• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

" உளைச்சல்"

By Staff
|

Womenஉங்க கதையைப் படிச்சு முடிச்சவுடனே எனக்கும் மனசு உள்ளங்கையிலே வச்ச பிளாஸ்டிக் காகிதம் மாதிரி ஜிவ்வுன்னு கிளம்பி விட்டது. நானென்னசெய்யட்டும்? அதிலே உங்க பாதிப்பும் இருக்கலாம்; தவறில்லேன்னு நினைக்கிறேன். எது தான் இன்னொன்னோட ஐக்கியமாகல்லேசொல்லுங்கோ?

கிளி மட்டும் தான் பச்சையா இலையோட நிறத்தில இருக்கா? மீன் கொத்தி கூடத் தான் மரத்திலே உட்கார்ந்துண்டு வானத்து நீலத்திலே கரைஞ்சுபோயிடறது; காக்காவுந்தான் இடையிலே இருக்கிற கருப்பிலே கரையறது; மஞ்சக் குருவி பூவோட கரையறது!

நேற்று நடந்த சின்ன விஷயம் என் மனசைக் கிளப்பி விட்டு விட்டது. மத்தியானமாக் கண் அயரலாம்னு குழந்தையையும் தூங்கப் பண்ணிட்டு,தலைகாணியைக் கீழே போட்டு உடம்பையும் சேர்த்துப் போட்டேன். படிலே பெருசாப் பாடிண்டு வரான் மாமியோட பையன்! எனக்கு எரிபூச்சி கண்ணிலேவிழுந்த மாதிரி சுள்ளுன்னு கோவம் வந்துடுத்து; "சட்டுனு கதவைத் திறந்தேன்.

"மாமீ, புளிச்ச மோரு இருக்காமே தரேளா? எங்கம்மா வாங்கிண்டு வரச் சொன்னா

அதிகாரமா இருக்கே! இருந்த கோவம் ஜாஸ்தி ஆயிடுத்து. அதுக்கு ஏர்டைட் கவர் போட்டு மூடிட்டு, "இல்லையேப்பா கார்த்தாலே மோர் குழம்புபண்ணிட்டு மீதியைக் கொட்டிட்டேனே முழுப் பொய்! இருந்தாலும் கொடுத்துடனுமா என்ன!

"டேய், மத்தியானமா முறுக்கு சுத்த உங்கம்மா வரேன்னா, ஞாபகப்படுத்து. கத்தாதே போ, குழந்தை தூங்கறான். "அரிசியை ஊற வையுங்கோ,எங்கம்மா சாப்டுட்டு உடனே வந்துடுவா. அதுக்குத் தான் மோரு வாங்கிண்டு வரச் சொன்னா மறுபடியும் பல்லவிக்கு மாறறான். "ஏன்டா,நேத்தே உங்கம்மா வந்தபோது எடுத்துண்டு போய் இருக்கலாமோல்யோ?

உள்ளே வந்தேன். மணி பணிரெண்டு தான் ஆகியிருந்தது. இந்த மாமி வரது எனக்குத் தெரியாதா? சாப்பிட்டு, தூங்கிட்டு மூணு மணிக்கு வரப்போறவளுக்கு இப்பவே நான் அரிசி ஊற வைக்கணுமா, முடியாது போ!

நேத்து அவள் தோசைக்கு அரைக்க வந்துட்டு சாப்பிட்ட போது நான் நெனச்சுண்டேன். ஆண்டவனே, எத்தனை பேரை இப்படியெல்லாம் பொறுத்துக்கவேண்டியிருக்கு? எதிர்த்தாப்லே சின்ன அலுமினியத் தட்டை வச்சுண்டு சாப்பிட ஆரம்பிச்சா, ஒரு தோசையை அவசர அவசரமாக ரெண்டாகப் பிச்சு, யாரோபக்கத்துல காத்துண்டு இருக்காப்போல இருக்கா பிடிங்கிக்கன்னு நெனக்கும்படி அள்ளி அள்ளிச் சாப்பிட, அந்தத் தட்டு புள்ளையாருக்கு தொப்பையிலே வச்சநாலணா மாதிரி இருந்தது.

சகிச்சுண்டே ஆகணும்; அன்னிக்கு பிரசவத்துக்காக ஆஸ்பத்திரியிலே அட்மிட் ஆயிட்டு வலிலே துடிச்சேனே அப்ப கூடவே இருந்தாளே; அதுக்காகவதுபொறுத்துக்கணும். ஆனாலும் வாழும் பாம்பாட்டமா வளைய வளைய வந்துண்டு!

இவர் கிட்ட இருந்தாலே வலி கொஞ்சம் சகிச்சுக்க கூடியதா இருக்கும்னு இவரையும் பக்கத்திலேயே உக்கார வச்சுண்டு இருந்தேன். "நீ ஒண்ணும்கவலைப்படாதே! நான் உனக்கு பிரசவம் பார்த்துடறேன்; ஆத்துக்கு வந்துடு, இப்படித்தான் பாரு, போன வாரம் அந்த மாமிக்குப் பிரசவம் பார்த்தேன்.அவாத்து மாமா அப்படியே கலங்கிப் போயிட்டார். அவ போட்ட கூச்சலைக் கேட்டுட்டு நாலு ஆம்பளைகள் வாசல்லே வந்து டாக்ஸி கொண்டுவரணுமான்னு கேக்க ஆரம்பிச்சுட்டா!

இன்னும் கொஞ்ச நாழிலே பாருங்கோ குழந்தை சத்தம் கேக்கும்னு சொல்லிட்டேன். அதை விட உன் பிரசவம் என்ன கஷ்டம்? வா, ஆத்துக்குப்போயிடலாம்! அந்த மாமியோட தொடை ஒவ்வொண்ணும் மலையாட்டம் இருக்கும். கொழந்தை தலை தெரிஞ்சதும் அந்த மாமியோட முகத்தலெஒதறிட்டு குழந்தையை எடுத்து வெளியே போடறப்போ மணி ஒண்ணு!

இன்னும் எனக்கு ரெண்டு தோளும் வலிக்கிறது! இருந்தா என்ன? ஆம்பிளக் குழந்தை! நீ என்னைக் கொஞ்சம் பாக்க விட்டா எப்போப்பொறக்கும்னு சொல்லிடுவேன் அப்படின்னு பெரிசா ஆரம்பிச்சுட்டா

எனக்குத் தான் இவர் புருஷன் இருந்தாலும், போர்வை எடுத்து உடம்பு முழுவதும் போத்திக்க மாட்டோமான்னு ஆயிடுத்து. ஆம்பிள்ளை டாக்டரேபிரசவம் பார்த்தாலும் சகிச்சுப்பேன், இந்த மாமி வேண்டாம்ப்பா! தனியே இவரிடம் சொல்லிட்டேன். அப்புறமா எல்லோராத்திலேயும் போயி என்தொடையைப் பத்தியும், மத்ததைப் பத்தியும் பிரசங்கம் பண்ணுவா!

அன்னிக்கிக் கொழந்தை பொறந்தப்புறமா ராத்திரி, "குழந்தை அழறது, பால் கொடு பால் கொடுன்னு ராவெல்லாம் தூங்கவொட்டாம பிடிங்கித்தள்ளிட்டா! எட்டுப் புள்ளப் பெத்தவ இவளுக்குத் தெரியாதா என்ன, கொழந்தை பொறந்தன்னிக்கே எப்படிப் பால் கொடுக்க முடியும்?

"இதோ பாருங்கோ மாமீ, சும்மா என்னைத் தொந்தரவு பண்ணாதீங்கோ, கொழந்தை அழுதாப் பால் கொடுக்கத் தான் ஒங்களெ வச்சிருக்கு.குளுகோஸ் தண்ணி கொடுங்கோ; எனக்கு ரொம்பக் களைப்பா இருக்கு சுள்ளுனுதான் விழுந்துட்டேன்; பின்னே என்ன, பிரசவ அலுப்பே போகல்லே,ராவெல்லாம் பிடுங்கிண்டு!

எப்படியோ தூக்கத்தை கலைச்சுட்டு எரிச்சலைக் கிளப்பிட்டு போயிட்டான்; இவன் வந்து! திடீர்னு ஞானோதயம் "பேன் அடீல. இந்த மோரு தானே,கொடுத்தா என்ன? இதையோ நான் ஒண்ணும் பண்ணப் போறதில்லே. அவனைக் கூப்பிடலாமா? கூப்பிட்டுக் கொடுத்தால் என்ன நெனச்சுப்பான்,

மாமி மொதல்ல பொய் சொன்னான்னுட்டுதானே? போனா போகட்டும்னு வாசல்லே போய் பார்த்தா அவன் கண்ணை விட்டு மறையர தூரம்போயிட்டான். கத்திக் கூப்பிடக் கூச்சம், ரோட்லே கத்தறதாவதுன்னுட்டு, சரி விடுன்னு உள்ளே வந்துட்டேன்.

இப்போ எனக்கு இந்த புளிச்ச மோரே விஸ்வரூபமாயிடுத்து. எடுத்து எங்கே வைக்கலாம்? மாமி மத்யானமா வருவாளே! எல்லா இடத்தையும்ஸ்வாதீனமா எலி தொறக்கறாப்லே தொறந்து தொறந்து பாப்பாளே! அவளைக் கூப்பிட வேண்டாம் நாமே எல்லாம் செய்யலாம்னா இவ,வேலையும் செய்துண்டு ..

அலமாரிலே வெச்சுடலாமா? இல்லை, டால்டா எடுக்கக் கண்டிப்பா தெறப்பா; கவிழ்த்து மூடலாமா? ஆனா எசைகேடா அதே பாத்திரத்தைஇழுத்துக் கீழே கொட்டினாக்கா? இப்போ என்ன பண்ணறது? பூனை தன் குட்டியை தூக்கிண்டு இடம் மாத்தறாப் போல நானும் மோர் பாத்திரத்தைஇடம் மாத்தி வச்சு சலிச்சுப் போனேன்.

எனக்கு வெறுப்பா வந்தது. இந்த மோரைக் கொடுத்திருந்தா நான் என்ன கொறஞ்சா போயிருப்பேன்? என்னமோ பைத்தியக்கார குணம்,விக்ரமாதித்ய சிம்மாசனம் போல. நேத்து இருக்கிறதையெல்லாம் அள்ளிப் போட்டுச் சாப்பிடச் சொன்னேன். இந்த மீதி மோரைக் கொடுக்கஇன்னிக்கு மனசில்லே.

பிரசவமாகிப் படுத்துண்டு இருந்தப்போ எல்லாமே மாமி பண்ணலையா? துணி அலசி, தலை வாரி விட்டு, வீட்டுக்கும் ஆஸ்பத்திரிக்கும் சாப்பாட்டைத்தூக்கிண்டு அந்த சரீரத்தையும் தூக்கிண்டு நாலு நடை நடக்கலையா?

அன்னிக்கு வலியோட உச்ச கட்டத்திலே உடம்பு முழுக்க கொடி மின்னலாத் தூக்கிப் போட்டப்போ, முக்கல்லே அப்படியே முழுக்க ஊதினபலூனாட்டமா உடைஞ்சு போயிடுவேனோன்னு பயந்துண்டப்போ, ஆதரவாத் தடவினாளே! அம்மா வீட்டிலே இருக்கும்போதே கிட்டேயும் ஒருஅம்மா இருந்த மாதிரி ஆதரவா இருந்தாளே.

என்ன அல்ப புத்தி எனக்கு? வலி எடுத்து மூணு நாளாகியும் குழந்தை பொறக்கல்லேன்னவுடனே விநாயகருக்கு வேண்டிண்டு உண்டியல்லே பணம்போட்டுட்டு வந்தாளே, புள்ளையாப் பொறந்தவுடனே. இவர் வேண்டிண்ட ஆறுபடை வீட்டை விடவும், அம்மா வேண்டிண்ட குருவாயூரை விடவும் அவள்வேண்டிண்ட பிள்ளையார் என்ன மட்டமா?

நர்ஸ் கூட கேட்டாளே, "அவங்க உங்க தாயாரா? பாவம் மூணு நாளா ராவா பகலா காத்துக்கிட்டு இருந்தாங்களே உடனே என்னோட அந்தஸ்துமேலெழுந்து "இல்லே அந்தம்மா சமையல்காரங்க என அவசர அவசரமாக மறுத்துடுத்து.

அதெல்லாம் சரி. இப்போ இந்த புளிச்ச மோரை என்ன பண்ணறது? திடீர்னு தீர்மானம் பண்ணிண்டேன். குளிக்கிற உள்ளே போய் சாக்கடையிலே மோரைக்கொட்டினேன். பாத்திரத்தையும் தேய்ச்சு இடத்தையும் சுத்தமாய்க் கழுவி விட்டேன். அம்மாடீன்னு ஆயிடுத்து மனசு; நிம்மதியாப் படுத்துண்டேன்.

- க்ருஷாங்கினி(nagarajan62@vsnl.net)

இவரது முந்தைய படைப்புகள்:

1. எலி

2. இரக்கம் ஒரு பலவீனம்?

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ak.khan@greynium.com

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more