தியில் சுருண்டு போனாள் பார்வதி. அவள் அடைந்த ஆத்திரத்தின் பயன் மருமகளிடயே உறவுஒட்டாமலே நின்றதுதான். வருடங்கள் நகர நகர பரத்தும் தங்கை பவியும் பிறந்தனர். குடும்பம் விரிய விரிய குழப்பம் உருவானது. தேவைகள் அதிகரிக்கதேடலும் அதிகரித்தது. பிள்ளைகளை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு வேலைக்காரியிடம் விடப்பட்டது.

குழந்தைகள் வரவின் குதூகலம் கொஞ்ச நாட்கள் மட்டுமே நிலைத்திருந்தது. மனைவி எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்பது பிடிக்காமல் பிரச்சனைஆரம்பமானது. இல்லறத்தின் இறுக்கம் தளர்ந்தது. அதிக நேரத்தை அலுவலகங்களிலும் வெளியிடங்களிலும் கழிக்கத் தொடங்கினர். வீட்டில் இருக்கும்கொஞ்ச நேரமும் ஒருவரை ஒருவர் குறை கூறுவதிலேயே கழிந்தது. பிள்ளைகள் பாசத்தை தேடி நெருங்கும் போதெல்லாம் பயம் அணைப்போட்டது.

நாட்கள் செல்லச் செல்ல ஆனந்திற்கு வீடு, குடும்பம்,பிள்ளை என்ற உறவே மறந்து போனது. தன் தாயிடம் தவறான வாழ்க்கைத் துணையைதேர்ந்தெடுத்து விட்டதாக தொலைபேசியின் வழி புலம்பினான். பார்வதியின் தூண்டுதலின் பேரில் ஆளுக்கொரு பிள்ளையுடன் விவாகரத்திற்கு விடைகொடுத்தான் ஆனந்த்.

இந் நிலையில்தான் பரத் பாட்டி வீட்டில் விடப்பட்டான். அப்போது அவனுக்கு மூன்று வயது ஆக முப்பது நாட்கள் இருந்தது. பார்வதிக்கு பேரனைக்காணும் போதெல்லாம் மருமகளின் ஞாபகமே எழுந்து நிற்க ஈடுபாடு இல்லாமல் விரோதம் மட்டுமே வளர்ந்து நின்றது.

பரத்தை வளர்த்து ஆளாக்கியதில் தன் வாழ்க்கையையே பணையம் வைத்து ஒவ்வொரு நிமிடத்தையும் பார்த்து பார்த்து செலவிட்டவள் மது. இதில் பார்வதிக்குஉடன்பாடில்லையாயினும் கணவனையும், மகளையும் எதிர்த்து கருத்துக் கூற முடியாமல் நின்றாள்.

வாணலியில் கடுகு பொரிய சால்னாவை எடுத்து ஊற்றிய பார்வதி திரும்பி பேரனை பார்த்து, உன் அப்பா உன்னை ஆஸ்திரேலியாவுக்கு கூட்டிக்கிட்டுபோகப் போறானாம்.

தலையை கைகளால் கோதி அழகு பார்த்தவன், எதிரேயிருந்த கண்ணாடி நொறுங்கி முகத்தில் தெரித்ததைப்போல துடித்துப்போய் திரும்பினான். பார்வதியின் நக்கல்சிரிப்பில் நடுங்கிப்போனான். பாட்டிக்கு பிடிக்காத உறவுகளை பிரிப்பதில் பாரபட்சம் பார்க்க மாட்டாள். தொப்புள் கொடி உறவைத்தான்அறுத்தாங்கன்னா, இப்ப அத்தையையும் எங்கிட்டயிருந்து பிரிக்க போறாங்களா? கண்கள மீறி விழத்துடித்த கண்ணீரை மீண்டும் அண்ணாந்து கண்களுக்குள்ளேயேவிட்டான். எதுவுமே பேசாமல் சோபாவில் தொப்பென்று விழுந்தான்.

அத்தையை எழுப்பலாமா? எண்ணத்தை கைவிட்டு, நம்மை மீறி எதுவும் நடக்காது. திடீரென முளைத்த தைரியத்தில் அன்றைய செய்தித்தாளைப் பிரித்தான்.

பரத்.....அழைத்துக்கொண்டே வந்தார் ராமபத்ரன். பேப்பரில் நுழைந்திருந்தவன், என்ன என்பதைப்போல நிமிர்ந்து பார்த்தான். அருகில் நின்ற தாத்தாவைவேண்டா வெறுப்புடன் நோக்கினான்.

உன் தோழன் சங்வேய் காலையிலேயே பந்தாட கிளம்பிட்டான். நீ போகலை...உன் அத்தை போகக்கூடான்னு தடை ஏதும் விதிச்சிருக்காளா?

அதெல்லாம் கிடையாது தாத்தா. எனக்கு வெளியே வேலை இருக்கு. அதான் போகலை. ஆமா...காலங்காத்தால கால்நடையா காற்று வாங்கபோறதுக்கு முன்னாடி, நேற்று முழுவதும் மூச்சுவிட திணறுவதை நினைச்சி பார்த்தீங்களா?

டேய் அடக்கி பேசுடா..? அத்தை எழுந்து வந்தற போறா...மகளின் அறையை எட்டிப்பார்த்தபடி பேரனிடம் கிசுகிசுத்தார்.

தாத்தா..சுயநலக்காரங்களை நம்பி வியாதியை இழுத்துட்டு வந்தீங்கன்னா கஸ்டப்படப்போறது அத்தைதானே! நீங்க ஒரு ஆஸ்துமா நோயாளிங்கிறதை தினம்தினமா ஞாபகபடுத்த முடியும்.

ஆனந்தின் மனம் மகனை அணைத்துக்கொள்ள துடித்தது. எங்கே விலகிவிடுவானோ என்கிற பயம் எழ தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டான்.ஒவ்வொரு நாளும் வளர்ந்து நின்ற மகனை ஆச்சரிய விழிகளால் அள்ளிப்பருகினான்.

பரத்...நானா சுயநலக்காரன் ? கேள்வியின் ஆழத்தில் ஈரம் கலந்திருந்தது.

தனக்காக மட்டும் வாழ்றவங்களை தியாகின்னா சொல்ல முடியும் . நம்பி வந்தவங்களை நட்டாத்துல தவிக்க விட்டுட்டு தான் மட்டும் தப்பி வந்தாஎன்ன பெயர் தெரியுமா? நம்பிக்கை துரோகி.

என் பிள்ளை வந்ததும் வராததுமா வார்த்தைகள் விளையிங்கிறதுக்காக வாரி கொட்டிடாதே. அவனை பார்த்தாலே பிடிக்கலைங்கிறதுக்காக வீணா ஏன்பிரச்சனை பண்ண கங்கணம் கட்டிண்டு அலையிறே. சற்று கடுமையாக பேரனை கண்டித்தாள் பார்வதி.

பாட்டி...பிரச்சனை நானா பண்றேன். உங்க பிள்ளைதான் ஒவ்வொரு முறையும் ஏதாவது தேடிக்கொண்டு வந்து என்னை கலங்கடிக்கிறார்.

அவன் உன் அப்பா....இது பார்வதி.

அதான் வருடத்திற்கு இரண்டு முறை வந்து ஞாபகப்படுத்திட்டு போறாரே.

பார்த்தீங்களா..? எவ்வளவு திமிரா பேசுறான். பெத்த அப்பன்னுக்கூட பார்க்காம நிக்க வச்சி நேத்து பிறந்தவன் அவமானப்படுத்துறான். இவனைஎன்ன? ஏன்னு? கேட்கிறானா பாருங்க. எல்லாரும் சேர்ந்து தலையில வைச்சி கொண்டாடினீங்க இல்லை. அதான் நாக்குல நரம்பு இல்லாம பேசுறான்.கணவனிடம் ஆதங்கப்பட்டுக்கொண்டாள் பார்வதி.

அம்மா...என் பிள்ளை இவ்வளவு தூரம் பேசுறதையே என்னால நம்ப முடியலை. நான் பதிலா இருக்கும்போது கேள்வி கேட்கிறதுல தவறுஇல்லைம்மா. கட்டுக் கடங்காத பாசத்தினால் உந்தப்பட்டு மகனைத் தன்னோடு சேர்த்து தலையைக் கோதினான் ஆனந்த்.

அந்த தவணை முறை பாசத்தினை வெடுக்கென்று உதறிவிட்டு நகர்ந்து அமர்ந்தான் பரத்.

உன் பிள்ளையை நீதான் மெச்சிக்கணும். தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலைன்னு சும்மாவா சொல்லி வைச்சாங்க. உருவத்தாலதான் அவளையே உரிச்சிவச்சிருக்கான்னு பார்த்தா குணத்திலேயும் அப்படியேவா இருக்கணும். எல்லாம் நான் வாங்கி வந்த வரம்.

பாட்டி....நான் இழந்த உறவை இழுத்து பேசுற இதமா இருந்தா பேசுங்க. என்னை காயப்படுத்தி சந்தோசம் அடைய முடியும்னா காயப்படுத்துங்க. அதற்குமுன்னால, நான் என் அம்மாபோல பிறந்தது குற்றமா? எங்க அம்மாவை அப்பாக்கிட்டயிருந்து நீங்க பிரிச்சீங்களே அது குற்றமா?

பார்த்தியாடா...உன் சீமந்த புத்திரனின் பேச்சை. உன்னை என்கிட்டயிருந்து இவன் அம்மா பிரிச்சா. என் பொண்ணை இவன் என்கிட்டயிருந்துபிரிக்கப்போறான்.

அப்போ கதவ திறந்து வெளிவந்த மது, பரத்....சர்ட் அயர்ன் பண்ணி வச்சிருக்கேன். எழுந்துபோய் குளிச்சிட்டு வெளியே போற வழியப்பாரு. மதுவின்பேச்சுக்கு மறுவார்த்தை கூறாமல் எழுந்தவன் சற்று நேரத்திற்கெல்லாம் மதுவிடம் விடைபெற்று வெளியேறினான். மது சாப்பிடச்சொல்லிவற்புறுத்தியும் மறுத்துவிட்டான்.

அம்மா...நடந்ததை ஒரளவு கேட்டுட்டுதான் எழுந்து வர்றேன். பரத்கிட்ட அப்படி பேச வேண்டிய கட்டாயம் என்ன? நீங்க வார்த்தைகளை கையாண்ட உத்திரொம்ப கேவலமானது. பெரியவங்களா இருக்கிறதால வாய்க்கு வந்தபடி பேசிடக்கூடாது. பேசுறதுக்குன்னு ஒரு விதம் இருக்கு. எடுத்துச்சொல்லி புரியவைக்க வேண்டிய நாமே சரி சமமா பேசலாமா? அந்த பிஞ்சு மனசை ஒவ்வொரு முறையும் ஊன்றிப்பார்த்து ஊனப்படுத்துறல அப்படியென்ன சுகம் இருக்கமுடியும்.

மது.....அம்மாக்கிட்ட ஏன் கோவப்படுறே. நான் வந்ததும் வராததுமா கேள்வி

மேல கேள்வி கேட்டான். அதான் அம்மா அவனை கண்டிச்சாங்களே தவிர வேறொன்றும் இல்லை. உன்னோட திருமண விசயத்துல என் பிள்ளை சகுனியாஇருக்கிறானோன்னு அம்மா நினைக்கிறாங்க. என்னால சில விசயங்களை நிறுத்தவும் நிராகரிக்கவும் முடியலை.

அண்ணா...என்னுடய முடிவை ஏற்கனவே தெளிவா தெரிவிச்ச பிறகு திரும்ப திரும்பபேசுறது கொஞ்சமும் பிடிக்கலை. காலம் கடந்து போன விசயத்தைகட்டாயப்படுத்தி பேசுறதுல என்ன லாபம் இருக்க முடியும்.

பரத்தை காரணம் காட்டிதானே கல்யாணம் வேண்டாங்கிற. அவனை என்கூட கூட்டிட்டு போயிடலாம்னு முடிவெடுத்துருக்கேன்.

சற்று நேரத்திற்குள் அவள் அங்கமே அதிர்ந்து விட்டது. எவ்வளவு சுலபமாக அண்ணன் சொல்லிவிட்டான். இருதயத்தை ஈட்டி கொண்டு குத்திஇழுத்ததைப்போல வலியால் துடித்துப்போனாள். பரத் என்னை விட்டு போயிடுவானா ? நான் எப்படி....மனதை அமைதியான நிலைக்கு சமாதானப்படுத்தமுயன்று தோற்றாள்.

அண்ணா...அதிர்ந்து பேசினாக்கூட அடுத்தவங்களுக்கு வலிக்கும்னு நினைக்கிற நீயா இப்படி பேசுற. யாரோ ஆட்டி வைக்கிறாங்கங்கிறதுக்காகஅவசரப்பட்டியன்னா அவஸ்தை உனக்குத்தான். ஒவ்வொரு தாயும் பிள்ளைகளின் வாழ்க்கை செதுக்கிய சிற்பமா இருக்கணும்னுதான் நினைப்பா.அந்தவிதத்துல விதிவிலக்குக்கு இடமிருக்குமா?

அப்படின்னா நான் நல்ல அப்பா இல்லைங்கிறீயா?

அண்ணா...நீ பரத்துக்கு நல்ல அப்பாவா இருக்க முடியாதுன்னு சொல்லலை. திடீர் பாசம் திசையையே மாத்திடும்னுதான் சொல்றேன். நான் வளர்த்தவனை நாலுபேர் வளர்த்த விதம் சரியில்லைன்னு பேசிடக்கூடாதுன்னு நினைக்கிறது தப்பா..?

மது... வியாக்கியானம் பேசுறதை நிறுத்திட்டு உன் நல்லதுக்குதான்னு புரிஞ்சுக்கிட்டு நடக்கிற வழியைப்பாரு.

எதும்மா நன்மை..? அண்ணனை விவாகரத்து பண்ணச் சொல்லி தூண்டியது நன்மையா? பரத்தை அண்ணிக்கிட்டயிருந்து பிரிக்க சொன்னது நன்மையா? பிஞ்சு மனசுலநஞ்சை மாறி மாறி விதைக்கிறது நன்மையா? உங்க அகராதியில நன்மைன்னா பாவம்னு அர்த்தம். பெத்த பிள்ளைகளோட மனசுல என்ன இருக்குன்னுதெரிஞ்சுக்கிட்டு அவுங்க போக்குல விட்டு கூடவே இருந்து உதவுறவதான் உண்மையான தாய். இதை குத்திக்காட்டணுங்கிறதால சொல்லலை. குழப்பத்தைஉண்டு பண்ணிடாதீங்கன்னுதான் சொல்றேன்.

வாழ்க்கைங்கிற வாகன பயணத்துல வளைய வேண்டிய இடத்துல வளைந்தும், இழுத்துப் பிடிக்க வேண்டிய இடத்துல பிடித்தும் நிதானமா போகணும். மீறிப்போனாவாழ்க்கையே தொலைஞ்சிடும்னு அறிவுரை சொல்ல வேண்டிய பொறுப்பு தாய்க்கு உண்டு. ஆனா இங்கே எல்லாமே தலைகீழாத்தான் நடக்குது.

மது...நாலுபேரை நல்வழிப்படுத்துற ஆசிரியர் தொழில்ல இருக்கிற எனக்கே உபதேசம் கூறுகிற அளவுக்கு பக்குவப்பட்டுட்டே போலிருக்கே.உலகத்துல வாழ்றவங்க எல்லாம் வாழ்ந்தவங்க பட்டியல்ல வந்துட முடியாது. உபதேசமும் அப்படித்தான். பெத்தவன் பிள்ளையை கேட்கும்போது பேச்சுக்குஇடம் ஏன்?

அம்மா............மது.

மது...என்னோட கடந்த கால வாழ்க்கையை விமர்சித்து நடக்கப்போறது எதுவுமில்லை. பரத்துக்கு தரமான கல்வியையும், வளமான வாழ்க்கையையும்பெத்தவனால மட்டும்தான் அமைத்து தரமுடியும். நான் படித்த படிப்பு, சம்பாதிக்கிற பணம், என்கிட்ட கொட்டி கிடக்கிற பாசம் எல்லாம் என்பரத்துக்கு உபயோகப்படணும்னு நினைக்கிறேன்.

ஏண்ணா..மூன்று வயசுல பயன்படாத பாசம் பதிமூன்று வயசுல மட்டும் பயன்படும். நிலத்துல விதை போட்டா முளைக்கத்தான் செய்யும். முளைத்த செடியைஉரம், தண்ணீர் போன்றவற்றால் பாதுகாக்கணும். அப்பதான் உனக்கு சொந்தமாகும். நிலத்துல விதை போட்டுட்டே என்பதற்காக திடீரெனமரத்துமேல கை வைச்சியன்னா, பார்த்து பார்த்து வளர்த்தவங்க சும்மாவா இருப்பாங்க..

அப்படின்னா......!

மரத்தை வைத்த காரணத்துக்காக வேரோடு பிடுங்கி எடுத்துட்டு போறது நியாமா?

அப்போ..என் பிள்ளை எனக்கு சொந்தமில்லைன்னு சொல்ல வர்றீயா?

அண்ணா.அந்த அர்த்தத்துல நான் எதுவுமே பேசலை. என்னோட உணர்வுகளை கொஞ்சம் புரிஞ்சுக்கங்க. பத்து மாதம் வயித்துல சுமந்து சில நிமிடம் சுகமானவலியை அனுபவித்து குழந்தையை பெறுபவளுக்கு தாய்ன்னா, பத்து வருசமா மனசுல சுமந்து ஒவ்வொரு நாளும் இனம் புரியாத வலியின் வேதனைஅதிகரிக்க அதிகரிக்க இறக்கி வைக்க முடியாம தவிக்கிற எனக்கு என்ன பேரு...?

மது..என் மனைவிக்கிட்டயிருந்து பரத்தை பிரிச்சப்பக்கூட அதிகம் கடினம் தெரியலை. ஆனா, நீ ரொம்ப கேள்வி கேட்குற. அடுத்தவங்களுக்குஉரிமையான உடைமையின் மேல் ஆசைப்படுறது நியாயமாபடுதா...?

அண்ணா....வார்த்தைகள் வழுக்கி வாய்குள்ளேயே விழுந்தது. கண்கள் தடுமாறி நீர் தம்பி நின்றது.

அப்பா...மீனுக்கு தண்ணீலதான் பாதுகாப்புன்னு தெரிஞ்சிருந்தும் தரையில போட துடிக்கிற அண்ணன்கிட்ட தர்க்கம் செய்ய விருப்பம் இல்லைப்பா. பரத்தைகூட்டிட்டு போறதால எனக்கு முகூர்த்தகால் ஊனமுடியும்னு நினைச்சீங்கன்னா, அது உங்களோட முட்டாள்தனம். பரத் நல்லாயிருக்கனுங்கிறதுக்காகஅவனை இழக்கிறது பெரிய விரயமா படலை. அவன் விருப்பப்பட்டால் தாராளமா போகட்டும்.

தன் பாசத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நுழைந்து சுவரில் சாய்ந்தபடி தேம்பி தேம்பி அழுதாள்.

ஆனந்த்...சாப்பிட்டுட்டு ஆக வேண்டியதை பாரு. கொஞ்ச அவசர வேலை இருக்கு வெளியே போய்ட்டு வந்துர்றேன். பார்வதி மகனிடம் கூறிவெளியேறினாள்.

ஹாலில் அப்பாவயும் மகனையும் தவிர யாரும் இல்லை. அப்பா...நீங்க எதுவுமே பேசலையே ஏன்? நான் எடுத்த முடிவு சரிதானே அப்பா. தனிமையில்வாடும் மனதுக்கு மருந்தா மகனை அழைச்சிட்டு போறதுல தவறு இருக்கிறதா தெரியல.

நிறுத்துடா....போதும். இதே முடிவை பத்து வருசத்துக்கு முன்னாடி எடுத்திருந்தியன்னா தலை நிமிர்ந்து பாராட்டியிருப்பேன். தோள் மேல் போட்டு வளர்க்கவேண்டிய நேரத்துல தூர நின்று வேடிக்கை பார்த்த நீ, தோள்ல உன் கைபோட்டு நிற்கிற அளவுக்கு வளர்ந்த பிறகு தூக்கிட்டு போக துடிக்கிறநியாயமாடா? என்னுடைய வார்த்தைகளுக்கு உன் அம்மாகிட்ட வரவேற்பு இல்லாததனாலதான் நான் பேசுறது கிடையாது. பரத்துக்காக பேசவேண்டிய கட்டாயத்துல இருக்கேன்.உ ன் மகன் வருவான்னு எப்படி நம்புற?

அப்பா..அவன் என் பிள்ளை. வரமாட்டான்னு எப்படி சொல்ல முடியும்...?

என் பிள்ளையா முதல் முதலா நல்ல கேள்வியா கேட்டுருக்கே. ஆனந்த்...அதிகமா ஆசைப்பட்டு அழிவைத் தேடிக்காதே. மூன்று வயசுல உறவுகளைமுழுமையா உச்சரிக்க தெரியாதவனா கொண்டு வந்து விட்டே இல்லையா?

ஆமாம். அதுக்கென்ன இப்ப...

பட்டப்படிப்பை பகுதி நேர படிப்பாக மாத்திக்கிட்டு பரத்தை விழிக்குள் மணியா பார்த்துக்கிட்டது யாரு? கோழி தன் குஞ்சுகளை இறக்கைக்குள் வைத்துபாதுகாப்பது மாதிரி பாதுகாத்தவ யாரு? அன்பையும், பாசத்தையும் உணர்வு மூலமா புரிய வைத்தது யாரு? பரத்தோட சந்தோசத்தையும், துக்கத்தையும்தன்னுடையதாகக் கருதியவள் யாரு? அவளுடய இளமை, ஆசை, கற்பனை, தனிப்பட்ட சந்தோசம் இதையெல்லாம் யாருக்காக இழந்தா? சொல்லுடாஆனந்த்....சொல்லு. சொற்களோடு சொற்கள் இணைந்தால்தான் முழுமையான வாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளும் அப்படித்தான்.

ஆனந்த்...பரத்தை கட்டாயப்படுத்தினீயன்னா, மது அமைதியா இருக்கமாட்டாங்கிறது உண்மை. இதுக்கு மேலயும் அம்மா வார்த்தைகளைவேதவாக்கா கருதினா விருப்பப்படி செய். போட்டி போட்டு விரோதத்தை வளர்க்காம பிள்ளையின் நலம் கருதினா, இங்கே உள்ள அதே கம்பெனிக்குட்ரான்ஸ்பர் வாங்கிட்டு வந்துரு. மதுவின் பக்கம் குவிந்துள்ள நியாயங்கள் முறையானதா? யோசனை பண்ணிப்பாரு புரியும்.பரத்துக்கு உன்மேல உள்ள பாசம்முற்றிலும் போகக்கூடாதுன்னு நினைச்சியன்னா நல்ல முடிவா எடு.

ராமபத்ரன் தன் அறைக்குள் நுழைந்து தாழிட்டுக்கொண்டார். ஆனந்த் நெற்றி சுருக்கத்தில் எதையோ தேடி விரல்களால் தேய்த்தான்.

இக்கதை ஏப்ரல் 20, 2003 இல் மலேசிய தமிழ் நேசனில் பிரசுரிக்கப்பட்டது.

-சுஜாதா சோமசுந்தரம், சிங்கப்பூர். (s_sujathaa@yahoo.com.sg)

இவரது முந்தைய படைப்புகள்:

1. துப்பாக்கி முனையில்......

2. சிதைந்த கனவுகள்

3. ஊருப்பொண்ணு

4. கருவறை சொர்க்கம்

5. வாலிபத்தின் வாசலில்

6. தெளிந்த மனம்

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: feedback@thatstamil.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more