For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடக்கம்

By Super
Google Oneindia Tamil News

மூன்று பெண்களுக்கும் ஒரு ஆணுக்கும் தந்தையான முருகுப் பிள்ளை அப்பாவின் உடல் அந்த மரவாங்கின் மேல் வளர்த்தப்பட்டிருந்தது.

தலைமாட்டில் கணவனை இழந்த இரண்டாவது மகள் தூங்கி வழிவதும் நிமிர்ந்து பிரேதத்தைக் கவனிப்பதுமாக இருக்க, முருகுப் பிள்ளைஅப்பாவின் மருமகள் கால்மாட்டில் உட்கார்ந்து வாங்கோடு தலையைச் சாய்த்துக் கொண்டு அரைகுறைத் தூக்கத்தில் இருந்தாள். நேரம்அதிகாலை இரண்டுக்கும் மூன்றுக்கும் இடையில் இருக்கும் பேரப் பிள்ளைகள் ஆங்காங்கு பாய் விரித்து நல்ல நித்திரையாய்க் கிடந்தனர்.

இரவு பதினொரு மணியளவில் முருகுப் பிள்ளை அப்பாவின் உயிர் பிரிந்து விட்டது. தங்களது செளகரியம் கருதி, இப்ப அயலட்டைக்குத்தெரிய வேண்டாம் என்று எச்சரிக்கை செய்து விட்டார்கள் அனுபவசாலிகள். எனினும் இந்த இரண்டு பேர் மட்டும் மொக்குத் தனமாகபிணம் காத்துக் கொண்டிருந்தார்கள்.

தகப்பனின் உயிர் பிரிவதைக் கண்டதோடு தலையைச் சுத்துது என்று சொல்லி விட்டு போன மூத்த மகள் இன்னும் திரும்பவில்லை.இரண்டாவது குழந்தைக்கு வயிற்றோட்டமென்று போன இளைய மகளையும் காணவில்லை. அப்பாவின் உடல் நிலையோசாதாரணமானதல்ல. கை கால்கள் வீங்கி வெடித்து நீர் வடிந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே நெடி சாதுவாக வீசத் தொடங்கியதைநெருக்கமானவர்கள் உணர்ந்து கொண்டனர்.

ஆனால் யாரும் யாருக்கும் தெரியப்படுத்துவதாக இல்லை. எல்லோர் முன்னிலையிலும் குளிப்பாட்டி வருத்தக் கேட்டின் தாற்பயத்தை ஊர்கதைக்க வைக்கக் கூடாது.

இராத்திரி அப்பாவின் உயிர் பிரிந்த போது அருகில் நின்று கண்களை மூடி விட்ட வெள்ளைப்பெடி என்ற வேந்தனையும், கால் விரல்களைப்பிணைத்துக் கட்டி, உடலைத் துப்புறவு செய்து உடுப்பி போட்டு விடுவதற்கு உதவி செய்த அவனது சினேகிதப் பெடியங்கள் மூவரையும்இராத்தியே ஏற்பாடு செய்திருந்தாள் அக்கா.

காலை ஆறு மணியாவதற்குள் தூக்கிச் சென்று மறைவிடத்தில் குளிப்பாட்டி மிகக் கவனமாக ஈரம் உலர்த்தி புதிய ஆடைகள் அணிவித்து,மீண்டும் மர வாங்கில் கொண்டு வந்து வளர்த்தி இன்னும் வேண்டிய வாசனைத் திரவியங்களை எல்லாம் தெளித்தும் அப்பியும்பார்க்கிறவர்களுக்கு எதுவுமே புலப்படாத வண்ணம் மிக அழகாக அப்பாவின் உடல் காட்சி தர வைத்திருந்தார்கள். விடிந்து விட்டது.

அதிக நேரம் வைத்திருக்க முடியாத காரணத்தால் சுறுசுறுப்பாகக் காரியங்கள் எல்லாம் நடந்தன. ஊரெல்லாம் அறிவிக்கப்பட்டு, உற்றார்உறவினர் நண்பர்கள் புடை சூழ ருகுப்பிள்ளை அப்பா இறுதி யாத்திரை புறப்படப் போகிறார்.

வெள்ளை ஆச்சி திடீரென்று செத்தபடியால் கிழவனுக்கும் என்ன நடக்குதோ தெரியாதெண்டு எழுதாமல் இருந்த காணிகளுக்கெல்லாம்கிழவரை இணாப்பி நேர காலத்தோடு கையெழுத்து வாங்கி விட்டார்கள்.

இண்டைக்கு கொள்ளிக் கடமைக்கு ஆளில்லாமல் இழுபறியாய்ப் போச்சுதாம். கொள்ளிக்கு உத்துக் காறன் வெளிநாட்டிலை. ஊலை நிண்டமுரண்டு மருமகன்மார் கூட உயிர் போற நேரத்திலை அருகில் இல்லையாம். மூத்தவளைக் கொள்ளி வைக்கச் சொல்லிக் கேட்க, ஆவணிமுதல் நாள் மகளின்ரை கலியாணம் - துடக்குக் கலக்க முடியாதெண்டு சொன்னாளாம். இளையவளைக் கேட்க, புதிசாகக் கட்டின வீடு குடிபூர்வையை பற்றிச் சொல்லி மறுத்துப் போட்டாளாம் .. முருகுப் பிள்ளை அப்பா புறப்படுவதற்கு முன்னமே இந்த இழுபறி விடயம கசிந்து,வந்திருந்த சனத்தின் வாய்க்கு நல்ல வாய்ப்பாகிப் போய் விட்டது.

வெள்ளை ஆச்சி ஆறு வருடங்களுக்கு முன்னமே போய்ச் சேர்ந்து விட்டா. முருகுப் பிள்ளை அப்பாவுக்கு முன்னம் பூவோடும்,பொட்டோம் தான் போய் விட வேணுமெண்டு அவ விரும்பின மாதிரியே அது நடந்து விட்டது. வெள்ளை ஆச்சி போன பிறகு முருகுப்பிள்ளை அப்பாவின் மனம் தனிமைக் கொடுமையை அனுபவித்து வந்ததை அவரது நடத்தைகள் எடுத்துக் காட்டின.

வெள்ளை ஆச்சி தனது குல தெய்வங்களிடம் வேண்டிக் கொண்டது மாதிரி முருகுப் பிள்ளை அப்பாவும் சில கோரிக்கைகளை விடுத்துவந்தார். தன்னுடைய உயிர் இயற்கையாக போய் விட வேண்டும் என்றும் தன்ரை கட்டையை ஆராவது புண்ணியவான் நல்ல முறையில்அடக்கம் பண்ணி விட வேணும்என்றும் தனது குல தெய்வமாகிய வயிரவடம் இரவு பகல் விண்ணப்பித்து வந்தார்.

முருகுப் பிள்ளை அப்பா நல்ல திடகாத்திரமான மனிதர். என்ன பிரச்சினைகள் இருந்தாலும் கிழவர் சாப்பாட்டு விசயத்தில் பூரண அக்கறைசெலுத்தி வந்தார். அதன் பலாபலன்தான் பத்துப் பனிரெண்டு வருட மூட்டு வலியால் அவத்தைப்பட்டு நடை தளர்ந்து வந்த இந்தக் காலகட்டத்திலும் பொல்லுப் பிடித்துக் கொண்டு வெள்ளிக் கிழமைகளில் ஊர்ந்து ஊர்ந்து தன்னும் வயிரவர் கோவிலுக்குப் போய் வருவார்.

தன்னோடு வந்து இருக்கும்படி அக்கா வலியுறுத்தியும், கிழவரோ, தானும் கிழவியும் வாழ்ந்த அந்தக் கொட்டிலில் இருந்துதான் இறுதிப்பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென்ற பிடிவாதத்தோடும் கணவனை இழந்து விட்டு இரண்டு பிள்ளைகளோடு சிரமப்படும் அக்காவுக்குமேலும் சுமையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தோடும் இங்கேயே தங்கி விட்டார்.

வெளிநாட்டில் உள்ள மகனின் மனைவி, தனது மாமனார் முருகுப் பிள்ளை அப்பாவை ஒரேயொரு மருமகள் என்ற தன்னுணர்வுடனும்பொறுப்புடனும் கவனித்துக் கொண்டு வந்தாள். அடிக்கடி அவரைப் போய்ப் பார்த்து என்ன ஏதெண்டு விசாரிப்பதும்அவருக்குவிருப்பமான உணவுப் பண்டங்களைச் சமைத்துக் கொண்டு போய் அவருக்குக் கொடுப்பதும் அயலட்டையில் உள்ளவர்களுக்குத் தெரிந்தவிடயம்.

தனது கணவர் பணம் அனுப்பும்போதெல்லாம் அப்பாவுக்கும் ஒரு தொகையைக் கொடுத்த விட்டு அதைக் கணவனுக்கும்தெரியப்படுத்துவாள். என்னதான் இருந்தாலும் ஒரே ஒரு மகன் என்டு இருக்கிறான் அதுவும் வெளிநாட்டிலை உழைக்கிறான் தன்ரைதேப்பனைக் கவனிக்கிறதில்லையாம் என்றுதான் ஊரவர்களும் வெளிநாட்டிலுள்ள அவனது உறவினர்களும் பேசிக் கொண்டார்கள்.ஆனால் அவனோ எவரது நினைப்புக்கும் பேச்சுக்களுக்கும் எதிராக தன்னை நியாயப்படுத்திக் காட்ட முனைந்ததாகத் தெரியவில்லை.

மாறாக, மனப்பூர்வமாக தனது தந்தையிடம் அன்பு வைத்திருந்தான். கிழவனும் அவன் மீதும் அவனது மனைவி மீதும் அளவற்ற அன்புவைத்திருந்தார். அதனால் மகனின் பேரப் பிள்ளைகளைக் காணும்போதெல்லாம் தானும் ஒரு குழந்தையாகி விடுவார். குழந்தைகளிடம்தனது மகனைப் பற்றி கேள்வி மேல் கேள்விகளாகக் கேட்டு விசாரிப்பாராம். அதேபோலவே அவனது மனைவியும் அவனோடுதொலைபேசியில் கதைக்கும்போது தனது மாமனாரைப் பற்றிய சின்னச் சின்ன சேதிகளையும் ஒப்புவிப்பாளாம். இதனால் அவன் தனதுதந்தையாரோடு அடிக்கடி நேரடியாகப் பேசாது விட்டாலும் கிழமையில் ஒரு தடவையேனும் வீட்டுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு உடனுக்குடன் ஊர் விடயங்களையும் தகப்பனின் சுகங்களையும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.

மனைவியின் அறிவிப்பும் தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் விரைவும் ஓரளவுக்கேனும் தனது தந்தையை கவனித்துப்பராமரிக்கும் திருப்தியை அவனுக்குக் கொடுத்திருந்தது. இரண்டு வாரத்திற்கு முன் கொழும்புக்கு வந்திருந்த தனது அக்காவின் மகனோடுஅவன் கதைத்தான். அவனுக்கு ஒரு செல்லப் பிள்ளை போலவும், ஒரு நண்பனைப் போலவும் பழகி வரும் அக்காவின் மகன் திடீரெனஅந்தச் செய்தியைச் சொன்னபோது அவனுக்கு இதயம் சுருங்கி விட்டது.

அம்மப்பாவுக்கு கால்கள் வீங்கி வெடித்து நீர் வடியத் துவங்கியிருக்கு மாமா. உங்களுக்குத் தெரியாமல் மறைச்சுப் போட்டுதென்டுஎங்களைத்தான் பேசுவீங்கள். அதுதான் அம்மா உங்களுக்கு .. சொல்லச் சொன்னாவ .. ஐயாவை ஒரு அநாதை போல விட்டு விட்டு நான்இங்கே பாராகமாக இருக்கிறேனா? பூதாகரமாக அவனுக்கு முன் எழுந்து நின்ற அந்தக் கேள்வியால் அவன் உடல் குறுகியது. கண்கள்இலேசாகப் பணித்தன. அவனுக்கும், மருமகனுக்கும் இடையே சில விநாடிகள் உரையாடல் எதுவும் இடம் பெறவில்லை. மருமகன்மறுமுனையிலிருந்து மாமா! .. என்றான். மாமா, நீங்கள் யோசிச்சு கவலைப் படாதேங்கோ நாங்கள் அம்மப்பாவை வடிவாகக்கவனிக்கிறம்தானே .

Old Manதன்னை ஆறுதல் படுத்துவதற்காக மருமகன் சொல்வதாக நினைத்தான். கொழும்புக்கு வந்த காரியத்தை முடித்துக் கொண்டு நாளைக்குமருமகன் ஊருக்குப் போவதாகவும் கூறினான். மறுநாள் .. நெடு நேர முயற்சிக்குப் பின் தொலைபேசியில் தொடர்பு கிடைத்து அவன் தனதுமனைவிடன் கதைத்தான். தனது மாமனாரின் நிலைமை பற்றி மனைவி சொன்னாள். மாமாவுக்கு இப்ப கொஞ்சம் பரவாயில்லை. டொக்டர்சின்னத் தம்பி வந்து மருந்து கொடுத்தவர். புண்ணுக்கு மருந்து கட்டினவர். இப்ப புண் காஞ்சு இருக்கு. நீர் வடியறதும் குறைவு என்றுசொன்னாள்.

அவனது மனம் சற்று ஆறுதல் அடைந்தாலும், வயோதிப காலத்தில் கால் வீங்கி வெடித்து நீர் வடிவது-ஐயாவுக்கு மேலும் புதிதாக வந்துசேர்ந்த வருத்தம் என்பதை நினைத்தபோது அவன் மிகவும் கவலை அடைந்தான். இவ்வளவு காலம் மூட்டு வலியாலை எவ்வளவுவேதனைகளைத் தாங்கிக் கொண்டிருந்த ஐயாவுக்கு இப்ப இந்த வருத்தம் வந்து சேர்ந்திருக்கே. இந்த நேரத்தில் ஊரில் தானும் தங்கியிருந்துதந்தைக்கு பணிவிடைகள் செய்ய வேண்டும் என்றும் துன்பமான இந்த நேரத்தை தானும் பங்கு கொள்ள வேண்டும் என்றும்ஆதங்கப்பட்டான்.

இரண்டு வாரங்கள் கழிந்திருக்கும். தந்தையார் வழமை போல எழுந்து நடமாடத் துவங்கி விட்டிருந்தார். அவன் முருகுப் பிள்ளைஅப்பாவோடு கதைப்பதற்காக அதிகாலை 3 மணிக்கு எழுந்திருந்து முயற்சி செய்து கொண்டிருந்தான். ஒரு மணித் தியாலமாகதொடர்ச்சியாக இலக்கங்களை அழுத்திக் கொண்டே இருக்கிறான். மனம் சலிக்காது முயற்சி செய்ததில் ஒருவாறு தொடர்பு கிடைத்தது.மனைவிதான் கதைத்தாள். மனைவியின் சுக நலங்களைக் கேட்டதோடு நிறுத்தி விட்டு உடனடியாக கைத் தொலைபேசியை எடுத்துச் சென்றுதனது தகப்பனார் வீட்டில் அவரிடம் கொடுக்கும்படி சொன்னான். ஆனால் ஊரில் ஒரு சில மனித்தியாலங்கள் மின்சாரம்துண்டிக்கப்பட்டிருந்ததால், கைத் தொலைபேசியில், சார்ஜ் குறைந்து போய் இருப்பதால் இப்போது பேச முடியாது என்று மனைவிசொன்னாள். அவனுக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது.

ஐயாவை இந்த நேரத்தில் வீட்டுக்குக் கூப்பிட்டு சிரமப்படுத்தக் கூடாது .. சாய் .. இப்ப அங்கை நல்ல பனியாகவும் இருக்கும் ... தனக்குள்யோசித்தவன் மனைவியிடம் விடைபெற்றுக் கொண்டு, தொலைபேசியை சடார் என்று வைத்து விட்டு வேலைக்குப் போவதற்கு ஆயத்தம்செய்யத் தொடங்கினான். அவனுக்கு வேலைத்தலத்தில் மன ஒருமைப்பாட்டோடு வேலை செய்ய முடியாது இருந்தது. எனினும் ஒருவாறுஅன்றைய பொழுதை இழுத்துப் பறித்து முடித்து விட்டு வீட்டுக்கு வந்தான். உடை மாற்றி விட்டுக் குளிப்பதற்கு ஆயத்தம் செய்தான்.அப்போது தொலைபேசியில் மணி ஒலித்தது. தூக்கினான். அவனது மனைவி பேசினாள்.

இஞ்சாருங்கோ அப்பா, மாமாவுக்கு கடுமையாக இருக்குது. நீங்கள் கொஞ்சநேரம் கழிச்சு எங்க வீட்டுக்கு ஒருக்கால் போன் அடியுங்கோ -கவலைப்படாமல் இருக்கும்படி ஆறுதல் கூறி விட்டு போனை வைத்து விட்டாள். ஒரு கணம் உலக இயக்கம் தடைப்பட்டது அவனுக்கு.எவ்வளவு நேரம் அப்படியே தொலைபேசிக்கு முன் இருந்தானோ தெரியவில்லை. இதயம் பலமாக அடித்தது. கண்கள் இருண்டு கொண்டுவந்தன.

இத்தனை காலமாக - அதிலும் அவனது தாயாரின் மறைவுக்குப் பின்னர் - வகுத்து வைத்திருந்த திட்டங்கள் அனைத்தும் தகர்ந்து நீறாகின.அவனது முன்னேற்றத்துக்காவும், மகிழ்ச்சிக்காகவும் எவ்வளவு கஷ்டங்களை தாங்கியும் இறுதியில் ஒருவித பலாபலனையும்அனுபவிக்காமலும் அவனது வாழ்நிலைச் சிறப்புகளையும் கண்டு மகிழாமலும் தனது பிரசன்யமற்ற சூழலில் கண்ணை மூடி விட்ட அவனதுதாயின் மறைவுக்குப் பின்னர் - இந்த அகதி வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

தனது சட்ட ஆலோசகர் மூலம் தனது பகுதி எம்.பி. மூலம் எத்தனையோ முயற்சிகள் செய்தான். தாயக அரசியல் நிலையில் கண்டமாற்றங்களை சாதகமாக்கி ஒரு தடவை தனது தகப்பனாரையாவது போய்ப் பார்த்து வர வேண்டும் இல்லையேல் நாட்டுக்கே போய் விடவேண்டும் என்று தீர்மானித்தக் கொண்டான். அவனது இந்தத் திட்டம் நிறைவேறாமல் சரிந்து விட்டது. இப்படி ஒரு அதிர்ச்சிச் செய்தியைக்கேட்பேன் என்று சிறிதும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் கிழவனை மிகச் சுகமாக இருப்பதாக மனைவிசொன்னாள். இந்த இரண்டு நாட்களுக்குள் என்ன நடந்தது.? சுகயீனம் சற்று அதிகமாவதும் பின்னர் சுகமடைந்து வருவதும் மிகச்சாதாரணமாக நிகழ்ந்து வந்தது. இந்த முறை இப்படித் திடீரென்று ..

ஐயா இன்னும் ஒரு பேரப்பிள்ளையின் திருமணத்தையும், கண்ணால் காணேல்லை. மூத்த அக்காவின் மகளுடைய திருமணத்தைக்கண்டுகொண்டுதான் போவார் என்று மனதை அவன் திடப்படுத்தி வைத்திருந்தான். இப்படி ஒரு ஆன்மீக வாதியாக நம்பியிருந்த அவன்,கிழவன் போய் விட்டார் என்ற செய்தியை அறிந்ததும் கல்லாய் இறுகிப் போனான்.

முருகுப் பிள்ளை அப்பாவின் இறுதிக் கிரியையகள் யாவும் சிறப்பாக நிறைவேற்றப்பட்டு விட்டன. கிழவனின் உயிர் பிரிந்த நேரத்திலிருந்துஇன்று இறுதி கிரியைகள் நடைபெரும் வரைக்கும் மனைவி வீட்டோடு அடிக்கடி தொடர்பு கொண்டு ஒவ்வொரு காரியமும் எப்படி எப்படிநடைபெற்றுக் கொண்டிருக்கிறது - வீட்டில் எந்தப் பகுதியில் பிரேதம் வைக்கப்பட்டிருக்கிறது, சந்தைக்குப் போனது யார்? தோயவார்த்தவர்கள் யார்? கொள்ளி வைத்தது யார், தனது பிள்ளைகள் இருவரும் பந்தம் பிடித்தார்களா, என்றெல்லாம் அறிந்து கொண்டான்.கடைசியாக அவன் தனது அக்காவோடும் கதைத்தான்.

அக்கா சொன்னாள் .. தம்பீ! நீ ஒண்டுக்கும் கவலைப்படாதை. இங்கை எல்லாம் நல்ல மாதிரி காரியங்கள் ஒப்பேற்றிப் போட்டம்.அம்மாவின்ரை காரியத்துக்கும் நீ இல்லை, ஐயாவுக்கும் இல்லை எண்டு கவலைப்படுவாய்தான். என்ன தம்பி செய்யிறது. ஒவ்வொருத்தரும்குடுத்து வைச்சது அவ்வளவுதான் நீ வெளிநாட்டிலை இருந்து கொண்டும் அம்மா ஐயாவிலை எவ்வளவு பாசம் அவையளையிட்டுஎவ்வளவு கவலையோடும் இருந்தனீயெண்டு .. எனக்குத் தெரியும் ..

அக்கா இதனைச் சொன்னதுதான் தாமதம். அவனது கண்களில் இருந்து பொலபொல வென்று கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதுமாத்திரமில்லை. உன்னைப் பார்க்காத குறையை உன்ரை பிள்ளையளைப் பார்த்துத்தான் ஐயா ஆறுதல் அடையிறவர் எண்டதும் எனக்குத்தெரியும். பொல்லுப் பிடிச்சுக் கொண்டும், உங்கடை வீட்டை அடிக்கடி போறவர். மச்சாளையும், தன்ரை இன்னொரு பெம்பிளைப் பிள்ளைமாதிரித்தான் ஐயா நினைச்சு இருந்தவர். மச்சாளும், ஐயாவின்ரை இறுதி நேரத்திலையும் முழு மூச்சாக எல்லாக் கடமைகளும் செய்தவ ..உன்ரை பழைய சினேகிதன் வேந்தனும் இன்னும் ரண்டு மூண்டு பெடியளும் நல்லா பாடுபட்டவங்கள். ஒருக்கா அவங்களுக்கு ரெலிபோன்எடுத்து நன்றி சொல்லடா தம்பி ...!

நெஞ்சை அடைத்துக் கொண்டிருந்த ஒரு நெடுமூச்சு வெளிப்பட்டது தெரிந்தது. அவன் தனது அக்காவிடம், காடாத்து - எட்டுச் சிலவு,அந்தியேட்டி போன்ற எல்லாவற்றையும் பற்றி விபரமாகக் கதைத்து வைத்தான். பின்னர் மனம் உடலும் களைத்திருந்ததால் உட்கார்ந்தஇடத்திலேயே சாய்ந்து விட்டான்.

இரண்டு மாதங்கள் கடந்திருக்கும் - அவனுக்கு இலங்கையிலிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. கடித்ததைப் பித்துப் பார்த்தான். உள்ளேஅவனது தந்தையின் மறைவையொட்டி வெளியிடப்பட்ட நினைவு மடல் காணப்பட்டது. நினைவு மடலில் தகப்பனாரின் அழகான படம்.ஐயாவை ரசித்தான். நெடுநேரமாக ரசித்தான். ஐயா இறந்தபோது இவ்வளவு இளமையாக இருந்தாரா ...? இது நிச்சயமா பழைய படந்தான்.அவன் படத்தை உற்று உற்றுப் பார்த்தான். நெடுநேரம் பார்த்திருப்பான்.

கதிரையில் உட்கார்ந்திருக்கும் உருவம் .. ஐயாவா? ஐ...யா, தேகத்தின் பருமனும், உயரம் .. இப்படி இல்லையே! அது உயர்ந்து கொண்டும்,பருமன் அடைந்து கொண்டும் நெற்றியில் திட்டுத் திட்டான அசாதாரண சுருக்கங்களோடு, கண்கள் விழுந்து விடுவது போல, வெளித் தள்ளிகாதுகள் சுளகளவு விஸ்வரூபம் எடுத்து, ஐயோ .. என்ன இது? தோளில் மெலிந்து நீண்டு வானளாவ வளர்ந்து கொண்டே சென்ற கழுத்து..அவன் முடிவைத் தேடியும் அது பிரபஞ்சத்தின் முடிவிலிக்குச் சென்று மறைந்தும், கண் இமைக்கும் நேரம் கருமை போர்த்தபடி கீழிறங்கியும்,மீண்டும் வளர்ந்தும் ...

கால்களும் கைகளும் ஊதி, யானையின் வயிறாகப் பெருத்தும் பின் சிறுத்து தனி எலும்புகளின் முடிவாகியும் .. முடிவிடங்களிலிருந்து ஆறுபெறுக்கெடுத்து ஓடியது. பலர் ஆற்று வெள்ளத்தில் அடிபட்டுப் போய்க் கொண்டிருந்தார்கள். ஆற்று வெள்ளத்தின் இரைச்சலையும் மீறிஆக்கிரோசமாக யாரோ சித்தார்கள்.

அவனது காதுகள் பஞ்சடைத்துக் கிடந்தன. சரம்சரமாக உடலெங்கும் வேர்த்திருந்தது. பிடரி, கன்னங்கள், கண் இடுக்குகளால் வியர்வைஓடியது. சோபாவுக்குள் முடங்கிக் கிடந்ததிலிருந்து திடுமென விழித்தெழுந்து நிமிர்ந்து உட்கார்ந்தான். வெகு நேரமாக சோபாவுக்குள்கிடந்ததில் அவனது கழுத்துச் சுளுக்கி கொதகொதத்தது.

முருகுப் பிள்ளை அப்பாவின் நினைவு அஞ்சலி மடல் - பிள்ளைகள் பிரலாபம், மருமக்கள் பிரலாபம், பேரப் பிள்ளைகள் பிரலாபங்களைத்தாங்கி கண்ணீர் அஞ்சலி கலந்து மிக அழகாக வெளியிடப்பட்டிருந்த - அத மடல் அவனது கைகளுக்குள் கசங்கியபடி கிடந்தது.

- ஹேமராஜ்([email protected])

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X