• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இரக்கம் ஒரு பலவீனம்?

By - க்ருஷாங்கினி
|

வாசலில் வந்து நின்று வெயிலில் குளுமை கண்டு கொண்டிருந்தேன். இப்படித்தான் அடிக்கடி வந்து நிற்பேன். வீடு நசுக்கி விடும் என்று தோன்றும். அவசரமாக வாசல் கதவைத் திறந்து வந்து கீழே வெயிலையும், மனிதர்களையும் கண்டு, பிறகே மூச்சு விடுவேன்.

"அம்மா, சாத்துக்குடி பழம் வேணுமா?"

"வேண்டாம்ப்பா"

"நல்ல பழம்மா; பத்து ரூபாய்க்கு அஞ்சு தரேன்மா"

"எனக்கு வேண்டாம்ப்பா"

"கல்கண்டு போல இருக்கும்மா; ஆறுன்னு தரேன் வாங்கிக்க தாயீ, ரொம்பத் தொலைவிலேர்ந்து வர்றேன்"

பார்த்துக் கொண்டு இருக்கும்போதே மேலே படியேறிக் கூடையுடன் வந்து விட்டான். அவ்வளவு பழச் சுமையுடன் முகம் இறுகி, மூச்சுத் திணறி வயதான அவன் மேலேறி வந்த கஷ்டத்தைக் கண்டவுடன் மனது மெலிதாகியது. ஒரு பத்து ரூபாய்க்கு வாங்கி விடுவோம். சமைக்கப் பிடிக்கவில்லை என மாறுதல் நாடி ஹோட்டலில் பத்து ரூபாய் செலவழிப்பதில்லையா என சமாதானம் சொல்லிக் கொண்டேன்.

"ஏழு கொடுக்கறதுன்னா கொடுத்துட்டுப் போ" அல்ப ஆசை, லாபத்துக்கு வியாபாரம் செய்யும் பெருமை!

"கட்டாது தாயீ, கட்டுப்படியானா கொடுத்துட்டுப் போகாம எதுக்கு இப்படி வெயில்ல ரோடு சுத்தறேன் சொல்லு? வாங்கின வெலக்கே போட்டுத்தரேன் எடுத்துக்க. ரெண்டு டஜன் எடுத்து வெக்கட்டுமா அம்மா?'

"ஐயையோ, வேண்டாம்பா, நான் என்ன ஜூஸ் கடையா வச்சிருக்கேன்? "

"ஒரு பத்து ரூபாய்க்குக் கொடுத்துட்டுப் போ. அதுவும் சொமையோட மேலே ஏறி வந்துட்டியே, சும்மா அனுப்பக் கூடாதுங்கறதுக்காக வாங்கறேன்"

கூடையிலிருந்து பழங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு பணத்தைக் கொடுத்து விட்டுத் திரும்ப ..

"தாயீ, பசிக்குது, ஏதுனா சோறு இருந்தாப் போடு. காலேலெ நாலு இட்டிலி வாங்கித் தின்னேன். பசி தாளலே. ரவெ சோறு இருந்தாப் போதும், திருப்தியாப் போகும் .. " என்று சொல்லிக் கொண்டே போனான்.

காலையில் சாப்பிட்ட நாலு இட்லியுடன் இவ்வளவு தூரம் அலைகிறானே மணி மூன்றாகிறதே, பாவம் எப்படி பசி பொறுப்பான் ஒருவன்? நல்ல வேளையாக சாதம் இருக்கு, கொண்டு வந்து போடலாம்.

"இருப்பா வரேன்"

சோற்றைக் கிண்ணத்தில் மோர் ஊற்றிப் பிசைந்து கொண்டு உடன் தொட்டுக் கொள்ள ஊறுகாயும் எடுத்து வந்த போதுதான் அவன் எப்படிச் சாப்பிடுவான் என்று தோன்றியது. அவன் பிச்சைக்காரன் இல்லையே தட்டுடன் வர?

"எப்படிப்பா சாப்பிடுவே?"

"கையிலே போடும்மா"

அவன் கையில் சோற்றை உருட்டிப் போட அவன் சாப்பிட நான் அவனுக்கு அம்மா போல ஒரு உணர்வு. அவன் பசி ஆற ஆற என் மனதில் ஓர் நிறைவு. அவன் திருப்தியாக உண்டதும் முக மாறுதலில் மனசுக்கு மகிழ்ச்சி. குளிர்ந்த நீரில் முகம் அலம்பிக் கொண்டு முகத்து நீர் மேலே விழாவண்ணம் முகத்தை நீட்டிக் கொண்டு டவல் தேடும் புத்துணர்வு.

இப்படித்தான் மணிலாக் கொட்டைக்காரியின் அறிமுகம் இரக்கத்துடன் ஆரம்பித்தது. வயிற்றை சாய்த்துக் கொண்டு தலையில் சுமையுடன் அவள் தெருவில் செல்கையில் மனம் வேதனைப் பட்டது.

"எது மாசம்?"

"இது தாம்மா"

"உனக்கு குழந்தை எத்தனை?"

"இத்தோட அஞ்சம்மா"

"ஏதாவது தடை பண்ணிக்கக் கூடாது? இந்தக் காலத்திலே தான் எல்லோரும் சொல்லித் தராங்களே, உன் வீட்டுக்காரன் என்ன வேலை செய்யறான்?"

"தறி நெய்யரதும்மா, பத்த மாட்டேங்குது. இப்படி சுத்திக்கிட்டு வந்தா ஏதாவது நாலு அஞ்சு காசு கெடச்சா ராத்தி அடுப்பு எரியும்"

"இவ்வளவு கஷ்டங்கிறே, ஏன் நீ ஆபரேஷன் பண்ணிக்கக் கூடாது?"

"நமக்கு உக்காத்தி வச்சு செய்ய ஆளில்லையே அம்மா, எல்லாம் சின்னப் பசங்க. அதுங்களே யாரும்மா கவனிக்கிறது? கொஞ்ச நாளெக்கு வேல செய்யக் கூடாதாமே?"

"அப்படின்னா உன் வீட்டுக்காரரை செய்துக்கச் சொல்லேன்"

அவன் செய்து கொண்டால் சில நாட்கள் பகல் சாப்பாடு இல்லாமல் இருக்க வேண்டி வரும். அவள் செய்து கொண்டால் இரவுச் சாப்பாடு கிடைக்காது என்ற அவளின் கூற்று ஞாயமானதே.

கதவு தட்டப்பட்டது, ஒரு நாள். திறந்தேன்; எதிர் வீட்டின் சொந்தக்காரர்.

"நாங்க டில்லிலேர்ந்து திரும்பிட்டோம். முன்னாடியே வீட்டைக் காலி பண்ணச் சொல்லியிருந்தும் அவங்க காலி செய்யலே. நாங்க மூட்ட முடிச்சோட வந்திருக்கோம். அவங்க கதவெ தெறக்க மாட்டேங்கறாங்க"

"அப்படியா? "

வாசலில் அவர் குடும்பத்தினர் திண்ணையில் நின்று கொண்டிருந்தனர். அனைவர் முகத்திலும் ஏகமாய் களைப்பு, கண்களில் அசதி, கலைந்த தலை.

"வாங்க எல்லோரும் நம்ம வீட்டுக்கு. ரொம்ப களைச்சு இருக்கீங்களே, சாப்பிட்டீங்களா? பாத்ரூம் போகனும்னா போங்க"

எல்லோரும் தப தபவென நுழைந்து வீட்டை நிரப்பினர். அவர்களுக்கு டீ போட்டுக் கொண்டு வரலாம் என்று உள்ளே சென்று டீயுடன் மீண்டபோது வீடு ழுவதும் மூட்டை முடிச்சுக்கள் நிறைந்திருந்தன. என் அனுமதி இல்லாமலேயே அவர்கள் தங்கள் உடமைகள் அனைத்தையும் இறக்கியிருந்தனர். இது நான் எதிர்பாராத ஒன்று.

"டீ சாப்பிடுங்க"

"டீயெல்லாம் எதற்கு? நாங்களே டிபன் கட்டிக் கொண்டு வந்திருக்கோம். அதை மட்டும் பிச்சு சாப்பிட அனுமதிச்சா போதும்" என்னமோ என்னிடம் அனுமதி பெற்றுத்தான் எல்லாவற்றையும் நிரப்பியது போல, என் தலை அசைப்புக்குக் கூட காத்திருக்காமல் அவர்கள் அனைவரும் அமர்ந்து உண்ணத் தொடங்கினார்கள்.

இட்லி, சட்னி, வெங்காயம், பூண்டு இன்னும் என்னவெல்லாமோ கலந்து ஒரே ஹோட்டல் நெடி! பித்துப் போட்டதை மடிக்க இயலாதது போல ஒரு பிரமிப்பு. வீடு முழுவதும் அவர்கள் ஆக்கிரமிப்பு.

அந்தச் சிறுமி- வேலைக்காரி வந்து என்னிடம், "அக்கா நான் தம்பியை கூட்டிக்கிட்டு கோயிலுக்குப் போய் வரேன்' என்று பயந்த கண்களுடன் நின்றாள். பனிரெண்டே வயதான அந்தச் சிறுமி அப்படிப் பரிதாபமாகக் கேட்டபோது, எனக்குச் சிரமமாக இருந்தது.

வித்தியாசமான குடும்பத்தின் ஏழ்மையின் காரணமாக மட்டுமே வேலை செய்ய வந்தாலும் என்னால் அவளிடம் முழு வேலைகளையும், சிறு சிறு வேலைகளைக் கூட குற்ற உணர்வு இல்லாமல் பெற்றுக் கொள்ள இயலவில்லை.

"நீ போய் வாசல்ல பையனைப் பார்த்துக்க, நான் இட்லிக்கு அரைச்சுக்கறேன்"

"உன்னால எல்லாத் துணிகளையும் துவைக்க முடியறதா? நான் வேணும்னா சோப்பு போட்டுத் தரட்டுமா? "

"பாவம் அந்தப் பெண் வெளித் திண்ணையிலேயே படுத்துக்கறது. ராத்திரிலே குளிராது? '

"வேலையெல்லாம் முடிச்சிட்டேன்க்கா' திரும்பக் கேள்விக்கு பதிலை எதிர்பார்த்து நின்றவளிடம்,

"போயிட்டு வா, பாவாடையை கீழே எறக்கி விட்டுக்கோ, ஏன் மேலே தூக்கிக் கட்டிண்டே இருக்கே?' என்றேன்.

"கீழே போய் எறக்கி விட்டுக்கறேன் அக்கா'

என் குழந்தை சாலையில் நடப்பதைக் காணும் வழக்கமான ஆர்வம் காரணமாய் வாசலில் சென்று நின்று, சிறுமி பாதிப் படிகள் இறங்கிய பின்பும் பாவாடை கீழிறக்கப்படாததைக் கண்டு திரும்பவும் அதை நினைவூட்டினேன்.

அவள் கண்களில் திடீரெனக் காணப்பட்ட மிரட்சி கலந்த பயம் என்னை சந்தேகத்தில் கொண்டு விட அதைக் கட்டளையாக்கினேன். அப்போதும் நின்று கொண்டேயிருந்த சிறுமியின் பிடிவாதம் என்னிடம் அதிகமாகி, சந்தேகத்தையும் வளர்த்து நானே படியிறங்கி அவள் பாவாடையை இழுத்து விட்டு சோதனை செய்ய முயற்சிக்க, அவள் விரைவாகப் படியேறி உள்ளே சென்று பாவாடையை உதறும் சத்தம், நாணயம் வேறு சில பொருள்கள் உண்டாக்கிய சத்தம் கேட்டது.

மிகுந்த கோபத்துடன் விரைந்து உள்ளே சென்று பார்த்தபோது, சிறுமியைச் சுற்றிலும் மிக்சர் துகள்கள் சில நாணயங்களுடன் இரைந்து கிடந்தன. சிறுமியின் பிடிவாதம் நிறைந்த "என்ன செய்வாய்?' என எதிர்க்கும் பார்வை கொண்ட கண்கள்.

இன்று சாத்துக்குடிக்காரன் பசி தீர்த்ததும், வாசலில் கூவிச் செல்லும் அவளின் சக பாடியாக அவன் தோன்றுவதும் தான். அதுதான் நான் அவளுடன் பேசிய கடைசி பேச்சு என எண்ணுகிறேன். இன்று ஒரு தகவல், அவள் பிரசவத்தில் இறந்து விட்டதாக. அவளாக இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏதுமில்லை என்றாலும் மனதில் அடிக்கடி அம் முகமே கலைந்து வந்து எழும்பி நிற்கிறது.

அந்த மணிலாக் கொட்டைக்காரியுடன் நான் பேசிய பேச்சு அர்த்தம் அற்றதாகப் போயிற்று. அன்று, சனி பகவான் தனது காக்கை வாகனத்தை விட்டு விட்டு என் நாவில் சவாரி செய்து கொண்டு இருந்தானோ? அவள் இன்னும் குழந்தைகள் பெற்றுக் கொண்டாலும் நம்மைப் போல கிழ வயதில் புதைக்கப்படும் மாங்கொட்டைகள் அல்ல அவர்கள். தங்கள் சோற்றை தாங்களே சம்பாதிக்கும் திறன் அமையப் பெற்றவர்கள். என் முகத்தில் என்ன எழுதியிருக்கும் எல்லோரும் தங்கள் குறைகளைச் சொல்ல? எனக்குத் தெரியவில்லை.

"க்ருஷாங்கினி கதைகள்" தொகுப்பிலிருந்து ...

- க்ருஷாங்கினி(nagarajan62@vsnl.net)

இவரது முந்தைய படைப்புகள்:

எலி

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more